மற்றொருமொரு பேரலை
வறுமையின் முரட்டுப் பாதையில்
வருந்திநகரும் கண்ணீர் நதியாய்
எக்காலத்தும் தொடர்கிறது
உழுகுடியின் சிதைந்த வாழ்வு…
ஊனுயிர் அடகுவைத்துத்
தரிசுகளைத் தழைக்கச் செய்யும்
ரேகை வறண்ட கரங்களில்
ஏமாற்றத்தின் கொப்புளங்களாய்
விலையில்லா விளைச்சல்…
பருவம் அறிந்து
கண்ணுங்கருத்துமாய் நட்டு வளர்ப்பன
வெள்ளம் தின்றதுபோக
வெயில் தீய்த்ததுபோக
விலங்குகள் அழித்ததுபோக
மிச்சமீந்தவை மொத்தம்
முளைப்பாரியாய் வீதிகளில்…
ஏர்ப்பின் சுற்றும் உலகத்தை
அநியாய சட்டங்களால் விலங்கிட்டுக்
கார்ப்பரேட் நரகத்தில்
கழுத்தை நெரித்துத் தள்ளுகிறது
அப்பழுக்கற்ற அசுர அதிகாரம்….
நியாயத்தின் போர்க்கொடி
அடிபட்டு மிதிபட்டுக் கிழிய
ஜனநாயகத்தின் இதயத்தில்
துளியும் இல்லை ஈரம்…
பசிப்பிணி போக்கும் அமுதசுரபிகள்
தலைநகரத்தின் வாயிலில்
மடியேந்தி உயிருடைய
கண்டதையும் விவாதித்துக்
காலங்கழிக்கிறது நெற்றிக்கண்கள்….
நூறாவது முறை விழினும்
கரைகளை உடைத்தெறிய
மற்றுமொரு பேரலை தயாரிப்போம்
நிச்சயம் வசப்படும்
மேற்கில் மறைந்த கதிரவனின்
பரந்து விரிந்த விடியல் வானம் !
பொன்.தெய்வா