மரு உடலியங்கியல் பாலாவின்  கவிதைகள்
மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

 

 

 

1. மீனவன் இரவு

கட்டுமரம் ஏறி கடல்சென்ற
காதல் கண(மீன)வன்,
பொழுது சாய்ந்தும் வாராதுகண்டு
விழிவழி மழைநீர் விழிநீர் மறைக்க,
வரும்வழி நோக்கி நோக்கி
ராந்தல் ஒளியில் ராத்திரி இருளில்,
ஏந்திழை இவளோ புலம்பித் தவிக்க,
மீனவன், ஆங்கே சரக்கடித்து
போதையுற்று பாதையோரம்
மப்பாகி மல்லாக்கக் கிடந்திட,
பேதையிவள்
துயிலாமல் துடித்தனளே!

 

2. தாயின் தழுவல்

தாயுடல் மேவி
தனங்கள் அளாவி
இதழ்கள் துழாவி
இன்புறு அமுதினை
இனிமையாய் உண்டு
தோளிலும் மாரிலும்
துள்ளி விளையாடி
இடுப்பினில் அமர்ந்து
துடிப்புடன் உலாவி
நொடிப்பொழுதும்
விலகா அகலா,
கன்னலன்ன கவினுறு
மழலைப் பருவமே!
அவனியில் கிட்டிய
ஆனந்த அனுபவம்,
அன்பின் அருவியில்
அமிழ்ந்திட்ட தனிசுகம்!

பூவினும் மணக்கும்
பூவுலக சொர்க்கம்
திரும்ப கிடைக்கா
திகட்டாத் தீஞ்சுவை!
உவட்டா உன்னதம்!

கல்லறை செல்லும்
அந்நாள் வரையிலும்
அன்னையின் கடன்தனை
வட்டியும் முதலுமாய்
அடைத்திடல் ஆகுமோ?

3. குழந்தைகள் தினம்

ஆடி விளையாட
வெட்டவெளியில்லை,
ஓடி விளையாட
தோப்புத் துவில்லை,
கூடிவிளையாட
குழந்தைகளில்லை,

மாங்காய் அடிக்க
மாமரங்கள் இல்லை,
துரத்தி அடிக்க
தோட்டக்காரனும் இல்லை!

கயல்போல் நீந்திட
கேணிகள் இல்லை,
மழையில் ஓட்டிடும்
காகித ஓடமும் இல்லை!

கண்ணாமூச்சி கிட்டிப்புள்
கோலி கில்லி
பாண்டி பம்பரம்
பல்லாங்குழி
பச்சகுதிரை
காத்தாடி கபடியென
கவினுறு ஆட்டங்கள்
வழக்கொழிந்துபோக ..!

முளச்சி முணிலை விடுவதற்குள்
மூட்டைத் தூக்கும் கூட்டங்களாய்,
பற்பல பெயர்களில்
பள்ளிகள் முளைக்க!
பால்மணம் மாறா
பச்சிளங்குழவிகள் !

விடுதலை இழந்த
கூண்டுக் கிளிகளாய்
பசுவினைப் பிரிந்த
பாசமிகு கன்றுகளாய் !

களைத்துச் சளைத்து
சோகம் சூம்பிட
பாடம் பயின்று
வீடு திரும்பிட!

ஓம்ஒர்க் ப்ராஜக்ட்
பாடாவதிகளென
பூட்டிய வீட்டில் புழிந்தெடுக்க
சுட்டிப் பிள்ளைகள்
சுதந்திரமின்றி!

கைபேசி பக்கம்
கவனம் திருப்பி,
குட்டிச்சுவராய்ப் போவதுகண்டு !
நெஞ்சு பொறுக்குதில்லையே
பிஞ்சுகள் நிலைகண்டு!

4. உதவும் கரங்கள்

ஈன்றெடுத்த அம்மை
அள்ளிதந்த அப்பன்
சொல்லிதந்த ஆசான்
காமமீந்த மனைவி
பெற்றெடுத்த பிள்ளை!
இடையில் வந்த உறவு
இணைந்து திரிந்த நட்பு
அக்கம்பக்கத்து மனிதர்
நோய்தீர்த்த வைத்தியர்
சேவைசெய்த செவிலியர்
இன்னும் இன்னும்
எத்தனையோ உதவிய,
பரிச்சியமில்லா பாமர மக்கள்!
மரித்தபின்னே மயானம்வரை சுமந்துசென்று புதைத்த(எரித்த)
கண்ணியமான புண்ணியாவன்கள்,
இப்படி எத்தனைபேர் உனக்குதவ,
“அத்தனையும் நானே செய்தேனென”
பித்தனைப் போல் புலம்பி அழிவனோ!

5. யாக்கையின் போக்கு

தேய்த்துக் கழுவிய பற்கள்
குளித்து களித்த மேனி
வாரிமுடிந்த கேசம்
மொழிகள் பேசிய விழிகள்,
சண்டை செய்த செவ்வாய்,
ஒட்டு கேட்ட செவிகள்
நற்சுவை கண்ட நாக்கு
உடல் சுவை உணர்ந்த உதடு
நறுமணம் பூசிய சருமம்
உன்னத உச்சம் உரசிய உறுப்பு,
ஆலிங்கனம் செய்த அங்கம்,
விடலை விழைந்த விரல்கள்,
அனைத்தும்
ஒவ்வொன்றாய்
விடைபெற ,
உள்ளிருந்த உயிர்
பறந்திட,
உடல் சடலமாக
நிரந்தரம் என்பது
நினைப்பில் மட்டுமே

மரு உடலியங்கியல் பாலா.
எனும் புனைப்பெயரில் எழுதிவரும்
DR.K.BALASUBRAMANIAN. MD

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *