தி இந்து நாளிதழ் செய்தியாளருக்கு, மாணிக் சர்க்கார் பேட்டி
[பாஜக-வினர் திரிபுராவில் செப்டம்பர் 7, 8 தேதிகளில் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் அவர், தி இந்து நாளிதழ் செய்தியாளருக்குத் தனியே அளித்திட்ட நேர்காணல் வருமாறு:]
கேள்வி: தற்போது திரிபுராவில் அரசியல் நிலைமை கொதிநிலையில் இருக்கிறதே, இதற்கான காரணம் என்ன?
மாணிக் சர்க்கார்: இதற்கான காரணம், 2018 சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக மக்களுக்கு அளித்திட்ட வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறி இருப்பதுதான். இதனால் நகர்ப்புற, கிராமப்புற மக்கள், பெண்கள், இளைஞர்கள், உண்மையில் மாநிலத்தின் அனைத்துப்பகுதி மக்களும், கோபத்துடன் இருக்கிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறார்கள். அதேசமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சும்மா இருந்திடவில்லை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள், உணவு, சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் போன்ற பிரச்சனைகளை எழுப்பி இயக்கங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வியக்கங்களில் மக்கள் பங்கேற்பு என்பது படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் ஆத்திரம் அடைந்துள்ள ஆட்சியாளர்கள் எங்கள் அலுவலகங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள்.
செப்டம்பர் 6 அன்று நான் என் தொகுதியான தன்பூர் சென்று அங்கே மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிப் போராட்டத்தில் பங்கேற்க முடியாது தடுக்க முயற்சித்தார்கள். இது ஒன்றும் அவர்களுடைய முதல் முயற்சி கிடையாது. நான் கடந்த 25 ஆண்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்திவரும் என் தொகுதிக்கு நான் செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் அவர்கள் இதனை மேற்கொண்டார்கள்.
கேள்வி: 2018க்குப்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறதே, இதனைச் சரிக்கட்டிவிட்டீர்களா?
மாணிக் சர்க்கார்: ஆட்சியாளர்கள் எங்கள்மீது ஏவிடும் தாக்குதல்களை வீரத்துடன் எதிர்கொண்டு, தொடர்ந்து நாங்கள் மக்களைச் சந்தித்து வருகிறோம், அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட்டு வருகிறோம், அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவற்றின்காரணமாக 2018இல் எங்களைக் கைவிட்டு, வழிதவறிச்சென்ற மக்கள் எல்லாம், மீண்டும் எங்கள் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்திட்ட தவறை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். உண்மையில் அவர்களில் பலர் தாங்கள் பாஜக பக்கம் சாய்ந்ததற்காக இப்போது எங்களிடம் மன்னிப்பு கோரி வந்து கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே இடதுசாரி எதிர்ப்பு மனோபாவத்தில் இருந்தவர்கள்கூட, இப்போது எங்கள் பக்கம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பாஜக-விற்கு மாற்று இடதுசாரி அரசியல்கட்சிகளைத் தவிர வேறெவராலும் கொடுக்கமுடியாது என்பதை இப்போது அவர்கள் உணரத்தொடங்கி இருக்கிறார்கள்.
கேள்வி: திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வங்காளிகள் பெரும்பான்மைவாதத்தைத் தூக்கிப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதே, 2018இல் உங்கள்கட்சி தோல்விக்கான முக்கியமான காரணங்களில் அதுவும் ஒன்றாக இருந்ததே. இது சம்பந்தமாக, கட்சி சரிசெய்திடும் நடவடிக்கை எதையாவது எடுத்திருக்கிறதா?
மாணிக் சர்க்கார்: இவ்வாறு கூறுவது முற்றிலும் தவறாகும். மாநிலத்தில் பழங்குடியினர் ஆதரவு இல்லாமல் முதற்கண் இங்கே ஆட்சியை எங்களால் அமைத்திருக்க முடியாது. திரிபுராவில் ஆரம்பத்திலிருந்தே, காங்கிரஸ் உட்பட அனைத்து முதலாளிய அரசியல் கட்சிகளும் வங்காளிகளையும் பழங்குடியினரையும் சேரவிடாமல் தனிமைப்படுத்தவே முயற்சித்தன. எங்கள் அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை இவர்களிடையே இருந்த இடைவெளியை நிரப்பியதாகும். பழங்குடியினரில் ஒருசிலர் இடதுசாரிகளுடன் இல்லை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முன்பிருந்த மன்னர் சமஸ்தானத்தின் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள். அவர்கள் எப்போதும் காங்கிரசுடன்தான் இருந்தார்கள். இப்போது பிரத்யுத் மாணியுகா (Prfadyut Maniyka) தலைமையின்கீழ் உள்ள பிரிவினர் டிப்ரா (TIPRA) என்னும் புதிய கட்சியை அமைத்திருக்கிறார்கள். அவரே காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர். அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்திருக்கிறார். அவருடைய தாயார் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் அமைச்சராக இருந்திருக்கிறார்.
மேலும் இப்போதும், பாஜக பழங்குடியினரில் ஒரு சிறுபிரிவினரை அவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியும், இடதுசாரி எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டும் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது. மக்கள் குழப்பத்திலிருக்கும்போது அவர்களை மீளவும் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல, அது ஒரு தொடர் போராட்டமாகும்.
கேள்வி: பாஜகவை மட்டுமல்ல, இப்போது நீங்கள் திரிணாமுல் கட்சியையும் எதிர்கொள்ள வேண்டிய சவாலைப் பெற்றிருக்கிறீர்கள். இவ்விரு சவால்களையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
மாணிக் சர்க்கார்: எங்களைச் சுற்றி திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஊடகங்கள் இவ்வாறு விஷயங்களை திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றன.
மேற்கு வங்கமும் திரிபுராவும் எல்லைகளைப் பிரித்துக்கொள்ளலாம். ஆனால் நாங்கள் அப்படியல்ல.
கேள்வி: 2021 மே மாதத்தில் மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பின்னர், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜக-விற்கும் இடையிலான இருதுருவ போட்டியில் இடது முன்னணி சிக்கிக்கொண்டதாக உங்கள் கட்சித் தரப்பில் கூறப்பட்டதே. அதே போன்ற நிலை திரிபுராவிலும் திரும்பக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லையா?
மாணிக் சர்க்கார்: மீண்டும் நான் கூறவிரும்புவது, மேற்கு வங்க நிலைமைக்கும், திரிபுரா நிலைமைக்கும் இடையே முற்றிலும் வித்தியாசங்கள் உண்டு. மேற்கு வங்க வெற்றி அப்படியே திரிபுராவிற்கும் மாற்றிவிட முடியாது. மேற்கு வங்கத்திலும்கூட, அவர்கள் எப்போதும் பிரச்சார மனநிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையாவது அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா? அவர்கள் அவர்களுடைய மாநிலத்தில் வேலை செய்யட்டும், நாங்கள் எங்கள் வேலைகளை இங்கே செய்வதைத் தொடர்வோம்.
கேள்வி: பாஜக அரசாங்கத்தின் கடந்த 42 மாத ஆட்சிக்காலத்தில் 21 ஊழியர்கள் கொல்லப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது. சமீபத்தில், இரண்டு நாட்கள் தொடர்ந்து இடதுசாரிகளுக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்தோம். இதேபோன்ற நிலைமை சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டபோது, உங்கள் ஊழியர்களில் பலர் உங்களைக் கைவிட்டுவிட்டு, பாஜக-வில் சேர்ந்ததைப் பார்த்தோம். அவ்வாறு திரிபுராவில் ஊழியர்கள் செல்லாது வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம் என்ன?
மாணிக் சர்க்கார்: எங்கள் பிரதான ஆயுதம், எங்கள் சித்தாந்தம், எங்கள் நேர்மை மற்றும் மக்களுக்கு நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பதாகும். இவற்றின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து செயல்படுவோம். மக்கள் தவறுகள் இழைத்திருக்கலாம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் சரியான முடிவினை எடுக்க முடியாது இருந்திருக்கலாம். நாங்களும் எங்களுடைய தவறுகளிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறோம். எங்கள் பிரதான கடமை, மக்களை நம்பாமலிருப்பதும் இல்லை அவர்களை மதிக்காமல் இருப்பதும் இல்லை என்பதாகும். (Our main task is not to disbelieve and disrespect people.)
நன்றி: தி இந்து, ஆங்கிலம், 15.09.2021
தமிழில்: ச.வீரமணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.