கவிதை: அசை போடும் பசு மாடு — சாந்தினி

கவிதை: அசை போடும் பசு மாடு — சாந்தினி

சின்னஞ்சிறு பிராயமதில்
சிறிய விடுமுறைகளில்
சீறிப் பாயும் காளை வண்டியில்
சில காத தொலைவிலிருக்கும்
அப்பச்சி வீட்டிற்கு
அம்மாவுடன் சென்ற
அந்தக் கால நினைவுகள்
அகலாது நெஞ்சை விட்டு
அசை போட வைக்கிறது !

ஊரே நம் உறவாய்
உள்ள ஒரு கிராமம் அது !
எல்லா வீட்டிற்கும்
எப்பொழுதும் சென்றிடலாம் !

எதிர் வீட்டு அக்காதான்
எங்கள் அணித் தலைவி !
நாலு வளவு வீட்டின்
நடுக் கூடந்தனிலே
நாலு பக்கம் குச்சி நட்டு
நடுவிலே போர்வை கட்டி
நாடக மேடையினை
நாங்களே அமைத்திடுவோம் !
உபயோகித்த துண்டுகளே
உருமாலை ஆகிவிடும் !
மகாராஜாவின்
மணிமகுடமும் அதுவே!
பழைய சேலைகள்
பட்டாடை ஆகி விடும்
பட்டத்து ராணிக்கு !
குச்சிகளே செங்கோலாம் !
குட்டிகளே சேவகராம் !
கதை, வசனம், இயக்கம்
அனைத்தும் அவரவரே !
களேபரமாய் அரங்கேறும்
கருத்தில்லா நாடகம் !
களைத்துப் போன நொடியிலே
குச்சிகளை இழுத்துவிட
கலைந்து போகும் அத்தனையும் !
கண்ணாமூச்சி அடுத்து வரும் !
மாடிப்படி அடியில்
மரப்பெட்டி உள்ளில்
கதவின் இடுக்கில்
கண்டுபிடிக்க முடியாதென்ற
குறுகுறுப்பில்
எட்டி எட்டிப் பார்த்தே
ஏமாளியாகிடுவோம் !

பக்கத்து வீட்டு பாதாம் மரத்தில்
பதமான பழம் அடித்து
இதமாய் அதை உண்டு
கொட்டையை கல்கொண்டு
கொட்டியே உடைத்திட்டு
உள்ளிருக்கும் பருப்பெடுத்து
உட்கொண்டு விட்டிட்டால்
கலிபோர்னியா பாதாமெலாம்
கசப்பே என்றிடலாம்!

இலந்தை மரத்தடியில்
விரிப்பதனைப் போட்டு
விலா நோக குலுக்கிவிட்டு
அள்ளி வருவோம் பழங்கள் !
அத்தனையும் வைட்டமின் சி !

உப்பு, புளி , மிளகாய், வெல்லம்
உரலில் சேர்த்து அரைத்து
உடைத்த தென்னங் குச்சியில்
உருண்டையாய் உருட்டி வைத்தால்
உடனடி கமர்கட் தயார் !
அறுசுவைகளிலே நான்கு
அப்படியே கிட்டிவிடும் !

இயற்கை அன்னையுடன்
இயைந்து வாழ்ந்திட்ட
இனிமையான காலம் அது !
பசுமை மாதாவின்
பாசமிகு மடியில்
படுத்துப் புரண்டிட்ட
பொன்னான நாட்கள் அவை !

கொல்லைப்புறத்தின்
தொழுவத்தில் பசுக்கள் !
சாவடிச் சாலையில்
சவரம் பண்ணும் தாத்தா !
பொடக்காலிக் கிணற்றில்
பொட்டை வெயிலில்
பொடி மீன்கள் ஆராய்ச்சி !
ஓலைக் குடிசையது
தண்ணிச் சாலை (பாத்ரூம் )!
உப்புடன் உமி சேர்த்த பொடியே
பல் துலக்கும் தூளாம் !
தாத்தா தனி ஆளாம் !
சென்னான் உதவி ஆளாம் !
பொக்கை வாய்க் கிழவருக்கு
கொட்லாவில் கொட்டிய
தாம்பூல உருண்டையில்
தம் பங்காய் சிறிதேனும்
தரச்சொல்லி வாங்கியே
தரித்திடுவோம் மகிழ்வுடனே !

எடுத்ததெற்கு எல்லாம்
எதுகை மோனை பேசிடும்
போகிற போக்கில்
சொலவடை சொல்லிடும்
குழந்தாயி அக்காதான்
குடும்பத்தின் பொறுப்பாம் !
பாசமாய் எங்களைப்
பக்கத்தில் அமர்த்தி
பிஞ்சு விரல்களைக்
கையில் இருத்தி
“குடுகுடு ஹை “என்று
கூடவே பாடி
குட்டி விரல்களை
வெடுக்கென்று இழுத்து
சொடக்குப் போடுவதே
ஜோரான வேலையாம்
நரையான தாத்தாவுக்கு!

முன்வாசல் திண்ணையில்
மூடியே கிடக்கும்
பொடமொடா அறை !
(கன்னி தெய்வத்தின்
புனித புடவையை பானையில்
வைத்திருக்கும் அறை )!
அடுக்குப்பானை
அடுக்கி இருக்கும்
சின்ன கெழக்குப் பாத்த வீடு !
பணப்பெட்டி இருக்கும்
பெரிய கெழக்குப் பாத்த வீடு !
சமையல் அறையாய்
ஓட்டுவில்லை வீடு !
பறந்து விரிந்த பட்டாசாலை !
துணி காய வைக்கும் காரவாசல் !
முன்வாசல் இருப்பது
முதன்மைத் தெருவாம் !
பின் வாசல் இருப்பது
வடக்கால வளவு !
பெரியதொரு பரந்த வீடு
பெருமைக்குரிய எங்கள் வீடு !

பெரிய விடுமுறைகளில்
பெரும் கூட்டமாய்
பெற்றெடுத்த வாரிசுகளும்
பேரப் பிள்ளைகளுமாய்
பேரமர்க்களப்படும்
பேரெடுத்த வீடு !
தாயமும், சீட்டும்
தாம்தூமாய் நடக்கும் !
ஆட்களைப் பொறுத்தே
அணியின் கணக்கு !
வெட்டலும் குத்தலும்
(காயை வெட்ட தாயக்குச்சியை
குத்திகுத்தி போடுவோம் )
வேடிக்கையாய் நடக்கும் !
கர்றா பத்லா என்ற
கரேபுரே பாஷையெல்லாம்
கலாட்டாவாய் இருக்கும் ! சொந்தத்துடன் சேர்ந்து
சொக்கட்டான் ஆடுதலே
சொகமாய் நினைத்திட்ட
சொர்க்கமான காலமது !

காலத்தின் கோலத்தால்
காட்சிகளும் மாறிடுதே !
நாலு வளவு வீடும்
நகர்ப் புற(ல)ம்பெயர்ந்தோரால்
நலிந்தேதான் போனதே !
தாத்தா தான் போனாரே !
மாமாதான் வந்தாரே !
மாமன் மகனவன் தான்
மணாளனாய் ஆகியதால்
மருமகளாய் ஆனேனே !
மாமாதான் போகும்பொழுது
மறக்காதீர் வீட்டை என
மன்றாடிக் கேட்டாரே !
மறக்கவில்லை நாங்கள்!
மறுசீரமைத்தோம் (வீட்டை)!

சுற்றிய இடங்களும்
சொந்தபந்தங்களும்
தொடர்கதையாய் வந்தததுவே !
இனம் புரியா ஓர் ஈர்ப்பு
இழுக்குதம்மா எனை அங்கே !
என்னவரிடம் நான் சொன்னேன்
‘எங்கு உயிர் போனாலும்
எனை இங்கே கொணருங்கள் ‘!
ஏனென்றால்
செத்த பிறகும் கூட
சொந்தக்களுக்கிடையே தான்
சுகமாக உணர்கிறேன் !!!

*****

Show 1 Comment

1 Comment

  1. Chetput Panchapakesan Ravisankar

    அருமையான குறும்படம் போன்ற அனுபவ கவிதை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *