விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகு தூரமில்லை' | Pogumidam Vegu Thooramillai Movie Review By A Kumaresan, Vimal, Karunas

திரை விமர்சனம்: ‘போகுமிடம் வெகு தூரமில்லை’

நடிகர்கள் விமல், கருணாஸ் நடிப்பிலும், அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்திலும் உருவான ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ (Pogumidam Vegu Thooramillai) திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது.

சென்னையில் விபத்தில் மரணமடைந்த நாராயண பெருமாளின் உடலுக்கு நெல்லையின் களக்காட்டில் கொள்ளி வைக்கிற உரிமை யாருக்கு என்ற சண்டை சங்கரபாண்டியன், இசக்கி முத்து ஆகிய இரண்டு மகன்களுக்கு. இருவருமே அவருடைய இரு வேறு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள். சண்டையின் நோக்கம் சொத்தைக் கைப்பற்றுவது அல்ல, ஊரில் தங்கள் கௌரவத்தை நிலைநாட்டிக்கொள்வதுதான்.

‘போகுமிடம் வெகு தூரமில்லை’ (Pogumidam Vegu Thooramillai) கதையில், மனம் போன படி வாழ்ந்த தகப்பனின் பண்ணைத்தனம் வெளிப்படுகிறது. ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அன்று இப்படியான வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது, அது அவளுடைய மகனையும் மகள்களையும் அவமானங்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது எனப் புரிய வருகிறது.

அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், மனைவி கலைவிழியின் பிரசவச் செலவுக்குப் பணம் இல்லாமல் தவிக்கிறான். மருத்துவமனையின் அமரர் அறையில் உள்ள சடலத்தைக் களக்காடு கொண்டுபோய்ச் சேர்த்தால் நிறையப் பணம் கிடைக்கும் என்பதால் சடலத்தை வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறான் குமார்.

இந்தக் கதையில், மனைவியின் மீது நிறைந்த அன்பும் அக்கறையும் இருந்தாலும், பண நெருக்கடி எப்படி அவனைப் பரிவற்ற சொற்களை அவள் மீது எறியத் தூண்டுகிறது என்று காட்டுகிறது.

சென்னை–நெல்லை சாலையில் வண்டி சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ‘லிஃப்ட்’ கேட்கிறார் தெருக்கூத்துக் கலைஞர் நளின மூர்த்தி. முதலில் மறுத்தாலும், அவ்வப்போது நின்றுவிடும் வண்டியைத் தள்ளிவிடுவதற்கு ஆள் வேண்டுமே என்று ஏற்றிக்கொள்கிறான் குமார்.

விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகு தூரமில்லை' | Pogumidam Vegu Thooramillai Movie Review By A Kumaresan, Vimal, Karunas

‘போகுமிடம் வெகு தூரமில்லை’ (Pogumidam Vegu Thooramillai) கதையில், நளின மூர்த்தி ஏன் தனது கிரீடம், கவசம், ராஜ உடை போன்ற தெருக்கூத்து உடைமைகளைத் தீயில் வீசினார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது.

பயணத்தின்போது, காதல் இணையர்கள் இருவர் தங்களை மதுரையில் இறக்கிவிடக் கோருகிறார்கள். வண்டியை மறித்து, அவர்களைக் கீழே இறக்கித் தாக்குகிறது ஒரு கும்பல்.

இந்தக் கதையில் சாலைப் பயணத்தில் கடக்கும் பல ஊர்களில் ஒன்று போல, சாதி ஆணவ வன்மம் தொட்டுக்காட்டப்பட்டு அவர்களுக்கு என்ன நடக்குமோ என்று பதைப்பு ஏற்படுகிறது.

திடீரென, வண்டியிலிருந்த உடல் காணாமல் போகிறது. சிக்கலுக்கு மேல் சிக்கல்கள் தொற்றுகின்றன. ஊகிக்க முடியாத திருப்பங்கள் தொடர்கின்றன.

‘போகுமிடம் வெகு தூரமில்லை’ (Pogumidam Vegu Thooramillai) கதையில் மனிதநேயத்திற்கும் தியாகத்திற்கும் புதிய சான்றுகள் கிடைக்கின்றன. நாடகத்தில் உருமாறிய நளினமூர்த்தி உண்மையாக எடுக்கிற உருமாற்றத்தில் எத்தனை மனத்திடம்! கர்ணனாக உருமாறும் நளினமூர்த்தியாக உருமாறியிருக்கிறார் கருணாஸ்.

இசக்கி குடும்பத்தாரிடம் சடலத்தை(?) ஒப்படைத்த பிறகு சாவு மேளக்காரர்களோடும் சொந்தக்காரர்களோடும் சேர்ந்து குமார் போடுகிற ஆட்டத்தில் எத்தனை உணர்ச்சி! ரசிகச் சொந்தங்களைச் சேர்த்துக்கொள்கிறார் விமல்.

சாதி ஆணவக் கும்பலோடு நடக்கும் சண்டை உள்ளிட்ட பல காட்சிகளை நேர்த்தியாக அமைத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆயினும் உபதேசங்கள் இல்லாமல் சிவா கிலாரி தயாரிப்பில், மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் வந்திருக்கிற இந்தப் படத்தில் யோசிப்பதற்கு எத்தனை கதைகள்!

எழுதியவர்: 

அ.குமரேசன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. M.Nigamath Ali

    உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *