கொண்டாட்டங்களின் அரசியல் (Politics of celebrations) | வாலண்டைன் தினம், காதலர் தினம் - பிரளயன் (Piralayan) - https://bookday.in/

கொண்டாட்டங்களின் அரசியல்

கொண்டாட்டங்களின் அரசியல்

பிப்ரவரி-14ஆம் நாள், வாலண்டைன் தினம், காதலர் தினமென உலகெங்குமுள்ள இளையசமூகத்தினரால் குதூகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள், வாலண்டைன் தினமென கொண்டாடப்படுவதற்கு பல வரலாற்றுக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. கிபி மூன்றாம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த ஒரு கிறித்தவப் பாதிரியார்தான் வாலண்டைன். கிறித்தவமதம் ரோமப்பேரரசில் பெருமளவு செல்வாக்கு பெற்றிராத காலம் அது.

திருமணம் செய்துகொள்ளக்கூடாது எனத்தடை விதிக்கப்பட்டிருந்த படைவீரர்களுக்கு, வாலண்டைன், தடையை மீறி ரகசியமாக திருமணம் செய்துவைக்கிறார். இதனால் ரோமப்பேரரசர் கிளாடியஸின் கோபத்துக்கு ஆளாகி சிறை பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்படுகிறார். இதனால் இளைஞர்களுக்காக இன்னுயிர் ஈந்த ஒரு தியாகியாக ‘வாலண்டைனை’ கிறித்தவர்கள் போற்றத்தொடங்குகின்றனர்.

கிறிஸ்துவ பாதிரியார் வேலண்டைன்

ஒரு கட்டத்தில் கிறித்தவ திருச்சபை, வாலண்டைன் பாதிரியாரை புனிதராக அறிவிக்கிறது. வாலண்டைன் கொல்லப்பட்ட பிப்ரவரி-14 ஐ பின்னர் புனித நாளாக, கிறித்தவ மக்கள் கொண்டாடத்தொடங்கினர். எனினும் வரலாற்றாளர்கள் சிலர், கிறித்துவம் தோன்றுவதற்கு முன்னால் கிரேக்கம்,ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக செல்வாக்கு பெற்றிருந்த பாகனிய மதத்தில் , பிப்ரவரி 14, வளமைத் திருநாளாக [Fertility Day], 4000 வருடங்களுக்கு முன்பே கொண்டாடப்பட்டுவந்ததைக்குறிப்பிடுகின்றனர். அதன் நீட்சியே வாலண்டைன் தினம் என்கின்றனர். மேலும் வாலண்டைன் என்ற பெயரில் கிறித்தவ மத வரலாற்றில் வேறு சில புனிதர்களும் இருக்கிறார்கள்.

எனவே வாலண்டைன் தினத்தின் தோற்றுவாய் குறித்து வரலாற்றாளர்களிடம் ஒத்த கருத்து எதுவும் உருவாகவில்லை. எனினும் கிறித்தவத்தில் கூட அப்போது புனித நாளாக வாலண்டைன் தினம் கொண்டாடப்பட்டதேயொழிய தற்போதுள்ளதைப்போல காதலைப்போற்றும் தினமாக கொண்டாடப்படவில்லை. 14 ஆம் நூற்றாண்டில் ஜ்யாஃப்ரே சாஸர் [Geoffre Chaucer] எழுதிய ‘பறவைகளின் பாராளுமன்றம்’ [The Parliament of Fowls] என்கிற கவிதைதான் முதன் முதலாக வாலண்டைன் தினத்தை ஒரு காதலர் தினமாகக் குறிப்பிடுகிறது.

Parliament of Fowls by Geoffrey Chaucer | Goodreads

வாலண்டைன் தினத்தன்று பறவைகள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒன்றுகூடி தங்களது இணைகளை அடையாளம் காண்கிறது என அக்கவிதை விவரித்துச்செல்கிறது. வாலண்டைன் தினத்தை ஒரு காதலர் தினமாக குறிப்பிடும் முதலாவது வரலாற்றுக்குறிப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இதன் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இக்கொண்டாட்டம் காதலர்கள் தங்களுக்குள்ளே வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்கிற தின்மாக உருவெடுத்தது.

அச்சுத்தொழிலின் விரிவாக்கம், அஞ்சல் சேவைகளின் பரவல், மேற்குலகின் பல பகுதிகளுக்கு வாலண்டைன் தினத்தை வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்கிற தினமாக அறிமுகம் செய்துவைத்தது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்படி உலகெங்கிலும் கொண்டாடப்பட்டாலும் 1992-93 காலத்தில் தான் இந்தியாவில் வாலண்டைன் தினம் அறிமுகமாகிறது. தாராளமயகாலத்தில் அறிமுகமான தனியார் தொலைக்காட்சிகளில் ஒன்றான எம்.டிவி [MTV] தான் வாலண்டைன் தினத்தினை அறிமுகப்படுத்தி பிரபலமாக்கத்தொடங்கியது.

வாழ்த்து அட்டைகளை தயாரித்து விற்கிற ஏசிசி [ American greeting corporation], ‘ஹால்மார்க்’ [HALL MARK], ஆர்ச்சீஸ் [Archies]போன்ற பன்னாட்டு வணிக நிறுவனங்களும் இதன் பின்னணியில் இருந்தன. இந்த வாழ்த்து அட்டை நிறுவனங்கள் விரிந்த சந்தையைக்கொண்டுள்ளன. கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளுக்கு அடுத்தபடியாக காதலர் தின வாழ்த்து அட்டைகள்தாம் தற்போது உலகத்தில் அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டில் உலக முழுதும் 1925 கோடி டாலர்களுக்கும் இந்தியாவில் 200 கோடி ரூபாய்க்கும் வாழ்த்து அட்டைகள் விற்பனையானதாக சந்தையை ஆய்வு செய்கிற ஓர் இணைய தளம் சொல்கிறது. [https://www.grandviewresearch.com/industry-analysis/greeting-cards-market-report] உண்மையில் இந்த காதலர் தினமே வாழ்த்து அட்டை நிறுவனங்களின் கண்டுபிடிப்பென்று சொல்வோரும் உண்டு. இக்கூற்றில் பெருமளவு உண்மைகளில்லை.

ஏனெனில் வாழ்த்து அட்டை நிறுவனங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்பே இங்கிலாந்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் பரவலாகிவிட்டன. தற்போது காதலர் தினமென்பது ஒரு நாள் கொண்டாட்டமாக அல்லாமல் காதலர் வாரம் என ஏழு நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் வாரம் ரோஜா தினத்தில் தொடங்கி முத்த தினத்தில் முடிவடைகிறது.

1 ரோஜாக்கள் தினம், 2 முன்மொழியும் தினம் [அதாவது காதலை], 3 சாக்லேட் தினம்,4 கரடி பொம்மைகள்[டெடி] தினம்,5 உறுதியேற்கும் தினம், 6 அணைக்கும் தினம் , 7முத்த தினம், என இவ்வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஏதேனும் ஒரு பரிசுப்பொருளை காதலர்கள் பரிமாறிக்கொள்கின்றனர். மலர்களுக்கு வாழ்த்து அட்டைகளுக்கு சாக்லேட்டுகளுக்கு, கரடி பொம்மைகளுக்கு வெவ்வேறு விதமான பரிசுப்பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தையை இக்கொண்டாட்டம் உருவாக்குகிறது.

அமெரிக்கா மட்டும் இந்த 2025 ஆண்டு காதலர் தினத்தில் 27.5 பில்லியன் டாலர்களை செலவழிக்க வுள்ளதாக அனுமானிக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகள், ஆகியவற்றின் காதலர் தின நுகர்வுச் செயல்பாடுகள் தனி. உண்மையில் நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சந்தையை வளர்த்துக்கொள்ள காதலர் தினக்கொண்டாட்டங்கள் உதவின என்று வேண்டுமானால் சொல்லலாம்.

எனவேதான் சந்தைப்பொருளாதாரம் காதலர் தினப்பண்பாட்டை போட்டிபோட்டுக்கொண்டு வளர்க்கிறது. உண்மையில் வணிக நிறுவனங்களால் அதாவது சந்தையால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொண்டாட்ட நாள் எதுவென்றால் அது இந்தியாவில் கொண்டாடப்படும் ‘அட்சய திருதியை’தான். அமாவாசைக்குப்பின் வரும் வளர்பிறை மூன்றாம் நாள்தான் திருதியை என்பது. அப்படி வைகாசி மாதத்தில் வருகிற திருதியை நாளைத்தான் ‘அட்சய திருதியை’ என்கிறார்கள்.

சமண தீர்த்தங்கரரில் முதல்வரான ரிஷப நாதர் தனது உண்ணா நோன்பை கரும்புச்சாறு குடித்து முடித்துக்கொண்ட நாள்தான் அட்சய திருதியை என்பது சமண சமயத்தினரின் நம்பிக்கை. பரசுராமர் பிறந்த நாள்,வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதிய நாள். குசேலருக்கு கிருஷ்ணன் செல்வத்தை அளித்த நாள், பாண்டவ வனவாசத்தின் போது கிருஷ்ணன், திரௌபதிக்கு அட்சய பாத்திரத்தை அளித்த நாள் என அட்சய திருதியை குறித்து பல்வேறு நம்பிக்கைகள் ’இந்து’ மதத்தில் நிலவுகின்றன.

அட்சய திருதியை.. தங்கம் விற்கிற விலையில வாங்க முடியுமா? தலைமுறைக்கும் புண்ணியம் சேர செம ஐடியா! | Astrological Significance Of Akshaya Tritiya Donate these things goddess ...

வடமொழியில் ’அட்சய’ அல்லது ’அக்‌ஷய’ என்றால் நிலையானது, அழிவற்றது என்று பொருள். உண்மையில் ’ஸநாதனத்திற்கும்’ இதே பொருள்தான். இந்நன்னாளில் பொருளையோ சொத்தையோ வாங்கினால் அது நீடித்து நிலைக்கும் என்று ஒரு சிறிய புராணக்குறிப்பு வருகிறது. அவ்வளவுதான், அதைப் பிடித்துக்கொண்டு ஊதி,ஊதிப்பெரிதாக்கி மிகப்பெரிய விஷயமாக ‘நகை வியாபாரிகள்’ மாற்றிவிட்டார்கள்.

இன்று அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிடவேண்டுமென நகைக்கடைகள் முன் கியூவரிசையில் முண்டியடித்துக்கொண்டு பலரும் நிற்பதை நாம் காணமுடிகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டின் அட்சய திருதியையின் போது 22 டன் தங்கம் விற்பனையானது என அனைத்திந்திய ஆபரணக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்களின் சபைத்தலைவர் ஸயாம் மெஹ்ரா சொல்கிறார். [10 மே, 2024 நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்] 22 டன் என்பது 22000 கிலோ, ஒரு சவரன் என்பது 8 கிராம் அப்படியெனில் 2 கோடியே ஏழுலட்சத்து ஐம்பதினாயிரம் சவரன் விற்பனையாகியுள்ளது எனக்கொள்ளலாம்.

தனிநபர்கள் ஒவ்வொருவரது ஒப்புதலோடுதான் இவ்வளவு பெரிய பொருளாதார நடவடிக்கைகளும் வணிகச்செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இப்படி எண்ணற்ற தனிமனிதர்களின் ஒப்புதலைப்பெற பண்பாடு எவ்வாறு வினையாற்றுகிறது என்பதை புரிந்துகொள்வதுதான் இங்கே நம் முன்னால் உள்ள பண்பாட்டு அரசியல் .

அட்சய திருதியைக்கு இந்திய சமூகத்தில் எந்த எதிர்வினைகளும் ஆற்றப்படவில்லை. ஏனெனில் அது நம் பாரம்பர்யத்தில் உள்ளது என்று ஏதோ ஒன்றைக்காட்டி நம்பவைத்துவிடுகிறார்கள். உண்மையில் சந்தால் பழங்குடிகளுக்கும் ஜவ்வாது மலை,கல்வராயன் மலை காயகுடிகளுக்கும் இந்த பாரம்பர்யத்தில் என்ன சம்பந்தமுள்ளது என்று கேட்டால் பதில் இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால் காதலர் தினத்திற்கு கடும் எதிர்ப்புகளை பழமைவாதிகள் காட்டத்தொடங்கினர். காதலர் தினம் (valentine’s Day) இந்தியாவில் கொண்டாடத் தொடங்கும் போது , அதனை அந்நிய கலாச்சாரம் எனப்பரப்புரை செய்வது , காதலர் தினத்தன்று தனித்திருக்கும் ஜோடிகளைத்தாக்குவது, கொண்டாட்டத்தில் ஈடுபடுவோரை இழிவு செய்வது என சங்கப்பரிவாரங்கள் பலவிதமான வன்செயல்களில் ஈடுபடத்தொடங்கினர்.

கலாச்சாரப் போலீஸ்காரர்களாக, பண்பாட்டின் பாதுகாவலர்களாக தங்களை கருதிக்கொள்ளும் இந்த சங்க பரிவாரக்கும்பல்கள் இன்றைக்கு இளைய தலைமுறையினரின் பொதுப்புத்தி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேயில்லை.

சில ஆண்டுகட்கு முன்பு டில்லியில் , ‘காதலர்தினத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது; விருப்பமுள்ளோர் பதிவு செய்க’ என முகநூலில் பஜ்ரங் தள் பெயரில் ஒரு போலியான நிலைத்தகவல் இடப்பட்டது. உடனே ஒரு லட்சத்திற்கும் மேலானோர் கலந்து கொள்ள விருப்பம் என பதிவு செய்தனர்.
அதில் பகடியும் கேலியும் கிண்டலுமான எண்ணற்ற பின்னூட்டங்கள்.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? காதலிப்பது வேஸ்ட் என்கிறீர்களா?மூங்கில் கழிகளை நாங்கள் எடுத்துவரவேண்டுமா அல்லது நீங்கள் தருவீர்களா, பிங்க் ஜட்டிகளை அணிந்து வரலாமா? ஆர்ப்பாட்டத்திற்கு காதலியை அழைத்து வரலாமா? ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு காதலிக்கலாமா?” https://www.theatlantic.com/international/archive/2018/02/protecting-valentines-day-in-india/553244/ இதுதான் இந்திய இளைஞர்களின் மன நிலை. அவர்கள் சங்கப்பரிவாரங்கள் நினைப்பதைப்போலில்லை.

இந்திய சமூகத்தில் காமன் பண்டிகை, வசந்த உற்சவம் போன்ற பண்டிகைகள் உள்ளன . அவை ஒருவிதத்தில் காதலைப்போற்றுபவைதாம் என நாம் சொல்லிக்கொண்டாலும் நடைமுறையில் அப் பண்டிகைகள் சாதியப்படிநிலைகளை அளவு கோலாகக்கொண்டு சிலரை உள்ளடக்குகின்றன. சிலரைப் புறக்கணித்து புறந்தள்ளுகின்றன. தேர் திருவிழாக்கள் எல்லா ஊரிலும் நடக்கின்றன.

தேர் நிலைக்கு வந்தும் விக்கிரகத்தை மீண்டும் கோயிலுக்கு உள்ளே கொண்டு செல்லுமுன், சாமி ஊர் சுற்றி வந்ததால் தீட்டுப்பட்டுவிட்டது எனச்சொல்லி ‘சண்டாள அபிஷேகம்’ என்று ஒரு அபிஷேகத்தை செய்து, அதற்குப் பின்தான் விக்கிரகத்தை கோயிலுக்குள் கொண்டு செல்வர். இதனை ந.முத்துசாமி தனது ‘இங்கிலாந்து’ நாடகத்தில் குறிப்பிடுகிறார். [ந.முத்துசாமி நாடகங்கள் ,போதிவனம் வெளியீடு] இச்சடங்கு ஒருவிதத்தில் தீட்டு , புனிதம் என இரு எதிரிடைக் கட்டமைப்புகளை நியாயப்படுத்துவதோடு தீண்டாமையை மீண்டும் வலியுறுத்துகிறது. நமது பாரம்பரியத்தின் பல கொண்டாட்டங்களில் இவ்வன்மம் இருக்கத்தான் செய்கின்றது.

காதலர் தினம், கிறித்துவமத, பாகனிய மத பாரம்பர்யங்களிலிருந்து தோன்றினாலும் இன்றும் அதே பொருளில் கொண்டாடப்படுவதில்லை. அதன் மத அடையாளங்களிலிருந்து கழண்டு வேறொரு இடத்திற்கு அது வந்துவிட் ட து. உலக முழுதுமுள்ள இளைய சமுகத்தினரின் கொண்டாட்டமாக சுதந்திர உணர்வின் அடையாளமாக அது மாறிவிட்டது.

இன்றைக்கு ‘காதலர் தினத்தைப்’ போன்று இந்திய சமூகத்திற்கு உகந்த பண்டிகை வேறெதுவும் இல்லை எனத்தோன்றுகிறது. இருபதாண்டுகட்கு முன்பு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு National Family Health Survey (2005-06), i.e., NFHS-3.” இந்தியாவில் நடைபெற்ற சாதிமறுப்பு திருமணங்களைக் குறித்த ஒரு கள ஆய்வினை மேற்கொண்டது.

அது என்ன சொல்கிறதென்றால் நடைபெறுகிற திருமணங்களில் ,சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோரின் தேசீய சராசரி 5.8 சதவீதம் தான். மாநிலவாரியாகப் பார்த்தால் அதில் பஞ்சாப் 22.5, கேரளா 21.3, உபி 8.6, பீகார் 4.7, ம.பி.3.5, தமிழ்நாடு 2.6 ஜம்மு காஷ்மீர் 1.9 எனத்தெரிவிக்கிறது.
[Dynamics of inter-religious and inter-caste marriages in India Kumudin Das, K. C. Das, T. K. Roy and P. K. Tripathy https://paa2011.populationassociation.org/papers/111281]

இக்கணக்கெடுப்பில் கையாளப்பட்ட ஆய்வு முறைமை, சாதிகளை மூன்று குழுவாகப்பிரித்துப்பார்க்கிறது. பட்டியல் சமூகம் [SC], இதர பிற்படுத்தப்பட்டோர்[OBC], இதர உயர்த்திக்கொண்ட சாதியினர் [OC] என குழுக்களாகப் பிரித்து இக்குழுக்களுக்குள் நடக்கும் திருமணத்தையே சாதி மறுப்பு திருமணமாக அவ்வாய்வு முறைமை காண்கிறது.

அதாவது பிற்படுத்தப்பட்டோருக்குள் இருக்கும் பல சாதிகளுக்குள் நடக்கும் சாதி மறுப்பு திருமணங்களை இக்கணக்கெடுப்பிற்குள் கொண்டு வரவில்லை.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமெனில் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை நாடார் சமூகத்திற்கும் வன்னியர் சமூகத்திற்கும் மறவர் சமூகத்திற்கும் நாயுடு சமூகத்திற்கும் நடக்கும் சாதி மறுப்பு மணங்களை அது சாதி மறுப்பு திருமணங்களாக ஏற்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுகத்தோடு செய்கிற திருமணங்கள், உயர்த்திக்கொண்ட சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரோடு செய்து கொள்கிற திருமணங்கள், போன்றவை தாம் சாதிமறுப்பு திருமணங்கள் என்கிற வரையறைக்குள் வரும்.

அப்படிப்பார்த்தோமெனில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டோர் இந்திய மாநிலங்களில் மிகவும் கீழ் வரிசையில் உள்ளனர். அதுவும் உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்களை விடக் குறைவான சதவீதத்தில் தான் தமிழ்நாட்டில் உள்ளனர் என்கிற உண்மையை நாம் சுயவிமர்சனத்தோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அதாவது ’செம்புலப்பெயர் நீர் போல் அன்புடைநெஞ்சம்தான் கலந்தனவே’ என்று காதலைப்போற்றும் தொல்மரபு கொண்ட தமிழ்நாட்டில்தான் இந்நிலை.
இந்திய சமூகத்தில் சாதியை நீடித்து நிலைக்கச்செய்கிற பல சமூக கட்டமைப்புகளில், இரு முக்கியமான பண்பாட்டு அமைப்புகள் எவையெனில் அவை குடும்பமும் அது போற்றிப்பாதுகாக்கிற அகமண முறையும்தான்.

இந்த அகமண முறையில் [endogamous marriages] அதாவது ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்கிற முறையில் ஒரு முறிப்பை ஏற்படுத்தாமல் சாதியை ஒழிக்கமுடியாது என்று ‘சாதியை அழித்தொழித்தல்’ [Annihilation of Caste] எனும் தம் நூலில் அம்பேத்கர் விவாதிக்கிறார்.

இந்த சுட்டெரிக்கும் எதார்த்தம்தான் நமது முதன்மையான கொண்டாட்டங்களில் ஒன்றாக காதலர் தினத்தை உயர்த்திப்பிடிக்கிறது. எனவே உரத்துச்சொல்லுவோம்!

சாதி மறுப்புக் காதல் திருமணங்களை முன்னெடுக்கும் ‘காதலர் தினம்’ (valentine’s Day) வெல்கவென.

கட்டுரையாளர் : 

கொண்டாட்டங்களின் அரசியல் (Politics of celebrations) | வாலண்டைன் தினம், காதலர் தினம் - பிரளயன் (Piralayan) - https://bookday.in/

பிரளயன்
[email protected]
உலக காதலர் தினம்’ (valentine’s Day) சிறப்பு கட்டுரை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *