கவிதை: ஸ்மார்ட் தேசம்  – எஸ் வி வேணுகோபாலன் 

கவிதை: ஸ்மார்ட் தேசம்  – எஸ் வி வேணுகோபாலன் 

 
மிகப் பெரிய ஜனநாயக நாடு 
ஆகவே 
மிகப் பெரிய ஸ்மார்ட் வகுப்பறை இது 
ஆன் லைனில் 
இணைக்கப் பட்டு விட்டீர்கள் குடிமக்களே, 
நீங்கள் 
24x 7 கண்காணிப்பில் இருக்கிறீர்கள் !
 
உங்கள் வகுப்புகள் 
எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் 
எப்போது முடிந்தாலும் தொடரும் 
எப்போதும் நடந்து கொண்டும் இருக்கும் 
 
கடனை உடனை வாங்கி 
பிள்ளைகளுக்கு 
ஆன் லைன் பள்ளிக்கூடம் உறுதி செய்த பெற்றோரே 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்றோரே 
அரசு செலவில் 
நடத்தப்படுகிறது உங்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை 
இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும் 
என்று கூடத் தெரியாதவர்கள் தகவலுக்கு,
நீங்கள் 
24x 7 கூடுதல் கண்காணிப்பில் இருப்பீர்கள், இனி!
 
அதிகார பூர்வ ஏடுகள் 
நடுவே நடுவே நிலைபாடு எடுக்கும் 
நடுநிலை சானல்கள் 
இவற்றை வாசித்தும், பார்த்தும் 
எல்லாம் நன்றாகத் தான் நடக்கின்றன
என்று புரிந்து கொள்ளும் திறமை அற்று 
அதைக் கேள்விக்கு உட்படுத்துவோரே 
நீங்கள் 
உரியபடி தெளிவிக்கப் படுவீர்கள்
 
கடவுள் நம்பிக்கை இல்லாதோர் 
எச்சரிக்கப்படுகிறீர்கள் 
உங்களை அப்புறம் யார் தான் இப்போது காப்பாற்ற முடியும்?
 
நம்பிக்கை உள்ளோர் 
உங்கள் கடவுள் யார் என்பதில் 
எச்சரிக்கையாக இருங்கள் 
அவர் யாராக இருந்தாலும் இருக்கட்டும் 
தேச பக்தி குறைவதாக அறியப்பட்டால் 
உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாமல் போகும் !
 
நாடு முழுவதும் 
பரவிக் கொண்டிருக்கும் தொற்று குறித்த 
சிறப்பு அறிக்கை வாசிக்கப்படும் போது 
நீங்கள் 
கூடுதல் கவனத்தோடு 
வாசகங்களை உட்கொள்ளுமாறு பணிக்கப்படுகிறீர்கள் 
 
உண்மை எனும் மிகக் கொடிய கிருமித் தொற்று 
கலகக்காரர்களால் பரப்பப்பட்டு வருகிறது 
நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன 
ஆன் லைன் வகுப்பறைக்குள் 
தனியே 
சிறைகளுக்கான சேர்க்கையும் முழு வீச்சில் !
நீங்கள் எந்த அறையில் இருப்பது என்ற 
சுதந்திரத்தை அங்கீகரிப்பவர்கள் நாங்கள் 
இந்த இடத்தில் கை தட்ட வேண்டும் 
என்று கூடத் தெரியாதவர்கள் தகவலுக்கு,
உங்களுக்கான இடம் ஏற்கெனவே 
மாற்றிப் போடப்பட்டு விட்டது.
 
விசுவாசிகள் 
காட்டிக் கொடுப்பவர்கள் 
ஜால்றா வகையறாக்கள் 
இன்னோரன்ன நியாயவான்கள் சிறப்பு கவனத்திற்கு,
ஆன் லைன் வகுப்பறையில் 
உங்கள் ஆமாம் சத்தம் உரத்துக் கேட்க 
நீங்கள் மட்டும் அன்மியூட் செய்து கொள்ள 
அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் !
 
மற்றபடி வகுப்பில் 
சத்தம் வரக்கூடாது….மூச்!
****************
Show 1 Comment

1 Comment

  1. நா.வே.அருள்

    இந்தியாவையே வகுப்பறையாக்கி எங்களுக்கெல்லாம் பாடம் நடத்தும் கவிதை ஆசிரியருக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *