கவிதைச் சந்நதம் 4 (வலியைக் கடத்தும் ரசவாதம்) – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 4 (வலியைக் கடத்தும் ரசவாதம்) – நா.வே.அருள்

 

கொரோனா நோய்க்கிருமியை எல்லா மனிதர்களும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவுடன் போராடுவோம் என்று பெரு முழக்கமே வீதிகளில் ஒலிக்கிறது.  விளம்பரங்களில் குட்டிக் குளுவான்களும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  அது என்னவோ எதிரி நாட்டு மன்னன் போலவும் அதன் படை பரிவாரங்களைத் தோற்கடித்துவிட்டுத்தான் மறுவேலை செய்வோம் என்று சபதம் செய்தபடி இருபத்து மூன்றாம் புலிகேசிகள் கவசம் சகிதமாகக் களத்தில் இறங்கிவிட்டார்கள். அவ்வளவு ஏன் பிரதமர் அதை விரட்டியடிக்கக் கைத்தட்டச் சொன்னார்.  கொஞ்சநாள் போனதும் அவருக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  விரட்டியடிக்கச் சொன்னதால் கொரோனாவுக்குக் கோபம் வந்திருக்குமோ?  எல்லா விளக்குகளையும் அணைக்கச் சொன்னார்.  ஒருவேளை இருட்டைப் பார்த்து அது பயந்து ஓடிவிடும் என்று நினைத்தாரோ என்னவோ?  அப்படியும் அவர் ஆறுதல் அடையவில்லை.  ஒரு வேளை சுத்தமான இருட்டில் கொரோனா கட்டிப் பிடித்துக் கொண்டால்?…. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு அகல் விளக்கை ஏற்றச் சொன்னார்.  ஆனால் கொரோனா முன்னை விடவும் விசுவரூபம் எடுத்துவிட்டது.

கொரோனா பல நல்ல காரியங்களைச் செய்துவிட்டது என்றே தோன்றுகிறது.  முதலில் அதற்குப் பேதம் பார்க்கத் தெரியாது. ஏழையா? பணக்காரனா?  இந்த சாதிக்காரனா?  அந்த சாதிக்காரனா?  இந்துவா? முஸ்லிமா? கிறித்துவனா?  என்பதெல்லாம் கேடுகெட்ட மனிதர்களுக்குத்தான். கொரோனாவுக்கு சர்வமும் சமம். இரண்டாவது அசுத்தமாக இருப்பவர்களை அதற்குப் பிடிப்பதில்லை.  அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தம் செய்துகொண்டே இருக்கச் சொல்கிறது. (மனசை சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டும்தான் பாக்கி) அதனால் எல்லா மனிதர்களையும் வசதியுள்ளவர்களாக வாழ்ந்து பார்க்கச் சொல்கிறது.  ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை பூமியில் என்று எல்லோருக்கும் வாழ்க்கைப் பாடம் நடத்துகிறது.  கொரோனாவின் “மன் கி பாத்” (மனதின் பேச்சு) இந்தப் பாடம்தான். இது ஒரு நோய்க்கிருமி மனிதர்களுக்கு நடத்துகிற நூற்றாண்டுப் பாடம். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் இந்த நோயுடன் வாழப் பழகுவோம் என்றும், எப்போது நோய் தீரும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்பதும் நோய்க் கிருமியைவிட மோசமான அணுகுமுறை அல்லவா? நோயின் மூலத்தைக் கண்டறிந்து அகற்றுவதற்கு நமது நாட்டில் எந்த நடவடிக்கைகள் உதவும் என்று யோசிக்காமல்,  மன்கி பாத் பண்ணிக் கொண்டிருந்தால்  இந்தியா என்பது மிகப் பெரிய சவப்பெட்டியாகத்தான் மாறும்.

ஓமானில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா

கோயில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் மூடி வைத்ததால் கடவுள்கள் தப்பித்துக் கொண்டார்கள்.  கடவுள்களைக் காப்பாற்றுவது இருக்கட்டும்.  முதலில் மனிதர்களைக் காப்பாற்ற வழி என்ன?  கொரோனா, வெறும் கொள்ளை நோய் அல்ல, இது ஒரு விலங்கியல் நுண்கிருமி.  எயிட்ஸ், எபோலா, நிப்பா, சார்ஸ் போன்று இதற்கும் மருந்து கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.  முடியாது என்றே சொல்லிவிடலாம். சரி, இதற்கு வழிதான் என்ன?

காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதன் அல்லாத காடுகளைச் சார்ந்து வாழ்கிற உயிரினங்களுக்கும் மனஅழுத்தமும் விலங்கியல் நோய்களும் உருவாகின்றன.  அதனால் அவற்றினுடைய எச்சங்களிலும், எச்சில்களிலும் ஒருவித கிருமிகள் உருவாகின்றன.  அவற்றிலிருந்து பிற உயிரினங்களுக்கும், இறுதியாக மனிதர்களுக்கும் பரவி விடுகின்றன.  ஆக, காடுகளை அழிக்காமல் இருப்பது ஒன்றுதான் இப்படியான நோய்களை வராமல் தடுக்கிற வழிகள்.  ஆனால் இந்தக் கொரோனா காலத்தில்தான் நமது பிரதமர் 500 பாக்சைட் சுரங்கங்கள், 50 நிலக்கரிச் சுரங்கங்கள் என்று அனுமதி வழங்குகிறார். மேலும், இலட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்புள்ள காடுகள் அழிக்கப்பட இருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் கொரோனாவை விட யார் கொடியவர்கள்?

விலங்குகளுக்கான மன அழுத்தத்தால் விலங்கியல் நுண்கிருமிகள் உருவாகின்றன. அகற்றுவதற்குப் பாடுபடவேண்டியவர்கள் ஆட்சியாளர்கள்.  ஆனால் தன்னார்வலத் தன்வந்திரி மாதிரி மனிதர்களின் மன அழுத்தத்திற்கு தன் கவிதையால் மருத்து செய்கிறான் ஒரு கவிஞன்.  இதயம் கூட ஒருவகையில் ஓட்டை உடைசல் செம்பு பித்தளைப் பேரீச்சம் என்று பழுது பார்க்கப் படவேண்டிய பாத்திரம்தான் என்று உணர்ந்த கவிஞனின் உள்ளார்ந்த கவிதை இது.

மக்களுக்கு தனிமையாலும், வாழ்க்கைக்குத் தேவையானவற்றின் பற்றாக் குறைகளாலும் தாங்க முடியாத துயரங்கள்.  அடுப்பங்கரையைக் கூட எட்டிப்பார்க்கும் அவஸ்தைகள்.  அவற்றிற்கு ஒரு கவிஞன் மிக நேர்த்தியாக முகம் கொடுத்திருக்கிறான்.  ஆள்பவர்கள் வசதியாக “சமூக இடைவெளி” பற்றிப் பிரசங்கங்கள் செய்கிறார்கள்.   வீட்டுக்குள் அடைந்து கிடப்பதின் வலி அவர்கள் அறிவதில்லை.  வாடகை வீட்டின் மொட்டை மாடியில் இரவைக் கழிப்பது பற்றிச் சொல்கிறான்.  ஏன் இரவில் மட்டும் மொட்டை மாடி?  பகலில் அந்த இடம் வீட்டு உரிமையாளர்களின் பட்டா.  சில வீடுகளில் இன்னும் மோசம் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரம் பார்த்து, பார்த்துப் பார்த்துப் படியேறித்தான் மொட்டை மாடியை எட்டிப் பார்க்க முடியும்.

கொலையாளி 5 பேசும் ஓவியம் பாகம் 1 ...

எப்படியோ கவிஞன் மொட்டை மாடிக்கு ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்துவிட்டான். அப்பாடா என்று விண்மீன்களைப் பார்க்கிறான்.  தொலைவிலிருக்கும் அவை இவனுடன் பேசுகின்றன.  அந்தப் பேச்சு பொய்மையே இல்லாமல் உண்மையிலேயே இயற்கை நடத்தும் “மன் கி பாத்”. கவிஞன் சொல்கிறான், “அருகில் இருப்பவர்களுக்குத்தான் அன்பு செலுத்தத் தெரியவில்லை”.  இது கொரோனா காலத்துக் கவித்துவச் சாட்டை.  பிட்டுக்கு மண் சுமந்தவன்மேல் பட்ட அடி உலகின் ஒவ்வொருவர்மேலும் பட்ட அடி என்பார்கள்.  இந்தக் கவிஞன் சொடுக்கிய சாட்டை ஆள்பவர்கள் மீதும் அவசியம் விழுந்திருக்கும்.

என்னை நானே தொட்டுத் தழுவிக் கொள்கிறேன் என்கிறான். இது தனக்குத்தானே புணர்ந்து கொள்கிற அவலம் அல்லாமல் வேறென்ன?  அவன் இதற்குமுன் இந்த உலகில் இருந்த சிரிப்புகள் எப்படிக் காணாமல் போயின என்று கவிதையில் கணக்கெழுதுகிறான்.  அவனுக்கு வேறு வழியே இல்லை.  “என் சிரிப்பை நானே என் முகத்தில் தேடி எடுக்கிறேன்” என்கிறான்.  சிரிப்பைத் தேடி எடுக்கிறான். சிரிப்பை இந்தச் சமூகம் ஒளித்து வைத்துவிடுகிறது.  இந்த சமூகம் சிரிப்பை வைத்துதான் சதுரங்கம் ஆடுகிறது.  இந்தக் கண்ணாமூச்சி சதுரங்கத்தைத்தான் கவிதைச் சதுரங்கமாக மாற்றிக் காட்டுகிறான் கவிஞன்.    ஒருவழியாக சிரிப்பைத் தேடி எடுக்கிறான்.  ஆனால் அழுகையோ தேட வேண்டிய அவசியமே இல்லை.  அது தானாகவே வந்துவிடுகிறது.  “அழுகையது தானாக வந்துவிடுகிறது”  அழுகைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.  தனியொருவனின் அழுகை இந்த ஜகத்தினை அழிக்கக் கூடிய சக்தி கொண்டது.

கைவிடுகிற சமூகமாகிறது.  அவரவருக்கும் ஆயிரம் கைவிடுதல்கள் நிகழ்ந்துவிடுகின்றன.  மிக நெருக்கமானவர்களின் மரணத்தின் இறுதி ஊர்வலம் அநாதையாகிவிடுகிறது.  யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்யப்படுகிற அழுகைக் காட்சிகள் அநேகம்.  அப்பாவோ, அம்மாவோ எந்த மருத்துவ மனைகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்று கூட தெரியாமல் அழுதுகொண்டிருக்கிற பிள்ளைகள்.  கண்ணுக்கு எதிரிலேயே கைவிடப்படுகிற முதியவர்கள். தன்னைத் தான் மட்டுமே நேசித்தாக வேண்டிய தயை அழிந்த காலம் இது.

கவிஞன் தன் மனசுக்கு ஆறுதல் சொல்கிறான்.

“கவலைப்படாதே மனமே
உன் தேவைகளை நானே நிறைவேற்றுவேன்
அன்பை பிச்சை கேட்பதைவிடவும்
வலியானது எதுவுமில்லை.”

சமூகத்தைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.  பிரசங்கமோ, பிலாக்கணமோ இல்லை.  “வயிற்றுப் பசி” என்று சொல்கிறான்.  நாம் அனைவரும் நமது வயிறுகள் காலியாக இருப்பதை உடனடியாக உணர்ந்து கொள்கிறோம்.  ஒரு தனிமனிதனின் வலியை ஒரு சமூகத்தின் வலியாக மாற்றிக் காட்டுகிற ரசவாதத்தை இந்தக் கவிதை நிகழ்த்துகிறது.

Image

இனி பாரிகபிலனின் முழுக் கவிதையையும் படித்துப் பாருங்கள்

வலி
……..
கதவுகளுக்குள் அடைபட்டு
கிடக்க முடியவில்லை

வாடகை வீட்டின் மொட்டை மாடியில்
பாதி இரவை தனிமையில் கழித்துவிடுகிறேன்

வானம் பார்க்கிறேன்
நிலவைத் தேடுகிறேன்
விண்மீன்கள் எனை உற்று உற்று பார்க்கின்றன.
தொலைவிலிருக்கும் அவை
அழகாக பேசுகின்றன
அருகிலிருப்பவர்களுக்கு
அன்பு செலுத்த தெரிவதில்லை

காற்று தொடுகிறது
அநுதினமும் காற்றுதான் எனைத் தொடுகிறது

எங்கிருந்தோ வரும் காற்று
உயிராகவும்
இசையாகவும்

அருகிலிருப்பவர்களுக்கு அன்பு செலுத்த தெரியவில்லை
அல்லது எனதன்பு புரியவில்லை

என்னை நானே தொட்டுத்
தழுவிக் கொள்கிறேன்.
என் சிரிப்பை
நானே என் முகத்தில் தேடி எடுக்கிறேன்
அழுகையது தானாக வந்துவிடுகிறது
என்னை நானே அதிகம் நேசிக்கிறேன்

கவலைப்படாதே மனமே
உன் தேவைகளை நானே நிறைவேற்றுவேன்
அன்பை பிச்சை கேட்பதைவிடவும்
வலியானது எதுவுமில்லை.

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/kavidhai-sannadham-by-nave-arul/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/kavithai-sannadham-2/

தொடர்3ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/

Show 2 Comments

2 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *