கவிதை: ஆறாம் பூதம் – சுபாஷ் சுரேஷ்ஆறாம் பூதம்

*********************  

ஓ ஐரோப்பாவின் பூதமே
இந்திய மண்ணில் நூற்றாண்டு கொண்டாட்டமா!?

சுரண்டல்வாதிகள் உன்னை
சாத்தான் என்கிறார்கள்.

நிலப்பிரபுக்கள் உன்னை
வெளிநாட்டு சரக்கென்கிறார்கள்.

முதலாளிகள் உன்னை தோற்றுவிட்ட
தத்துவம் என்கிறார்கள்.

யார்தான் நீ பூதமே???

மார்க்ஸ் பெற்றெடுத்த வரலாற்றுக்குழந்தை
எங்கல்ஸ் வளர்த்தெடுத்த வளர்ப்புக்குழந்தை
லெனின் வார்த்தெடுத்த பட்டறைஆயுதம்
ஸ்டாலின் வகுத்தளித்த நடைமுறையுக்தி
மாவோ நடந்து காட்டிய விடியல்பாதை
பிடல் பெற்றளித்த சுதந்திரக் காற்று
சே  வழித்தடத்தின் இறுதி இலக்கு
பகத்சிங் முழங்கிய வார்த்தைகளின் வடிவம்

Communism Timeline - HISTORY

சுரண்டப்படுபவனின் இருள்விலக்கி
அடிமையானவனின் நம்பிக்கைக் கீற்று
உழைத்துக் களைத்தவனின் விடுதலை கானம்
ஒடுக்கப்பட்டவனின் சுதந்திரப் பட்டயம்
ஒதுக்கப்பட்டவர்களின் சமத்துவ சாசனம்
கொல்லப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கை
பாட்டாளி வர்க்கத்தின் இறுதி லட்சியம்.

போதும் முடிந்துவிட்டதா
இலக்கு தீர்ந்துவிட்டதா?

முடியும் பாதையின் முடிவிலி நான்
மனிதகுலத்தின் இறுதி இலக்கு
பொதுவுடைமையே ஒளிவிளக்கு
புனிதம் தகர்த்தெறிந்து சமத்துவ சமூகம்
சமமாய் வேண்டும் பூதம் நான்.

மானுட குலத்தின்
மகத்தான அன்பின்
பொதுவுடைமை பூதம்.

      –சுபாஷ் சுரேஷ்