ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - பூனையின் கண்கள் - ஆண்டன் பெனி
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - பூனையின் கண்கள் - ஆண்டன் பெனி

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பூனையின் கண்கள் – ஆண்டன் பெனி

 

 

 

நான் எழுதிய அந்த முதல் காதல் கவிதையையும் அந்த முதல் காதலியையும் எங்கோ பத்திரமாக வைத்திருக்கிறேன். இப்போதும் மனம் நழுவும் எந்தவொரு காதலையும், எந்தவொரு கவிதையையும் அப்படித்தான் எங்கோ பத்திரமாக வைத்திருக்கிறேன். எங்கோ என்பதில்தானே என் எல்லாமும் இருக்கின்றது. கவிதையின் மனது எப்படியோ அப்படியே கவிஞர்களின் மனதும். அதனால்தான் இப்படி எழுதமுடிகிறது கவிஞரால்.

“இன்னும் இருக்கிறது
என்பதில்தான்
எல்லாமே இருந்து
கொண்டிருக்கிறது”

‘பெரிசானதும் தங்கராசுக்கு பொண்டாட்டியாகிடுவேன்’ என்கிற ‘பூ’மாரியின் மனசுதான் பெரும்பாலான கவிஞர்களுக்கும். கவிதையாகவே கடைசிவரையிலும் வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது. கவிஞர் சொல்வது போல், இன்னும் இருக்கிறது என்பதில்தானே எல்லாமே இருந்து கொண்டிருக்கிறது. காதலும் சரி. வாழ்க்கையும் சரி.

ஒரு காதலில் தொடங்கி இன்னொரு காதலில் முடியும் இந்த வாழ்க்கைதான் சிறு குழந்தைபோல் எத்தனை அழகானது. டாக்டர் ஆவேன் என்ற அதே மழலைச் சொல்லும்… ஓய்வுக்குப்பின் சொந்த ஊருக்குப் போவேன் என்ற முதுமைச் சொல்லும் ஒரே கவிதைதான். எழுதும் காலங்கள்தான் வேறு வேறாக இருக்கின்றது. அதன் ஆன்மாவின் பின்புறம் இப்படியொரு கவிதை இருக்கிறது.

“பெரிசானதும் டாகடர்
ஆகிவிடுவேன்
என்று சொல்லும்
ஒண்ணாங் கிளாஸ்
பையனைப் போலத்தான்
சொல்கிறோம்
ரிடையர் ஆனதும் ஊருக்கே
போயிடுவோம்”

கவிஞர் சீனிவாசனின் பார்வை நுணுக்கமானது. காலம் எத்தனை தூரம் நகர்த்தினாலும் பிடிவாதமாக ஒரு புள்ளியில் நிற்கும் மனதுக்கென்று சில நினைவுகளை விட்டுவைக்கத்தானே வேண்டியிருக்கிறது. அந்த நினைவுகள்தான் இந்த வாழ்க்கையில் சற்றேனும் ஒரு அதிகாலைப் பூவினை மலர வைத்துவிடுகிறது.

“யாரும் இல்லாதபோதுதான்
என்னுடன் பேசிகிறார்கள்
யாரும் இல்லாத போதுதான்
என்னுடன் பழகுகிறார்கள்
யாரும் இல்லாத போதுதான் என்னைத் தேடுகிறார்கள்
எப்போதும் யாரோ ஒருவருக்கு
அன்பு செய்ய
யாரும் இல்லாது இருப்பதால்
எப்போதும் என்னோடு யாரோ
அன்பில் இருக்கிறார்கள்”

யதார்த்தமானவற்றை அதன் இயல்பு மாறாமல் யதார்த்தமான வார்த்தைகளில் அவரால் சொல்லிவிட முடிகிறது. யாரும் இல்லாதவர்களுக்காகவே யாருமே இல்லாத நான் இருக்கிறேன் என்ற உளவியல் சார்ந்த இந்தக் கவிதையை ரசிக்கமுடிகிறது.

இந்தத் தொகுப்பில் நான் பெரிதும் விரும்பிய ஒரு கவிதை இப்படியாக இருந்தது.

“ஒரு சாக்லெட் சாப்பிட்டால் நன்றாயிருக்கும்
எனத் தோணும் போதெல்லாம்
சரியான சில்லறையாகக் கொடுத்துவிடுகிறாள்
அந்தப் பேரங்காடிப் பெண்”

மீதிக் காசில் எத்தனை சாக்லேட் வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். சாக்லேட் எதிர்பார்த்த அந்த முதல் மனது அதில் கரை சேருமா என்று தெரியவில்லை. மீதிக் காசுக்கான சாக்லேட்டை விரும்பி ஏற்கும் சீனிவாசனின் அந்த மனதினை வெகுவாக ரசித்தேன். அந்த இனிப்பு என் அடிநாக்கில் ஊற… மனதெங்கும் சாக்லேட் தித்திப்பு அந்த நாள்முழுக்க.

‘எனக்கும் அப்பாவைப் பிடிக்கும்’ என்ற உணர்வில் என்ன இருக்கிறது. அப்பாவைப் பிடிக்காது என்ற மனதைத்தான் நின்று நிதானித்து விசாரிக்க வேண்டியிருக்கிறது. அப்படியே அந்த மனதை விட்டுவிட்டாலும் எதோ ஒரு நாளில் அப்பா என்ற வார்த்தையின் அர்த்தம் மனதின் தோள்களின் மீதேறி நின்று பாடம் நடத்தும். இறுதிவரை கற்றறியாமல் மரணிப்பதைவிடவும்…. பாலர்பள்ளியில் தவறவிட்ட ஒன்றை முதியோர் கல்வியில் கற்று முடிப்பதில் தவறொன்றும் இல்லையே. இந்தக் கவிதையும் அப்படியொன்றுதான்.

“அப்பாவாக இருந்து
பார்க்கும்போதுதான்
எல்லாமே அப்பாவால்தான்
எளிதாய் இருந்தது
என்பதே தெரிய
வருகிறது”

அந்த அதிகாலையில் என் கண்முன்னே மலரும் ஒரு பூ, மாலையில் அதே சகானுபவத்தைக் கொடுப்பதில்லை. எல்லா முதலும் அழகானவை. எல்லா முதல் நிகழ்வையும் நம் மனதின் நுனிவேர் இன்னமும் தொட்டுக்கொண்டிருக்கிறது. அந்த சுகானுபவம் ஒரு பூ மலர்வதுபோல் அழகானது. இந்தக் கவிதை போலும் அழகானது.

“முதன்முதலில்
சரியாக மணிபார்த்த
சுகானுபவத்தை
எந்த மின்னணு சாதனமும்
இதுவரை கொடுத்ததில்லை”

எல்லோருக்குள்ளும் கவிதைகள் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் எழுத விரும்புவதில்லை. ஒரு நாளில் ஒருமுறையாவது கவிதையாகப் பேசும் ஒருவரைச் சந்தித்துவிட முடிகிறது. அவர்களிடம் நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை என்று ஏனோ கேட்கமுடிவதில்லை. பல நேரங்களில் மனதுக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கவிதையை கரையேற்ற முடியாத அந்தத் தவிப்புக்குக் கவிதை எழுதாமல் இருப்பது நலம் என்றே தொன்றும். ஆனால் மருத்துவர் சீனிவாசன் கவிதையில் லாவகமாக நீந்திக் கரையேறியிருக்கிறார். அவரது பண்பட்ட பார்வைகள் கவிதைகளில் தெரிகின்றது. அவருக்கும் அவரின் கவிதை மனதுக்கும் என் அன்பு.

ஆண்டன் பெனி.

 

நூலின் பெயர் : பூனையின் கண்கள்
ஆசிரியர் : கவிஞர்,மருத்துவர். அ.சீனிவாசன்

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *