1
குளிர் பதனப்
பெட்டியில் இருக்கும்
தொடைக்கறி ஓடிய
தடமொன்றில்
அழிந்து நடந்திருக்கும்
குளம்படி வரிசை
சாவு ஓலத்தில் துக்கம்
மெல்லும் வாய்கள்
அவரவர்
அசைபோடும் முன்
உணரும்
குரல்வளை அழுத்தம்
குட்டியொன்றின்
நஞ்சுக்கொடியசைக்கும் சுதந்திரம்
பால்மரத்தில் தூக்கிலிடப்படும்
பொருட்டு
குட்டியான குட்டி நெஞ்சம்
2
நம்மிடம் இருந்த
முரண்பாட்டை எப்போதோ
கோவில் மணியாக்கி
கட்டித் தொங்கவிட்டாயிற்று
சிலருக்கு அதன்மேல்
இரண்டு கண்
லேசாக இழுத்துப் பார்த்தார்கள்
தொங்கிப் பார்த்தார்கள்
பொருளற்ற ஊமை
ஒலித் தொந்தரவால்
நம் எதிரிகளின்
வேண்டுதலை
ஒவ்வொரு தடவையும்
கடவுள்
தவறவிட்டுக்
கொண்டே இருந்தார்
3
வெல்வெட் துணி
பிளந்த வயலட் பூக்களால்
பாறையின் இடுக்கில்
உயிர்வாழும்
ஆதிக் காதலின் நினைவுச்
சின்னம்
இளம்பான எலுகானை முறித்து
உள்ளங்கையால்
நசுக்கிக் கசப்பை இனிப்பாக்க
யாரோ காதலித்திருக்கிறார்கள்
பாதி பச்சையில் இனிப்பு
கசிகிறது
சதுரக்கள்ளி விளிம்புபோன்ற முட்களற்ற
துண்டுகளை உன்முன் நீட்டி
இந்தா எடுத்துக்கோ கனவு
நானே சாப்பிட்டுவிட்டு
உன்னை நினைக்கிறேன்
நெல்லிக்காய் கடித்தபின்
நீரின் தித்திப்பு
நீயாகும் தருணம்
உள்ளங்கை
எலுகானின் சுவை
உனதாகியிருக்கும்
4
நட்சத்திரக் குமிழியை
உடைத்து
உடைத்து
விளையாடும்
தொண்ணூறுகளின்
மேகச் சிறுமி;
வானக் காகிதம்
பத்திரமாகச் சுற்றி
வைத்திருக்கும்
பரிசு
நாம்!
எழுதியவர்
தென்றல்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.