அன்புத் தோழர் பொன் விக்ரம் அவர்கள் எழுதிய கச்சேரி மாயக்கா என்னும் நூலை சமீபத்தில் மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் தோழரிடம் இருந்து பெற்றேன். புத்தனூர் மலையடியில், வறண்டு கிடந்த மலைப்பட்டி கிராமத்தின் கதை நாவலாக படைக்கப்பட்டிருக்கிறது.
மதுரையின் எல்லைப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த புறமலை கள்ளர்களின் வாழ்க்கை முறையும் அவர்களது வட்டார வழக்கு மொழியும் நாவல் முழுவதும் வலம் வருகிறது. அந்தப் பகுதியின் இயற்கை வளம் பற்றியும், தண்ணீர் பற்றாக்குறை பற்றியும், அதனாலே ஏற்பட்ட வறட்சியே அவர்களின் களவு தொழிலுக்கு முக்கிய காரணம் என்பதனையும் தோழர் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அப்படியான பஞ்ச காலங்களிலும் தங்களுடைய உடலை எத்தகைய வனப்புடன் வைத்திருந்தனர் என்பது பலவிதமான போதைப் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இளமையின் வேகத்தைத் தொலைத்து நிற்கும் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான பதிவாக நூலில் பதிவாகி உள்ளது.
களவுத் தொழிலே ஆனாலும் ஒரு ஊர் பெற்று விட்ட காவல் கூலிக்கு மற்ற பகுதி களவுக் காரர்கள் கட்டுப்பட வேண்டும் என்பதும், மேலும் பெற்று விட்ட காவல் கூலிக்கு அத்தாட்சியாக ஒரு “பெண் குழந்தை” தான் அனுப்பப்படுவதுமான அவர்களது வரைமுறை வியக்க வைக்கிறது. 10 பேரை தனி ஆளாக கொன்று குவித்த வீரணனின் வீரத்திற்கு சற்றும் சளைத்தவள் அல்ல மாயக்கா என்பதை அவளின் மனவலிமை உணர்த்துகிறது.
தமிழர்களின் மரபான நடுகல் வழிபாட்டையும் நாவல் நினைவு கூறுகிறது. என்னை பொருத்தவரை நானும் தேனி மாவட்டத்தில் பிறந்தவள் என்பதாலும் என்னுடைய பக்கத்து வீடு அதாவது ஒரே பொது சுவரை கொண்ட வீடு ஒரு கள்ளர் சமுதாயத்தை சார்ந்தவரின் வீடு என்பதாலும் நான் பிறந்தது முதலே அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உள்ளபடியே தோழர் குறிப்பிட்டுள்ள அவர்களது இயல்பு அதாவது வெள்ளந்தியான குணத்தையும், உரிமையோடு முறை சொல்லிப் பழகும் பாங்கையும் நான் அறிவேன்.
அன்று முதல் இன்று வரை உரிமையோடு “நான் பெத்த மகளே” என்று தான் அழைப்பார்கள் அந்த தேவர் வீட்டு பெரியம்மாவும் பெரியப்பாவும். காவல் என்பது அவர்களது பிரதானமான தொழில் என்பதையும், களவு என்பது அவர்களது அன்றாட உணவுக்காக அவ்வப்போது நிகழ்ந்ததே என்பதையும் மிக ஆழமாக நூல் விளக்குகிறது. தங்களுடைய வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு,தேவை ஏற்படும் பொருட்டு ஆங்காங்கே நிகழ்ந்த களவுகளுக்காக ஒரு இனத்தையே குற்றப்பரம்பரையாக அறிவித்த, கொடூரத்தின் உச்சத்தை எட்ட துளியும் தயங்காத வெள்ளை அரசும், அச்சட்டத்தின் தீவிரமும் நுட்பமாக விளக்கப்பட்டிருக்கிறது.
வினையாக வந்த வெள்ளைக் காரனின் சட்டங்களின் பிடியிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆற்றிய எதிர்வினையால் துப்பாக்கிகளுக்கு இரையான பெருங்காமநல்லூர் கொடூரங்கள் கனமாக விளக்கப்பட்டிருக்கிறது. அடிமைப்படுத்தியே பழக்கப் பட்ட ஆங்கிலேயன் அந்த இனத்தின் தேவையையோ, அவ்வப்போது நடந்த களவுகளின் காரணங்களையோ ஆராயாமல் ஒட்டு மொத்தமாக குற்றப் பரம்பரை என அறிவித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்னும் எதார்த்தத்தை உணர்த்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக தன் இனத்திற்காக ஒரு பெண் எந்த அளவிலான வலியையும் தாங்கிக் கொள்கிறாள் என்னும் நாவலின் கதாநாயகி மாயக்காவின் நிலை அன்றைய பெண்களின் மன வலிமையை உணர்த்துகிறது. ஆக மொத்தம் இந்த நாவலில் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு நாம் கடந்து வந்த பாதையில் இப்படியும் ஒரு அத்தியாயம் உண்டு என்பதை பதிவு செய்து இருக்கிறார் தோழர். பொன் விக்ரம். இது போன்ற மண் சார்ந்த படைப்புகளை தோழரின் எழுத்துக்களில் மேலும் எதிர்பார்க்கிறேன்.
நூலின் விவரங்கள்:
நூல் : கச்சேரி மாயக்கா (குறுநாவல்)
ஆசிரியர் : பொன் விக்ரம்
பக்கம் : 104
விலை : 120
வெளியீடு : கெளரா பதிப்பகம்.
எழுதியவர் :
✍🏻 மு.லாவண்யா குணசேகரன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
