அ. ஈடித் ரேனா கவிதைகள்அ. ஈடித் ரேனா கவிதைகள்

 

 

 

1.விதை நெல்

முதலில் நம்முடைய
குழந்தைத்தனத்தை தொலைத்தோம்.

பிறகு
குழந்தைகளின்
குழந்தைத்தனத்தை
பிடுங்கி வைத்துக்
கொண்டோம்.

இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
குழந்தைகளையேத்
தொலைத்துக்
கொண்டிருக்கிறோம்.

விதை நெல்லை
அழித்துவிட்டு
வெள்ளாமை
வேண்டுவதைப் போல
குழந்தைகளைக்
தொலைத்து விட்டு
குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம்.

 

2. தீபாவளி

ரிஷிமூலம்
நதிமூலம்
தேடி சண்டைகள்!

அதன் மதம்
என்னவென்று
வாட்சப் விவாதங்கள்

ஆரிய மாயை
தமிழா விழித்திடு
வகையறா
வலைப்பதிவுகள்

காசையும்
காற்றையும்
கரியாக்கும்
பட்டாசுகள்

கந்து வட்டிக்கு
கடன் வாங்கும்
தவணை முறைத்
தலைமுறை

கொண்டாட்டம்
முடிந்த பிறகு
தொடரும்
திண்டாட்டங்கள்

ஆங்காங்கே
அசம்பாவிதங்கள்
மட்டையாகும்
மதுப்பிரியர்கள்

ஆயினும்…

அடித்துப் பிடித்து
ஆம்னி பஸ் ஏறி
அடுக்ககம் வந்து
பொழைப்பப் பார்க்க
கிளம்பையிலே

பாலிதீன் கவர்
பலகாரத்தில்
வீசும் அம்மாவின்
வாசம் போல

ஏதோ ஒரு
சந்தோசத்தை
எல்லோருக்கும்
தரத் தவறுவதில்லை
இந்தத் தீபாவளி!

3. தாஜ்மகால்

கட்டடக் கலையை
சிலாகிக்கலாம்

காதலென்று
தோன்றவில்லை.

பல மனைவிகளில்
ஒருவராம்.
பதினான்காவது பிரசவத்தில்
மரித்தவராம்.

 

4. அவளைக் காணவில்லை

குறும்பும்
சிரிப்புமாக

துள்ளலும்
துடிப்புமாக

உற்சாகமே
உருவாய்

இருந்தவளை
இப்படிப் பார்க்கப்
பிடிக்கவில்லை!

அந்த அவள்
எங்கே எனக் கேட்கிறேன்.

தொலைந்து விட்டாள்.
பார்த்தால் கேட்டதாகச்
சொல் என்கிறாள்
இந்த இவள்..

அ.ஈடித் ரேனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *