ஓடீரு….
பொறங்கையில அப்புனேன்னா செவுனி பிஞ்சு போகும்…
இப்ப என்ன மயித்துக்கு
மேவறம் நின்னுட்டு
ஊளு ஊளுங்குறயாமா……
இன்னிக்கு அவனவன்
சீக்கு புடுச்ச காலத்துல
இத்தினி காசு பணம் பாக்க
மேக்கால ஓடி தெக்கால ஓடி
நாயாத் திரியுறோம்….
அல்லாரும் வருவாங்கன்னு
மூனு களாசு பொன்னி கூட
ஒரு படி அரிசி சேத்து போட்டு………
அம்பது பணத்துக்கு
ஒர்ருவா கம்மியாக்கும் ஒரு கிலோ அரிசி…
நானும் என்ற புள்ளையும்
வெடியக்காத்தால சந்தைக்கு போயி
ஆளுக்கொரு பொறம் போயி
கொத்தவரங்கா பீனுசு
சேனைக்கெழங்குனு வெலக்கேக்காம
இத்தினி இத்தினி வாங்கி…
முக்காக்கிலோ மத்திமீனு
ஒரு கிலோ நொகுநொகுனு எளங்குஞ்சு…
கெரகம் பிராய்லர் குஞ்சுதா..
கிழக்கால அண்ணாச்சி கடை பத்துமுட்டை..
அணிலு சேமியா ஒரு பொட்டலம்
சவ்வரிசி
கூப்பங்கடையில கெஞ்சி கூத்தாடி
வாங்கற தொவரம்பருப்புல வடை
ஆனை வெல ஆப்பிளு
அதுலொன்னு…
ஒன்றை கிலோ அம்பது ரூவா ஆரஞ்சு..
ஆனா அதுலயுமொன்னு…
காக்கிலோ கருப்பு தெராட்சை
காக்கிலோ வெள்ள தெராட்சை
சின்னதா கொய்யாக்கா ஒன்னு
ஒரு மாதுளம்பழம் ஆனா காயி….
குஞ்சானூட்டு மரத்துல ஒரு பப்பாளி
லட்டு பூந்தி ஜிலேபினு
கடைகாரன்கிட்ட சிரிச்சு சிரிச்சு
அல்லாங் கலந்து அரைக்கிலோ…..
ஒர்ரூவா மல்லிப்பூ பவுடர் பாக்கெட்டு
ஒரு களாசு தயிரு.
பத்து ரூவாய்க்கி மூனு கட்டு அப்பளம்
தலையெண்ணி
கொழந்தை குருமான வுட்டுப்போட்டு
ஆளுக்கொரு எலை..
ஒரு தலை வாழை எலை..
பாத்து பாத்து வாங்கி
கொல வயிறு பத்தியெரிய
வெடியக்காத்தால இருந்து பட்டினி கெடந்து…
உப்புச்சப்பு பாக்காம
அத்தனையும் பொங்கி……
தலைக்கு தண்ணியூத்தி
தேங்கா பழமொடச்சு
தலை வாழை எலையில அல்லாத்தையும் பிச்சுப்போட்டு…..
கா….கா…ன்னு கூப்ட்டா
மயிறு ஒன்னேகாலு போச்சுன்னு
கொடிக்கம்பத்து மேல நின்னுட்டு
ஒரு கொத்து கொத்தாம போய்தொலஞ்சே……
எத்தினி கஸ்டப்பட்டு செஞ்சோம்
அட காசு பணத்த வுடு
கூட நிக்குற
ஒன்டி சண்டி சனம்பூரா என்ன நெனைக்கும்….
அட சனியம்புடுச்ச காக்கா மசுறே
எங்கய்யனுக்கு புடிக்கும்னல்ல
இத்தனையுஞ் செய்றேன்…
இந்த சனியனுக பேசுமேனு
அந்த சனியனுக்கு வச்சா….

ஓடீரு
இனிமே எங்கூட்டு பக்கம்
ஊளு ஊளுன்னே…
பொறங்கையில அப்பிப்போடுவேன்..

— பொள்ளாச்சி முருகானந்தம் …..

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *