நிலம் வெடித்து பிளந்து
நீரின்றி கருகிய பயிர்களை
வரப்பில் நின்றபடி பார்த்த
அதிகாரிகளின் ஷூக்களின் வழியே
ஒரு துளி ஈரம் புகுந்துக் கொண்டது
பயிர்க் கடனடைக்க வக்கற்று
தலைகுனிந்து கைகூப்பி
அடுத்த தவணைக்கு மன்றாடி
குடிக்க கொடுத்த
சொம்பிலிருந்த வழிந்த
ஒருசேரத் தண்ணீர்
வங்கியிலிருந்து வந்தவர்களின்
மேலாடையை நனைத்தது
உழுத கலப்பையைச் செதுக்கிய
மரத்தில் தொங்கிச் செத்தவர்களின்
மனைவியும் குழந்தைகளும்
அழுது அரற்றிய கண்ணீர்
காடெங்கிலும் கானலாய் கனந்தது
நீரற்று மணலுமற்ற
நதி புதைக்கும் குழியென
லாரி டயர்கள் நசுக்கி
பள்ளங்களில் வந்து விழுந்த
பாட்டிலின் கடைசிச் சொட்டில்
மிச்சமிருந்த துளியும் சுருங்கி மறைந்தது
மிச்சமிருக்கும் கடைச் துளி ஈரமும்
கருப்பு அங்கியணிந்த
வெள்ளைத் தாள்களின் அருகிலிருக்கும்
வாட்டர் பாட்டிலில் இருக்கிறது.
  ப.செல்வக்குமார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *