Subscribe

Thamizhbooks ad

கவிதைச் சந்நதம் 5: கவிதைகளின் காந்தம் ‘வேகம்’ – நா.வே.அருள்

சந்துரு கவிதைகள்

1)மேலும் கீழுமாய் 2) அதிகமாய் வேண்டுவது

ஒரு நல்ல கவிதை அமைதியைக் குலைத்து விடுகிறது; மனசைப் போட்டுப் பிறாண்டி எடுத்துவிடுகிறது.  கவிதை நடத்தும் உள்முகப் பாய்ச்சலில் பித்துப் பிடித்துவிடுகிறது.  ஏன் இப்படியெல்லாம் என்று கேள்வி கேட்க வைக்கிறது.  இப்படியும் நடக்குமா என்று மனதை அலைபாய வைக்கிறது. கவிஞன் ஒரு காட்சியைப் படம் பிடித்து நம் கண்களின் முன்னால் போட்டுவிடுகிறான்.  அந்தக் காட்சி மேகத்தைப் போல கலைய மறுக்கிறது.  நீலத்தைப் போல வானத்தில் நிலைத்துவிடுகிறது. காரணம் என்ன?  கவிதையின் உணர்ச்சியா?  அதன் படிமமா?  இரண்டும் இன்னும் பிறவும் சேர்ந்த இன்னொரு அம்சம்.  அதுதான் வாசகனை மேலும் மேலும் ஈர்த்துச் செல்கிற காந்தம்.  அதன் பெயர் கவித்துவ வேகம்.

சந்துருவின் மேலே குறிப்பிட்ட இரண்டு கவிதைகளிலும் கவித்துவ வேகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு கவிதையாகப் பார்க்கலாம். முதல் கவிதை முழுவதும் எதிரெதிரான கேள்விகளை முன்வைத்து நகர்கிறான் கவிஞன்.  இரண்டு தொழில்களை ஒன்றின் மேல் ஒன்றினைப் பொருத்திப் பொருத்திக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறான். இது ஒரு சுவாரசியமான சிந்தனை விளையாட்டுதான்.  ஆனால் அது வாழ்க்கையின் விசித்திரமான விளையாட்டு.  வரம் ஒருபுறம். சாபம் ஒருபுறம். நடுவில் திண்டாடும் கவிஞனின் இதயம்.

பிணத்துக்குப் பறையடிக்கும் மயானத் தொழிலாளியும் சாமிக்கு மணியடிக்கும் கோயில் பூசாரியும் எதிரெதிர் அடுக்கில் நிறுத்தப் படுகிறார்கள்.  இருவருக்குமே இயல்பில் காத்திருக்கிற தொழில்தான்.  ஒருவன் பிணத்துக்காகவும், மற்றொருவன் பக்தனுக்காகவும் காத்திருக்கிறார்கள். இருவருக்குமே உழைப்புக் கூலி கிடைக்கிறது.  பிணத்தை அடக்கம் செய்தவன் அடிமையின் விரல்களால் யாசிக்கிறான். சூடம் ஏற்றியவன் கையில் தட்டேந்தி வந்தாலும் முகத்தில் எஜமான கம்பீரம்!  பிணமெரிப்பவனுக்கு முகஞ்சுளித்த தீட்டுச் செலவு.  கற்பூரம் எரிப்பவனுக்கு கடவுளின் ஒளிவட்டத்திலான உழைப்புக் கூலி.

ஏன் இந்த மேடு பள்ளங்கள்?  இது என்ன வாழ்க்கையின் வெறிக்கூத்து?  வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?  சதிகாரக் கட்டங்களின் சதுரங்க ஆட்டமா?  சமூகம் ஏற்பாடு செய்திருக்கும் ஆடு புலி ஆட்டமா?  பாம்பு ஏணி பரமபத விளையாட்டா?  கவிஞன் விடை சொல்கிறான். வாழ்க்கை என்பது ஆளுக்கொரு வேடம் கட்டியாடும் பொம்மலாட்டத் திரை.  சமநிலையற்றுக் கட்டப்பட்டிருக்கும் சூட்சுமக் கயிறுகள்! ஆளுக்கொரு திரையில் ஆடும் சாதியின் கதாபாத்திரங்கள்!

இனி முழுக் கவிதையையும் படியுங்கள்….

மேலும் கீழுமாய்
**********************
பிணத்துக்கு பறையடிக்கும் மயானத் தொழிலாளிக்கும்
சாமிக்கு மணியடிக்கும்
கோயில் பூசாரிக்கும்
வித்தியாசம் பெரிதாய்
இருப்பதில்லை…
முன்னவன்
பிணம் விழும் நாளுக்காகவும்…
பின்னவன்
நேர்த்திக்கடன் செலுத்துபவனுக்காகவும்
தேவைகளினடிப்படையிலேயே
காத்துக்கொண்டிருக்கிறார்கள்…!
ஆனாலும்…
பிணம் புதைத்து முடித்தவன்
உழைப்புக் கூலியை
அடிமையின் விரல்களால்
யாசித்துப் பெறவே
நிர்பந்திக்கப்படுகிறான்
சூடம் எரிப்பவன்
யாசகனின் உள்ளக்கிடக்கையுடன்
தட்டேந்தி வந்தாலும்
தனக்கான கூலியை
எஜமானனின் கம்பீரத்துடனே
எப்போதும்
ஏந்திச் செல்கிறான்…
காத்திருப்புகளின் முடிவுகள்
எல்லோருக்கும்
ஒரே சுவையை அளிப்பதில்லை…
கூடுதல் உழைப்பை செலுத்தியவன் குனிந்தும் பணிந்தும்
குறைத்து உழைத்தவன்
நிமிர்ந்து நின்றும்
தனக்கானதை
பெற்றுக்கொள்கிறார்கள்…
பிரேதமெரிப்பவனுக்கு
தீட்டுச்செலவாக
முகஞ்சுளிக்கபட்டும்
கற்பூரம் எரிப்பவனுக்கு
கடவுளின் ஒளிவட்டத்துடனும்
உருப்பெற்றுவிடுகின்றது
உழைப்புக்கூலி…!
மேல்… கீழ்…..இடை நிலைகளென
நினைத்தபடி
ஆளுக்கொரு வேடம் கட்டியாடும்
பொம்மலாட்டத் திரையில்
சம நிலையற்று பின்னப்பட்ட
சூட்சுமக்கயிறுகளை
ஆட்டுவிப்பவனாய்
தங்களையே
பாவித்துக்கொண்டு
கீழும் மேலுமாய்
ஆளுக்கொரு திசையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
சாதியின் பாத்திரங்கள்…!

சந்துரு

Image
சந்துரு…

உணர்ச்சியையும், படிமத்தையும் உள்ளே வைத்து விளையாடும் கவிதை உண்மையில் வாசகனைத் தன்வயப்படுத்துவது அதன் காந்தமாக செயல்படும் வேகத்தினால்தான் என்று பார்த்தோம் அல்லவா? தொடக்கத்தில் வேகமாக உணர்ச்சியின் ஊடே பயணித்த கவிதை “மேல்…. கீழ்…. இடை நிலைகள்” என முடிகிற பத்துப் பதினான்கு வரிகளில் திணறுகிறது. கருத்தை முதன்மைப் படுத்துதலால் படிமத் தேர்வில் கவனம் சிதறியிருக்கக் கூடுமோ?  ஆனால், அடுத்த கவிதையிலோ,  இதற்கு நேர் எதிராக முடிகிற வரிகளில் கவித்துவ வேகம் காட்டாறாகப் பாய்கிறது. இனி அந்தக் கவிதையைப் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் ஒரு காட்சியின் விவரிப்பாகத் தொடர்கிற சாதாரண கவிதை போலத் தோற்றம் தருகிற கவிதைதான்.  ஆனால், கவிதையின் இறுதியில் கவித்துவ வேகம் ஒரு மின்னலைப்போலத் தாக்குகிறது.

கொரோனா காலத்தில் குடும்பம் குடும்பமாக நடந்த இடப்பெயர்வுகளில் ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்கிறான் கவிஞன்.  காட்சியை ஒரு குறும்படத்தைப் போல நம் முன்னே ஓட விடுகிறான்….

களைத்துறங்கும் குழந்தைகளில் கணவன் ஒன்றையும், மனைவி ஒன்றையும் தோள் சுமந்து நடக்கிறார்கள். வறுக்கும் வெயில். நீண்ட வீதி.  வெடித்த பாதங்கள்.  பாதை எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியவில்லை.  ஏனெனில் பயணம் அப்படிப் பட்டது.  முடிவுறாத பயணத்தில் அருகில் இருக்கும் வீடு கூட (அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில்) அப்பால் நகர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது.  வீட்டை நெருங்குவதற்கு வேறு குறுக்கு வழிகளும் இல்லை.  கால் தடங்களாலேயே கடந்தாக வேண்டும்.  வாமன சக்தி வாய்த்தால் தேவலாம். ஆனால், வாய்ப்பில்லை.  விஷ்ணுகூட தன் பெருமாள் கோலத்தில் பூட்டிய கோயிலுக்குள்ளேயே தன் துணையுடன் ஒதுங்கி இருக்கிறார்.  மனசு மட்டுமல்ல, பாதங்களும் வெடித்துவிடுகின்றன.  கொடுமையான கொரோனா காலம். கௌரவமானவர்களைக் கூட காலம் பிச்சையெடுக்க வைக்கிறது. வழியில் கருணையுள்ளவர்கள் கொடுப்பதைக் கூச்சத்துடன் பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்குத் தின்னக் கொடுப்பதற்கு முன் அவர்களை வெட்கம் பிடுங்கித் தின்கிறது.   ஏற்கெனவே கொல்லப் பட்டவர்கள் மீண்டும் அவமானத்தால் கொல்லப் படுகிறார்கள்.

மனிதர்களோடு மனிதர்களாகப் பழகியவர்கள்தாம். ஆளரவம் இல்லாத தெருக்களின் வழியே நடந்து போகிறார்கள்.  இப்போது மனித வாசம் இல்லாமல் இருப்பது அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. “நெடுஞ்சாலைகளின் ஓரம் காலைக்கடன்களை  கழித்துக்கொள்ள…”

எல்லோரும் ஆண்கள், குழந்தைகள் பற்றியே யோசிக்கிறோம்.  பெண்கள் பற்றி?  நடக்கிற நாட்களில் வழியில் ஒதுங்க நேர்ந்தால்….. இதுவரை நம்மில் பலரும் யோசிக்காத மனப் பிரதேசத்திற்குக் கவிஞன் அழைத்துச் செல்கிறான்.  அங்கே கூனிக் குறுகி இருக்கிற பெண்களிடம் நமது குற்றவுணர்வில் வழிகிற குருதி வாசம். கவிஞன் நம் காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட வைக்கிற வரிகளுடன் கவிதையை முடிக்கிறான். நம் மீது நம் தாயின் ரத்த வீச்சம் அடிக்கிறது….

“அந்தத் தாய்

இப்போது அதிகமாய்

வேண்டிக்கொள்வதெல்லாம்

ஊர்ப்போய்ச் சேர்வதற்குள்

மனம் தரும் ஆயாசத்தால்

முந்திக்கொண்டு

வந்துவிடக்கூடாது

அந்த மூன்று நாள் துயர்

என்பது மட்டுமே…”

இனி கவிஞனின் முழுக் கவிதையையும் படித்துப் பாருங்கள்.

Jesus Healing the Blind Man

அதிகமாய் வேண்டுவது

*****************************

களைத்துறங்கும்

குழந்தைகளில்

கணவன் ஒன்றையும்

மனைவி மற்றொன்றையும்

தோள் சுமந்து

வெடித்த பாதங்களுடன்

நீண்ட வீதியில்

நெடு நேரம் நடக்கின்றனர்…

கசியும் கண்ணீர் மறைத்து

கருணையுள்ளோர் தருவதை

கூச்சத்துடன் பெற்றுக்கொண்டு

பாதங்களால் உலகளந்து செல்லும்

அவர்களுக்கு

மனித வாசமில்லாத

அதிகாலைகள்

போதுமாயிருக்கிறது

நெடுஞ்சாலைகளின் ஓரம்

காலைக்கடன்களை

கழித்துக்கொள்ள…

வெயில் ஏறிய பிறகு

குழந்தைகளுக்கு

தண்ணீருக்கு பதில்

காகிதங்களே

தற்காலிகத் தீர்வாகிறது…!

தாங்கள் கைவிடப்பட்டிருப்பதை

தெளிவாய் தெரிந்துகொண்டிருக்கும்

அவர்களுக்கு

இன்னும் எத்தனை நாட்கள் நடப்பதென்பதுதான்

முடிவாய்த் தெரியவில்லை…

வழி நடைகளில்

அரிதாய் எங்கேனும்

தண்ணீரும் சொற்ப உணவும்

தந்தாலே போதும்

தோள் சுமந்த பிள்ளைகளுடன்

ஊரடைந்து விடலாமென்று

நம்பிக்கையுடன் நடக்கும்

அந்தத் தாய்

இப்போது அதிகமாய்

வேண்டிக்கொள்வதெல்லாம்

ஊர்ப்போய்ச் சேர்வதற்குள்

மனம் தரும் ஆயாசத்தால்

முந்திக்கொண்டு

வந்துவிடக்கூடாது

அந்த மூன்று நாள் துயர்

என்பது மட்டுமே…

 

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/kavidhai-sannadham-by-nave-arul/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/kavithai-sannadham-2/

தொடர்3ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/

தொடர் 4ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-4-na-ve-arul-2/

Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...