கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா?
******************************************************************

மனுசனைப் பார்த்து நாக்கைப் பிடுங்குறாப்போல நான்கு கேள்வி கேட்பது ஒரு ரகம். கடவுளைப் பார்த்து கவிதையாகக் கேள்வி கேட்கிறபோது அதில் ஒரு ரசம்.

எல்லாவற்றுக்கும் கடவுளை வேண்டுகிற மனிதர்கள்தான் கடவுளுக்கு வேண்டியவற்றையெல்லாம் அவர் கேட்காமலேயே பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள். அநாதையாகக் கிடக்கிற பிள்ளையாருக்கு ஒரு அநாதை இல்லம் ஏற்பாடு செய்வதே மனிதர்கள்தான். கோபித்துக் கொண்டு போனவனுக்குச் சகலமும் கொடுத்து அவனைச் சந்நிதானத்தில் உட்கார வைத்தவர்கள் மனிதர்கள்தாம்.

“அரச மரம்
குளத்தங்கரைனு
அம்போனு
கெடந்தவருக்கு
கோயில கட்டி
பெத்த புள்ளையாட்டம் பார்த்துகிட்டோம்

கோச்சுகிட்டு போய்
கோவணத்தோட
நின்ன தம்பிக்கும்
ஆறுபடைவீடு கட்டி
அழகு பார்த்தோம்

கோயிலைக் கீற்றில் வேண்டாம் என்று கிரானைட் இல் கட்டியதும், கடவுளுக்கு வேர்த்துவிடுமென்று ஏசி போட்டு ஏற்பாடு செய்ததும் பாழாய்ப் போன மனுஷனின் பழக்க தோஷம். மனிதனைப்போலவே புழுக்கம் என்றால் அப்புறம் கடவுளுக்கு அர்த்தம் என்ன? இந்தக் கேள்வி ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். கேட்பதற்கு நன்றாக இருக்காது. கேட்டால் கெட்ட பெயர்.“காட்லயும் மேட்லயும்
கஷ்டப்பட்ட
இன்னொரு
அய்யனுக்கும்
கிரானைட்ல
கோயில் கட்டி
ஏசி கூட போட்டு
வச்சோம்

சுடுகாட்டில் நடனமாடிக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டு வந்து கோயிலுக்குள் குடியிருக்க விடுகிறான் மனிதன். தனது வீட்டுக்கு இன்னும் பட்டா கிடைக்கவில்லையே என்று படாத பாடு படுகிறான். ஆனால் கடவுளுக்கு வீடு கட்டித் தருகிறான்.

மண்டை ஓடு
மயானம்னு
சுத்திகிட்டு திரிஞ்ச
அப்பனுக்கு
பெரிய பெரிய
கோயில கட்டி
குடிவச்சோம்

பாம்பு படுக்கைனு
சமனில்லாம
ஆடிக்கிட்டு கிடந்த
மாமனுக்கு
ஊஞ்சல் சேவை
உற்சவம்னு
நிறைய
பண்ணியிருக்கோம்

ஆத்திகத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? அனைத்துச் சாதிகளுக்கும் ஆலயம். தங்கக் கிரீடமென்ன? வைர மூக்குத்தியென்ன? ஆகாரமென்ன? அலங்காரமென்ன? மாலையென்ன? மரியாதையென்ன? தேரென்ன? திருவிழாவென்ன? கடவுளுக்கே காவலென்ன? காமிரா என்ன? எல்லாமே என்ன என்ன என்னதான். ஒரு ஏன் கிடையாது.தங்க கிரீடம்
வைர மூக்குத்தி
பச்சை பட்டு
பவள மாலைன்னு
ஆத்தாளுக்கு
பண்ணதெல்லாம்
சொல்லி மாளாது

வேளாவேளைக்கு
ஆகாரம்
அழகழகா அலங்காரம்
வருசம் ரெண்டு திருவிழா
காவலுக்கு
காம்பவுண்டு
சுத்தி நாலு கேமரானு
எவ்வளவோ
செஞ்சோம்

அலங்காரம் துறந்த கவிதைதான் நெஞ்சுக்கு நெருக்கமாகிவிடுகிறது. கடைசி நான்கு வரிகளில் இருக்கிறது கவிதையின் மர்ம முடிச்சு. அவிழ்கிறதோ இல்லையோ அசத்திவிடுகிறான் கவிஞன். ஒழுங்கு தவறாத தாள கதியில் போய்க்கொண்டிருந்த ஒரு மின்சார ரயில் திடீரென பிரேக் போட்டுக் குலுங்கி நிற்பதைப்போல ஒரு திகைப்பு. முதலிலிருந்து இதுவரைக்கும் காற்றில் நகர்ந்து செல்லும் மேகத்தைப் போல கவிதை நகர்ந்து செல்கிறது. இனிவரும் கடைசி நான்கு வரிகளில் அத்தனை மேகங்களும் அவிழ்ந்து கொட்டுவதைப்போல கவிதை சோவென்று பெய்யத் தொடங்குகிறது. அந்த மழைச் சத்தத்திலும் இடி மின்னல் களேபரங்களிலும் கடவுளின் காதுகளுக்குக் கவிஞனின் கேள்விகள் எட்டியிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சிவபெருமானின் நெற்றிக் கண்ணை நக்கீரனின் சுட்டுவிரல் தொட்டுவிடுகிறது. கேட்கிற கேள்வியில் கண்டிப்பாகக் கடவுள் அணிந்திருந்த கவசம் கழன்றிருக்கக் கூடும்!…..

“எங்கப்பே போனீங்க
எல்லாரும்
நன்றியெல்லாம்
மனுசங்களுக்கு
மட்டுந்தானா?”இனி முழுக் கவிதை

“அரச மரம்
குளத்தங்கரைனு
அம்போனு
கெடந்தவருக்கு
கோயில கட்டி
பெத்த புள்ளையாட்டம் பார்த்துகிட்டோம்

கோச்சுகிட்டு போய்
கோவணத்தோட
நின்ன தம்பிக்கும்
ஆறுபடைவீடு கட்டி
அழகு பார்த்தோம்

“காட்லயும் மேட்லயும்
கஷ்டப்பட்ட
இன்னொரு
அய்யனுக்கும்
கிரானைட்ல
கோயில் கட்டி
ஏசி கூட போட்டு
வச்சோம்

மண்டை ஓடு
மயானம்னு
சுத்திகிட்டு திரிஞ்ச
அப்பனுக்கு
பெரிய பெரிய
கோயில கட்டி
குடிவச்சோம்

பாம்பு படுக்கைனு
சமனில்லாம
ஆடிக்கிட்டு கிடந்த
மாமனுக்கு
ஊஞ்சல் சேவை
உற்சவம்னு
நிறைய
பண்ணியிருக்கோம்

தங்க கிரீடம்
வைர மூக்குத்தி
பச்சை பட்டு
பவள மாலைன்னு
ஆத்தாளுக்கு
பண்ணதெல்லாம்
சொல்லி மாளாது

வேளாவேளைக்கு
ஆகாரம்
அழகழகா அலங்காரம்
வருசம் ரெண்டு திருவிழா
காவலுக்கு
காம்பவுண்டு
சுத்தி நாலு கேமரானு
எவ்வளவோ
செஞ்சோம்

“எங்கப்பே போனீங்க
எல்லாரும்
நன்றியெல்லாம்
மனுசங்களுக்கு
மட்டுந்தானா?”

வீரமணிஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.