“பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை”
பெருமாள் முருகன்.
காலசுவடு பதிப்பகம்
பக்கங்கள் :144
₹.175.
தற்கால எழுத்தாளர்களில் தனக்கென ஒரு யுக்தி கொண்டு படைப்புகளை எழுதி வரும் எழுத்தாளரே பெருமாள் முருகன் அவர்கள். முன்னதாக ” மாதொருபாகன்” நாவல் குறித்த பிரமிப்பு அகலாத நிலையில் ” திருச்செங்கோடு” முதலான சிறுகதைத் தொகுப்புகள் படித்திருந்த நிலையில் இந்த ” பூனாச்சி” மீது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு உண்டானதில் பெருவியப்பேதுமில்லை.
“பூனாச்சி” முற்றிலும் மாறுபட்ட நிலையில் புனையப்பட்ட படைப்பே ஆகும். “விதையுறக்கம்” என்ற முன்னுரையே நம்மைக் கதைகளத்தினுள் நுழைய எளிதில் நம்மை அழைத்துச் செல்ல போதுமானதாக இருக்கிறது.
நான் சந்தித்த சவால்களினால் உண்டான வடுக்களின் பிரதிபலிப்பாகவே அதனைக் கருதிக் கொள்ளத் தோன்றுகிறது. “ஒரு வெள்ளாட்டின் கதை” என்ற போதிலும் சமூகத்தின் மடத்தனங்களை அரசின் அவலட்சணங்களைச் சாடுவதில் சிறிதும் சளைக்கவில்லை என்பதே எழுத்தாளரின் தனிமுத்திரை ஆகும்.
அமானுஷ்ய சக்தியாக(!) வந்த சேரும் புழு வடிவிலான பூனாச்சி அறிமுகமே படு அமர்க்களமாக இருக்கிறது. ஆரம்பத்தில் துவங்கும் விறுவிறுப்பு இறுதிவரை குன்றாமல் குறையாமல் வெள்ளாட்டின் வேகத்தில் நம்மை பயணிக்க வைக்கிறது இந்த நாவல்.
மனிதர்களுக்கு பெயர் சூட்டாமல், வெள்ளாட்டு இனத்திற்கு மட்டுமே பெயர்சூட்டி வித்தியாசப்படுத்தி அசத்தியுள்ளார் எழுத்தாளர். “பூனாச்சி, பூனன், கடுவாயன், அழகுமூக்கி, உழுத்தன், ஊழையன், செம்மி, பொருமி ” என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை கவர்வதுடன் நில்லாமல் கண்கலங்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
கிழவனும் கிழவியும் வாழும் வாழ்க்கைச் சித்திரம் மிக மிக யதார்த்தமான படைப்புகளே. ஆட்டு மந்தைக்குள் நாமும் பயணிப்பது போன்ற உணர்வே நமக்கு உண்டாகிறது. பால் வீச்சமும் புழுக்கை நாற்றமும் நம் நாசியில் உண்டாவதை உணராமல் இருக்க இயலாது.
மிக மிக உன்னிப்பாக கவனித்து வெள்ளாட்டு வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் அவர்கள். யதார்த்தம் ஒருபுறம், புனைவு மறுபுறமென அசத்தியுள்ளார் பெருமாள் முருகன் அவர்கள். ஊட்டுசவ்வில் பாலூட்டுவது முதல், காது குத்துவது, காயடிப்பது என பயணித்து ஆட்டு பிரசவத்தில் பிரமிக்க வைத்து பலியிடுவதில் நிர்க்கதியாக நிற்க வைத்து மிரட்டியுள்ளார் எழுத்தாளர்.
ஆளும் அரசாங்கத்தை காது குத்தும் நிகழ்வில் செய்யும் நையாண்டி , இம்மை அரசனை நினைவூட்டியதாகவே கருதினேன். அதிலும் ‘வரிசை முறை’ குறித்த நிகழ்வுகள் படு அபாரம். “குசுவு கணக்கெடுப்பு எடுத்தாலும் எடுப்பாய்ங்க” என்பதெல்லாம் முரட்டு ரகம்.
வெள்ளாடுகளின் இளமைப் பருவத்தை, விளையாட்டுத்தனத்தை படு நேர்த்தியாக விவரித்துள்ளார். அதிலும் குறிப்பாக, காதலையும் காமத்தையும் மிக ரசனையாக காட்சிப்படுத்தியுள்ளார். காம இச்சைக்காக பூனாச்சியை கிழட்டு ஆட்டுடன் கூட விடும் இடமெல்லாம் ரணகளம். சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆட்டினத்திலும் நடைபெறுவதாக சித்தரித்து சிந்திக்கத் தூண்டியுள்ளார் எனலாம்.
காயடிக்க வருபவர் , காயடிக்கும் பணிக்காக வருந்தி தனக்கு அளிக்கும் தானியங்களைக் கூட வாங்காமல் பாப விமோசனம் வேண்டி பரிதவித்து நடந்துச் செல்லும் காட்சி கழிவிரக்கம் உண்டாக்கக் கூடியதே. பூனாச்சியின் வழியே வெள்ளாட்டின் வாழ்வியலை கண்ணீரும் கம்பலையுமாக காட்சிபடுத்தியுள்ளார்.

மழையில்லாமல் வறண்டு கொண்டே வரும் நிலத்தில் ஒரே பிரசவத்தில் ஏழு குட்டிகள் போடும் பூனாச்சி அடையும் அவலங்கள் ஒவ்வொன்றும் கண்ணீர் சிந்த வைப்பனவே. கிழவன், கிழவி வாழ்வு வழியாக வறட்சியை, பஞ்சத்தைக் காட்சிப்படுத்திய பாங்கு, சிறுவயதில் கேட்டறிந்த ‘கிழங்கு மாவு சாப்பிட்ட வறட்சிக்காலம்’ நினைவில் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
குதூகலமாக துவங்கிய பூனச்சியின் இளமைக்கால வாழ்க்கையில், உண்டான காதல் நசுக்கப்பட்டு, பூப்பெய்திய பின் வேண்டா விருப்பாக கலவி செய்து வைக்கப்பட்டு ஊட்டு கொடுக்க திராணியின்றி ஏழு, ஏழு குட்டிகளை ஈன்று இறுதியில் கற்சிலையாக நிற்பதெல்லாம் ரத்தக் கண்ணீர் வரவைப்பதே…
பிறந்த குட்டிகளை பதிவு செய்யும் நடைமுறை படு சுவாரசியமானது. கடுவாயனுக்கும் அழகுமூக்கிக்குமான வாலிப விளையாட்டு காமக்களியாட்டமே…
பூனனுக்கும் பூனச்சிக்குமான காதல் வாழ்க்கை ஓவியமாகத் தீட்டப்பட்டதாகவே தோன்றுகிறது.
இந்நாவலுக்காக எழுத்தாளர் மேற்கொண்ட வெள்ளாடுகள் குறித்த ஆய்வுகள் மிகுந்த சிரத்தைக்கு உரியனவே. ஒவ்வொரு பகுதி குறித்தும் விலாவரியாக எழுதிக் கொண்டே போகலாம். சிறுவயதில் ஆடு மேய்த்தலைப் பார்த்ததை நினைவூட்டி ஆடு வளர்ப்பவர்கள் மேல் ஒருவித கரிசனத்தை உண்டாக்கும் அற்புத படைப்பாகவே இதனை நான் கருதுகிறேன்.
கிராமத்து சொலவடைகள் ஆங்காங்கே விரவி நம்மைக் கவர்கின்றன. இது சாதாரண வெள்ளாட்டின் கதையல்ல; புழுக்கை வடிவில் வந்து பூலோக அதிசயமாக மிளிரும் பூனாச்சியின் கதை. பூவன் மொழியில் கூறியதாக வரும் ” கறிக்குச் சாவுவோம். பலிக்குச் சாவுவோம்” என்பதே வெள்ளாட்டின் வாழ்க்கை. புதியதொரு அனுபவம் உண்டாவது நிச்சயம்.
நல்லதொரு படைப்பு. வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
“பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை”
பெருமாள் முருகன்.
காலசுவடு பதிப்பகம்
பக்கங்கள் :144
₹.175.
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.
சிறப்பு