வாலறுந்த சுனாமி
மாவுக்குள் கை நனைத்து இஷ்டத்திற்கு இழுத்துவிட்டு…
எட்டி நின்று சிரிப்பாள்.
கறிகாய் நறுக்குகையில்
வெண்டையின் காம்பெடுத்து…
மேனியெங்கும் ஆபரணங்களாக்கி அழகு செய்வாள்.
அடுப்போடு நிற்கையில் துடுப்பெடுத்து நானும் சமைக்கிறேனென்று….
மல்லுக்கு நிற்பாள்.
வெளுத்த துணி மடிக்கையில்
தோளிரண்டுக்கும் தோரணங்கட்டி…
வீடெங்கும் சேலை வழிப்பாள்.
நான் தான் தலைவாரி விடுவேனென்று அடம்பிடித்து…
இருக்கின்ற ஒரு தலைக்கு நாலு ஜடை போட்டு நாறடிப்பாள்.
அவளுக்குப் பின்னிவிட…
பின்னப் பின்னக் கலைத்துவிட்டு
பழிப்புக் காட்டுவாள்.
ஸ்கொயரையும் ரெக்டாங்கிலையும் என் நெற்றியில் பொட்டுவைத்துப்
பழகுவாள்.
அம்பு கொம்பு வம்புயென்று…
வாசலில் கோலமெழுதிக்
கொக்கரிப்பாள்.
வருகின்ற தொலைபேசி அழைப்பிற்கெல்லாம்
இல்லையென்று சொல்லச் சொன்னதாக…
வேடிக்கை சமைப்பாள்.
டீவியில் ஏதேனும் லயித்திருக்கக் காணில்….
வசப்படுத்திய ரிமோட்டில்
எட்டுத்திக்கும் பயணிப்பாள்.
இட்டிலி தந்தால் தோசை கேட்பாள்…
பட்டினிதான் என்றால் பரதம் ஆடுவாள்.
தீனி டப்பாக்களையெல்லாம்
சுற்றிலும் தீவமைத்துக் கொண்டு…
கவலைப்படாதேம்மா
நான் முடிச்சுத் தரேனென்ற
சேட்டைகளில் மனதை
வேட்டையாடுவாள்…
அப்பாவிடம் இதைச் சொல்லாதேயென்றால்
முந்திக்கொண்டு ஊதிவிட்டு
ஊலலல்லா….அபிநயம் பிடிப்பாள்…
உறக்கத்திலிருக்கையில்
தொட்டெழுப்பி…
தூங்குறியாம்மாயென்று
சிரிக்காமல் விளிப்பாள்.
இன்று பள்ளிக்குச் செல்லவேண்டாமென்று அவள் முடிவு செய்துவிட்டால்…
எதையோ சொல்லி
சுருண்டுகொண்டு நம்மைச் சுளுக்கெடுப்பாள்.
தொடர் சேட்டைகளில்
கோபப்பட்டால்…
இப்போ தான் நீ ரொம்ப அழகென்று சிரிப்பூட்டுவாள்.
எருமை குட்டிப்பிசாசென்று திட்டினால்…
இதெல்லாம் உன் பெயராம்மாயென்று
கண் சிமிட்டுவாள்.
கொஞ்ச நேரம் சும்மாயிரேன்
தாங்க முடியவில்லையென்றால்…
ஆ……னந்தமாயிருக்கு என்பாள்…
அகமும் புறமும் என் கண்ணில்
வலியென்றால்…
ஆகச்சிறந்த மருந்தாவாள்.
எங்கேயந்த அறுந்த வாலென்று
அவளையறிந்தோரை எல்லாம்
தேடவைப்பாள்…
பாட்டியின் ஊருக்குப் போய்ப்
பல.நாட்களாகிறது.
பாயாசமாயிருந்த வீடு
ஆயாசமாயிருக்கிறதிப்போது.
வீடியோகாலில் அழைத்து….
இன்னா…அம்பு…
நான் இல்லாம… செளக்கியமாயிருக்க போல
என்று…
அங்கிருந்தும் இந்தச் சொம்பை உருட்டப் பார்க்கிறாள்.
என் ஒட்டுமொத்த செளகர்யங்களையும்
உடனெடுத்துப் போனபின்னே…
என் செளக்கியம் எப்படி
செளக்கியமாக இருக்குமடி
என் இனிய சுனாமியே…..?!