Poomani | Vekkai | பூமணி | வெக்கை

‘வெக்கை’: பழி எனும் வினையின் அரசியலை, அறத்தை கேள்விக்குள்ளாக்கிடும் பூமணியின் நாவல்

பூமணி கோவில்பட்டி வட்டாரம் ஆண்டிபட்டி எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்தார். கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கி கவிதை, கதை, கட்டுரை, நாவல் என்று அத்தனை இலக்கிய வகைமைகளிலும் தடம் பதித்துள்ளார். தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பூமணி தற்போது கோவில்பட்டியில் வசிக்கிறார். பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி போன்ற நாவல்களையும், நிறைய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். பேனா முள் தயாரிப்பது பற்றிய குறும்படத்தையும், தமிழக அரசின் பரிசு பெற்ற ’கருவேலம்பூக்கள்’ எனும் திரைப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இலக்கியச் சிந்தனைப் பரிசு, விளக்கு விருது, விஷ்ணுபுரம் விருது, கீதாஞ்சலி விருது, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கப் பரிசு போன்ற விருதுகளுடன் இவரின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதையும்  பெற்றுள்ளார். பட்டியலினச் சமூகத்தினரின் வாழ்வியல் பிரச்சனைகளை வன்முறைகள் ஏதுமற்றுச் சித்தரிக்கும் இவரின் ‘பிறகு’ நாவல் தமிழின் செவ்வியல் நாவலாகப் போற்றப்படுகிறது. வெக்கை நாவல் ’அசுரன்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது

’வெக்கை’ நாவலில் தன் அண்ணனைக் கொன்றவனைப் பழிதீர்க்கும் சிதம்பரம் எனும் பதினைந்து வயது சிறுவனின் மனவோட்டத்தைக் காண்கிறோம். காவல்துறையின் தேடுதலுக்குத் தப்பித்து தன் தந்தையுடன் கரிசல் காட்டில் அலைந்து திரிந்து இறுதியில் நீதிமன்றத்தில் சரணடையும் சிறுவனின் மனஉறுதியைப் பார்க்கிறோம். சிதம்பரத்தின் கொலை, தப்பிஓடுதல், சரணடைதல் ஆகிய மூன்று வினைகளின் வழி கதை நகர்ந்து செல்கிறது. தந்தை, மகன் இருவர் மனதிலும் நிறைந்திருக்கும் பயம், பதற்றம், பாசம் ஆகியன நாவலின் கருப்பொருளாகின்றன. கதாமாந்தர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல் வழி பூமணி கதையைச் சொல்லிச் செல்கிறார். வாசகர்கள் நாமும் சிதம்பரம் பயணிக்கும் பாதையில் பயணித்து கரிசல் மண்ணின் உயிரினங்கள், இயற்கை வளங்கள் குறித்த முழுமையான புரிதலைப் பெறுகிறோம்.

ஊரிலிருக்கும் ஏழை எளிய மக்களின் துண்டு துண்டான நிலங்களை மிரட்டி வாங்கிடும் வடக்கூரானின் பேராசைக்கு எல்லையே இல்லை. ஊரின் அடுத்த பெரிய பணக்காரனான ஜின்னிங் ஃபேக்டரி முதலாளியும் வடக்கூரானுக்கு ஆதரவாகச் சேர்ந்து கொள்கிறான். இவர்கள் கொட்டத்தை அடக்க முடியாது ஊர் மக்கள் தவிக்கிறார்கள். வடக்கூரான் தன்னுடைய நிலத்தை ஒட்டியிருக்கும் சிதம்பரம் குடும்பத்தின் சிறு நிலத்தையும் வாங்கிவிடத் துடிக்கிறான். நாள்தோறும் மிரட்டல், மோதல் என்றிருந்த நிலையில் ஒரு நாள் சிதம்பரத்தின் அண்ணனை அடித்துக் கொன்று விடுகிறார்கள். அண்ணனைக் கொன்ற வடக்கூரானைக் கொன்று பழிதீர்க்க நினைக்கிறான் சிதம்பரம். இன்னொரு நிலையில் பார்த்தால் சிதம்பரத்தின் இச்செயல் ஊர் மக்களின் கூட்டுமனதிலோடும் எண்ணமாகவே இருக்கிறது.

குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் திட்டமிடும் சிதம்பரம் நாட்டு வெடிகுண்டு, அரிவாள் என்று ஆயுதங்களைத் தயார் செய்கிறான். கூம்பும் பருவத்துக்காக கொக்கொக்க அவன் காத்திருக்கிறான். கோவில்பட்டி நகரின் முக்கிய வீதியில் ஒரு மாலைப் பொழுதில் கோயிலுக்கு எதிரில் இருந்த பலகாரக்கடை வாயிலில் தோதாக நிற்கிறான் வடக்கூரான். அந்தி சாயும் நேரம். தெருவிளக்கு அணைகிறது. இதுவே தக்க நேரமென்று சிதம்பரம் ஒளித்துவைத்திருந்த அரிவாளை எடுத்து வடக்கூரானின் கையை வெட்டுகிறான். சிதம்பரத்தின் திட்டம் வடக்கூரானின் கையை வெட்டி அவனை முடம் ஆக்குவதே. . ஆனால் வடக்கூரான் சற்று நகர்ந்து விடுவதால் வெட்டு மார்பில்பட்டு அங்கேயே சரிந்து விழுந்து சாகிறான். கொலை நிகழ்த்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரில் கோயிலுக்கு அருகில் தற்செயலாக நின்றிருந்த சிதம்பரத்தின் அப்பா மகனின் செயலைக் கவனித்ததும் இடத்தைவிட்டு நகர்கிறார்.

சிதம்பரம் இருளில் மறைகிறான். ஓட்டமும் நடையுமாக விரைகிறான்.  இருவர் அவனைத் துரத்திவருவது தெரிகிறது. அவர்களை நோக்கி தனது மடியிலிருந்த வெடிகுண்டு ஒன்றைத் தூக்கி எறிகிறான். ஊரைவீட்டு வெளியில் வந்து மலையடிவார ஊருணிக் கரையில் ஒதுங்குகிறான். சற்று நிதானமடைந்து அரிவாளை எடுத்து இரத்தக் கறையைக் கழுவுகிறான். அரிவாளையும், வெடி குண்டுகளையும் பத்திரமாக இடையில் கட்டிவைத்துக் கொண்டு. யாரும் துரத்தி வரவில்லை என்பதறிந்து ஊருணிக் கரையில் உட்காருகிறான். டார்ச் லைட் வெளிச்சம் தெரிகிறது. ’யாரது?’ என்ற அவனின் கேள்விக்கு ”நம்மாளுகதான்” என்று சொல்லி அவனின் மாமா கூட்டாளிகளுடன் நிற்கிறார். ”நாங்க செய்ய நினைச்ச வேலையை நீ செஞ்சுமுடிச்சிட்ட. நாங்க அவன் குடும்பத்தையே கருவறுத்துக்கணும். அதுக்கு நேரம் வாய்க்கல. பதினஞ்சு வயசாகல உனக்கு. எங்கள முந்திக்கிட்ட” என்று சொல்லி அவன் மாமா மருவுகிறார்.

வடக்கூரான் வெட்டப்பட்ட செய்தி தீயெனப் பரவுகிறது. சிதம்பரத்தின் அப்பா, அம்மா, மாமா, அத்தை அனைவரும் கூடிப்பேசுகிறார்கள். நிதானத்துடன் முடிவெடுக்க வேண்டும். போலீஸ் கெடுபிடி தொடங்கிவிடும். சந்தேகம் சிதம்பரத்தின் குடும்பத்தின் மீதே விழும். போலீஸ் வன்முறை வெறியாட்டம் தெரிந்ததே. தேடி வந்தவர்கள் கிடைக்கவில்லை என்றால் கிடைப்பவர்களை அடித்துத் துன்புறுத்துவார்கள். வீட்டைக் காலிசெய்து சிதம்பரத்தின் அம்மாவும், தங்கையும் அவன் சித்தி வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள். சிதம்பரம் ஆசையுடன் வளர்க்கும் நாயை தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அவனுடைய மாமா வக்கீலைச் சந்தித்து ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்க அலைகிறார். சிதம்பரத்தின் அப்பா மகனைத் தேடி இருட்டில் கரிசல் காட்டுக்குள் நுழைகிறார்.

எட்டு நாட்கள் அப்பாவும், மகனும் ஓடுகிறார்கள்; ஒளிகிறார்கள்; ஓய்வெடுக்கிறார்கள். கரிசல் காட்டின் அனைத்து நிலங்களிலும் சுற்றித் திரிகிறார்கள். கண்மாய்க்கரை, மயானக்கரை, மலையடிவாரம், பூட்டப்பட்டிருக்கும் கோயில் என்று இடம் மாறிமாறித் தங்குகிறார்கள். காட்டில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் என்று கிடைப்பதைத் தின்கிறார்கள். சிதம்பரம் பகலும், இரவும் ஒளிந்திருக்க அவன் அப்பா மட்டும் ஊருக்குச் சென்று அவன் அத்தை கொடுத்துவிடும் சோற்றுக்கட்டைக் கொண்டுவந்து தருகிறார்.

C:\Users\USER\Desktop\Poomani.jpg
பூமணி (Poomani)

இரவில் தன்னந்தனியே வெட்ட வெளியில் படுத்துறங்கும் சிதம்பரத்திற்கு அண்ணனின் நினைவு வருகிறது. இருவரும் கரிசல் காட்டில் ஆடு மேய்த்தபோது அவன் சொல்லிக் கொடுத்த பாடங்கள் எல்லாம் மனதில் பதிந்துள்ளன. சிதம்பரம் தங்கையின் மீது அளவிலா அன்பு கொண்டவன். வெளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் போதெல்லாம் அவளுக்குத் திண்பண்டங்கள் வாங்கி வருவான். வளர்ப்பு நாய் சிதம்பரத்தை மட்டுமே அண்டி நிற்கும். அம்மாவும், அத்தையும் அவன் மீது அன்பைப் பொழிந்தனர். வடக்கூரானின் அடாதடிகளை எதிர்த்து அப்பா எதிர்வினை ஆற்ற நினைத்தபோதெல்லாம் மாமாவின் அனுபவம் நிறைந்த வார்த்தைகள் அப்பாவின் மூர்க்கத்தைத் தணித்துவிடும். அன்பினால் பிணைக்கப்பட்டு வாழ்ந்த இக்குடும்பத்தின் அமைதியை வடக்கூரானின் வன்முறைச் செயல்களே சீர்குலைத்தன.

ஏழாம் நாள் இரவு சிதம்பரம் தன் சித்தி வீட்டில் தங்கியிருக்கும் அம்மாவையும், தங்கையையும் சந்திக்கிறான். அவன் சித்தி, சித்தப்பா உட்பட அனைவரும் அவனிடம் வாஞ்சையுடன் பேசுகின்றனர். அவனைப் பிரியும் நேரம் வந்துவிட்டது என்பது அறிந்து மனம் கலங்குகின்றனர். சிதம்பரமும் அவன் அப்பாவும் மறுநாள் காலை நீதிமன்றத்தில் சரணடைவது என்று முடிவாகிறது. அதற்குமுன் காவல்துறையினரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து இருவரும் எட்டு நாள் தலைமறைவு வாழ்வுக்குப்பின் நீதிமன்றத்தில் சரணடைகிறார்கள். காவல்துறையினரிடம் பிடிபடவில்லை என்பதுதான் அவர்களுக்கிருந்த ஒரே ஆறுதல். போலீஸ் கைது செய்திருந்தால் விசாரணை என்ற பெயரில் அவர்களை காவல்நிலையக் கொட்டடியில் வைத்து அடித்து நொறுக்கி இருப்பார்கள். எங்கும் ஒரே போன்று வியாபித்திருப்பதுதானே காவல்துறையின் வன்முறை.

ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் வல்லான் வகுத்ததே அறம் என்றாகிறது. சமூகத்தைக் காத்து நிற்க வேண்டிய நிர்வாகம் காவல்துறை, நீதிமன்றம் என்ற அரசின் அனைத்து அமைப்புகளும் வலியவர்கள் பக்கம் நின்றிட ஏழை எளிய மக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அவர்களுக்கான நீதி எட்டாக்கனியாகவே உள்ளது. பழிக்குப்பழி என்ற ஒற்றை வினை மட்டுமே அவர்கள் அறிந்தது. அவர்களின் ஆற்றாமைக்கு ஒரே வடிகால் ’பழி’ மட்டுமே. சமூகத்தின் பார்வையில் பழி தண்டனைக்குரிய குற்றமும், பாவமும் என்றாலும், அவர்களின் பார்வையில் ‘பழி’ என்பது நீதியின் ஒரு வடிவமே. ஆம்; அதுவொரு கொடுமையான நீதி (Wild Justice). பழி மட்டுமே எளிய மக்களின் கைகளில் இருக்கும் ஒரே ஆயுதம். அதுவே அவர்களின் அறமும்கூட.

 

நூலின் தகவல்கள்:

நூலின் பெயர்: வெக்கை (நாவல்)

ஆசிரியர் : பூமணி

விலை ரூ. 200/-

வெளியீடு : காலச்சுவடு 

நூலைப் பெற : 44 2433 2924

 

நூலறிமுகம் ஏழுதியவர்:  

பேரா.பெ.விஜயகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *