1)
பறத்தலின் தாத்பர்யம்!
பருவங்கள் கடந்து
வெயில் மழை புயல்
பனியென
உறிஞ்சிக் கொள்கிறது
பூமி!
பகல் இரவென
இவை மாறி மாறி
படிந்து கொள்கின்றன!
எதிர்பார்த்தலின்
முனை மழுங்கலில்
ஒழுங்கின்றி ஓடுகிறது
வேக நேரம்!
முன்னும் பின்னும்
அலைகளடித்த
நினைவின் ஊசியில்
கடுமையின் சின்னம்!
புயலைப் பொருட்படுத்தாத
சந்திப்பின் பின்னணி
அகாலமொன்றில்
மௌனபாஷைகள்
மொழிந்ததாய்
அநாதை ஞாபகமொன்று
ஊர்கிறது!
தண்மணலை
கைகளாலளந்து பிரிந்த
பிறிதொரு
நாளொன்றின் மீதே
ஏனோ
பறந்து கொண்டிருக்கிறது
பறவை மனம்!
2)
பாதாளம்!
கண்களில்
கடமைப் பின்னணி
சிவப்பு சிதறி
பாவிக்கொண்டது!
அகோர நாட்களில்
மலர்களை மிதித்து
ஓடும் மாயவேட்டை
தொடரும்
பெரிதாய் நாட்டமின்றியும்!
விகிதாசார வேகங்களில்
மேலும் கீழும்
விடாமல் தோன்றும்
பெரும் இடைவெளி
நிரந்தரம்!
உச்சாணிக்கொம்பின்
சம்பிரதாய
கணக்கீடு சார்ந்த
பாதாளக்கைகுலுக்கல்
பெரும் நெருடல்!
இனியேதும் வழியில்லை
சகிப்புத்தன்மையது
அவ்வப்போது
தோன்றி மறையுமெனில்
மேலேற
ஏணிகளைத்தருதலே
உசிதம்!
எழுதியவர்
எஸ் . மகேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.