இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணிஅனைவருக்கும் விலையில்லாத் தடுப்பூசி”. இதுவே, கொரானா என்னும் பெருந் தொற்று அவசர நிலையில் இருந்து,நம்மை மீட்கும் ஆயுதம். தற்போது, மத்திய மாநில அரசுகளும், குடிமைச் சமூகம் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளும் தற்காலிகமானதே.

தடுப்பு ஊசிகள் மேல் மக்களுக்கு இருக்கும் அச்சம், பயம் ,பீதி எல்லாவற்றையும் எளிதாக போக்கிவிட முடியும். அது ஒரு பிரச்சனையே இல்லை என்றுகூட கூறலாம். மத்திய அரசின், தடுப்பூசி கொள்கையில் உள்ள தொலைநோக்கு பார்வையின்மை, சமூகப் பொறுப்பின்மை, மக்கள் நல அரசு என்ற மாண்பைத் தொலைத்த நிலை, தடுப்பூசிக் கொள்கையில் தாராளமய நடைமுறையை கடைபிடித்தல், தடுப்பூசி சந்தையின் பசிக்கு இந்திய மக்கள் பலியாக்குதல் இவையே, அனைவருக்கும் விலையில்லாத் தடுப்பூசிகளை தடுத்து நிறுத்தும் காரணிகள். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு தள்ளிப் போக போக, நமது நாட்டின் சுகாதார அவசரநிலை நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.

18 வயதுக்கு மேற்பட்ட 96.9 கோடி மக்களுக்கு, ஓராண்டுக்குள் தடுப்பூசி தேவைப்படுகிறது. ஒருவருக்கு இரண்டு தவணைத் தடுப்பூசி எனக் கொண்டால், மொத்தம் 193.2 கோடி தடுப்பூசி தேவை. இந்த எளிய கணக்கீடு மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அவ்வாறு தெரியும் எனில், நாளொன்றுக்கு எத்தனை தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதும் தெரிந்துவிடும். அப்படியென்றால், ( 193.3 கோடி ÷365= 5.3 கோடி) நாளொன்றுக்கு 5.3 மில்லியன் அல்லது 5 கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய வேண்டும். இந்திய அரசு வெளிநாட்டுக்கு அனுப்ப ஒத்துக்கொண்ட 15 விழுக்காடு தடுப்பூசிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்துக கொண்டால், ஓராண்டில் உற்பத்தி செய்ய வேண்டிய 5 கோடியே 30 லட்சம் என்ற உற்பத்தி இலக்கிலிருந்து 15 விழுக்காட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நமக்கு போடவேண்டிய தடுப்பூசிகளில் 15 விழுக்காடு பற்றாக்குறை ஏற்படும். இவையாவும் எளிய கணக்கீடுகளே.

இதன் அடிப்படையில் தடுப்பூசியை மத்திய அரசு தயாரிக்க முயற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும் அல்லவா? சீரம் இந்திய நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனம் தனது முழு உற்பத்தித் திறனையும் செலுத்தி, எதிர்பார்க்கப்படும் விரிவாக்கத்தையும் ஏற்படுத்தினால் கூட, ஓராண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி உற்பத்தி என்பது இந்த இரண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே சாத்தியமில்லை. இதுவும் மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அவ்வாறு தெரிந்தும், ஏன் தடுப்பூசி உற்பத்தியை அதற்கு தகுந்தாற்போல் அதிகரிக்கவில்லை என்று கேள்வி எழுகிறது.

பல நாடுகள், பல்வேறு நாட்டு தடுப்பூசிகளை, பரிசோதனைகளை செய்து, அந்தந்த நாடுகளுக்குள் அனுமதி அளித்துள்ளது. நம்நாடு மட்டும் ஏன் இதை செய்யவில்லை? இவ்வளவு காலமாக இருந்து விட்டு, இப்போது அவசரகதியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுகளின் மருந்து உற்பத்தி கட்டுப்பாட்டு நிறுவனங்கள் வழியாக அனுமதித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகளுக்கு, தற்போது ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு, இதற்கு முன் இதனை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள தடுப்பூசி மருந்துகள் இந்தியா வந்து சேர ஜூன் ஜூலை ஆகும் என்று கூறுகின்றனர்.தடுப்பூசி வர்த்தகம் என்பது, மிகவும் கடினமானது. எனவேதான், உலகில் பல நாட்டு அரசுகள், தனியார் தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகளிலும் கூட பெருமளவு முதலீடு செய்து, அதனை ஊக்குவிக்கிறது. விரிவாக்கம் செய்யவும் முதலீடுகள் செய்கின்றன. இந்திய அரசும் அவ்வாறு உரிய நேரத்தில் ஏன் முதலீடு செய்யவில்லை என்ற கேள்விக்கும் இந்திய அரசு பதில் கூற கடமைப்பட்டுள்ளது.

தடுப்பூசி தயாரிப்புக்கென்றே இந்திய அரசு 7 பொதுத்துறை நிறுவனங்களை கடந்த காலங்களில் உருவாக்கியுள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவுக்கென்று ஓர் தனித்த இடம் இருக்கிறது. இந்தப் பொதுத் துறை நிறுவனங்களில் ஏன் மத்திய அரசு முதலீடு செய்ய முன்வரவில்லை.

இந்த நிலையில், ஏப்ரல் 19ம் தேதியன்று, இந்திய அரசு வெளியிட்ட தடுப்பூசி கொள்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு ஒரு விலை. மாநில அரசுக்கு ஒரு விலை‌ தனியாருக்கு ஒரு விலை. என, ஒரு விலை தீர்மானத்தை செய்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

இரண்டே இரண்டு தடுப்பூசி நிறுவனங்களை மட்டும் இந்திய தடுப்பூசி சந்தையில் கோலோச்சச் செய்துவிட்டு, அவை காப்புரிமை சட்டத்தின்படி கொள்ளை லாபம் அடிக்க அனுமதிப்பது, பழைய சந்தைப் பொருளாதார விதிகளாலாக இருக்கலாம். நவீன மக்கள் நலம் பேணும் அரசுகள், இத்தகைய விஷயங்களை அனுமதிப்பதில்லை. சந்தைக் கோட்பாடுகளும் அனுமதிக்கவில்லை. காப்புரிமை சட்டத்தின்படி ஒரு பொருளைக் கண்டுபிடித்து, அதை சந்தையில் விற்கும் திறனை வளர்த்துக் கொண்ட நிறுவனங்கள், அந்த திறமைக்கு ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வையும் பலி கேட்கும். நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். எனவே, தடுப்பூசி விநியோகம் மற்றும் உற்பத்தி ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மத்திய அரசே ஏற்க வேண்டும். இதில் மத்திய வெளிப்படைத் தன்மையோடு இயங்க வேண்டும். மாநிலங்களுக்கு அதை வினியோகிக்க வேண்டும். எல்லோருக்கும் இலவசமாய் தடுப்பூசி என்று வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் கூட அறிவித்திருக்கும் போது, இந்தியா போன்ற, பெரும்பகுதி ஏழைகளைக் கொண்ட நாட்டில், இவ்வளவு மோசமான வேறுபட்ட விலைகளை நிர்ணயிப்பது மிகவும் அபாயகரமானது. சந்தை என்பது லாபத்தை உச்சப்படுத்துவதை முன்னிறுத்தி செயல்படுவது. தடுப்பூசியில் தனியார் நலன், பொது நலன் மற்றும் எதிர்கால நலன் அடங்கியுள்ளது. எனவே, இந்த ஒட்டுமொத்த நலனைப் காப்பதில் சந்தை முறைமை தோல்வி அடைந்துவிடும். நியாயமாக நடந்து கொள்ளாது என்பதே பொருளாதார வல்லுனர்கள் மதிப்பீடு.

எனவே தான், பெரும்பான்மையான முதலாளித்துவ நாடுகளில் கூட தடுப்பூசியை தனியார் வசம் விட்டுவைக்கவில்லை. இந்திய அரசியல் சாசனம், நமக்கு உயிர்வாழும் உரிமையை அரசியலமைப்பு சாசனம் 21 ம் படி வழங்கியுள்ளது. உயிர் வாழும் உரிமையை, கொள்ளை நோய்கள் கொண்டு போய்விடாமல் பார்த்துக் கொள்வது அரசியல் சாசன கடமை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும், தனியார் நிறுவனங்களில் என்றாலும், அந்த தடுப்பூசிகளை கண்டறிவதில் அதன் ஆராய்ச்சியில் மத்திய அரசும் கணிசமாக தனது பொது நிதியிலிருந்து முதலீடு செய்துள்ளது. தடுப்பூசி, பணம் கொடுத்து வாங்கும் பண்டம் எனில், எல்லோருக்கும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அப்படி வாங்க முடியாதவர்கள், பெற்றுக் கொள்ளும் நோய்தொற்றுக்கு எளிதில் தொற்றுக்கு பெரும் செல்வந்தர்களும் உள்ளாக நேரிடும். எனவே, கொரானா போன்ற கொள்ளை நோய்களை, தடுப்பூசி தனியார்மயம் மூலம் ஒழித்துவிட முடியாது. “எல்லோருக்கும் விலையில்லாத் தடுப்பூசி” என்பது அவசர அவசியம். மக்கள் நல அரசு என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும், மத்திய அரசு, இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். மனிதகுலம் முழுமையும் ஒரு பெரும் துன்பத்தில் இருக்கும் போது, பண்டைய சந்தை விதிகளைக் கொண்டு மக்களை கொள்ளையடிக்க ஒரு நாடு அனுமதிக்க கூடாது.

••••••••••••••••••••••••••••••