பூனாச்சி – நூல் அறிமுகம்
( *POONACHI* A story of a black goat) In English
Heart of a Dog, Animal farm, Jungle book, Stewart the little போன்ற புத்தகங்களைப் போல மானுடவியல் என்ற கருத்தை நாம் நன்கு புரிந்து, உணர்ந்து கொள்ள, அதன் அடிப்படையில், விலங்குகள் மனித நடத்தை மற்றும் பண்புகளுடன் இணைக்கப்படுகின்றன; பூனாச்சியும் இந்த குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது.
இப்போதைய எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாங்கு கொண்டு படைப்புகளை எழுதி வரும் எழுத்தாளரே *பெருமாள் முருகன்* அவர்கள்..
*பூனாச்சி* முற்றிலும் மாறுபட்ட நிலையில் புனையப்பட்ட படைப்பு. “விதையுறக்கம்” என்ற முன்னுரையே நம்மைக் கதைகளத்தினுள் மிக ரம்யமாக எடுத்துச் செல்கிறது…
பெருமாள் முருகன் “மாதொரு பாகன்”நாவலின் சர்ச்சைக்கு பிறகு எழுதிய நாவல் என்பதால் முன்னுரையிலேயே,
“இங்கு எதைப்பற்றி எழுதினாலும் பிரச்சனை ,பிரச்சனையே இல்லாத ஜீவன் ஆடு, அதன் வாழ்வு எனக்குத் தெரியும் என்பதாலும் அதைப்பற்றி எழுதியுள்ளேன் ”
என தொடங்கி மெதுவாக கதை நடையை ஒரு பகுதியாகவும் கதாபாத்திரங்களுடன் இணைத்து, சொல்லவரும் பின்னூட்டங்களை மறுப்பாகமாகவும் பிரித்து புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்..
மேயிச்சலுக்கு ஓட்டிப்போன கிழவனிடம் ஆடுகள் திரும்பும் வேளையில் ‘பகாசுரன் ‘ஒருவன் வந்து ஒரு விசித்திரமான வெள்ளாட்டுக் குட்டியை கிழவனிடம் ஒப்படைத்து.
‘ஏழு குட்டி போடும் வம்சத்துல பிறந்தது ,பத்திரமா வளக்கனும் ‘என சொல்லிவிட்டுப் போக… அதன் பின்னர் அந்தக் குட்டி, கருப்பு வெள்ளாட்டின் சுவாரசியமான கதையை ஆழத்துவமான உண்மைகளையும், கொங்கு நாட்டு தமிழின் இன்பத்தையும், அரசியல் அடித்தளத்தையும், சல்லடை போட்டு சலித்துக் கட்டியுள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன்…
மனித கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டாமல், வெள்ளாட்டு இனத்திற்கு மட்டுமே பெயர்சூட்டி வித்தியாசப்படுத்தி அசத்தியுள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன். “பூனாச்சி, பூனன், கடுவாயன், அழகுமூக்கி, உழுத்தன், ஊழையன், செம்மி, பொருமி ” என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை கவர்வதுடன் நில்லாமல் கண்கலங்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
கிழவனும் கிழவியும் வாழும் வாழ்க்கைச் சித்திரம் மிக மிக யதார்த்தமான படைப்புகளே. ஆட்டு மந்தைக்குள் நாமும் பயணிப்பது போன்ற உணர்வே நமக்கு உண்டாகிறது கதையின் போக்கு…
ஒரு ஆடு என்ன செய்யும்? புல் மேயும், உறங்கும், கத்தும், குட்டி போடும் ,பால் கொடுக்கும், இலையில் விருந்தாகும். இதற்கும் மேல் ஒரு ஆடு என்ன செய்யும் என்ற கேள்விக்கு இந்த நூலை புரட்டி பார்க்கலாம். ஆடு தாய்ப்பாசத்திற்கு ஏங்கும், ஆடு தாழ்வுமனப்பான்மைக் கொள்ளும், ஆடு காதல் வயப்படும், ஆடு ருதுவாகும், ஆடு சுதந்திர போக்குடன் செயல்பட விரும்பும், ஆடு தான் எந்த கிடாயை திருமணம் செய்து கொள்ள விரும்பும் எனவும் ஆடு பிரசவ காலத்தில் ஆறுதல் தேடும், ஆடு தாய்மை உணர்வோடு இருக்கும், பஞ்ச காலத்தில் ஆடும் மனிதர்களுடன் பட்டினி கிடக்கும், மனிதனைப் போலவே சுக துக்க உணர்வுகள் ஆடுகளுக்கும் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்…
ஒரு கிழவன், கிழவி, பூனாச்சி என்கிற வெள்ளாடு ஆகிய பிரதான கதாப்பாத்திரங்கள் வழியே, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பாளர்களின் நிலையையும், ஆளப்படுபவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளாது ஆளப்படும் தன்மையையும், சுதந்திரமின்மை என்ற உள்நோக்கு பார்வையும் *பூனாச்சி* என்ற கதாபாத்திரத்தின் மூலம் கண் முன் விரித்து காட்டியுள்ளார் எழுத்தாளர்.
சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆட்டினத்திலும் நடைபெறுவதாக சித்தரித்து சிந்திக்கத் தூண்டியுள்ளார் எனலாம். காயடிக்க வருபவர் , காயடிக்கும் பணிக்காக வருந்தி தனக்கு அளிக்கும் தானியங்களைக் கூட வாங்காமல் பாப விமோர்ச்சனம் வேண்டி பரிதவித்து நடந்துச் செல்லும் காட்சி நம் மனதை கசக்கி பிழிந்து எடுக்கக்கூடிய அளவில் உள்ளது.
பூனாச்சியின் வழியே வெள்ளாட்டின் வாழ்வியலை கண்ணீரும், புலம்பலமாக திரையிட்டுக்காட்டி, அதனோடு *மனித இனத்தின் மிகக் கொடுமையான சூழ்நிலையோடு வேதனையின் உச்சத்தை தெளிவுப்படுத்தி, சமூகத்தின் சிக்கல்களை வட்டமிட்டு, அறியாத புதிர்களை வெளிக்கொணர்ந்து காட்டுவதில் சிறப்புமிக்க நூலாசிரியர் பெருமாள் முருகன்* என்ற தனித்துவமும் அவரது யுக்தியும் நமக்குத் தெரியவரும் இந்நூலை சுவாசிப்பதினால்..
நூலின் தகவல்கள் :
நூல் : பூனாச்சி (ஒரு வெள்ளாட்டின் கதை)
ஆசிரியர்: பெருமாள் முருகன்
நூல் அறிமுகம் எழுதியவர் :
அ. சுகிர்தா குணசீலி
திருநெல்வேலி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

