கவிதைச் சந்நதம் 20 – நா. வே. அருள்

Poetry Sannatham Kavithai Thodar (Series) By Na. Ve. Arul. Book Day Website is Branch Of Bharathi Puthakalaym.முகமற்ற காலம்
*************************

முகங்கள் தொலைந்து போகின்றன. முகமூடிகள் ஆள்கின்றன. பிரச்சனை முகமூடிகளை அணியலாமா என்பதல்ல. பொருத்தமான முகமூடிகளைத் தேடிப் பிடிப்பதுதான். அணிந்து கொள்வதற்கு ஒருவனுக்கு இருந்த தயக்கத்தை இந்தச் சமூகம் சாகடித்துவிடுகிறது. சொல்லப் போனால் முகமூடி அணிந்தால்தான் உதடுகள் கோணாத ஒழுங்கானச் சிரிப்பே வருகிறது.

முகமூடி என்பது காலத்தின் பசை. அணிந்துகொள்கிறவன்தான் உலகத்தோடு ஒட்ட முடியும். கவிஞன் சொல்கிறான்….

“இந்த முகமூடி
எனக்குப் பொருந்திவிட்டது.

அத்தனை முகமூடிகளில்
பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க
எத்தனை போராட்டம்?

எவ்வளவோ வற்புறுத்தியும்
இதை அணிந்து கொள்ள
அவ்வளவு தயங்கினேன்.

பிரச்சினைகளிலிருந்து விடுபட
முகமூடி அவசியம் என வலியுறுத்தியது நீங்கள் தான்.”

முகமூடி என்பது மழைக்கான குடையோ, காலுக்கான செருப்போ அல்ல. அது பதுங்கலுக்கான பாதுகாப்பு. போலிகளுக்கான புகலிடம். முதன் முதலில் முகமூடியுடன் ஒரு மனிதனைப் பார்க்கப் பயம் கவ்வுகிறது. பயம் கவ்வினாலும் முகமூடியைப் பார்ப்பதில் ஒரு பரிதாப வசீகரத்தை மனம் விரும்புகிறது. அணிந்து வருகிறவனைப் பார்த்து பயம் வந்தால் அந்தப் பயத்தைச் சிரிப்புக் கத்தியால் சிரைத்துக் கொள்கிறான். கெக்கலி கொட்டிக் கேலி பேசுகிறான். மனிதன் என்கிற மாபெரும் தகுதி பெற முகமூடிதான் முன் நிபந்தனை.

“முதன்முதலாக முகமூடியுடன்
உங்கள்முன் நின்றபோது
நீங்கள் கெக்கலிட்டுச் சிரித்தது
பயத்தை மறைக்கத் தான் என்பதைத் தாமதமாகவே விளங்கினேன்.

முகமூடியுடன் என்ன சேட்டை செய்தாலும்
பொறுத்துக் கொள்கிறீர்கள்.”

பழக்க தோஷத்தில் அணிய ஆரம்பித்தவனே அந்த வியாதிக்கு ஆட்பட்டு விடுகிறான். அதுதான் தன் சொந்த அடையாளம் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறான். அணிந்த முகமூடியை அகற்றுவதேயில்லை. முகம் கூட கழுவ முடிவதில்லை. நெருப்பாய்த் தகிக்கும் முகத்திற்கு நீரூற்ற வழியில்லை.“இனிமேல் இதைக் கழற்றினால்
என் அடையாளத்தை இழந்துவிடுவேன்.
உங்களாலும் என்னை
அடையாளம் காண முடியாது.

முகத்தை அலசக் கூட
முகமூடியைக் கழற்ற முடியவில்லை.”

அணிந்து அணிந்து அயர்ச்சி தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் முகமூடியைக் கழற்ற விரும்புகிறான். அணிந்திருக்கும் முகமூடியின் அசௌகரியங்கள் பிடிபடுகின்றன. முத்தங்கள் தீர்ந்து போகின்றன; மோகமும் வடிந்து போகிறது. சொந்த முகமென்றால் சொறிந்தும் கொள்ளலாம். ஒப்பனைகளின் ரசனையை உணர்கிறான். கண்ணாடியில் முகம் பார்க்கிறான். காலம் அவனைப் பார்த்துச் சிரிக்கிறது.

அசல் முகத்தின் தேவையை உணர்கிறபோது இன்னொரு முகமாகவே மாறியிருந்த முகமூடி அவனைப் பார்த்து முறைக்கிறது.. நாய்கள் துரத்தியதால் கால்கள் ஓடியோடிக் களைத்துவிடுகிறான். முகமூடி முகத்தின் சுமை. அசல் முகமோ சிறகுகள். பையப்ப பையப் பறக்க ஆரம்பிக்கிறான். முகமூடியை அணியப் பழக்கிய நீங்களேதான் முகமூடியைத் துறந்து வந்தவனிடம் சொல்கிறீர்கள்: “முகமூடியைக் கழற்று”. இப்போது அவன் முகம் சிறுத்துப் போகிறது.

முகம் எவ்வளவு முக்கியம் என்பதை
முகமூடி அணிந்த பின்னரே
உணர முடிந்தது.

முகமூடி அணியத் தொடங்கியதிலிருந்து
ஒப்பனைக்கான நேரம்
சுருங்கிவிட்டது.

எத்தனை கல்லெறிந்தாலும்
நாய்கள் துரத்தாத முகமூடி
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்
அசல் முகத்தோடு
உங்கள் முன் நிற்கும் போதும்
முகமூடியைக் கழற்று என்கிறீர்கள்.இனி மா.காளிதாஸ் இன் முழுக் கவிதை…

“இந்த முகமூடி
எனக்குப் பொருந்திவிட்டது.

அத்தனை முகமூடிகளில்
பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க
எத்தனை போராட்டம்?

எவ்வளவோ வற்புறுத்தியும்
இதை அணிந்து கொள்ள
அவ்வளவு தயங்கினேன்.

பிரச்சினைகளிலிருந்து விடுபட
முகமூடி அவசியம் என வலியுறுத்தியது நீங்கள் தான்.”

“முதன்முதலாக முகமூடியுடன்
உங்கள்முன் நின்றபோது
நீங்கள் கெக்கலிட்டுச் சிரித்தது
பயத்தை மறைக்கத் தான் என்பதைத் தாமதமாகவே விளங்கினேன்.

முகமூடியுடன் என்ன சேட்டை செய்தாலும்
பொறுத்துக் கொள்கிறீர்கள்.”

“இனிமேல் இதைக் கழற்றினால்
என் அடையாளத்தை இழந்துவிடுவேன்.
உங்களாலும் என்னை
அடையாளம் காண முடியாது.

முகத்தை அலசக் கூட
முகமூடியைக் கழற்ற முடியவில்லை.”

முகம் எவ்வளவு முக்கியம் என்பதை
முகமூடி அணிந்த பின்னரே
உணர முடிந்தது.

முகமூடி அணியத் தொடங்கியதிலிருந்து
ஒப்பனைக்கான நேரம்
சுருங்கிவிட்டது.

எத்தனை கல்லெறிந்தாலும்
நாய்கள் துரத்தாத முகமூடி
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்
அசல் முகத்தோடு
உங்கள் முன் நிற்கும் போதும்
முகமூடியைக் கழற்று என்கிறீர்கள்.

– மா. காளிதாஸ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.