பூமணியின் "அஞ்ஞாடி" நாவல் புத்தகம் | Poomani's Agnaadi Tamil Novel Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

பூமணியின் “அஞ்ஞாடி” நாவல் – நூல் அறிமுகம்

“அஞ்ஞாடி” நாவல் – நூல் அறிமுகம்

கோவில்பட்டி அருகே கரிசல்காட்டு பூமியில் அமைந்துள்ள கலிங்கலூரில், 1800களின் தொடக்க காலத்தில், அஞ்ஞாப்பள்ளகுடியைச் (அஞ்ஞை என்று தாயை அழைக்கும் பள்ளர்கள்) சேர்ந்த ஆண்டியும் வண்ணார்குடியைச் சேர்ந்த மாரியும் நட்பு கொள்ளத் தொடங்கிய நிகழ்விலிருந்து கதை தொடங்குகிறது. 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில், ஆண்டிக்குடும்பனின் மகன் வழிப் பேரனின் மகன் புளுகுணி கோவிந்தன் மரணமுற்று அவனது வாரிசுகள் தலைதூக்கிய காலத்தில் நிறைவுகிறது. ஏறக்குறைய இரு நூற்றாண்டு தெக்கத்தி தமிழ் வாழ்வியலும் நிகழ்வுகளும் நாவல் நெடுக நிறைந்திருக்கின்றன.

புதினத்தின் முதல் பகுதியான ஆண்டி மற்றும் மாரி ஆகியோரை முன்வைத்துக் கூறப்படும் கலிங்கலூர் வரலாறு பூமணியின் வழக்கமான கதையாடலில் தடையின்றி பிரவாகமெடுக்கிறது. ஆண்டியும் மாரியும் சாதி வேறுபாடு மீறி நட்பு பாராட்டுவது, குடும்பஸ்தர்களாவது, பலவேச நாடார் வம்சாவளியினர் தெற்கே நாகர்கோயில் – கேரள எல்லை திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து சாதிக் கொடுமை தாளாமல் வடமேற்கே கழுகுமலை வந்து சேர்வது, பெரிய நாடார் குடும்பக் கதை, ஆண்டியின் மருமகன் கருத்தையனை முன்வைத்து கரிசல்காட்டுப் பகுதிகளில் சண்டியர்கள் உருவாக்கமும் வாழ்வும், தாது வருசப் பஞ்ச காலக் கொடுமைகளும், அதன் விளைவான நோயும் தொடர் மரண ஓலங்களும், மாலையம்மாள் – சண்முகம் பனையேறி தொழிலில் பங்காளிச் சண்டையில் ஏற்படும் உயிர்ச்சேதம், புலம்பெயர்ந்து கலிங்கலூரில் குடியேறுதல் என்று கரிசல்காட்டுப் புழுதி பறக்க பள்ளர், நாடார், வண்ணார் ஆகிய குடிகளின் அக்காலத்திய வாழ்வு பிரதியின் இப்பகுதியெங்கும் விரவிக் கிடக்கிறது.

ஆண்டி மனைவி கருப்பியின் காலத்திற்குப் பின் நாவல் தன் போக்கில் சற்றே விலகத் தொடங்குகிறது. திடீரென திருஞானசம்பந்தர், அப்பர் காதை, அவர்கள் நிகழ்த்தியதாக சைவ பக்தி இலக்கியங்களில் கூறப்படும் அதிசயங்கள் எனச் (எவ்வித மறுவாசிப்புமின்றி) சுற்றி வருகிறது. ஊடாகக் கழுகுமலையின் வரலாறும் அதில் உட்பொதிந்து தொடர்கிறது. சமணர்களின் மலையான கழுகுமலை சைவர்கள் மலையாக மாறிய கதையும் வருகிறது. கழுகுமலை வரலாற்றின்வழி எட்டப்ப ராசாக்களின் வம்ச வரலாறும் கூறப்படுகிறது. கழுகுமலை எட்டயபுரம் பாளையம்/ஜமீனுக்குக் கட்டுப்பட்டதாகிறது.

கழுகுமலையில் நாடார்கள் வணிகத்தின் மூலம் செல்வ விருத்தியடைந்து முதலாளிகளானாலும், கழுகுமலை முருகன் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத சமூக நிலை. அதைவிட ஒரு கல்யாணம் காட்சி என்றால் கோயில் ரத வீதிகளில் பட்டணப் பிரவேசம் செய்யக்கூட முடியவில்லை என்ற நாடார்களின் ஏக்கமும் கோபமும் மெதுமெதுவாய் வளர்ந்து வழக்கு – விசாரணை – உத்தரவு என்று செல்கிறது. இதைப் பிடிக்காத நாயக்கர், மறவர், வெள்ளாளர் போன்ற பிற சாதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நேரம் பார்த்து நாடார்கள் மீது வஞ்சத்துடன் காத்திருக்கின்றனர்.

வேதத்தில் சேர்ந்தால் நமது சாமியை நாமே அருகில் சென்று கும்பிடலாம், நாம் தனியாகத் தேர் உற்சவம் செலுத்தலாம் என்ற நம்பிக்கையில் பல நாடார்கள் கிறிஸ்துவத்தில் சேர்ந்து கழுகுமலை ரத வீதி சந்திப்பில் மாதா கோயில் கட்டி வழிபட, ஒரு நாள் ஏக தேசத்தில் குருத்தோலைத் திருநாளும் பங்குனி உத்திரத் தேரோட்டமும் இணைந்து நிகழ, 1895 கழுகுமலை கலகம் வெடிக்கிறது. எட்டையபுர சமீன் மேனேஜர் உட்பட சிலர் கொல்லப்படுகிறார்கள். அதற்கு மறவர் சாதிக்கு ஏனைய ஆதிக்க சாதிகளும் உடன் நின்று நாடார்களின் மீதான வன்முறைக்குத் துணை போகின்றனர். காவல்துறை, சமீன்தார் தரப்பு, பிற அதிகாரிகள் என அனைவரும் நாடார்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றனர்.

எல்லா இடங்களிலும் கலவர குற்றத்தை விசாரிக்கும் அதிகாரிகளின் சாதியைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் பூமணி. அதில் நாயுடு, பிள்ளை, ஐயர் என எல்லாரும் ஆதிக்க சாதிகளாக இருப்பதும் அதுவும் வழக்கு விசாரணை ஒருதலைப் பட்சமாக நடைபெறக் காரணமாக இருப்பதும் உள்ளுறையாகப் பொதியப்பட்டுள்ளது.

கலகம் தொடர்பான வழக்கு விசாரணை தண்டனை என அதன் விளைவுகள் பலவாறாக உள்ளன. நீறு பூத்த நெருப்பாக இரு சமூகங்களுக்கிடையிலும் – இன்னும் சொல்லப் போனால் – நாடார் x பிற சாதிகள் என்ற ரீதியிலேயே – புகைந்து கொண்டே இருக்கிறது.

கழுகுமலையைப் போன்றே 1899ம் ஆண்டு சிவகாசியில் நாடார் x மறவர் கலகம் வெடிக்கிறது. கழுகுமலைக் கலகம் இம்மோதலுக்கு எந்த வகையில் காரணமாக இருந்தது என்றும், சிவகாசி நகர் உருவாக்கம், அதில் நாடார்களின் பங்கு, பிற சாதியினர் பங்கு, வடநெல்லைப் பகுதியில் ஆங்கிலேய போதகர்களால் கிறிஸ்தவ மதப் பரவலாக்கம், இசுலாமியர்களுக்கும் நாடார்களுக்குமான வியாபாரப் போட்டி, சிவன் கோயில் நுழைவுக்கு நாடார்கள் முற்படுவது, சாதி இழிவைப் போக்க நாடார்கள் தங்களை பார்ப்பனீயப்படுத்திக் கொள்ளல் என்று நாவல் இந்தப் பகுதியில் விரிவாகவும் நுணுக்கமாகவும் பல நிகழ்வுகளைப் பேசுகிறது. நாடார்களுக்கு எதிராக மறவர், நாயக்கர், வெள்ளாளர் போன்ற ஆதிக்க சாதிகள் மட்டுமின்றி பள்ளர், சக்கிலியர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களும், இசுலாமியர் போன்ற வேற்று மதத்தவர்களும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியதையும் நாடார்களின் செல்வத்தை ஊர் ஊராகக் கொள்ளையடித்ததையும் நாவல் விரிவாகப் பேசுகிறது. சிவகாசி நாடார்கள் மீதான பிற சாதியினரின் தாக்குதல் காட்சிகள் வாசிப்போரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நெஞ்சை அறுக்கச் செய்கிறது. இத்தோடு நில்லாமல், தொடர்ந்து நாடார் x மறவர் புகைச்சலும் பகையும் கமுதி சந்தை தொடர்பான 1918ம் ஆண்டு கலகம் வரை நெருப்பாய் வளர்கிறது.

சிவகாசி கலவரத்தில் கணவன் தங்கையாவையும் மகள் சந்தனமாரியையும் பறிகொடுத்த பெரிய நாடாரின் மகன் வழிப் பேத்தி தேவானை தன் மகன் வேலையாவுடன் கலிங்கலூருக்கே வந்து பல்கிப் பெருகி கலிங்கலூரில் பிரதான சாதியான பள்ளகுடியையும் ஊழிய சாதியான வண்ணார்குடியையும் தவிர்த்து முதன்முதலாக மேகலக்குடி நாடார் தெரு உருவாகக் காரணமாகிறாள். தொடர்ந்து வியாபாரம் பெருகுதல் அதனால் ஏற்படும் பணப்புழக்கம் அதன்வழி சிதையும் உறவுகளும் தொடர்புகளும் எனச்சென்று சக்கரை நாடாரின் மகன் குடி, சூதாட்டம், பெண் தொடர்பு என குடும்பத்தைச் சிதைக்கக் காரணமான ஊழ் என்ற ரீதியில் அந்த வம்சக் கதை செல்கிறது.

கலிங்கலூர் பள்ளகுடிக்கும் பிறசாதி சனத்துக்கும் ஆலமரமாய் இருந்து காத்த ஆண்டிக் குடும்பனின் மறைவு கலியாணச் சாவாக ஊராரால் – சகல சாதியினராலும் – கொண்டாடி இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

சத்திரப்பட்டி சுந்தர நாயக்கர் பண்ணைக்கிருந்த சுப்பா நாயக்கர் வீட்டிலேயே அவரது மகள் மங்கத்தாயின் விருப்பத்தின் பேரில் மாப்பிள்ளையாகி, பின் அதே மனைவியிடம் தனக்கு மரியாதை குறைந்ததும், பள்ளகுடி மாடப்பன் மனைவி முத்தம்மாளுடன் கூடிக்கலந்து ஒரு பெண் பிள்ளைக்குக் காரணகர்த்தாவாகி, இறுதியில் துறவியாகி பலதேசம் சுற்றி கடைசி காலத்தில் கலிங்கலூரில் வந்திருந்து, தான் இன்னும் ரத்த உறவுகளின் மீது கொண்டுள்ள பற்றை உணர்ந்து துறவும் கூட ஒரு பாவனைதான் என உணர்ந்து உயிர்விடுகிறார்.

இப்படி ஒரு கதைக்குள் பல கதைகள் கிளை பிரிந்து ஒவ்வொன்றும் தத்தம் போக்கில் திசையெங்கும் வளர – கலிங்கலூர் பிரதான கதையானது வேர்விட்ட மரமாகத் தாங்கி நிற்கிறது. நாவல் முழுக்க நாட்டுப்புறப் பாடல்கள், தெம்மாங்கு, சித்தர் பாடல்கள் எனச் சூழலுக்குத் தக்கவாறு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நாவலுக்காக பூமணி பெரும் உழைப்பை மேற்கொண்டுள்ளது – நாவல் நெடுக வரும் பல்வேறு தரவுகள், நிகழ்வுகள், பாடல்கள், தீர்ப்புகள், ஆவணங்கள் வழியே நிரூபணமாகிறது. அவ்வகையில் இப்புதினமானது ஒரு வரலாற்று ஆவணப் பெட்டகமாகவும் விளங்குகிறது. அது சரி – வரலாறு என்பது புனைவுதானே..! புனைவும் ஒரு வகையில் வரலாறுதானே..!

நாவல் நெடுக மனிதர்கள் மட்டுமின்றி – இயற்கை இன்னுமொரு கதாபாத்திரமாகப் பரவிக் கிடக்கிறது. ஊருணி, குளம், கண்மாய், வாய்க்கால், கரிசல்பூமி, மரங்கள், மாடுகள், ஆடுகள், கழுதைகள், பன்றிகள், பாம்புகள், பறவைகள், பூச்சியினங்கள், எலிகள் என எல்லாமே கதைகளின் வெளிகளில் உலவுகின்றன. அவை தாமே கதைகளையும் சொல்கின்றன. மாடுகளும் கழுதைகளும் தங்களை வளர்க்கும் மனிதர்களிடம் தங்களின் பாடுகளைக் கூறுகின்றன. பரமசிவன் கழுத்துப் பாம்பும், பெருமாளின் கருடனும் சிவகாசியெங்கும் பறந்து சென்று கலவர சூழலை மதிப்பிடுகின்றன. கழுகுமலையில் ஓரிடத்தில் மாதா முக்காடிட்டு பள்ளகுடிக்கு வந்து தாகத்திற்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார். முருகனும் வள்ளியும் குறவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்பதால் ஊர் மடத்தில் அவர்களுடன் அமர்ந்து ‘பேச்சுப் பழக்கம்’ போடுகிறார்கள். நொண்டியனும் கருத்தையனும் கொள்ளிவாய்ப் பிசாசுகளாய் இறப்புக்குப் பின் மாறி மரங்களில் குடிபுகுந்து அலைந்து ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்குக் கதை முடிச்சு போடுகின்றனர். இதை பூமணியின் தனித்துவமாகக் குறிப்பிடலாம். மற்றபடி பின்னுரையில் சிவராமன் குறிப்பிடுவது போல பின்நவீன எழுத்து வகைமையின் கூறாகக் கொள்ள முடியாது. பூமணியின் இவ்வகை எழுத்துமுறையை வகைப்படுத்த வேண்டுமென்றால் அதை நம் மண்ணுக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்ட, லத்தீன் அமெரிக்க பாணி மாய எதார்த்தவாதமாகவோ, மீ-எதார்த்தமாகவோ கருத இடமுண்டு.

அதே போல, சாதி மீறிய நட்பும் பழக்கமும் உறவும் பிரதியின் இலக்காக – இலட்சியமாகக் கொள்ளும் வகையில் ஆண்டி – மாரி, தங்கையா நாடார் – சோலைத் தேவர், பெரிய நாடார் – ஆண்டி, சுந்தர நாயக்கர் – மாடப்பக் குடும்பன் எனப் பிரதி எங்கும் வேலி மீறிய உறவுகளின் அழகும் நிறைவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது – மாற்றம் மட்டுமே மாறாதது – என்ற மாறா உண்மையை பிரதி உணர்ந்து காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களை தன்போக்கில் எடுத்தியம்புகிறது. அது மரணமுற்று ஆவிகளாய் பேசிக் கொண்டிருக்கும் கருப்பிக்குக் ‘காலம் கெட்டுப் போச்சு’ என்றும் ஆண்டிக்கு ‘கெட்டுப்போகல – முன்னேறியிருக்கு’ என்பதாகவும் விளங்கும் இரு வேறு பார்வையையும் பிரதி முன்வைக்கிறது.

கழுகுமலை வழக்கு விபரங்கள் நாவலில் தொடர்ந்தபடியே இருக்க – இந்தச் சூழ்நிலையில் – கலிங்கலூரின் கதையும் ஊடாடிச் செல்கிறது. இடையில் கட்டபொம்மு, மருது சகோதரர்கள், ஊமைத்துரை ஆகியோரின் வரலாறுகள் முதன்மை கதை சொல்லலில் இருந்து விலகிச் சொல்லப்படுகிறது. அதே போன்று 1947 இந்திய விடுதலை காலகட்டத்தில் காந்தி, நேரு, ஜின்னா எனக் கதை வெவ்வேறு திசைகளில் றெக்கை விரிக்கிறது. இத்தகைய விலகல்கள் முதன்மைக் கதையாடலுக்கு இடையூறாக இருப்பினும், அதை நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். நம்ம ஊரு பெருசுங்க கதை சொல்லும் போதோ, ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசும்போதோ கேட்டால், அந்நிகழ்வைக் கூறிக்கொண்டிருக்கும்போதே அது தொடர்பான மற்றொரு நிகழ்வுக்குக் கதை போய்விடும் – அப்படியே தொட்டுத் தொட்டு எங்கெங்கோ சென்று கடல் காடு மலை எனச் சுற்றி மீண்டும் முதல் நிகழ்வுக்கு வருவார்கள் அல்லவா – அதைப் போன்றதொரு கதை சொல்லல் முறையையே இந்நாவலில் பூமணி கைக்கொண்டுள்ளார்.

கரிசல்காட்டுப் பகுதியில் நிகழ்ந்த கழுகுமலை, சிவகாசி மற்றும் சுத்துப்பட்டி கலகங்களைப் பற்றிய பிரதியின் குரலாகவே நாவலின் ஓரிடத்தில் ஒரு வயதான கிழவி சொல்கிறாள் – ‘…சாமி பேரச் சொல்லியா இத்தனையும் நடந்தது. சாதியச் சொல்லித்தான வெட்னான் – குத்துனான் – கொளுத்துனான்…’ என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

பிரதியில் ஒரு நெருடலும் இருக்கத்தான் செய்கிறது. அவரவர் தொழில், அவரவர் நியமம் ஆகியவற்றுக்குள் ஒழுங்குக்குட்பட்டு இருந்த காலமானது ஒளிமயமானதாகவும் எல்லாம் அதனதன்போக்கில் அமைதியாகவும் இருந்தது போன்ற தொனியும் – மீறல்கள் ஏற்படும்போதும் வரம்புகள் உடைபடும்போதும் அங்கு இருள் சூழ்ந்து அமைதியின்மை ஏற்படுவதாகவும் ஓர் உணர்வைப் பிரதி உண்டாக்குவதாகவும் தோன்றுகிறது. பூமணியின் பிற புனைவுப் பிரதிகளைப் போலவே, பழமை மீதான நினைவேக்க உணர்வு இந்நாவலிலும் கசிகிறது.

பின்னுரையில் சிவராமன் குறிப்பிடுவது போல பூமணிக்குள்ளேயே இருக்கும் எடிட்டர் இயங்கி பிரதியின் தேவையற்ற பகுதிகளை எடிட் செய்துள்ளதாகக் குறிப்பிடுவதை நான் மறுக்கிறேன். பூமணியின் முதன்மையான புனைவுகளான ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகியவற்றில் உள்ள எழுத்தின் கறார்த்தன்மையும் குறைந்த சொற்களிலான செறிவும் அடர்த்தியும் புனைவுரீதியாக ‘அஞ்ஞாடி’யில் சற்றே மாற்றுக் குறைவுதான்.

தனது களப்பணி, தரவு/ஆவணத் தேடல்களில் கிடைக்கப்பெற்ற அனைத்து விபரங்களையும் புதினத்துக்குள் கொண்டுவந்து விட வேண்டுமென்ற ஆவலும் ஆசையும் பூமணிக்குள் இப்பிரதிச் செயல்பாட்டின் போது ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருதுகிறேன். எவ்வாறாயினும், எல்லாவற்றையும் மீறி, இப்புதினமானது பூமணியின் ‘பெரும்’ படைப்புதான் என்பதை யாராலும் மறுக்கவியலாது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“அஞ்ஞாடி” நாவல்
ஆசிரியர்:பூமணி (Poomani)
வெளியீடு:
க்ரியா பதிப்பகம்
விலை:₹.1100
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *