காவல்துறை வன்முறைகளும், மில்கிராமின் சோதனையும் – நமீத் சக்சேனா (தமிழில்: தா.சந்திரகுரு)

காவல்துறை வன்முறைகளும், மில்கிராமின் சோதனையும் – நமீத் சக்சேனா (தமிழில்: தா.சந்திரகுரு)

பொதுமுடக்கத்தின் போது காவல்துறை நடத்துகின்ற வன்முறைகள் : மில்கிராமின் சோதனை என்ன சொல்கிறது?

பொதுமுடக்கம் இப்போது மூன்றாவது நீட்டிப்பிற்கு செல்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமூக ஊடகங்களில் வெளியாகின்ற வீடியோக்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரபரப்பில் குடிமக்கள் மீது காவல்துறையினர் தங்கள் மிருகபலத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. ஒரு வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் மூத்த குடிமகன் வைத்திருந்த புனித நீரைப் பிடுங்கி வீசியெறிந்து விட்டு, அவரை தவளை போல் தாவிச் செல்ல வைப்பதைக் காண முடிகிறது. மற்றொன்றில், குடிமக்கள் மீது மிகக்கொடூரமான முறையில் லத்திகளைப் பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று தாக்குவதைக் காண முடிகிறது. இரக்கம் காட்டச் சொல்லி அழும் இளைஞர்களைத் மற்றுமொரு காவல்துறை குழு தொடர்ந்து விடாது தாக்குகிறது.

இது தங்களுடைய கடமை என்று காவல்துறையினர் கருதுகிறார்களா என்று என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தங்களுக்கு மட்டுமே இருப்பதாக உணர்கின்ற அதிகாரத்தின் மூலமாக பிறரிடம் உருவாக்குகின்ற துன்பத்திலிருந்து அடைகின்ற இன்ப உணர்வை இந்த நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம் தங்களிடம் அறிமுகப்படுத்தியிருப்பதை காவலர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்களா? இதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும்?

அரவணைப்புவாதத்தில் உள்ள சிக்கல்

தங்களுக்கு கீழ்ப்படிந்தவர்களின் சுதந்திரம் மற்றும் பொறுப்புகளைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்டவர்கள், தங்களுடைய நலனுக்காக கடைப்பிடிக்கின்ற கொள்கை அல்லது நடைமுறை அரவணைப்புவாதம் என்றழைக்கப்படுகிறது. அரவணைப்புவாதத்தை தீவிரமானது, மிதமானது என்று இருவகைப்படுத்தலாம். மிதமான அரவணைப்புவாதம் மற்றவரின் தன்னாட்சி உரிமையை மீறாதிருக்கும். தீவிர அரவணைப்புவாதம் என்பது ஒருவருக்கான தன்னாட்சியை மீறி, தன்னுடைய சொந்த நலனுக்காக அந்த நபரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக இருக்கின்றது. தாராளவாதக் கோட்பாட்டாளர்கள் இந்த தீவிர அரவணைப்புவாதத்தை தார்மீகத் தவறு என்றே நிராகரிக்கின்றனர்.

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் நாம் புரிந்து கொள்ளலாம். விஷத்தால் பாதிக்கப்பட்ட ’எக்ஸ்’ என்பவர், அரசிடம் இருக்கின்ற எதிர்மருந்தை உட்கொள்ளாவிட்டால் விரைவில் இறந்து விடுவார் என்று வைத்துக் கொள்வோம். துரதிர்ஷ்டவசமாக, தான் விஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அவருக்குத் தெரியாது. எதிர்மருந்தை உட்கொள்ளுமாறு தெரிவிக்கும் போது, அவர் அரசு அதிகாரிகளை நம்ப மறுக்கிறார். தேவையற்ற மருந்துகள்  அல்லது மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தப் போகிறார்கள் என்று அரசின் மீது அந்த நபர் சந்தேகம் கொள்கிறார். அந்த நிலையில், அரசால் இரண்டு வகைகளில் மட்டுமே செயல்பட முடியும்: ’ஒன்றும் செய்யாதே, அவர் இறந்து போகட்டும்’ என்று விட்டு விடலாம்; அல்லது அந்த நபரின் நலனைக் கருதி, ’மாற்று மருந்தை கட்டாயப்படுத்தி கொடுங்கள்’ என்று முடிவெடுக்கலாம். இந்த சோதனை ‘அனுமான ஒப்புதல் சோதனை’ ஆகும். ஒருவேளை அந்த நபர் தெளிவாகவும், பகுத்தறிவுடனும் சிந்தித்திருந்தால், நிச்சயம் அவர் எதிர்மருந்தை உட்கொள்ள சம்மதித்திருப்பார் என்ற முடிவுக்கு அரசு வந்து, பலவந்தமாக அவருக்கு மருந்தை கொடுப்பது மென்மையான அரவணைப்புவாதமாக இருக்கும். தானாக மருந்தை எடுத்துக் கொள்வதற்கு தொடர்ந்து அவரை வற்புறுத்துவது அல்லது அவருடைய சம்மதத்தையே பெறாமல், அல்லது அவர் சம்மதம் தந்ததாக அனுமானித்துக் கொண்டு, அவரது உடலுக்குள் மருந்தை பலவந்தமாக ஏற்றுவது தீவிர அரவணைப்புவாதம் ஆகும்.

All the Absurd Ways Indian Police Has Punished Lockdown Violators ...

இத்தகைய அரவணைப்புவாத தன்மை கொண்ட நடவடிக்கைகளை, நம் அனைவரிடமும் இந்த  பொதுமுடக்கம் திணித்திருக்கிறது. தங்கள் வீடுகளை விட்டு, குடிமக்கள் வெளியே வருவதைத் தடுக்க காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மிதமான அரவணைப்புவாதம் ஆகும். ஏனெனில் முழு உண்மைகளையும் அறிந்து, அதற்கு நாம் ஒப்புக்கொள்வோம் என்று கருதி நாம் சம்மதத்தைத் தருவதாக அரசு அனுமானித்துக் கொள்கிறது. மறுபுறத்தில், குடிமக்கள் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராணுவத்தை நிலைநிறுத்துவது, அபராதம் விதிப்பது, முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்வது போன்ற தீவிர அரவணைப்புவாத நடவடிக்கைகளிலும் அரசு இறங்குகிறது. நமது அனுமதி எதுவுமின்றி அரசு இதைத் தொடர்ந்து செய்கிறது. சில சந்தர்ப்பங்களில் நமது விருப்பத்தை மீறியும் அதை அரசு தொடர்கிறது.

Reeling from the aftereffects of an experiment - SFGate

மில்கிராமின் சோதனை

தன்னுடைய செயல்களை எதிர்த்து நாம் கேள்வி கேட்பதை ஒருபோதும் நம்மிடமிருந்து எதிர்பார்க்காத அல்லது விரும்பாத அதிகார மையம் இடுகின்ற கட்டளைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், அவற்றை மதிக்கவும் நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம், பயிற்சியளிக்கப்பட்டுள்ளோம், சில சமயங்களில் அவ்வாறான கட்டாயத்திற்கும் உள்ளாகிறோம். அந்த அதிகார மையம் தன்னுடைய கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தன்னுடன் ஈடுபாடு மற்றும் தொடர்பு கொள்ளும் வகையிலான உணர்வை நம்மிடம் திணிப்பதற்காக ’கீழ்ப்படிதல்’ என்ற உணர்வை நம்மிடம் வகுக்கிறது. இந்த கீழ்ப்படிதல் என்ற உணர்வு, ஒருவரின் தனிப்பட்ட செயல்பாட்டை அரசியல் நோக்கத்துடன் இணைக்கின்ற உளவியல் செயல்பாடாக இருக்கின்றது.

இந்த ‘கீழ்ப்படிதல்’ குறித்து மிகவும் பிரபலமாக இருக்கின்ற உளவியலில் ஆய்வுகளில் ஒன்றை, யேல் பல்கலைக்கழக உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் மேற்கொண்டார். அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் மற்றும் மனசாட்சிக்கு இடையிலான மோதலை மையமாகக் கொண்டு, 1961ஆம் ஆண்டு  பரிசோதனை ஒன்றை அவர் நடத்தினார். இரண்டாம் உலகப் போர் மற்றும் நியூரம்பெர்க் போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களால் வழங்கப்பட்ட இனப்படுகொலைச் செயல்களுக்கான நியாயங்களை மில்கிராம் ஆராய்ந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த வழக்கமான தற்காப்புடனான பொதுவான விளக்கம் ‘கீழ்ப்படிதலை’ – மேலதிகாரிகளின் உத்தரவுகளை அப்படியே பின்பற்றுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இனப்படுகொலைக்கு காரணமான முக்கியமானவர்களில் ஒருவரான, ஜெருசலேமில் இருந்த அடால்ஃப் ஐஷ்மானின் விசாரணைகளுக்கு ஓராண்டு கழித்து, 1961 ஜூலையில் மில்கிராமின் ஆய்வகச் சோதனைகள் தொடங்கின. உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஐஷ்மானின் விசாரணையை மிகவும் நெருக்கமாகப் பின்தொடர்ந்திருந்ததன் விளைவாக, கீழ்ப்படிதல் உணர்வு மனிதர்களை கடுமையான குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்துகின்ற பல்வேறு வழிகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உளவியலாளர்கள் தூண்டப்பட்டனர். ஐஷ்மானும், இனப்படுகொலையில் ஈடுபட்ட அவரது லட்சக்கணக்கான கூட்டாளிகளும் உண்மையில் அவர்களுக்கு கிடைத்த உத்தரவுகளை மட்டுமே பின்பற்றினார்களா? அவர்கள் அனைவரையும் கூட்டாளிகள் என்று  நாம் அழைக்கலாமா? என்ற கேள்விகளுக்கான பதிலைக் கண்டறியும் வகையில், இந்த சோதனையை மில்கிராம் வடிவமைத்தார்.

schockgenerator-Skala.jpg (400×173) | Intense, Moderation, Extreme

மில்கிராம் சோதனையில் பங்கேற்றவர்கள் 40 ஆண்கள். அவர்கள் அந்த ஆய்வில் செய்தித்தாள் விளம்பரங்களைப் பயன்படுத்தி சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். மின்அதிர்ச்சி தரும் ஜெனரேட்டரை மில்கிராம் அந்த ஆய்விற்காக உருவாக்கியிருந்தார். மின்அதிர்ச்சி அளவுகள் 15 வோல்ட்டுகளில் தொடங்கி, 15 வோல்ட் அதிகரிப்புகளில் 450 வோல்ட் வரை அதிகரிக்கும் வகையில் இருந்தது. பல சுவிட்சுகள் ’லேசான அதிர்ச்சி’, ’மிதமான அதிர்ச்சி’ மற்றும் ’ஆபத்து: கடுமையான அதிர்ச்சி’ உள்ளிட்ட சொற்களால் பெயரிடப்பட்டிருந்தன. இறுதி இரண்டு சுவிட்சுகள் அச்சுறுத்தல் தரும் வகையில் ’ X X X ’ என்ற குறிப்புடன் இருந்தன. அந்த ஆய்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு பங்கேற்பாளரும் ’ஆசிரியர்’ என்ற பாத்திரத்தை எடுத்துக் கொண்டனர். தவறான பதில் அளிக்கப்படும் போதெல்லாம் தன்னுடன் இருந்த ’மாணவருக்கு’ அந்த ஆசிரியர் மின்அதிர்ச்சியை அளிப்பார். மாணவருக்கு உண்மையான மின்அதிர்ச்சிகளை தான் வழங்குவதாக அந்த பங்கேற்பாளர் நம்பினாலும், ’ஆசிரியர்’ அறியாத வகையில், அந்த ’மாணவர்’ போலியாக மின்அதிர்ச்சி பெறுபவராக அந்த சோதனையில் நடித்துக் கொண்டிருந்தார்.

Ethical Problems - The Milgram Experiment

அந்த சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, ஒருகட்டத்தில் ’மாணவர்’ தன்னை விடுவிக்க வேண்டும் என்றோ அல்லது தன்னுடைய இதயத்தின் நிலை குறித்தோ ’​ஆசிரியரிடம்’ புகார் கூறுவார். 300 வோல்ட் அளவை அடைந்ததும், ’மாணவர்’ சுவரில் இடித்துக் கொண்டு, தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று சத்தமிடுவார். அதற்குப் பிறகு, ’மாணவர்’ முற்றிலும் அமைதியாகி விடுவார். அதற்குப் பிறகு கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலும் பதிலளிக்க அவர் மறுத்து விடுவார். அந்த மௌனத்தையும் தவறான பதிலாகக் கருதி மேலும் அதிர்ச்சியை அளிக்கும்படி ஆய்வாளர் ’ஆசிரியருக்கு’ ​​அறிவுறுத்துவார்.

3 Compliance by subjects in the Milgram experiment. Shock voltages ...

பரிசோதனையை இன்னும் தொடர வேண்டுமா என்று பெரும்பாலான பங்கேற்பாளர்கள் (ஆசிரியர்கள்) கேட்கும் போதெல்லாம் ’தயவுசெய்து தொடரவும்’, பரிசோதனையை நீங்கள் தொடர வேண்டும்’, ’நீங்கள் தொடர வேண்டியது அவசியம்’, ’உங்களுக்கு வேறு வழியில்லை; நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்’ என்பது போன்று பங்கேற்பாளர் ஆய்வைத் தொடர்வதற்கான தொடர்ச்சியான கட்டளைகளை ஆய்வாளர் பிறப்பிப்பார். மிக அதிக அளவில், 450 வோல்ட், மூன்று மின்அதிர்ச்சிகளைக் கொடுத்த பிறகு ஆய்வாளரால் அந்த சோதனை நிறுத்தப்படும். ஆய்வில் ஆசிரியர்களாகப் பங்கேற்ற 40 பேரில் 26 பேர் அதிகபட்ச மின்அதிர்ச்சிகளை (X X X) வழங்கினர். உண்மையில் இந்த அளவு மின்அதிர்ச்சி ’மாணவருக்கு’ ஆபத்தை ஏற்படுத்துவதாகவே இருந்திருக்கும். மிக அதிகபட்ச மின்அதிர்ச்சி நிலைகளை அடைவதற்கு முன்பாக, 14 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட ஆய்விலிருந்து விலகினர்.

Our National Milgram Experiment | Talking Points Memo

கலங்க வைத்த முடிவுகள் 

ஒருவருடைய தார்மீக மனசாட்சி மிகவும் ஆபத்தான வகையில் அதிகாரத்தால் தூக்கி வீசப்பட்டிருப்பதை அந்த ஆய்வின் முடிவுகள் காட்டின. பங்கேற்றவர்களில் சுமார் 65% பேர், தங்களுடைய மாணவர்களுக்கு மிக உயர்ந்த மின்அதிர்ச்சியைக் கொடுக்கும் நிலையை எட்டியிருந்தனர். அந்த அளவிலான மின்அதிர்ச்சி உண்மையில் மிகவும் ஆபத்தானது. போலியான, அதிக அளவிலான அதிகார உணர்வைக் கொண்டு, அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வைப்பதன் மூலமாக நிகழ்த்தப்படுகின்ற செயல்களின் மூலமாக பெறப்படுகின்ற வலியால் ஏற்படுகின்ற இன்பத்தை பெரும்பாலானோர் அனுபவித்து ரசிப்பதையே மில்கிராம் சோதனையின் கண்டுபிடிப்புகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. கீழ்ப்படிதல் என்பது பலரிடம் ஆழமாக வேரூன்றியுள்ள நடத்தையாக இருப்பதுவும், நெறிமுறைகள், அனுதாபம் மற்றும் தார்மீக நடத்தை ஆகியவற்றைக் கடந்த தாக்கம் அவர்களிடம் அதிகம் இருப்பதுவும் அந்த ஆய்விலிருந்து முடிவகாப் பெறப்பட்டது.

அதிகாரம் வழங்குகின்ற கட்டளைகளின் உண்மைத்தன்மை குறித்தும், நீதி குறித்த கேள்வியையும் இது எழுப்புகிறது. அரசு மற்றும் அதன் அதிகாரிகள் போன்ற உண்மையான அதிகாரத்தால் பாதுகாக்கப்படாவிட்டால், அதிகாரம் மற்றும் மெய்நிகர் அதிகாரத்தின் துணையுடன் எந்தவொரு குழு / தனிநபரால் செய்யப்படுகின்ற தவறான செயல்கள் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் பலவீனமானவர்களைத் துன்புறுத்துவதற்கே வழிவகுப்பவையாக இருக்கும்.

காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள்

சட்டத்தை மீறுபவர்களாக இருக்கின்ற நம்பிக்கையற்ற குடிமக்கள் மீது தங்களுடைய மிருகபலத்தைப் பயன்படுத்துவதன் மூலம், வன்முறைகளை உள்ளடக்கியதாக இருக்கின்ற காவல்துறையின் தீவிர அரவணைப்புவாதச் செயல்கள், அதிகாரத்திற்கு கீழ்ப்படிதலைக் கருத்தில் கொண்ட அவர்களின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. சட்டத்தை மீறுபவராக கருதப்படுபவர் மீது காயங்களை ஏற்படுத்துகின்ற காவல்துறையினர் ஒரு கட்டத்தில், துன்பத்தை ஏற்படுத்தி மகிழ்கின்ற உணர்வைப் பெற ஆரம்பிக்கலாம்.

இவ்வாறு பிறரின் துன்பத்திலிருந்து பெறப்படுகின்ற இன்பம் பல வடிவங்களில் கிடைக்கின்றது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செய்திகளைப் பரப்பி விட்டு, மற்ற குடிமக்களிடம் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் வடிவத்தில் இருக்கலாம். குடிமக்கள்/குடிமக்கள் குழுவிற்கு எதிரான தனிப்பட்ட கோபத்தின் வடிவத்தில் அது இருக்கலாம்.  குறிப்பிட்ட குடிமகன் அல்லது பிராந்தியத்தின் மீதான பொறாமை வடிவத்தில் இருக்கலாம். பயத்தின் விளைவாக இருக்கலாம். விரக்தியின் வடிவத்தில் இருக்கலாம். கீழ்ப்படியாமைக்கான மனஉறுதியின்மை வடிவத்தில் இருக்கலாம். கீழ்ப்படிந்து போவதாகவும் அது இருக்கலாம். அதிகாரத்திற்கு கீழ்ப்படிகின்ற தன்மையை உருவாக்குகின்ற பல காரணங்கள் இருக்கலாம். சட்டத்தை மீறுபவர்களைக் கையாளுவதற்கு எளிதான வழிமுறைகள் இருந்த போதிலும், தங்களிடம் இருப்பதாக உணர்கின்ற அதிகாரத்தைக் கொண்டு தங்கள் மிருகபலம் அனைத்தையும் பயன்படுத்துவது, துன்பத்தை ஏற்படுத்தி மகிழ்கின்ற உணர்வைப் பெறுவதிலேயே சென்று முடியும்.

மனித நடத்தையின் அசிங்கமான (ஆனால் உண்மையான) பக்கத்தைப் பதிவு செய்து, தனிநபர்களை எவ்வாறு நுட்பமாக கீழ்ப்படிய வைப்பது என்பதையும், அதிகார உணர்வின் கீழ், தங்களுடைய தார்மீக உணர்வை இழந்து, சக குடிமக்களுக்கு எதிரான வன்முறை செயல்களில் பங்கேற்பதில் ஈடுபடுவதையும் காட்டிய மில்கிராமின் அந்த சோதனை இறுதியில் அதிகமாகப் பழிக்கப்பட்டது.

அடால்ஃப் ஐஷ்மான் விசாரணை குறித்து எழுதுகையில், ஹன்னா அரேண்ட், ‘சாதாரணமாகப் பார்க்கப்படும் தீமை’ என்ற சொற்றொடரை உருவாக்கினார். அத்தகைய தீமைகளைச் செயல்படுத்துபவருக்கு, பிறருக்கு கீழ்ப்படிய வேண்டியது தார்மீக கட்டாயமாக இருக்கும். இனப்படுகொலையைத் தவிர்ப்பவதற்காக, ஜெர்மன் குடிமக்களில் பெரும்பான்மையினருக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தற்போதைய காவல்துறையின் ஒடுக்குமுறைகள் பொது சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது இப்போது நமக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. மிகவும் இயல்பானது என்று இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஆழ்மனதில் நிலைபெறுவதால், நிச்சயம் அவை கடுமையாக அச்சுறுத்துகின்ற விளைவையே கொண்டுள்ளன. அதாவது. அரச அதிகாரத்திடம் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்ற விசுவாசம், அந்த அதிகாரத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வெளிப்படுத்துவதைத் தடுக்கிறது. எளிமையான ஜனநாயக நடைமுறைகளை விட, ஒருவரின் மிருகபலம் தனக்கான பலனை எளிதில் பெற முடிவதால், சிவில் உரிமைகள்,  மனித உரிமைகள் மீது அச்சுறுத்தும் விளைவுகளை அது ஏற்படுத்துகிறது.

எளிதில் மறந்து போகின்ற பல விஷயங்களைப் போலவே, இந்த வன்முறைகளையும்  மறந்துவிட்டு வாழ்க்கையில் நாம் முன்னேறிச் செல்வோம் என்றே நான் நம்புகிறேன்.

https://thewire.in/rights/what-milgrams-experiment-tells-us-about-police-violence-during-the-lockdown

நன்றி: தி வயர் இணைய இதழ், 2020 மே 16 

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *