நூல்: வாய்க்கால்
ஆசிரியர்: பூமணி 
விலை: ₹80.00 INR*·
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

எழுத்தாளர் பூமணி கரிசல்காட்டு எழுத்தாளர். அவரது இலக்கியப் பயணம் கவிதையில் தொடங்கி சிறுகதை, நாவல், ஆவணப்படம் இயக்குதல் என்ற விரியும் வட்டங்களாகச் சுழல்கிறது. இந்த வட்டங்ளின் சுழற்சி மையம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பாடுகளும் அவற்றை இயக்கும் பிரச்சினைகளே. சாகித்ய அகதமி விருதாளரான பூமணி தீப்பெட்டித்தொழிவாளர்களின் வாழ்வியல் குறித்து கருவேலம் பூக்கள் என்னும் திரைப்படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக எழுதி இயக்கியுள்ளார். நிப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கைப்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

தனித்துவமிக்க கரிசல்காட்டுப் பகுதியைக் களமாகக் கொண்டு பூமணியால் எழுதப்பட்ட நாவல் தான் “வாய்க்கால் “. இந்நாவல் பள்ளிப்பிராயத்துக் காதல் கதையை முயல்வேட்டை நிகழ்வுகளின் ஊடாக சொல்லப் படுகிறது. கரிசல்காட்டு கிராமத்து ஆசிரியத் தம்பதியரின் மகனான கோபாலுக்கும் விவசாயக் குடும்பத்து மகளான லட்சுமிக்கும் இடையே பள்ளி நாட்களில் அரும்பிய காதல் நிறைவேறாமல் பணமும் நகையும் வர்க்கத்தடுப்பு சுவராய் நின்று பிரிப்பதில் அம்மாவின் சாகசமும், காதலுற்றோர் இருவரும் படும்பாடும் கரிசல் கிராமத்து மொழியில் நெஞ்சை உருக்கும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் பூமணி. இதற்கு கரிசல் காட்டு சொலவடைகளும், பேச்சுமொழிகளும் வலுசேர்க்கின்றன.

இந்தக் கதைக்கு சுருளி, வடிவேலு, வெள்ளத்தாய், இருளாண்டிக் கிழவன் முதலான அசலான மனிதர்கள் கதைக்கு வலுசேர்க்கிறார்கள் என்பதை விட கரிசல்கிராமவாழ்வை வாசகன் முன் வாழ்ந்து காட்டுகிறார்கள்.



நாவலில் முயல்வேட்டையை முன்னிறுத்தி வேட்டை உத்திகள், வேட்டைச் சமூகத்திற்குரிய பகிர்ந்துண்ணும் பண்பாடும், தனிநபர் ஆளுமைத்திறன் பொதுநலத்திற்கு பயன்படுவதையும் நாவல் உணர்த்துகிறது. வியாபாரச்சமூகத்தின் சீர்குலைவுச் செயல்களும் சுட்டப்படுகிறது. பால்யகாதலின் வலியினூடாக வரும் முயல்வேட்டை ஒருவகையில் குறியீடாகவும் அமைந்துள்ளது. இங்கே பூமணியின் எழுத்தாளுமையை உணரலாம். இறுதிப்பகுதியில்வேட்டை நாய்களுக்கு அஞ்சி நாயகன் ஓடுவது வாசகரின் மனதில் நாவலின் தொடர்ச்சியை சிந்திக்கத்தூண்டுகிறது.நாவல் இன்னொரு பகுதியாகவாசகர் மனதில் ஓடத்தொடங்குகிறது. வாழ்க்கை ஒருகட்டத்தில் முடிந்துவிடுவதில்லை என்கிறபோது நாவல் மட்டும் முடிந்துவிடுமா என்ன? வாசிக்கவும் யோசிக்கவும் தக்கவகையில் அமைந்த சிறு நாவல் “வாய்க்கால் “. இச்சொல் பின்தொடருதல் என்ற பொருளில் அமைந்துள்ளது.

இந்நாவலை பொங்கல் பரிசாக அனுப்பி வாசிக்க யோசிக்க. வாய்ப்பளித்த தமுஎகச அறம் கிளையின் பொறுப்பாளர் தோழர் உமர்பாரூக்கிற்கு நன்றி.
அருமையான கட்டமைப்பு.

நூல்: வாய்க்கால்
ஆசிரியர்: பூமணி 
விலை: ₹80.00 INR*·
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *