கவிதை – நந்தன் கனகராஜ் -இன் “அதுவொன்றன்று”

அசையும் பிம்பம்

**************************

நகரத்தின் அலங்காரமான பகுதியொன்றில் ஒரு கழிவறையின் ஓவியத்தைப் போலத் தீட்டப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. தார்ச்சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பூனையைப்போல மனிதம் சிதைந்துகிடப்பதைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை.

எழும்பூர் உயிர்க் காட்சி சாலைகளில் தொங்குகிற விலங்குகளின் எலும்புக் கூடுகளைப் பார்த்துச் சலனம் இல்லாமல் நகர்கிற மாதிரி மனிதர்கள் தினமும் பார்த்துப் பார்த்து மரத்துப்போன பொதுக் கழிப்பறைக் காட்சிகள்.

இதயத்திற்கும் மனசாட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல வேடிக்கை பார்த்தபடியே விரைந்து கடந்துவிடுகிறோம். நம் கண்களில் ஆணி அறைந்து காணவைக்கிறான் கவிஞன்.

ஒரு பொதுக் கழிப்பறைக்குப் போய் வருவதற்கே மூக்கைப் பொத்திக் கொள்கிற நாம் முழு நேரமும் அங்கேயே வசிக்கிற மனிதர்களைப் பற்றி என்ன அக்கறை கொள்கிறோம்?

பொதுக் கழிப்பறை வங்கியின் நிதியுதவியில் கட்டப்பட்டிருந்தாலும் அங்கு காசு வாங்குபவர்கள் தினக் கூலிகள். அவர்கள் சுவாசத்தில் நிரந்தரமான கழிவறை வாசம். கால் வைக்கக் கூசும் தண்ணீர் சொத சொதத்தக் காரை பெயர்ந்த தரையில்தான் 24 x 7 இல் குடித்தனம் பண்ணுகிறார்கள்.

“அறிவிப்புகளின் மீது விரல்களின் சுண்ணாம்பு இழுவைகள் சன்னமிட்டிருக்கின்றன” என்கிற வரிகளின் மூலம் கவிஞன் ஒவ்வொருவரும் பார்த்திருக்கும் ஒரு கழிவறையைக் கண்முன் கொண்டுவருகிறான்.

சுவர்களில் கரிக் கோடுகளாலும் சாக்பீசுகளாலும் எழுதப் பட்டிருக்கும் பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. காம உச்சத்தின் உச்சரிப்புகள். கைவிரல்களில் வழிந்த கனவு ராணிகள். சில சுவர்கள் காமலோகத்தின் கல்வெட்டுகள். அடைய முடியாத ஆசைகளின் சுய இன்ப அவஸ்தைகள்.“இரவின் சுகிப்பில் பெற்ற
இன்பத்திலோ
தேர்ந்துகொள்ளத் துணையற்ற
விரக்தியிலுமோ
அலைபேசி எண்களுக்கு
பெண்களின் பெயரை
பொறித்துப் போயுள்ளனர் சிலர்.”

கழிவறைகளின் நாற்றத்துடன் புகை பிடிப்பவர்களின் சுருள் புகைகள் கலந்து ஒரு வித மூச்சுத் திணறலை உண்டாக்கிவிடுகிறது. நாள் முழுதும் அங்கேயே உட்கார்ந்திருந்தாலும் நமது முதுகிழவர் இந்திய ‘ஜார்ஜ் ஃப்ளாய்டு’ க்கு விடுதலை கிடையாது. இந்திய சமூக அமைப்பு அமெரிக்க ‘ஜார்ஜ் ஃப்ளாய்டு’ ஐக் கொன்ற அதிகாரத்தின் பூட்சு கால்களை விட மோசமானது. வாழ்க்கையின் எல்லாவிதமான கரடு முரடான சிந்தனைகளையும் இறந்தபின் மோட்சம் என்கிற ஒற்றை புல்டோசரால் சமப்படுத்திவிடுகிறோம். இப்படி எந்தவிதமான கலைக்குக் குந்தகம் விளைவித்துவிடக் கூடிய பதப் பிரயோகங்களைச் செய்யவேயில்லை கவிஞன்.

கலை நேர்த்தியான பின்புலத்தைக் கட்டமைக்கிறான் கவிஞன். புகை பிடிப்பவர்களின் உபயோகத்திற்காக புங்க மரத்தின் நடுவில் ஒரு இலவசத் தீப்பெட்டி இருக்கிறது. இன்னும் நெருப்பாகாமல் இருக்கும் சில மனிதர்களை நினைவுபடுத்துகிறது. புகை வலிக்கும் மெல்லிய சுவாச போதைக்கு பண்பலை வானொலியை ஒலிக்க விடுகிறான். உரக்கச் சொல்லிவிட்டால் நம் ஆட்களுக்குச் செவிகள் செவிடாகிவிடும். மெல்லிய வெண்படலமாய்ப் பரவும் புகைகளுக்கு நடுவில் ஒரு காட்சியை ஆறு வரிகளில் அடையாளம் காட்டுகிறான்….“காலமோ
மணித்துளிகளோ
கணக்குத் தெரியாதவனாகத்தான்
நாற்காலியில்
அப்பிக் கிடக்கிறான்
முதுகிழவன்.”

நாற்காலியில் அப்பிக் கிடக்கிறான் முதுகிழவன். கூரிய வாளால் செய்யப்பட்ட வார்த்தைகளின் ஒற்றை வரி. நம் இதயத்தின் நடுவில் ஓர் அம்பினைப் போல ஊடுருவி விடுகிற உக்கிரமான வரி.

இந்த முதிய கிழவர்தான் 24 X 7 என்று இயங்கும் அந்தக் கழிவறையில் எல்லா ஷிப்டுக்களிலும் கண்விழித்துக் கிடக்கக் கூடும். அதுவொன்றன்று என்கிற தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதை மனித அவலத்தை அதன் அடியாழம் வரை சென்று முடிச்சவிழ்க்கிறது. அகாலத்தில் காக்கையாவது கரைகிறது. இந்த முதுகிழவரோ மௌனத்தில் கரைகிறார்.

அவரிடம் பேசுவதற்கு இந்த மாபெரும் மானுட சமுத்திரம் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டுமே வைத்திருக்கின்றது. ஒன் பாத்ரூம் எவ்வளவு?

டூ பாத்ரூம் எவ்வளவு?” அதற்குமேல் பேசுவதற்கு அவரிடம் வேறு என்ன இருக்கிறது? அவரது அசைவுகளை வைத்து அவர் உயிருடன் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டால் போதாதா என்ன?

“சுயம்பிறழச் செய்யப்பட்ட
அவனிடம்
இச்சமூகம் வைப்பதெல்லாம்
இரண்டே கேள்விகள்தாம்
ஒன் பாத்ரூம் எவ்வளவு?
டூ பாத்ரூம் எவ்வளவு?”இனி முழுக் கவிதை –

அதுவொன்றன்று

நகரின் முக்கியப் பகுதியிலிருக்கும்
பொதுக் கழிப்பறை
எப்போதும்
24X7 இல் இயங்குகிறது
நபார்டு வங்கியின்
நிதி உதவியில் கட்டப்பட்ட
அதன் அறிவிப்பின்மீது
விரல்களின் சுண்ணாம்பு இழுவைகள்
சன்னமிட்டிருக்கின்றன.

இரவின் சுகிப்பில் பெற்ற
இன்பத்திலோ
தேர்ந்துகொள்ளத் துணையற்ற
விரக்தியிலுமோ
அலைபேசி எண்களுக்கு
பெண்களின் பெயரை
பொறித்துப் போயுள்ளனர் சிலர்.

பாலித்தீன் கவர் ஒட்டப்பட்ட
மரப்பெஞ்சின் சில்லறைகளினூடே
பழுத்த இலைகளை
உதிர்த்துவைத்திருக்கிறது
அரசமரம்.

வளரவிடாமல் ஒடிக்கப்பட்ட
புங்கங்கன்றின் நடு இணுக்கில்
செருகப்பட்டிருக்கும்
இலவசத் தீப்பெட்டியின்
தாராளத்திற்குப் புகைமோதி நிறைகின்றன
உள் அறைகள்
மெல்லிய மின்வயர் ஒன்றின் நீட்சியில்
பெறப்பட்ட துல்லியத்தின் பாடலை
தந்துகொண்டேயிருக்கிறது
பண்பலை வானொலி
காலமோ
மணித்துளிகளோ
கணக்குத் தெரியாதவனாகத்தான்
நாற்காலியில்
அப்பிக் கிடக்கிறான்
முதுகிழவன்.

சுயம்பிறழச் செய்யப்பட்ட
அவனிடம்
இச் சமூகம் வைப்பதெல்லாம்
இரண்டே கேள்விகள்தாம்
ஒன் பாத்ரூம் எவ்வளவு?
டூ பாத்ரூம் எவ்வளவு?Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *