(1) அவசரத்தில் இருந்தேன்
______________________________ __________
நான் அவசரத்தில் இருந்தேன் __
என்னுடைய குழந்தைகளுக்காக
வீட்டிற்கு பொம்மைகள் வாங்கிக் கொண்டு
போக வேண்டியிருந்தது ,
17 ம் எண்ணுள்ள பேருந்துவைப் பிடிக்கவேண்டியிருந்தது ,
எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது ,
எனக்கு பயம்உண்டாகிறது ,
கோர்ட் __ கச்சேரி செல்ல நடுங்குகிறேன் ,
என்னிடம் புதிய சினிமாப் படத்திற்கான டிக்கெட்டுகள் இருந்தன ,
தாமதமாகிக் கொண்டிருந்தது ,
எப்பொழுதும் கூட்டம் கும்பல்களிலிருந்து விலகியிருக்கிறேன் ,
எனக்குத் தெரியவில்லை உண்மையிலே என்ன நடந்தது ?
அதற்கு நடுவில் என்ன சோகம் இருந்தது என்று
நான் என்ன அறிவேன் ?
நான் நடுவில் காப்பாற்றியிருந்தால்
அவன் காப்பாற்றப்பட்டிருப்பான் என்று
நான் புரிந்துகொள்ளவில்லை.
மாறாக எனக்கும் நிச்சயம் காயம் ஏற்பட்டிருக்கும்.
நான் கள்ளங் கபடமற்ற மனிதன்.
எனக்கு அமைதியாய் வாழச் செய்வதிலிருந்து
ஏன் நீங்கள் தடுத்திட விரும்புகிறீர்கள் ?
ஏன் சாட்சியாக்கிட விரும்புகிறீர்கள் ?
அந்தத் தீய நிகழ்ச்சியிலிருந்து
இவ்வளவு தூரம் ஒவ்வொரு நொடியாக விலகி ,
அவனும் நன்றாக இல்லை , பார்த்தேன்?
அவன் கொல்லப்பட்டது எனக்குத் துக்கமாக இருக்கிறது
இந்நாட்கள் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
நான் தப்பித்து வாழ விரும்புகிறேன்.
********
(2) நான் எதுவும் செய்யவில்லை
______________________________ _______
நான் எதுவும் செய்யவில்லை
அந்தப் பக்கம் அவர் போய்க் கொண்டிருந்தார் ,
நானும் போனேன்;
அவர் கல்வீசிக் கொண்டிருந்தார் , நானும் வீசினேன் ;
அவர் தீ வைத்தார் ,
நானும் வைத்தேன் ;
பிறகு அவர் ஓடினார் ,
நானும் ஓடினேன் :
நான் எதுவும் செய்யவில்லை.
அந்த சச்சரவில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும்
எரிந்து சாம்பலாகிப் போனார்கள்.
நான் கெட்டவனானேன்.
நான் எதுவும் செய்யவில்லை.
*********
(3) யார் சிக்கலில் மாட்டுவது ?
______________________________ ______
இங்கே என்னுடைய பேட்டையில் அசுத்தம் அதிகரித்து இருக்கிறது ,
தெரியவில்லை…
எங்கிருந்து
சில விசித்திரமான துரதிர்ஷ்டம் பிடித்த
போக்கிரிகள், அற்பர்கள் இங்கு வந்து வாழ்கிறார்கள்.
வந்த நாளிலிருந்து சண்டை சச்சரவாகவே இருக்கிறது.
அந்தப் பக்கமாக போவதும்
ஆபத்தை விலைக்கு வாங்குவதாகவும் இருக்கிறது.
நான் தூரமாக வசிக்கிறேன் :
என்னுடைய ஜன்னல் வழியாக எப்போதாவது
எனக்கு சில எரிவது, புகைசூழ்வது , அழுகிக் கரைவது தென்படும்.
நான் என் புத்தகத்திற்குள் மூழ்கி விடுவேன் ;
நான்
என்னுடைய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறேன்.
அங்கே என்னுடைய தையற்காரனின் வீடு நாசமாகியிருக்கும்
அல்லது காய்கறி விற்பவனின் கட்டடம்
இடிக்கப்பட்டிருக்கலாமென நான் கருதுகிறேன்
நான் அவர்களுக்கு அமைதியளிக்கும் தேவையோடு
கொஞ்சம் உணவும் சில பழைய துணிகளையும் மூட்டையாகக் கட்டி
அந்தப் பக்கம் போக யோசிக்கிறேன்.
ஆனால் பிறகு
யார் சிக்கலில் மாட்டுவதென யோசித்து
பேசாமல் இருந்து விடுகிறேன்.
நான்
தப்பான இடத்தில் ,
அழுக்கான சூழ்நிலையில் , சண்டையிடும் அண்டை வீட்டாரோடு ,
குரூரமான இரத்தவெறி கொண்ட மனிதர்களுக்கு நடுவில் சிக்கி இருக்கிறேன் __
என் மனசாட்சி சுத்தமாய் இருக்கிறது.
யோசிக்கிறேன்….
நகரம் அல்லது குறைந்த பட்சம் என்னுடைய வசிப்பிடமாவது மாறட்டும்.
*******
கவிஞர். அசோக் வாஜ்பேயி
பிறப்பு :1941ல் துர்க(சத்தீஸ்கர் )என்னும் இடத்தில்.
படைப்புகள் : 14 கவிதைத் தொகுப்புகள் 4 விமர்சன தொகுப்புகள்.
இவருடைய நூல்கள் வங்காளம், மராத்தி, குஜராத்தி, உருது, ராஜஸ்தானி, ஆங்கிலம், பொலிஸ், பிரெஞ்சு மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.
பெற்ற பரிசுகள் : சாஹித்ய அகாதமி புரஸ்கார் , தயாவதி மோதி கவிசேகர் ஸம்மான் , கபீர் ஸம்மான் மற்றும் பிரெஞ்சு சர்க்காரின் ஆபீஸர் ஆப் த ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்டு லிட்டரேஜர் , 2005 மற்றும் பொலிஸ் சர்க்காரின் ஆபீஸர் ஆப் த ஆர்டர் ஆப் க்ராஸ் , 2004 ஸம்மான்.
கவிஞரும் ஆலோசகருமான அசோக் வாஜ்பேயி மகாத்மா காந்தி ஹிந்தி சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தாராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார். 40 வருடங்களுக்கு மேலாக பொதுநல சேவையில் ஈடுபட்டு இவ்விதமாக நிவர்த்தி செய்து இருக்கிறார். தற்சமயம் தில்லியில் வாழ்ந்து freelance எழுத்தாளராக இருந்து வருகிறார்.
ஹிந்தியில் : கவிஞர்.அசோக் வாஜ்பேயி
தமிழில் : வசந்ததீபன்