Ram Periyasami's Pidivathangkalil tholainthu vidugirai Poetry Sannatham Kavithai Thodar (Series 24) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam



கவிதை உலகத்திற்கு நல்ல காலம். காதலீ….. என்று விளித்துத் தொடங்கிய பழைய காலம் ஒரு பழைய பேப்பர் கடையில் தேய்ந்த பொருளைப்போலப் போடப்பட்டுவிட்டது. இளைஞர்களின் டிஜிட்டல் பேனாக்கள் இன்ஸ்டாக்ராம் காலத்திற்கு ஏற்றபடி புதிய புதிய பூக்களைப் பூக்கத் தொடங்கிவிட்டன.

கவிதை உதிரத்தின் பூ. அவ்வளவு புதுமையாக – ஃபிரஷ்ஷாக – இருக்க வேண்டும் அது. கவிதையின் மணம் நாசிக்கு இதுவரை முகர்ந்திராத மணத்தைத் தந்தாக வேண்டும்.

“ஒரு நிகழ்ச்சியை விவரிக்க எண்ணும்போது அதற்கு இதுவரை இல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம். ஏனெனில், நாம் அனுபவித்த அந்த நிகழ்ச்சி அதுவரை அனுபவித்த ஒன்றாக இருப்பது இல்லை. அனுபவத்தைச் சொற்களுக்குக் கொண்டு வருகையில் அந்தச் சொற்களுக்கும், அனுபவித்த நிகழ்ச்சிக்கும் இடையே ஓர் உறவு தோன்றும். இந்த உறவுதான் “பொருளின் பொருள்”. (மா.அரங்கநாதனின் “பொருளின் பொருள் கவிதை”).

இந்த பொருளில், ராம் பெரியசாமியின் இந்தக் கவிதை ஒரு புதிய கவிதைப் பூ!
“பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்”.

சட்டென்று கவிதை நம் மனதில் தீப்பற்ற வைக்கிறது. கவிஞனின் காகிதத்தில் ஏற்கெனவே தீவைத்திருப்பவள் அவளது காதலி. கவிஞனோ கவிதையில் தீவைக்கத் தொடங்கிவிட்டான்.

“ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன ..”

ஒரு பழைய கண்ணாடியில் முகம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியம்! ஒரு பழைய கண்ணாடியில்தான் கண்ணாடியின் முகமும் தெரிந்துவிடும். ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள் ரேகைகளாகிவிடுகின்றனவாம். ரசம் போன காதலனின் வரைபடத்தை ஒரு பழைய கண்ணாடி காட்டிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் கவிஞனோ தனது காதல் ரேகைகளைக் கண்டுபிடித்துவிடுகிறான். அதுவும் காதலின் புதிய கவிதை ரேகை! காணாமல் போன காதல் நதியும் கண்ணாடியில் தெரிந்துவிடுமல்லவா?

“காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…”

கால எந்திரம் என்கிற ஒரு கவிதையை எழுதியிருக்கும் என்னை இந்தச் சொற்சேர்க்கை சொக்க வைத்துவிடுகிறது. இந்தக் கவிஞனோ லாவகமாகக் காலத்தையே எந்திரமாக்கிவிடுகிறான். எதுவொன்று எந்திரமானாலும் இதயத்தனம் இல்லாமல் போய்விடும். எந்திரத்தனமான காலத்தை காதல் நினைவுகளுடன் எப்படிக் கடந்து செல்வது? அதனால் கவிஞன் என்ன செய்கிறான்? சுவற்றில் கிறுக்கியோ, எழுதித் தீர்த்தோ ஆசுவாசம் கொள்கிறான். எதையெல்லாம் எழுதித் தீர்க்கிறான்? பழுதடைகிற அன்புகளை!….பழுதடைகிற அன்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் இதய மெக்கானிக் ஷாப்புகளுக்குத்தான் போக வேண்டும். இதய பழுதுபார்க்கும் கடை சில நேரங்களில் சுவராக இருக்கிறது. சில நேரங்களில் தாளாக இருக்கிறது. ரிப்பேர் அதாவது பழுதுபார்க்கிற வேலை கவிதையாக இருக்கிறது. பழுதடைகிற அன்புகளை. கழிப்பறைச் சுவர்களில் எழுதிவைக்கிற நபர்களில் எத்தனைபேர் காதலர்களோ? யார் கண்டார்கள்?

“மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …”

ஓரிரை எறும்பு! கொல்கிறான் கவிஞன். வார்த்தைதான் அவனுக்குக் கிடைத்த வாள். இரை சுமந்த எறும்பு மரத்திற்குப் பாரமா? என்று கேட்கிற கவிஞன் சொல்லாமல் சொல்கிறான்…. உன் நினைவென்னும் இரை சுமந்த நானும் உனக்குப் பாரமில்லைதானே? அதனால்… “உன் தோளில் சாய்கிறேன். ” அதுவும் எப்படியாம்?….உலகைச் சுருக்கிக் கிளையில் அமரும் ஒரு பறவையைப்போல… எனவேதான் இவனால் தான் எழுதிய நாட்குறிப்புகள் அனைத்தையும் காதலியின் ஒற்றைப் பெயராகச் சுருக்கிவிட முடிகிறது. இப்படிப்பட்ட காதலனைத் தோள் சாய வேண்டாம் என்று எந்தக் காதலியால் சொல்ல முடியும்?

“ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …”

“காதலியே உன் கடைசி முத்தத்தை என் கல்லறைக்குக் கொண்டுவா” என்று மேத்தா எழுதிய போது புத்தம் புதுசாக இருந்த அந்த எழுதுமுறை இன்றைக்குப் பழசாகிவிட்டது. அதே விஷயம்தான்…. பழைய தோடுதனைப் போட்டு புதிய கம்மல் செய்வதுபோல செய்கிறான் கவிஞன். மரணம் என்பது நீ பிரிவதாலும் நிகழும். காதலியைக் கைப்பிடிக் கனாக்களிடம் ஒப்படைத்துவிடுகிறான். இனி, நான் ராம் பெரியசாமியை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்.

இனி முழுக் கவிதை…..
பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்
ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கின்றன …
காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…
மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …
ஒரு கைப்பிடிக் கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *