கடவுளுக்குப் பின் {நூல் விமர்சனம்}
சமகாலப் பெண்களின் இருப்பு, மனச்சிக்கல்கள், நகர்ப்புற வாழ்வு மற்றும் உறவு முறைகளை கதைகளாக்கியிருக்கிறார் “பொன்முகலி.” “கடவுளுக்குப் பின்” இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இவரது சிறுகதை தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நவீன வாழ்வு பெண்கள் மீது விரிக்கும் மாயவலை, தனித்த இருப்பிடம் மற்றும் சுயமான முடிவுகளை எடுக்கும் பெண்களின் மனநிலை போன்றவற்றைப் பற்றி பேசியிருக்கிறார். இத்தொகுப்பிலுள்ள கதைகள் நான் என்ற கதாபாத்திரத்தின் மூலமாகவே கதை நகர்கிறது. இதிலிருக்கும் ஒன்பது கதைகளும் பெண் குரலில் பெண்ணோட இடத்திலிருந்து பெண்ணோட பிரச்சினைகளை பெண் எப்படி சமூகத்தை எதிர் கொள்கிறாள் என்பதை காட்டுகிறது.
கல்வி, வேலை பார்ப்பது என்பது சமூகத்தில் நிலவும் ஆண் மேலாதிக்கக் கருத்து நிலையை ஓரளவுக்கு குறைத்திருந்தாலும் இன்று அது வேறு வடிவங்களில் பெண்கள் அப்பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதிருக்கிறது. ஆண் பெண்ணுக்கிடையே நிலவும் அசமத்துவமானது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. காலாதிகாலமாக கற்பிக்கப்பட்டு வந்த பொறுமை, அடக்கம் என்ற குணாம்சங்களால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளுக்குள்ளேயே வெந்து குமையும் பெண்கள் இக்காலத்திலும் அதிகம். தனித்தனிக் குடும்பங்களுக்குள் நடக்கும் விவகாரங்களாக சில வன்முறைகள் மூடிமறைக்கப்படுகின்றன.
“அலர்” இக்கதை இருவகையான கதைகளாக நகர்ந்து ஒரு புள்ளியில் சேர்கின்றன. ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் நினைவுகளிலிருந்து தப்பிக்கவே விரும்புகின்றன.சமூகத்துக்கான ஒரு ஒழுங்கு இருக்கிறது. அது நல்லதாகவும் இருக்கலாம். சுயநலத்தின் சார்ந்தும் இருக்கலாம். அந்த நியதியிலிருந்து மாறுபட்ட எதுவும் அவர்களுக்குள் அது நியாயமாக இருந்தாலும் சமூகத்தின் பார்வையில் அது கேள்விக்குறியே. ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து விலகி ஓடுவது கூட அவர்கள் உருவாக்கப் போகிற நினைவுகளிடம் இருந்து தப்பி ஓடுவது போலத்தான் என்கிறார்
இக்கதையை வாசித்து முடித்ததும் நமக்குள் எழுகின்ற கேள்வி யாரை குறை சொல்ல? இப்பிரச்சினைகள் சமூகம் கலாச்சார புனிதப் போர்வையால் ஆண், பெண் இடையே நீண்ட மாய இடைவெளியில் பிரித்து வைத்திருக்கும் தன்மையிலிருந்து எழுந்ததா? அல்லது பழைய தன்மைக்கும், நவீனத்துக்கும் இடையில் தடுமாறி சீரழிந்த குடும்பங்களைக் கண்டு உருவானதா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
“பிறகு” கதையில் திருமணமே செய்து கொள்ளாத அப்பா, அம்மாவுக்கும் இடையே விரிசல் இருந்தாலும் ஒருவரையொருவர் தனிப்பட்டு ஒருவர் மற்றவர் விசயத்தில் தலையிடாத தன்மை உள்ளதால் மகளுக்கு மற்ற வீடுகளில் பெண்கள் இருப்பது போல் தன் அம்மா இருப்பதில்லையே என்ற ஏக்கம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தன. அம்மாவுக்கு ஆட்களில்லாத இந்த காலியான தெருக்களும், மயான அமைதியும் பிடித்து இருந்தன. தொளதொளப்பான ஆடையை அணிந்து கொண்டு, வரைவதற்குத் தேவையான உபகரணங்களை காரில் போட்டுக் கொண்டு இந்த உலகம் முடிகிற இடம் வரை கூடப் போய் வருவார். அம்மா தன் மகளிடம் நீ கூட நிறைய இடத்துக்கெல்லாம் போ. பிடித்ததையெல்லாம் நிறைவேற்று. கல்யாணம் செய்து குழந்தையெல்லாம் பெத்துக்க வேண்டாம் என அறிவுறுத்துவார். ஆனால் மகளுக்கோ வீடு போதும். வீட்டுக்கு வரும்போது யாராவது அவளுக்காக காத்துக் கொண்டு இருக்க வேண்டும் என விரும்புபவள். தனிமையின் கரங்கள் தீண்டாமல் இருக்க அவளுடைய அப்பா அவளுக்காக மெனக்கெடுவார். அம்மாவும் மிகவும் அன்பாகத்தான் இருந்தார். ஒவ்வொரு இரவுகளிலும் அம்மா கதைகள் படித்துச் சொல்வார். மகளுக்கு அப்பாவிடம் இருந்த அணுக்கம் போல் ஏனோ அம்மாவிடம் இருப்பதில்லை. அவள் காதலித்த காதலனுக்கும் அவளுடைய பெற்றோர் போல் இருக்க வேண்டுமென்று தான் சொல்வான்.ஆனால் அவளுக்கோ இப்படி இருக்கப் பிடிக்கவில்லை. அம்மான்னா இப்படித்தான் இருக்கணும் என்ற ஏற்கெனவே காலங்காலமாக இருக்கும் தன்மையின் சொகுசு அவளுக்கு பிடித்திருப்பதால் அவளின் ஏக்கம் தொடர்ந்து கொண்டிருந்தன. அம்மாவின் வயது வரும்போது தான் அவளுக்கு புரியவரும். ஒருநாள் தூங்கி எழுந்ததும் யாரையும் காணாமல் தவிக்கிறாள். இப்படிப்பட்ட வீடுகளில் வாழும் குழந்தையின் ஏக்க மனநிலையை எதார்த்தமாக கதைகளில் பதிவாக்கியிருக்கிறார் எழுத்தாளர்.
“கடவுளுக்குப் பின்” இது மாய எதார்த்த கதையாக இருக்கிறது. மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. சாதாரண வாழ்க்கை மற்றும் பெரும்பான்மையோர் காத்துக் கொண்டும், ஏங்கிக் கொண்டும் இருக்கும் வாழ்க்கை. இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லோரும் போட்டிபோட்டு கடக்கின்ற வாழ்க்கையை அக்காவும், தம்பியும் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுத்தவர்களின் பாதை பின்னே மறைந்தும் முன்னே திறந்தும் இருக்கின்றன. அங்கே விமர்சனமோ, கேள்விகளோ இருக்கக் கூடாது. தெருவுக்கு ஒரு ரேசன் கடை திறக்கப்பட்டது. தண்ணீருக்கு நீலநிற மாத்திரையும், சாப்பாட்டிற்கு மஞ்சள் நிற மாத்திரையும் விநியோகிக்கப் பட்டன. மதுராவுக்கு இந்த உலகின் பெளதிகம் பிடிபடவில்லை. முதலில் இது நிர்மாணிக்கப்பட்ட உலகமா? இதை எங்கிருந்து எதைக் கொண்டு யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. மொழி, கடவுள், ஒரே தலைமையின் கீழான அரசு தொடர்கின்றன. குழப்பம் விழையாதிருக்கும் பொருட்டு அங்கே அனைவருக்கும் எண்களின் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மாதிரியான உலகத்தில் வாழப் பிடிக்காத மதுரா இதனால் கோபம் அடைந்தவள் உலகம் ஒரு மயிர்கற்றை என்கிறாள். இக்கதை இன்று உலகத்தில் நடப்பதை எழுத்தாளர் அதை கற்பனை உலகமாக மாற்றி கதைகளில் பயணிக்க வைக்கிறார்.
“கனா” இக்கதையில் கனா 1, 2, 3, 4, 5, …..12 கனாக்கள் தொடர்கின்றன. இறந்தவர்கள் உயிர் பெற்று உலாவுகிறார்கள் கனவில். விடைபெறுதலுக்காக கனவில் திரும்ப வந்த பாட்டி விடைபெற்றுச் செல்கிறார். இரண்டாவது கனவில் அம்மாயி சாவகாசமாக வந்து வெற்றிலையை இடித்து மோதிர விரலால் அதைத் தோண்டியெடுத்து வாயிலிட்டுக் குதப்புகிறார். அவளுடன் அன்பாக இருந்த காதலனும் விபத்தில் இறந்து போகிறான். இப்படி இவளிடம் அன்பாக இருந்து வாழ்ந்தவர்கள் எல்லாம் இறந்து போன பிறகு அவர்கள் மேல் வைத்திருந்த அன்பின் ஏக்கத்தால் அவளுக்கு பல கனவுகள் வந்து கொண்டிருந்தன. நாளடைவில் கனவுகள் துரத்த, அவள் தூக்கம் இல்லாமல் துன்பப்படுகிறாள். மாத்திரைகள் போட்டும் கனவுகள் நின்றபாடில்லை. தொடர்ந்து வந்த துயரத்தால் மனநிலை பாதிக்கப்படுகிறாள். இக்கதையை வாசிக்கும் போதே நாமும் அந்த பித்த நிலையை அடைந்த மனநிலையை உணர்கிறோம்.
“தேன்கூடு” அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் நகர்புற குடும்பம். சன்னலை ஒட்டி வெளியில் தேன்கூடு இருப்பதையறிந்தவர்கள் முதலில் தேனீக்களை கொல்லாமல் அகற்ற முடியுமா? என அகற்றுபவர்களிடம் கேட்கிறார்கள். கொன்றுதான் அகற்ற முடியும் என்று சொன்னவர்களிடம் வேறுவழியில்லாததால் அப்படியே அகற்றச் சொல்கிறார்கள். இனி வராது என்றிருந்தபோது அடுத்து பல மாதங்கள் கடந்து மறுபடியும் அதே இடத்தில் கூடு கட்டுகிறது. மறுபடியும் அகற்றுகிறார்கள். பயந்தவர்கள் மறுபடியும் தேனீக்கள் கூடு கட்டினால் வீட்டையே மாற்ற வேண்டுமென்று பேசுகிறார்கள். ஒருநாள் தேன் பூச்சிகள் கூடு கட்டி தொலைக்கின்றன. ஒருநாள் சலவை இயந்திரம் பழுதடைகிறது, ஒருநாள் தண்ணீர் வரும் குழாய்கள் அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறாமல் துன்பம் தருகிறது. வருகிற பிரச்சினைகளை சரி செய்யாமல் கடந்து போகும் நகர்புற குடும்பம். அவர்களுக்கு அவர்களுடைய சமநிலைதான் முக்கியம். உலகம் எக்கேடு கெட்டு போனா என்ன? தேனீக்கள் எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் பிரச்சினைகளை சரிசெய்து மீண்டும் அதே இடத்தில் கூடு கட்டுகிறது. இக்கதையில் தேனீக்களையும், சுயநலமிக்க நகரத்தின் குடும்ப வாழ்க்கையையும் ஒப்புமைப் படுத்தி விளக்குகிறார்.
“மல்லிகா” கிராமத்தில் படிப்பறிவில்லாத குடும்பத்தில் வாழும் பெண் பள்ளிக்கூடம் போக விருப்பமில்லாமல் வேலைக்குச் செல்கிறாள். அங்கே அவள் ஒரு பையனை காதலிப்பதை அறிந்த பெற்றோர் அவளை வேலைக்குச் செல்ல விடாமல் தடுக்கின்றனர். அவள் கூட நட்பாக பேசிக்கொண்டிருந்த பெண் வீட்டிலும் அவள் சரியானவள் இல்லை, அதனால் அவள் கூட பேசக் கூடாது என தடுக்கின்றனர். திடீரென்று மல்லிகா காணாமல் போனதை அறிந்தவர்கள் அவள் காதலித்தவனோடு ஓடியிருக்கலாம் என்று நினைத்து அவனை தேடியபோது அவன் இருக்க, அவள் ஏற்கெனவே காதலித்த பையனோடு போய்விட்டதை அறிகின்றனர். கிராமத்தில் வாழும் குடும்பம், அந்தக் குடும்பத்தில் வாழும் பெண்ணின் வாழ்வியலை கதைகளில் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்.
“மித்ரா” இக்கதை குழப்பமான மனநிலை தன்மையோடு கதை நகர்கிறது. தான் எப்போதும் கண்காணிக்கப் படுகிறோம் என்ற தன்மையில் உணருகிறாள். வீட்டில், வெளியில், தன் கணவன் மட்டுமல்ல மற்றவர்களாலும் தான் கண்காணிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்குகிறது. தன்னுடைய கைப்பேசியின் வாயிலாக முகநூல், வாட்ஸ்சப் என எல்லாவற்றையும் உளவு பார்ப்பதாக கற்பனை செய்கிறாள். தன் நிலைமையை பற்றி ஆறுதலுக்காக சொல்லும் நபரிடம் கூட தான் கண்காணிக்கப் படுகிறோமோ என்ற கற்பனையும் உருவாகிறது. தான் அலுவலகத்தில் என்ன செய்கிறோம். யார் யாரிடம் பேசுகிறோம். எங்கே போகிறோம் என்பதை எல்லாம் வேவு பார்க்கப்படுவதாக நினைக்கிறாள். தன்னை கண்காணித்த கணவன் தன்னை கொல்ல வருவது மாதிரி அவளுக்கு கனவு வருகிறது. நாளுக்கு நாள் இந்த எண்ணம் அதிகமாகிக் கொண்டே போக மருத்துவரை சந்தித்து மாத்திரை சாப்பிடுகிறாள். சுற்றுப்புற சமூகச் சூழலால் வாழ முடியாமல் மனம் பேதலித்து வாழும் பெண்ணை இக்கதையில் காட்டுகிறார். இச்சமூகத்தில் பெண்களுக்கு இந்த மாதிரியான பயம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.பெண் கண்காணிக்கப்படும் தன்மையில் சமூகத்தில் அந்தளவுக்கு ஆணை கண்காணிக்கப் படுவதில்லை. கண்காணிப்பு கற்பனை அதிகமாக அதிகமாக அவள் மனநிலை பாதிக்கப்பட்ட தன்மையை அடைகிறாள்.பின் தன்னை யாராலும் காப்பாற்ற முடியாத மனநிலைக்கு தன்னை அழைத்துச் செல்கிறாள்.
“வடு” இக்கதையில் கணவன் அலுவலகத்துக்குச் சென்ற பின் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்தபின் குழந்தையை கூட்டிக் கொண்டு தன் கணவர் வரும் வரை பூங்காவுக்குச் செல்கிறாள். பூங்காவில் ஒரு சீக்கியருடன் நட்பு உருவாகிறது. இருவரும் அவரவர் படித்த புத்தகங்கள் பற்றி பேசுகிறார்கள். அடுத்து ஒவ்வொரு நாளும் சந்திக்கிறார்கள். மொழி பற்றி, அடையாளம் பற்றி பேசும்போது சீக்கியர் தன் அம்மாவின் கதையை கூறுகிறார். டெல்லியால் நடந்த கலவரத்தில், கலவரக் கும்பல் ஒன்று அத்தையை எங்களிடமிருந்து பிரித்து இழுத்தார்கள். அத்தை, அக்காவின் கையை பிடித்துக் கொண்டே அலறினாள். என் அக்காவும் அவளோடு சேர்ந்து இழுபட்டாள். ஒரு நொடி திகைத்த அம்மா, சுதாரித்துக்கொண்டு பலங்கொண்ட மட்டும் அத்தையின் கைகளில் இருந்து அக்காவின் கைகளைப் பிரித்தெடுத்து நகர ஆயத்தமாகிய பெட்டியில் எங்களை ஏற்றி, தானும் ஏறினாள். அதன் பின்னர் அம்மா கலவரத்தில் தன்னால் குட்டி அத்தையை இழந்த வடு அவரை தொடர்ந்து துன்புறுத்தியது. நாம் புத்தகங்களில் படிக்கிற கலவரங்கள் வேறு. நிஜத்தில் எதிர்கொள்கிற கலவரங்கள் வேறு. நம்முடைய ஆதார குணம் என்று நாம் எதை நம்பிப் பெருமிதம் கொண்டிருக்கிறோமோ, அதைக் குலைத்துப் போடுகிற தன்மை இந்த வகையான கலவரங்களுக்கு உண்டு என்றார். அதைக் கேட்டவள் பின்பு ஒருநாள் கர்நாடக ,தமிழர் பிரச்சினையின் போது கலவரத்தை நேரில் கண்டவள், அந்த கலவரத்தில் தன் கணவன் வராமல் தவித்தபோது சீக்கியர் சொன்ன கலவரத்தோடு இணைத்து பார்த்தவள் அப்போதுதான் உணர்ந்தாள். இக்கதையில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கலவரங்களில் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் கதையை இணைத்து கலவரங்களின் தன்மையை நமக்குப் புரிய வைக்கிறார்.
“வெளியற்ற நிழல்” அம்மா வீட்டுப் பொறுப்புடனும், அப்பா அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பவராக, குடும்பத்தின் அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். அந்த அதிகாரத்தின் அடியில் அத்தனையையும் தாங்கிக் கொண்ட மனைவி, தன் கணவன் வேறொரு பெண்ணின் உறவை அறிந்ததும் தற்கொலை செய்து கொள்கிறாள்.அவ்வளவு தூரம் அவனுக்காக அடிபணிந்தவளுக்கு அவன் காட்டும் நியாயமற்றத் தன்மையினால் குடும்பம் சிதறடிக்கப்பட்டு குழந்தைகள் பாட்டியின் அரவணைப்பில் வளரக்கூடிய சூழல் உருவாகின்றன. பின்னால் அவன் அதை நினைத்து வருத்தப்பட்டாலும் அவன் செய்த செயல் மன்னிக்க முடியாததுதான் என்பதை மகள் திரும்ப அவரை பார்க்க வந்த போது தன்னையே நொந்து கொள்கிறாள்.
ஒவ்வொரு பெண்ணும் அவரவர் சூழலில் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கதைகளில் எதார்த்தமாக பதிவு செய்கிறார். நகரம் மற்றும் கிராமத்தில் வாழும் பெண், சூழலால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண், துயரமே வாழ்க்கையாகிவிட்ட தன்மையில் வாழும் பெண், தான் வாழ்கின்ற வாழ்க்கை ஏன் தனக்கான வாழ்வாதரமாக இல்லை என்று கேள்வி கேட்கும் பெண். இப்படி கதைகளில் பலவிதமான பெண்களை படைத்து உணர வைக்கிறார்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கடவுளுக்குப் பின் |
| ஆசிரியர்: | பொன்முகலி |
| வெளியீடு: | காலச்சுவடு பதிப்பகம் |
| விலை: | ₹.145 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 மா.சுமதிச்செல்வி |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

