ஓர் உளவியல் வல்லுநராகவும் தேர்ந்த கதைசொல்லியாகவும் விளங்கும் தோழர் பூங்கொடி பாலமுருகன் , தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தே தன் படைப்புகளுக்குக் கருவைத் தேர்ந்தெடுக்கிறார். குழந்தைகள் உலகத்தினைச் சிந்தாமல் சிதறாமல் படம்பிடித்துக் காட்டுகிறார். எல்லோரும் குழந்தைகளோடு வாழ்ந்து , விளையாடி, கொஞ்சி, நெருங்கிப் பழகினாலும் , குழந்தைகளைக் குழந்தைகளாக எண்ணி இயங்குவோர் மிகச் சிலரே.
காட்சி ஊடகங்களும் நகைச்சுவை உரையாடல்கள் என்ற பெயரில் குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய சொல்லாடல்களைக் கொடுத்து நடிக்க வைப்பது , சிறார் மீதான வன்முறையே ஆகும். தொடுதிரைச் செல்பேசிகளின் வரவு எல்லோருடைய வாழ்க்கை முறையையும் மாற்றி விட்டது. கொரானா காலத்தில் சிறார்கள் அலைப்பேசி வழியாகக் கல்வி கற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. குழந்தைகள் கையில் செல்பேசியை நாமே வலியத் திணித்தோம். செல்லிலேயே மூழ்கி அதில் தெரியும் விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போன சிறார் ஏராளம். அலைப்பேசிகளை எங்ஙனம் அளவாகக் கையாள வேண்டும் என்பதற்குப் பெற்றோர்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்பதனை அழகாகத் தன் குழந்தைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
நாட்டில் புயல் வெள்ளப் பாதிப்புகளை எண்ணிக் கவலைப்பட்டு , எவரும் கேட்காமலேயே தாங்கள் பணம் சேமித்துவைத்த உண்டியலை உடைத்து , நிவாரண நிதிக்குக் கொடுத்த பாசமிகு குழந்தைகளின் மானுட நேயம்கண்டு வியக்கிறோம்.
” குழந்தைகள் நம் மூலமாக உலகுக்கு வந்தவர்கள் ; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவதற்கு நமக்கு உரிமை கிடையாது “ என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை , அப்படியே வழிமொழியும் ஆசிரியர் குழந்தையாகவே மாறி விடுகிறார். அவர்களை இயல்பாக நடமாடவிட்டு , நாம் உடன்சென்றால் போதும் ; அவர்களுக்கான பாதையில் மகிழ்வாகப் பயணிப்பார்கள் என்று , தன் பட்டறிவால் உணர்த்துகிறார்.
’ தம்மின் தம் மக்கள் அறிவுடைமை “ என வள்ளுவர் கூற்று எத்துணை உண்மை என்பதைக் குழந்தைகளுடன் இயல்பாகப் பழகியோர் உணர்வர். குழந்தைகள் உலகை உற்றுப்பார்த்துக் கற்றுக்கொள்வன ஏராளம் . பெற்றோர் செயல்களை நோக்கி அவர்களுடைய குணம் , பழக்கவழக்கங்களை அப்படியே பின்பற்றுவார்கள். எனவே அவர்களுக்கு முன் எடுத்துக்காட்டாகப் பெற்றோர்கள் வாழ வேண்டும். குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாட வேண்டும். எதையும் அவர்கள்மேல் திணிக்கக் கூடாது என்பதை வாழைப் பழத்தில் ஊசியேற்றுவதுபோல் கதையாகப் படைத்திருக்கிறார் ஆசிரியர் பூங்கொடி.
செயற்கைத் தன்மை தோன்றாமல் குழந்தைகளுடைய அன்பு மனத்தைப் படம்பிடித்திருக்கிறார். நம்மில் எத்தனைபேர் துப்புரவுத் தொழிலாளர்களை அன்போடு பெயர் சொல்லி அழைக்கிறோம். குழந்தைகள் அவர்களையும் மதித்துப் பேசி அன்பு காட்டுவதை , ஒரு கதையில் படம்பிடிக்கிறார் ஆசிரியர்.
கணிதம் பயிலும்போது மாணவர்கள் எண்களில் ஏறுவரிசை இறங்குவரிசை அறிந்திருப்பார்கள். ஆனால் குடும்பத்தில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை சொன்னால் , அது ஏறு வரிசை ; பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை இறங்குமுகமாகச் சொன்னால் அது இறங்குவரிசை எனக் குழந்தைகள் தாமாகச் சொன்னதைக் கதையாக்கிய ஆசிரியரின் திறம் பாராட்டுக்கு உரியது.
இந்நூல் குழந்தைகளுக்கான நூல் என்று சொல்லப்பட்டாலும் , பெரியவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். வெறும் மதிப்பெண் வாங்கும் எந்திரங்களாகத் தம் மகன்/மகளைப் பார்க்கும் பெற்றோர்க்குப் படிப்பினை தரும் பாடநூலாகத் திகழ்கிறது இக் கதைநூல்.
ஏட்டுக்கல்வி மட்டுமே வாழ்வைச் செம்மைப் படுத்தாது. வாழ்வியலைக் கற்றுத் தரும் கல்விமுறை வரவேண்டும்;.தன்னைப் படிக்கவைக்கும் பெற்றோரின் பொருளியல் நிலையையும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாவிக்கும் மனப்பக்குவம் கைவர வேண்டும் போன்ற தன்னம்பிக்கைக் கருத்துகள் , கதைகளில் ஊடுபாவாய் விளங்குகின்றன.
தோழர் பூங்கொடி இன்னும் படைப்புப் பலபடைத்து , இளம் தலைமுறைக்கு எழுச்சியூட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நூலின் தகவல்கள்:
நூல் : கண்மணிகளின் கலாட்டாக்கள்.
ஆசிரியர் : பூங்கொடி பாலமுருகன்
பதிப்பகம் : சுவடு
பக்கங்கள் : 56
விலை : ₹75.00
நூலறிமுகம் எழுதியவர்:
பழனி.சோ.முத்துமாணிக்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.