அரசியல் பொருளாதாரமும், ஆன்மீக அரசியலும் – டி.கே.ரங்கராஜன்1990களுக்கு பிறகு இந்திய அரசியல், பொருளாதாரத்தின்போக்கு வேறு திசையில் வேகமாகத் திரும்பியது. நவீன தாராளமயக் கொள்கையின்பாதகமான தாக்கம் அரசியலிலும், பொருளாதாரத்திலும் தெரியத் துவங்கியது.

வெள்ளையனை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரம் சுயாதிபத்தியம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்கள் கேள்விக்குறியாகின.

விவசாயம், தொழில், சேவைத்துறை, கல்வி, சுகாதாரம்உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட மாற்றம் சாமானிய மக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்கள் வாழ்விலும், சமூகத்தில் சரிபாதியாகஉள்ள பெண்கள் வாழ்விலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அரசியல் சட்டத்தில் புனிதமானது என்று சொல்லப்பட்டுள்ள மாநில உரிமைகள் மொழி சமத்துவம், பன்முகத்தன்மை என அனைத்தும் சிதைக்கப்பட்டு வருகின்றன. மக்களிடம் மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் மொழி, இன ரீதியாகவும் பகைமை மூட்டிவிடப்படுகிறது.

இதற்கான பொருத்தமற்ற, பத்தாம் பசலித்தனமான நியாயங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பெருமைமிகு கடந்த கால வரலாறும், தியாகங்களும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.

உலுத்துப்போன பழைய சனாதனம், மனுநீதி போன்றவை தூசி தட்டி எடுக்கப்பட்டு சந்தைக்கு கொண்டுவந்து நிறுத்தப்படுகிறது. இந்த பிற்போக்குத்தனங்களுக்கு புதியஅர்த்தங்கள், வியாக்கியானங்கள் தரப்படுகின்றன.

தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் இளைய தலைமுறையையும் மூளைச் சலவை செய்ய முயற்சி நடக்கிறது.

திசைதிருப்ப முயற்சி

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல துறைகளிலும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் வெடிக்கின்றன. தங்களது வாழ்வாதாரத்திற்காக, நியாயத்திற்காக போராடும்மக்களை பிரித்து மோதவிட ஆளும் வர்க்கம் முயல்கிறது.

அரசியல், பொருளாதார கோரிக்கைகளை திசை திருப்ப ஆன்மிக அரசியல் என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுவதோடு ஊடகங்கள் மூலம் அதைபிரபலப்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது.

அரசியல் பொருளாதாரம் என்பது சமூக அறிவியலின் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த துறைகளாகும். தனிமனிதர்கள், அரசுகள் மற்றும் அரசு சார்ந்த கொள்கைகளுக்கு இடையேயான தொடர்பை புரிந்து கொள்ள அரசியல் பொருளாதாரம் உதவும்

.இதைப் படிப்பவர்கள் வரலாற்றை, பண்பாட்டை மக்களின் பழக்கவழக்கங்களை, பொருளாதாரத் தேவைகளை உணர்ந்து கொள்வதோடு இது சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுததுகிறது என அறிந்து கொள்கிறார்கள்.

உலக அரசியல் பொருளாதாரத்தை படிக்கும்போது அரசியல் சக்திகள், அமைப்புகள் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர்புகள், விளைவுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகள்

முதலாளித்துவம், கம்யூனிசம் இந்த உலகில் செயல்படும் விதத்தை புரிந்து கொள்ள உதவுகின்றன. இன்றைய உலகில் அதன் செயல்பாடுகளை புரிந்துகொள்ள ஆடம் ஸ்மித், ஜே.எஸ்.மில், காரல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படைப்புகள் துணை நிற்கின்றன.

ஒருநாட்டின் அரசியல் பொருளாதாரம் செல்லும் திசையைப் பொறுத்தே அந்த நாட்டின் எதிர்காலத்தை புரிந்து கொள்ள முடியும். அரசு எந்திரம் யாருக்கானது என்பதையும், யாருடைய நலனை பாதுகாக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய சூழ்நிலையில் ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ராணுவ அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறும் நிலையில் உள்ள கலைத்துறையினர் அரசியலில் குதிக்கின்றனர்.

இன்றைய அவல நிலைகளுக்கு, கலாச்சாரச் சீரழிவுகளுக்கு தாங்களும் ஒரு வகையில் பொறுப்பு என்பதை மறந்துவிட்டு அரசியலை, மக்களை இரட்சிக்க வந்த புனிதர்கள் போல வேடமிடுகின்றனர்.இந்தப் போக்கு தற்போது முன்பை விட முன்னுக்கு வந்துள்ளது.

இதற்கு ஊடகங்கள் பெரும் விளம்பரம் தருகின்றன.

இன்றைய சூழலில் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்புகிற இளைய தலைமுறையினரில் ஒருபகுதியினர் இவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜகதலைமையிலான மத்திய ஆட்சியில் சுதந்திரப் போராட்டத்தின் மாண்புகள், ஜனநாயகம் மக்கள் ஒற்றுமை, மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை பார்க்கிறோம்.

மறுபுறத்தில் நாட்டு நலனை கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு அடகு வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறையை விற்று விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து விவசாயத்துறையையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக வேளாண் திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வங்கி, ரயில்வே, காப்பீட்டுத்துறை மற்றும் சேவைத்துறை முழுமையாகவும் வேகமாகவும் தனியார்மயமாக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 1967லிருந்து திராவிடக் கட்சிகள் ஆண்டுவருகின்றன. இதன் செயல்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருக்கக்கூடும். ஆனால் குஜராத், பீகார், உ.பி உள்ளிட்டமாநிலங்களோடு ஒப்பிடுகிறபோது தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்தி வரும் அதிமுக, திராவிட கட்சி என்பதிலிருந்து விலகி வெகுநாளாகிறது. அதுவும் தற்போது பாஜகவின் தயவில் ஆட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் தமிழக நலனை முற்றிலுமாக பலி கொடுத்து வருகிறார்கள். இவர்களையும் பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காய் நகர்த்துகிறது.

ரஜினி, கமல் படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் முடிவு | Dinamalar

திடீர் அரசியல்வாதிகள்

இந்நிலையில், தமிழகத்தையே தலைகீழாக மாற்றப் போகிறோம் என்று கூறிக்கொண்டு திரை கலைஞர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் பேசி வருகின்றனர்.

இதில் நண்பர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். நண்பர் ரஜினிகாந்த் நீண்டகாலமாக உறுதியளித்து வந்த நிலையில், கடைசியில் ஒருவழியாக ஜனவரியில் கட்சி துவங்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தன்னுடைய பரப்புரையில் மிகவும் பொத்தாம் பொதுவாகவே பேசி வருகிறார். ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று கூறுகிறார்.

ஜனநாயக அமைப்பில் யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் இவர்களுக்கு ஊடகங்கள் அதீத முக்கியத்துவம் அளிக்கின்றன. இவர்கள் அரசியலுக்கு வருவதுதான் ஒரே செய்தி என்பது போல காதைக் கிழிகின்றன.

இவர்களில் ஒருவரை உலக நாயகன் என்றும்,மற்றொருவரை சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்களால்அழைக்கப்படுபவர்கள். இப்போது திடீரென இவர்கள்ஊழல் ஒழிப்பு அவதாரம் எடுக்கின்றனர். அனைத்தையும் மாற்றப்போவதாக சினிமா பாணியில் வசனம் பேசுகின்றனர்.

அரசியலும், ஆன்மீகமும் வேறுவேறு துறைகள். ஆனால் நண்பர் ரஜினிகாந்த் முன்வைக்கும் ஆன்மீக அரசியல் என்பது அடிப்படையிலேயே குழப்பமானது. அது என்ன என்று பலரும் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுடைய கொள்கை என்ன என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரிடம் கேட்டபோது ‘அண்ணாயிசம்தான்’ என் கொள்கை என்றார். அது என்ன என்று கேட்டதற்கு கேப்பிட்டலிசம், சோசலிசம், பாசிசம் என அனைத்தும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்றார். ஆனால் அதைவிட குழப்பமாக இருக்கிறது ‘ரஜினியின் ஆன்மீக அரசியல்’.

ஆன்மீகம் என்பது தனி மனித தேடல். ஆன்மாவில் நம்பிக்கையுள்ளவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பல்வேறு மதத்திலும் இந்த கருத்தியல் உண்டு.பிறப்புக்கு முன்பும், இறப்புக்கு பின்பும் என்ன நடக்கிறதுஎன்று இவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். வியாக்கியானம் தருகிறார்கள்.

ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் ஒற்றுமைகளும் உண்டு. வேற்றுமைகளும் உண்டு. ஆனால் நிச்சயமாக அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த தொடர்பும்இல்லை. இரண்டும் முற்றிலும் வேறுவேறான துறைகள்.

மத நம்பிக்கைக் கொண்ட பலர், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் இருந்துள்ளனர். இப்போதும் இருக்கின்றனர். சுவாமி விவேகானந்தர், இராமலிங்க அடிகளார், வைகுண்டசாமிகள், நாராயண குரு, குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டபலர் மதத்துக்குள் இருந்துகொண்டே சமூக சீர்திருத்தத்திற்காக குரல் கொடுத்தனர்.

மத நிறுவனங்களை கடுமையாக விமர்சித்தனர். மூட நம்பிக்கைகளை எதிர்த்தனர். சாதி வேறுபாடுகளை கண்டித்தனர். பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தனர்.

ஆனால் நண்பர் ரஜினிகாந்த் கூறும் ஆன்மீக அரசியல் என்பது வித்தியாசமாகவும் விபரீதமாகவும் பாஜகவின் சாயலிலும் இருக்கிறது. பிற்போக்குத்தனங்களை நவீன வசனங்கள் மூலம் புனரமைப்பதாக உள்ளது.

ஆன்மீகம் என்பது என்ன?

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் ஆன்மீகம் ஒரு துறையாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆன்மீகம் என்பது மதத்துடன் தொடர்புடையது அல்ல என்று அங்கு கற்பிக்கப்படுகிறது. அது ஒரு கலை. யோகாசனம், மூச்சுப்பயிற்சி போல இதுவும் ஒரு கலை என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

அத்வைதத்தை போதித்த ஆதிசங்கரர், உலகம் என்பதுவெறும் மாயைதான். கண்ணில் காணும் அனைத்தும் வெறும் பிரமைகள்தான் என்று கூறியதோடு, ஆன்மா வேறு, மனிதன் வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்றார். துவைதம் என்ற தத்துவத்தை மத்துவரும் விசிஷ்டாவைதம் என்பதை ராமானுஜரும் முன்வைத்தனர்.

ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றா? வேறுவேறா? என்பது குறித்து கருத்து மோதல்கள்நடந்து கொண்டே இருந்திருக்கின்றன.

மகாகவி பாரதியார், ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, நீங்களெல்லாம் சொப்பனம்தானா? பல தோற்ற மயக்கங்களோ. கற்பதுவேகேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?’ என்று பாடியதோடு ‘காண்பதுவே உறுதி கண்டோம், காண்பதல்லால் உறுதியில்லை, காண்பது சக்தியாம், இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று பாடியுள்ளார்.

மாயாவாதத்தை அவர் மறுத்திருக்கிறார். ஆனால், அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான்.

மதம் ஒரு அபின் என்று மாமேதை காரல் மார்க்ஸ்கூறினார் என்பது உண்மைதான். இதை மட்டுமே, சிலர் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால், மத இருப்புக்கான அக-புறக் காரணங்களையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதைமுழுமையாக உள்வாங்கும் போதுதான் மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையை துல்லியமாக புரிந்து கொள்ளமுடியும்.

ஹெகல் நூலை விமர்சித்து மார்க்ஸ் எழுதும்போது ‘மனிதன் மதத்தை உருவாக்குகிறான். மதம் மனிதனை உருவாக்குவதில்லை.

வேறு வார்த்தைகளில் கூறினால், மதம்என்பது இன்னும் தன்னை கண்டுபிடிக்காத அல்லது கண்டுபிடித்து மீண்டும் தன்னை இழந்து நிற்கும் மனிதனின் சுயபிரக்ஞை மற்றும் சுய உணர்வாகும்… என்று கூறுவதோடு, மனிதன் மதத்திடமிருந்து கற்பனையான உதவியைநாடுகிறான்.

தாங்க முடியாத வலியிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க அபின் உதவுவது போல, நிரந்த தீர்வுக்கு மாற்றாக தற்காலிக ஆறுதலுக்கு மதம் உதவுகிறது என்றும்,அதனால்தான், மதம் ஆன்மா அற்ற உலகின் ஆன்மாவாகஇருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாக இருக்கிறது. இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது’ என்றார்.

சிபிஎம்: மதத்தை எவ்வாறு அணுகச் சொல்லுகிறது மார்க்சியம்?

மதமும், மார்க்சியமும்

மக்களின் மத நம்பிக்கையின் பின்னணியை மார்க்சியம் புரிந்து கொள்கிறது. ஆனால், அரசியல் பொருளாதாரத்தை மாற்றுவதன் மூலமே உண்மையான, உலக மக்கள்அனைவருக்கும் பொதுவான நல்வாழ்வை ஏற்படுத்த முடியும் என்பதில் மார்க்சியம் தெளிவாக உள்ளது.

ஆன்மா தொடர்புடைய ஆன்மீகத்தை அரசியலில் புகுத்தி குழப்ப முயல்வது, இது மதச்சார்பின்மையை மறுத்து, மதவெறி நிகழ்ச்சி நிரலை அரசியலிலும், நாட்டின்நிர்வாகத்திலும் புகுத்துபவர்களுக்கே உதவியாக இருக்கும்.

இதன் மூலம் இந்துத்துவா சக்திகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாங்கள் சேவகம் செய்வதை மக்களின் பார்வையிலிருந்து மறைக்க முயல்கின்றனர்.

நண்பர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஆனால், ஊழல் என்பது தனித்த ஒன்றல்ல. முதலாளித்துவ சமூகத்தின் தவிர்க்கமுடியாத விளைவுகளில் ஒன்று.

ஊழலை மட்டுமின்றி, அதற்கு காரணமான முதலாளித்துவ முறையை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் போராடுகிறார்கள்.

ஊழலுக்கு காரணமான காரணிகளை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.

ஊழலின் ஊற்றுக்கண்

லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே இயக்கம் நடத்தினார். ஊடகங்களில் இதற்கு பெரும் விளம்பரம் தரப்பட்டது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் இதன் பின்னணியில் இருந்தன.

ஆனால், பாஜக ஆட்சியில் ஊழல் பன்மடங்காக பெருக்கெடுத்து உள்ள நிலையில், ஹசாரே போன்றவர்கள் மௌனம் சாதிக்கின்றனர்.

திடீர் இயக்கங்களால் எந்த பலனும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 12 மணி வரையிலும் விவாதம் நடைபெற்றது.

மாநிலங்களவைக்கு தலைமை தாங்கிய ஹமீத் அன்சாரியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, இந்த மசோதாவில், லஞ்சம் வாங்குபவர்களை தண்டிப்பதற்கான பிரிவுகள் உள்ளனவேயன்றி, லஞ்சம் கொடுப்பவர்களை தண்டிக்க எந்த வாய்ப்பும் இல்லை. லஞ்ச-லாவண்யம் என்பது கீழ்மட்டத்தில் மட்டும் நடப்பதில்லை. உயர் மட்ட அளவில் ஊழலை தடுக்க இந்த மசோதாவில் எதுவும் இல்லை என சுட்டிக் காட்டினார்.

ராணுவத் தளவாடம், அரசு ஒப்பந்தங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொகை லஞ்சம் கைமாறுகிறது. இதில் லஞ்சம்தருபவர்களோ அல்லது பெறுபவர்களோ சாதாரணமானவர்கள் அல்ல.

கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சம் தந்து தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். எனவே, லஞ்சம் தருபவர்களை தண்டிக்கவும் இந்த மசோதாவில் உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று யெச்சூரி கேட்டுக் கொண்டார். ஆனால், அரசினால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தற்போது பாஜக ஆட்சியில் ஊழல் என்பது சட்டப்பூர்வமாகிவிட்டது. தேர்தல் பத்திரம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இந்திய பெருமுதலாளிகளிடமும் பன்னாட்டு முதலாளிகளிடமும் வகைதொகையின்றி நன்கொடை என்ற பெயரில்பணம் பெற முடியும். அதற்கான தெளிவான சட்டப்பூர்வ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பணம் பெறுவதில் முதலிடத்தில் இருப்பது பாஜகதான்.

2019-இல் அறக்கட்டளை நடத்துபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், கார்ப்பரேட் முதலாளிகள், சாமியார்கள் அறக்கட்டளை என்ற பெயரில் வரிஏய்ப்பு செய்ய வசதிசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பூர்வ ஏற்பாடுகள் ஊழலையும் சட்டப்பூர்வமாக்குகிறது.

மார்க்சியம் - தமிழ் விக்கிப்பீடியா

மார்க்சியமே தீர்வு

திடீர் ஊழல் எதிர்ப்பு போராளிகள் இதுகுறித்தெல்லாம் பேசுவதேயில்லை. தமிழகத்தை மாற்றப் போகிறோம், ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்றெல்லாம் கூறுகிற ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் இந்த சட்டப்பூர்வ ஊழல் குறித்து என்றைக்காவது வாய்திறந்து பேசியதுஉண்டா? பேசமாட்டார்கள்.

ஏனெனில், இவர்களது ஊழல்எதிர்ப்பில் உண்மையில்லை.அரசியல் என்பது ஓய்வுக்கால ஓய்வறை அல்ல. அது போராட்டங்களின் போர்க்களம். அரசியல் பொருளாதார கட்டமைப்பு குறித்து பேசாமல், ஆன்மீக அரசியல் என்று திசைதிருப்புவது, மதத்தையும் அரசியலையும் கலப்பதன் மூலம் தங்களது பிற்போக்கான கொள்கைகளை மூடிமறைப்பவர்களுக்கே உதவும். அரசியலும், மதமும் தனித்தனியானவை. இரண்டையும் சேர்த்து குழப்புபவர்களின் நோக்கம் நிச்சயமாக நேர்மையாக இருக்க முடியாது.

‘மார்க்சிய மெய்ஞான ஒளியில் சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டங்களின் மூலமாகவே உண்மையான மனித குல விடுதலை என்பது சாத்தியமாகும். இல்லாத உலகில் அல்ல, இருக்கும் உலகிலேயே சோசலிசம்எனும் சொர்க்கத்தை உருவாக்க மார்க்சியம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது. அதுதான் பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வைத்தரும்.

கட்டுரையாளர்: டி.கே.ரங்கராஜன், சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்