கவிதைச் சந்நதம் 3 (இந்திரஜாலம்) – நா வே அருள்

கொரானாவுக்கு முன் ஒரு சந்திப்பு – இந்திரன்

உலகிலேயே மிகப் பழைய விஷயம் காதல்.  ஆனால் உலகிலேயே மிகப் புதிய புதிய வழிகளைப் பயன்படுத்துவதும் காதல்.  அதன் சக்தி குதிரை சக்திகளைக் (Horse power) கூட குப்புற விழவைக்கும்.  அதனால்தான்

காதல் பல கவிஞர்களை உருவாக்குகிறது. பல கவிஞர்களைக் காணடித்தும் விடுகிறது. காதலர்களைப் படுத்துகிறதோ இல்லையோ,  மொழியை இளமைப் ‘படுத்துவதும் ‘ வளமைப் ‘படுத்துவதும்’ காதல்தான்.

பல காதல் கவிதைகளைப் படிக்க நேர்கையில் நாம் பலத்தை இழந்துவிடக் கூடும்.  காதலனை ஒரு நவீனத் துறவியாக்கிவிடுகிறது இந்தக் காதல்.  கவிஞன், இதயத்தைத் திருவோடாக ஏந்துகிறான்.  அம்மா தாயே என்பதற்குப் பதில் மானே தேனே என்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம். காசுக்குப் பின்னால் தெருவில் சுற்றுவதற்குப் பதில் காதலிக்குப் பின்னால் சுற்றுகிறான். பிச்சைக்காரன் பசிக்குத் தன் வாழ்க்கையை எழுதிவைத்துவிடுவதைப் போல காதலன் இதயத்திற்குத் தன் வாழ்க்கையை எழுதிவைத்துவிடுகிறான்.

காதலர்கள் இளமையின் அடிமைகளாக இருக்கிறார்கள்.  அல்லது காதலர்கள் இளமையிலேயே அடிமைகளாகி விடுகிறார்கள்.   “காதலியே உனது கடைசி முத்தத்தைக் கல்லறைக்குக் கொண்டுவா” என்று பிரபல கவிஞர்களின் வார்த்தைகளை உயில் எழுதிவைத்துவிட்டு உயிர்விட்டு விடுகிறார்கள். சுயத்தை இழக்காத காதலைச் சொல்லவே முடியாதா என்று நினைக்கிறபோது என் கண்ணில் பட்டது இந்திரனின் ஒரு நவீன கவிதை.

சில கோடுகளில் உயிர் பெற்று எழும் சித்திரமாய்
என் எதிரே நீ .

கவனமாக மேற்கொள்ளப் பட்ட
மிகக் குறைந்த ஒப்பனையில்
கேசம் மூடிய செவியில்
சின்னதாய்க் கொஞ்சம் தங்கம்.

சில கோடுகளில் உயிர்பெற்றுவிடக் கூடிய ஓவியம் எவ்வளவு உன்னதமானது! ஆதிமூலத்தின் காந்தி ஓரிரு கோடுகள்தானே?  இதயத்தில் எழுதப்படும் காதல் ஓவியத்திற்கு எத்தனைக் கோடுகள் தேவைப்படும்?  அதனால்தான் கவிஞர் சில கோடுகளில் உயிர் பெற்று எழும் சித்திரம் தீட்டுகிறார்.  இந்தக் கவிஞனுக்கு மிகக் குறைந்த ஒப்பனைதான் தேவைப்படுகிறது.  மேலும் காதலுக்கு என்ன ஒப்பனை?  கேசம் மூடிய செவியில் சின்னதாய்க் கொஞ்சம் தங்கம்.  அதாவது கொஞ்சம் தங்கம்.  அதுவும் கேசம் மூடிய செவியில்…. செயற்கையான தங்கத்தை விடவும் இயற்கையான கேசம் முக்கியமாகி விடுகிறது. வழமையான ‘கூந்தலில்’ கவிஞனின் பேனா சிக்கிவிடாமல் அவளது ‘கேச’த்தைப் படம் பிடிக்கிறது அவனது கேமரா.  சின்ன தங்கம் கூட இங்கே அவுட் ஆஃப் ஃபோகஸ்.

அடுத்த ஷாட் இன்னும் அற்புதம்.

how to draw a girl in saree - YouTube

“ஈரக் காகிதத்தில் தூரிகையால் வைத்த
ஒரு சொட்டு நீர் வண்ணம் மெலிதாய்ப் பரவுவது போல்
செவ்வந்திப் பூவிலிருந்து கசிந்த நிறத்தைப் புடவையாய்
ஆவி போல் சுற்றிய அநாயசம்.”

மிக அலங்காரமான சேலையில் பார்த்துப் பரவசப்பட்ட பழைய காட்சிகளை வேண்டுமென்றே அழிக்கிறான் கவிஞன்.  பெண்கள் பட்டுச் சேலைகளைச் சுமந்து பலமிழந்து போனவர்கள்.  அவர்களுக்கு மிக இலேசான சேலை உடுத்துகிறான் கவிஞன்.  எப்படி?….. செவ்வந்திப் பூவிலிருந்து கசிந்த நிறத்தைப் புடவையாய் ஆவி போல் சுற்றிய அநாயசம்.  அநாயசம் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் ஒரு கூடார்த்தம் இருக்கிறது.  காதலி காதலனைக் கவர்வதற்காக,  ஒரு அலங்காரப் பொம்மையாக மெனக்கிட்டு,  கண்ணாடி முன் நின்று,  கட்டிக் கட்டி,  மாற்றி மாற்றிப் பார்த்து,  கடைசியில் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்த அலங்காரச் சேலை அல்ல.  ஆவி போல் சுற்றிய அநாயசம்.  அதுவும் சேலையைக் “கட்டிய மெனக்கிடல்” கூட இல்லை. சேலையைச் “சுற்றிய அநாயசம்”.

அடுத்த காட்சியில் இன்னொரு அதிர்ச்சி.  வழக்கமாக கடைகளில் விற்கிற வாசனை பெர்ஃயூம்களுக்காக மூக்கைத் துருத்திக் கொண்டுபோகும் காதலன் அல்லன் இந்தக் கவிஞன்.

“அஞ்சாமை மிக்க நேர்மையை
ஒரு வாசனைத் தைலம்போல்
உடலில் அணிந்து கொண்ட உன்மத்தம்”

உடலில் வாசனைத் தைலம் முக்கியம் இழக்கிறது.  உள்ளம் அஞ்சாமை மிக்க நேர்மையைப் பூசிக் கொள்கிறது.  மட்டுமல்ல. புருவ மத்தியில் கறுப்புச் சூரியன் சூடிக் கொள்கிறாள். அவள் பேசுகிறாள்.  அவளது வார்த்தைகள் எப்படிப் பட்டவை?  அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்கிற பல்லாங்குழியில் விழுகிற பழைய காய்கள் அல்ல. அஞ்சாமை மிக்க நேர்மையை ஆயுதமாய் வடித்துக்கொண்ட அம்புகள். அதனால்தான் அவை ரெஸ்டாரன்டின் குளிர்ந்த கண்ணாடிச் சுவர்களில் நீர்க்கோடுகளாக வழிகின்றன. இப்படித்தான் அவளது பெயர் புதியதாய் எழுதப்படுகிறது.  அவளுக்கே அவள் புதியவள்.

25 Beautiful Rural Indian Women Paintings by Tamilnadu artist ...

“புருவ மத்தியில் கருப்புச் சூரியன் சூடி
என் கண்களைப் பார்த்து உதிர்த்த உன் வார்த்தைகள்
ரெஸ்டரண்ட்டின் குளிர்ந்த கண்ணாடிச் சுவர்களில்
நீர் முத்துக்களாய்ப் படிந்து கோடு கோடாய் வழிந்து
உன் பெயரை புதிதாய் எழுதி
உன்னை உனக்கே அறிமுகப்படுத்தும்.”

வட்டக் கண்ணாடி மேசை. எதிரில் மஞ்சள் நிற அன்னாசிப் பழச்சாறு.  ஒரு நகரத்துப் பழச்சாற்றில் ஏதேதோ கலந்திருக்கும். இந்தக் காதலர்களுக்கு இது போதவில்லை.  கவிஞன் நம்பிக் கொண்டிருக்கும் பொய்களையும், காதலி நம்பாமல் இருக்கும் உண்மைகளையும் கலந்து பருகுகிறார்கள்.  இந்தக் கலவை அவ்வளவு எளிதில் உள் இறங்காதல்லவா?  “மணிக் கணக்காய் நாமிருவரும் கலந்து கலந்து பருகினோம்” என்கிறான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதெல்லாம் வாசகர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறான் கவிஞன்.  காலம் கடந்ததால் மணிக்கட்டிலிருந்து உருகி வழிந்த கைக்கடிகாரம் என்பது புதுமையான படிமக் கரைசல்.  நழுவிய காலம் எப்போது ஞாபகத்திற்கு வரும்?  கடந்த காலம் கசக்கிறபோது அல்லது இன்ப உச்சம் எய்துகிறபோது.  இரண்டில் எதுவென்று வாசகரை ஊகிக்க விடுகிறார் கவிஞர்.

“பதறித் துடித்து லிஃப்டைப் பிடிக்க விரைகையில்

மிதந்து மேலெழும் பனிமலை போல்
சூரியனில் பளபளத்தது
நீயும் நானும்
தேடி அலைந்து கொண்டிருக்கும் சுயம்.”

சுயத்தை இழக்கிறார்களா? பெறுகிறார்களா?  அதற்கும் வாசகனின் யூகமே பதில்.  “மிதந்து மேலெழும் பனிமலைபோல் சூரியனில் பளபளத்தது” என்றால் சூரியனில் கரைந்து போனதைக் கவிஞன் குறிக்கிறானா?  அல்லது மலை என்பதால் அத்தனை சீக்கிரத்தில் அது கரைவதில்லை என்று சூசகமாகச் சொல்கிறானா?  கரைந்ததா கரையவில்லையா சுயம் என்று கவிதையில் ஒரு புதிர் முடிச்சுப் போட்டு விடுகிறான் கவிஞன்.  அவிழ்க்க முடியுமா முடியாதா என்கிற தீர்ப்பினை வாசகர்கள்தாம் வழங்க வேண்டும்.

இனி முழுக் கவிதையையும் படியுங்கள்

கொரானாவுக்கு முன் ஒரு சந்திப்பு / இந்திரன்
————————————————————-

Image
சில கோடுகளில் உயிர் பெற்று எழும் சித்திரமாய்
என் எதிரே நீ .

கவனமாக மேற்கொள்ளப் பட்ட
மிகக் குறைந்த ஒப்பனையில்
கேசம் மூடிய செவியில்
சின்னதாய்க் கொஞ்சம் தங்கம்.

ஈரக் காகிதத்தில் தூரிகையால் வைத்த
ஒரு சொட்டு நீர் வண்ணம் மெலிதாய்ப் பரவுவது போல்
செவ்வந்திப் பூவிலிருந்து கசிந்த நிறத்தைப் புடவையாய்
ஆவி போல் சுற்றிய அநாயசம்.

அஞ்சாமை மிக்க நேர்மையை
ஒரு வாசனைத் தைலம்போல்
உடலில் அணிந்து கொண்ட உன்மத்தம்.

புருவ மத்தியில் கருப்புச் சூரியன் சூடி
என் கண்களைப் பார்த்து உதிர்த்த உன் வார்த்தைகள்
ரெஸ்டரண்ட்டின் குளிர்ந்த கண்ணாடிச் சுவர்களில்
நீர் முத்துக்களாய்ப் படிந்து கோடு கோடாய் வழிந்து
உன் பெயரை புதிதாய் எழுதி
உன்னை உனக்கே அறிமுகப்படுத்தும்.

வட்டக் கண்ணாடி மேசையில் வைக்கப்பட்ட
மஞ்சள் நிற அன்னாசிப் பழச்சாற்றின் குளிர்மையில்
நான் நம்பிக் கொண்டிருக்கும் பொய்களையும்
நீ நம்பாமல் இருக்கும் உண்மைகளையும்
நினைவுகளின் சுழல் காற்றில்
மணிக்கணக்காய் நாமிருவரும்
கலந்து கலந்து பருகினோம்.

காலம் கடக்க
மணிக்கட்டிலிருந்து உருகி வழிந்த கைக்கடிகாரம் கண்டு
பதறித் துடித்து லிஃப்டைப் பிடிக்க விரைகையில்

மிதந்து மேலெழும் பனிமலை போல்
சூரியனில் பளபளத்தது
நீயும் நானும்
தேடி அலைந்து கொண்டிருக்கும் சுயம். — 2014

Image
இந்திரன்

 

 

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/kavidhai-sannadham-by-nave-arul/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/kavithai-sannadham-2/