அதிகாரச் செல்வாக்கும் பணபலமும் கூட்டுச் சேர்ந்து உண்மைளைப் புதைப்பதும், உண்மையானவர்களைச் சிதைப்பதும் காலங்காலமாக நடக்கிறது. புதைக்கப்பட்டவற்றைத் தோண்டியெடுக்க எவ்வளவு பெரிய போராட்டம் தேவைப்படுகிறது! அப்படியொரு போராட்டத்தை நடத்த வருகிறாள் இந்தப் பொன்மகள்.
நீதிமன்றத்தில் நடக்கிற சட்டப் போராட்டத்தைச் சித்தரிக்கிற படமாகத் தொடங்கினாலும், காட்சிகள் நகர நகர, கலாச்சாரப் பெருமை பேசப்படும் நாட்டில் பாலியல் வக்கிரத்துக்காகப் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் எதிரான நியாய ஆவேசத்தைத் தூண்டுகிற படைப்பாக வடிவெடுக்கிறது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சிறுமிகளைக் கடத்திச் சென்று உடலைச் சின்னாபின்ப்படுத்திக் கொலை செய்த வடநாட்டைச் சேர்ந்த ஒரு ‘சைக்கோ’ பெண்ணாகிய ஜோதி போலீஸ் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைப் பின்தொடர்கிறாள் வெண்பா. மூடப்பட்ட வழக்கை நீதிமன்றம் மறுபடி திறக்கவைக்கிற வழக்குரைஞரான வெண்பா, அந்த ஜோதி குற்றவாளியல்ல, குழநதைகளைக் கடத்தியது அவளல்ல என்று வாதாடுகிறாள். வெறும் பப்ளிசிட்டி மோகத்திற்காகவே அவள் இப்படிச் செய்கிறாள் என்று எல்லோரும் கரித்துக்கொட்டுகிறார்கள். விசாரணையின் புதுப்புதுத் திருப்பங்களில் வெளிவரும் உண்மைகள் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. வெளிவரும் உண்மைகளில் ஒன்று அந்த வெண்பா யார் என்பது. எல்லோரும் பார்க்க வேண்டும் என்று கருதுகிற ஒரு படத்தின் கதையை இதற்கு மேல் சொல்வது விமர்சன அநியாயமாகிவிடும்.

நீதிமன்ற வாதங்கள் அந்த வழக்கின் கதையை மட்டும் சுற்றிவந்திருக்குமானால் இது ஒரு வழக்கமான படம்தான். ஆனால், பெண்களுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே இழைக்கப்படும் வன்மங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஆசிஃபா, நந்தினி என மனசாட்சியை உலுக்கும் செய்திகள் நினைவூட்டப்படுகின்றன. ஒவ்வொரு பெண் குழந்தையும் தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத, வெளியே சொல்லவும் முடியாத அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படும் அன்றாட நிகழ்வுகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. யாரோவொரு குழந்தைக்கு நேர்ந்த துயரம் என்ற பரிவுணர்வோடு அடுத்த செய்திகளுக்குத் தாவுகிற மக்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு நடந்ததாகக் கருதத் தவறுவதற்குக் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டாமா என்ற சிந்தனைகள் கிளறிவிடப்படுகின்றன.
ஜோதியாக, வெண்பாவாக ஜோதிகா தன் நடிப்புத் திறனை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்குத் துணை செய்யும் பெட்டிஷன் பெத்துராஜ் பாத்திரத்தில் கே.பாக்கியராஜ், வழக்கைத் திசை திருப்புவதில் கில்லாடியான வழக்குரைஞர் ராஜரத்தினமாக பார்த்திபன், தனது மரியாதைக்கு ஒரு குறைவும் வரக்கூடாதென மரியாதைக்குறைவான செயல்களில் இடுபடும் அரசியல் புள்ளி வரதராஜனாக தியாகராஜன், மகளுக்குத் திருமணம் செய்யவேண்டிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நீதிபதியாக பிரதாப் போத்தன், நீதிபதியின் உதவியாளரானாலும் நீதிமன்றத்திற்கு வெளியே அவரை வாடா போடா என்று அழைக்கும் நண்பராக பாண்டியராஜன் என்று எல்லோரும் மனம் தொடுகிறார்கள்.
உமாதேவி, விவேக் எழுதியுள்ள பொருள்நிறைந்த பாடல்களுக்கும் பின்னணிக்கும் பொருத்தமாக இசையமைத்திருப்பவர் கோவிந்த் வசந்தா. ஊட்டியின் குளுமையையும் வனப்பகுதி இருளையும் அனுபவப்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

வழக்கு மறுபடியும் எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, விளம்பரத்துக்காகக் குற்றவாளிக்குப் புனித வேடம் சூட்டுவதா என்று ஆளுக்காள் தொலைக்காட்சி மைக் முன்னால் சாடுகிறார்கள். உண்மை வெளிவரவேண்டும என்பதற்கு மாறாக இப்படி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறவர்களோடு, பெண்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே போராடுகிற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இருப்பதாக அவர்களது பதாகையோடு காட்டப்படுவது முரண். நீதிமன்றக் காட்சிகள் சட்ட நுணுக்கங்களையும், சாட்சிய ஆதாரங்களையும், வாதத் திறமைகளையும் பின்னுக்குத் தள்ளி கண்ணீரை முன்னிறுத்துவது மிகை.
ஆயினும், கடைசி நிமிடம் வரையில் புதிர்கள் நிறைந்த படத்தைக் குழப்பமின்றிக் கொண்டு செல்வதிலும், மையக் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்வதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் புதிய இயக்குநர் ஜே.ஜே.ஃபிரெட்ரிக். புதிய திரைப்படங்களை ‘ஓடிடி’ ஏற்பாட்டில் வெளியிடுவது சரிதானா என்ற வாத எதிர்வாதங்களுக்கிடையே, அமேசான் பிரைம் வழியாக சூர்யா தலைமையிலான ‘2 டீ என்டெர்டெய்ன்மென்ட்’ குழுவினர் பார்க்கப்பட வேண்டிய, பேசப்பட வேண்டிய ஒரு படத்தைத்தான் வீடுகளுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com


மாதர் சங்க காட்சிப்படுத்தல் முரன் அல்ல, சரிதான். அன்றைய சூழலில் மாதர் சங்கம் அதைத்தான் செய்யும், செய்ய வேண்டும். பொது சமூகத்தின் கோபத்தையும் அதற்கு இணையாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பிறகு எதற்கு படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்தும், உரிய மாற்றம் செய்வதாகவும் மாதர் சங்கத்திற்குக் கடிதம் அனுப்ப வேண்டும்? எனக்குத் தெரிந்து மாதர் சங்கம் இப்படியான எதிர்வினைகளைச் செய்ததில்லை.