ஆசுவின் ‘அப்பாவின் சித்திரம்’ 

அன்பை வெளிப்படுத்துவதில் அம்மா பிரசித்தம்.  அப்பாவோ மௌனச் சாமியார்.  அப்பாவின் உலகத்தில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் பிள்ளைகளின் மேல் எப்போதும் பிரத்தியேகக் கவனம். முடிந்து வைப்பதற்கு அவரிடம் முந்தானை இருக்காது.  ஆனால் சட்டைப் பாக்கெட்டுக்குள் சதா துடித்துக் கொண்டேயிருக்கும் இதயம்.  ஆனால் ஆசுவின் அப்போவோ வேட்டி முந்தியில் முடிந்து வைத்திருக்கிறார்.  அவிழ்த்துக் கொடுத்த அரையணா பெரிதில்லை.  அப்புறம் அவர் நெற்றியில் இடுகிற முத்தம்தான் முக்கியமானது.  அவர் கொடுத்த அரையணா ‘முட்டாய்’ ஆனது.  முத்தமோ ஆசுவின் கவிதையானது.  ஈச்சங்குருத்தில் அவர் கட்டிக் கொண்டுவரும் வெள்ளரிப் பழம் முக்கியமில்லை.  அந்த வெள்ளரிப்பழம் வெடித்துச் சிதறிய வெண்மணல் மாதிரி அவர் புன்னகை முக்கியம்.  அந்தப் புன்னகைதான் ஆசுவின் கவிதைக்கு அடிஉரம்.

தோப்புக்காரன் கண்படாமல் விறகுக் கட்டில் மறைத்து முந்திரிப் பழம் எடுத்துவருவதற்கள் வேர்த்து வெலவெலத்துப் போகும்.  ஆனாலும் பிள்ளைப்பாசம் அப்பனை ஒரு சின்னத் திருடனாக ஆக்குகிறது. பனை நுங்கை விரல்விட்டு உறிஞ்சுவது கவிதை எழுதுவதைவிடவும் கடினமான கலை. கண்ணில் நீர் பீய்ச்சாமல் கைவிரல் வைக்க வேண்டும். தவறினால்,

“இதுக்கெல்லாம்

‘தெரவுசு வேணுமோடா’

அப்பாவின் வசவும்

ஓர் அன்புச் சொடுக்கலாய்

மனசில் தைக்கும்.”

பசி எட்டிப்பார்த்த வீட்டை அப்பாதான் “தினைச்சோறும், வரகரிசிச்சோறும், புல்லரிசிச்சோறும், பண்ணைக் கீரையும் கொட்டிக் கிழங்கும்“எட்டிப் பார்க்கும் வீடாக்க ஏதேதோ செய்கிறார்.  ஒரு கோவணம், ஒரு துண்டு, அரை வேட்டி இவைதான் அப்பாவின் சொத்து. அப்பாவின் சொத்து அப்பாவின் சிதையோடு எரிந்தும் போய்விடுகிறது!

“என்னுடைய 14-வது வயதில், அப்பாவை இழந்தேன். அந்தக் கண்ணீரின் சூடு, இந்தக் கவிதையில் மட்டுமல்ல.எப்போதும் மனசில், அப்பாவின் நினைவுகளாய்க் கொதித்துக் கொண்டிருக்கும்.” கவிஞனின் கவிதை வாக்குமூலம் இது.

அப்பா செத்துப் போனபோது அதையேதான் போர்த்தினோம் என்கிறபோது கவிதை ஒரு தவளையைப் போல இதயத்திற்குள் தாவிவிடுகிறது. துயரம் அப்பிக் கொள்கிறது. அப்பாவின் சித்திரம் சிதையின் தீயில் அலைவுறுகிறது. துயரத்திற்கு மரணமில்லை.  கவிஞனின் வார்த்தைகளில் வீட்டின் கதவடியில் வருகிற வெள்ளத்து நீரைப் போல வாழ்க்கையின் கசப்பு அவர்களின் வீட்டில் குடியிருந்திருக்கிறது.

இனி ஆசுவின் முழுக் கவிதையையும் படியுங்கள்

அப்பாவின் சித்திரம்

———————————-

வேட்டித் தலைப்பு முந்தியில்

முடிந்து வைத்த அரையணாவை

அவிழ்த்துக்கொடுத்து

‘முட்டாய் வாங்கிக்கோ’ன்னு

நெற்றியில் முத்தமிட்டுச் சொல்வார் அப்பா

ஈச்சங்குருத்தில் வாகாய்க்கட்டி

கழனிக்காட்டிலிருந்து

அப்பா

கொண்டு வரும் வெள்ளரிப் பழத்தில்

வெடித்துச் சிந்திய

வெண்மணலாய் புன்னகைப்பார்.

தோப்புக்காரன் கண்படாது

எனக்காய்ப் பறித்து

விறகுக்கட்டுக்குள்ளே

அப்பா ஒளித்து

எடுத்துவரும் முந்திரிப்பழம்

அதன் சாறு

என் நுனி நாக்கின்

கிறுகிறுப்பில்

அன்றைய பொழுதெல்லாம்

மூளைக்குள் குடையும்.

பனை மரமேறி

அப்பா குலை குலையாய்

வெட்டிப்போட்ட

இளசான நுங்குகளை

விரல் பதித்து உறிஞ்சிகையில்

நீர்ப்பீறிட்டு

கண்ணில் தெறிக்க

இதுக்கெல்லாம்

‘தெரவுசு வேணுமோடா’

அப்பாவின் வசவும்

ஓர் அன்புச் சொடுக்கலாய்

மனசில் தைக்கும்.

அப்பா

கிளை உலுக்கிக்கொட்டிய

நாவல் பழமும்

உதட்டில்

பால் பிசுப் பிசுப்போடு

சுவைக்கக் கொடுத்த பாலைப்பழம்

அப்பாவின் நாளெல்லாம்

இனிக்கும் எனக்கு.

தினைச்சோறும், வரகரிசிச்சோறும்

புல்லரிசிச்சோறும், பண்ணைக் கீரையும்

கொட்டிக் கிழங்கும்

எங்களுக்கான பசிபொருளாக்கி

எங்களை வளர்த்த அப்பா.

ஒரே ஒரு கோவணமும்

தோளில் துண்டும்

அரை வேட்டியும்

அப்பாவுக்கான சொத்தாய்

செத்துப்போன அன்றும்

அதையேதான் போர்த்தினோம்.

கலங்கிய சேடைச் சேற்றில்

அப்பாவின் முகம் துளும்ப

நினைவில் முடித்து வைத்தேன்

எரித்த ஞாபகங்களோடு

அப்பாவுக்கு நேர்ந்த

கசப்பு ஊட்டிய வாழ்வையும்.

            -ஆசு

 

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/kavidhai-sannadham-by-nave-arul/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/kavithai-sannadham-2/

தொடர்3ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/

தொடர் 4ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-4-na-ve-arul-2/

தொடர் 5ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-5-na-ve-arul-2/

தொடர் 6ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-6-na-ve-arul-2/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-7-na-ve-arul/ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *