ஒரு புளியமரத்தின் கதை…….
எனக்கும்
அந்த புளியமரத்திற்கும் ஒரே வயது-
வளர்ந்து கொண்டிருக்கிறோம்……
நான் டவுசர் போட ஆரம்பித்தேன்
அது துணி காயப்போட கொடி கட்ட ஆரம்பித்தது…….
நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்
அது அணில் குஞ்சுக்கு –
கூடு கட்ட ஆரம்பித்தது………
நான் மேஜரானேன்
அது புளியம்பூ பூத்தது…..
நான் வேலை தேடி அலைந்தேன்
அது தண்ணீர் தேடி அலைந்தது…….
மௌனம் எனக்கு பிடித்த பாசை
காற்று அதற்குப் பிடித்த பாசை……
நெடுவருடங்களாக
ஒரே வீட்டில் குடியிருக்கிறோம்……..
ஆனால்
இதுவரை ஒரு வார்த்தை கூட
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டதேயில்லை………
சமீப காலமாய்
நாங்கள் வளர்வதை நிறுத்திக்கொண்டோம்……..
பொள்ளாச்சி முருகானந்தம்…