பூத்த கரிசல் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : பூத்த கரிசல் (சிறுகதைகள்)
நூலாசிரியர்: சி.முருகன் இ.ஆ.ப
முதல் பதிப்பு : செப்டம்பர் 2024
பக்கங்கள் : 200
விலை : 200/-
வெளியீடு: யாப்பு வெளியீடு
நூலைப் பெற : 9080514506
– அய்யனார் ஈடாடி
தகிதகிக்கும் கரிசல் பகுதியின் அன்றாடப் பாடுகளையும் அதற்குள் ஒளிந்து கிடக்கும் பலதரப்பட்ட மக்களின் எதார்த்தமான நிகழ்வுகளும் சம்பவங்களும் கதைகளாப் புடைத்தெடுத்து களம் நிறைய குமித்திருக்கிறார் எழுத்தாளர் சி.முருகன். இந்திய ஆட்சிப் பணியில் மேற்கு வங்காளத்தில் பணியாற்றிக் கொண்டே பணிச்சுமைகளுக்கிடையே தமது பதின்மபருவ பால்யத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டம் தந்திருக்கிறார். இவரது எழுத்து ஆர்வம் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். கூடைச் சுமையை தலையில் வைத்துக்கொண்டு கத்தரிக்காய் சுமந்து விற்கும் கூடைப்பாட்டி ஆங்காங்கே கூடையை இறக்கி இளைப்பாறுவது போல இந்நூலாசிரியர் முருகன் கதைகளில் இளைப்பாறியிருக்கிறார் அரசுப் பணியின் கனத்த சுமையிலும்.
கதைகள் முழுக்க பதினெட்டுப்பட்டிகளின் சுற்றுவட்டார எளிய மக்களின் வாழ்வியலைப் புலப்படுத்தியிருக்கிறார். இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருவை சுமந்து கொண்டு செல்கின்றன. சமூக்தின் புறச்சூழலும் அகச்சூழலும் வினாக்களால் நிரம்பி வழிவதைக் காணமுடிகிறது. தனக்குக் கிடைத்த செழிவழிச் செய்திகளை முதன்மையாக்கி கதையின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.
முதல் கதையாக “ஏப்பம்” என்கிற கதை கிராமத்து வீடுகளில் வளர்க்கும் கோழிகள் பற்றியும் அதனால் ஏற்படும் பொறாமையும் இரண்டு பெண்களுக்கு இடையே நடக்கும் கோழிப்போட்டி, களவில் போய் முடிகிறது.
சிவனம்மாவும் மாரியம்மாவும் ஒரே கிராமத்தில் எதிர் எதிர் வீட்டுக்காரிகள் .
இருவரும் கோழி வளர்த்து வருகின்றனர். இவள் கோழியை அவள் களவாடுவதும் அவள் கோழியை இவள் களவாடுவதும் கோழிக்கறி சமைத்த குழம்பு வாடை வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் சாம்பிராணி புகை மூட்டி உண்ணுவதும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கோழியின் இறக்கைகள் எலும்புகள் கழிவுகளை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் கண்ணில் படாதவாறு ராத்திரியில சாக்குப்பையில் கட்டிக்கொண்டு வைப்பாற்றுக்குள் புதைக்கும் சிவனம்மாவும் மாரியம்மாவும் களவுக்குச் சாட்சியாக்குகிறார்கள் கல்லாக நின்று ஊர்காக்கும் சந்தனமாரியை. இந்தக் கோழிச்சண்டை கதை பச்சையம்மாவின் நினனைவுகளைக் கிளப்புகிறது. கோழிச் சண்டை கொலையில் போய் முடியும் என்பார்கள். இக்கதை அப்படியில்லாமல் வேறுவிதமாக தாங்கள் வணங்கக் கூடிய தெய்வத்தின் மீது மாறி மாறி நீயே கேட்கனும் சந்தனமரியே என்று சாட்சிக்கு அறைக்கூவல் விடுகிறார்கள் சிவனம்மாவும் மாரியம்மாவும். இந்தக் கதை கிராமத்து வழக்கு மொழியில் சிறப்பாக நகர்கிறது.
“சாபம்” என்ற கதையில் திருட்டுக்குற்றம் சுமத்தி செய்யாத குற்றத்திற்கு வண்டிக் கம்பி ஆணியை வைத்து சிறுவனை சித்திரவதைப் படுத்தி கொன்ற முன்னோர்களின் சாபத்தால் குழந்தையில்லாமல் கீழ்நாட்டுக்குறிச்சி அய்யரின் குறியை நம்பி இரண்டாம் கலியாணம் பண்ணும் மாரிச்சாமி -கோமதி தம்பதியின் வாழ்க்கையை சித்திரிக்கிறது இந்தக் கதை. தனது கணவன் மாரிச்சாமிக்கு ஜெயலட்சுமியை சேர்த்து வைக்கிறாள் கோமதி. மாரிச்சாமியின் வெறி பிடித்த காம இச்சைகளால் அலங்கோலமாகிப் போகும் ஜெயலட்சுமி. வீரிய மருந்துகளை எடுத்துக் கொண்டு வயிற்றுப் புண்களால் அவதிப்பட்டு வந்த நிலையில். துத்தநாகத்தை தின்று விட்டு இறந்து போவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முன்னோர்கள் விட்டுச் சென்ற சாபம் இப்போதும் பலித்துக் கொண்டிருக்கிறதா. ஒருவர் செய்யும் தவறுகளுக்காக அடுத்து வரும் சந்ததியினரும் பாதிப்புக்குள்ளாவதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும். மனிதர்களின் கொடுமையான செயலுக்கு தண்டனை உண்டு என்றால் இவ்வுலகில் சனத்தொகையை பாதியாக்கிக் கொள்ள வேண்டும். இன்னும் சில கிராமங்களில் இதையெல்லாம் நம்பிக் கொண்டு தான் வருகின்றனர். எவ்வளவோ குற்றங்கள் செய்தும் மக்களின் காணிகளை பிடுங்கிக் கொண்டு தலைமுறை தலைமுறையாக முடிசூடா மன்னனாக ஆட்சி அதிகாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பாவி மக்களின் சாபம் அவர்களை ஒன்றுமே செய்யவில்லை இன்று வரை.
“வள்ளியம்மையும் கிறுக்கையாவும்” என்ற கதை. அக்கா தம்பியின் உறவை வலுப்படுத்தும் வள்ளியம்மைவும் கிறுக்கையாவாவும் கதைப்போக்கு நெஞ்சைப் பிசைக்கிறது. கிறுக்கையா விரும்பியவள் வேறொருவனிடன் கம்மங்காட்டுங்கள் தொடர்பு வைத்ததைப் பார்த்த போது பிடித்த பைத்தியம் தான் . பனையேறி நாடாராகவும் பனைதொழில் செய்து கொண்டு வந்தவன். லாரி அடிபட்டுச் சாகும்போது கூட கிறுக்கையாவும் வள்ளியம்மை ஒன்றாகச் சாகும் காட்சியை காணும் போது மனம் குமுறுகிறது.
“கொலையும் பழியும்”எனத் தலைப்பூச் சூட்டப்பட்ட கதையில்கழுத்தை அறுத்துக் கொலை செய்த
சம்பவத்துக்காகவும்,செய்யாத கொலைக்காக சிறைவாசம் அனுபவித்த குமரேசனின் கதைக்களம். தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு திருந்தி வாழ நினைக்கும் குமரேசனை ,சாத்தூர் வட்டாரத்தில் எந்தக் கொலை கழுத்தை அறுத்து நடந்தாலும் குமரேசன் தான் கொலைக்கு காரணம் என்று சாத்தூர் போலீசார் முத்திரை குத்தி கைது செய்து சிறையில் இருக்கும் குமரேசனுக்கு.
மேம்பாலத்தின் அருகே கழுத்தறுபட்டு கொலை செய்து கிடந்தவர்கள் இரயில்வே மேம்பால வட இந்திய காண்ட்ராக்ட்டர் செய்த நரபலி என்று தெரியவரும்போது வருந்துகிறேன். இதைப் போன்ற உண்மையான சம்பவங்கள் போலீசாரின் மெத்தனப்போக்கால் செய்யாத கொலைக்கு குமரேசனைப் போன்று ஆயிரம் நபர்கள் சிறையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டுதானிருக்கிறார்கள்
பெண்களின் வலிகளைப் பேசும் “பெண் உடம்பு” என்ற கதையில் மாந்தர்களாக அங்குச்சாமி ஏட்டையாவும் பாலியல் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் தேவி. காவல்நிலையத்தில் எடுபுடி வேலை பார்த்து வரும் ராமர்.
காவல்நிலையங்களுக்கும் பாலியல் தொழில் செய்வர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காவல்நிலைய ஏட்டையாக்கள் அசதிக்காகவும் பணத்திற்காகவும் சில பெண்களை வைத்துக் கொள்கிறார். அப்படி வருபவள் தான் தேவி. வேறு வழியின்றி இத்தொழிலில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். லாரி ஓட்டுநர்களிடம் மாட்டிக்கொண்ட பெண் ஒருத்தியைக் காப்பாற்றி தன் உடலை விற்று விடுகிறாள் தேவி.பசியில் வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கும் மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு இரையாகிறாள். கருவைக் காட்டுப் புதருக்குள் மறுநாள் பிணமாகக் கிடக்கும் தேவியைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கிறான்.அங்குச்சாமி ஏட்டையா தான் பலமுறை அணைத்த தேவியின் உடம்பின் காயங்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறான் என்று கதை முடியும் போது மனம் கனக்கிறது.
ஒரு பாலியல் தொழிலியாக இத்தோடு செத்துப் போய் ஒரு கால்நடை டாக்டர் பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல உள்ளம் படைத்த பாரதி புதுமை கண்ட பெண் தானே என்று தோன்றுகிறது.
காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் அங்கு அப்பட்டமாக நடக்கும் பாலியல் தொழில்கள் சாதிய ஆதிக்கங்கள் ஒருநிலைசார்பு ஆதரவுகள் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்ற பல்வேறு சம்பவங்கள் சமகாலத்திலும் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதை ஒரு கதையின் வழியாக எடுத்துக்காட்டுகிறார்.
நல்ல நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்ளவில்லை என்றாலும் துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். முப்பதாண்டு நாற்பதாண்டு காலப்பகையாக இருந்தாலும் இறப்பில் கலந்து கொள்வார்கள். ஊருடன் ஒத்து வாழ் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் *எழவு*என்ற கதையில் ஊரோடு ஒத்து வாழாமல் ஊரில் நடக்கும் நல்லது கெட்டது எதிலும் கலக்காமல் இருக்கும் சோனையக்குடும்பன் வீட்டில் இழப்பு ஏற்படும் போது ஊர்க்குடும்பர்களும் ஊரார்களும் இறப்பில் கலந்து கொள்ளாமல் இறுதியாக குருமலைக் குடும்பமார்களுக்கும் பதினெட்டுப்பட்டு குடும்பமார்களுக்கும் தகாராறாக மாறிப்போய். ஊர்ச் சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாத சோனையகக்குடும்பன் மச்சான் பக்கிரிக்குடும்பனை பெண்கள் சுமந்து கொண்டு தோட்டத்தில் அடக்கம் செய்த கதைக் காட்சிகள் பெண்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை இதோ பதினெட்டுப்பட்டி பெண்களே சாட்சி என்கிறார் நூலாசிரியர் முருகன்.
ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு ஆணாதிக்கத் திமிரால் செல்வச்செழிப்பால் அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையைக் கெடுப்பவர்கள் எண்ணற்றவர்கள். அப்படி பார்கவி என்ற மாணவியின் கனவுலகத்தை கலைத்தவன் சாராயா வியாபாரி செல்வம்.
ஊரின் கிழக்கே காலனியில் வீடு கட்டி எளிமையாக வாழ்ந்து வந்த மாரியப்பன் குருவம்மாளின் குடும்பத்தின் வாழ்க்கையை பேசுகிறது இக்கதை “இருண்ட வாழ்வு” என்ற தலைப்பில்.
பணச்செழிப்போடு காலனிகளில் வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்கும் சாராய வியாபாரி செல்வம். மாரியப்பனின் குடும்பப் பெண்களை ஆசைப்படுகிறான். தனது இச்சைக்கு உள்ளாக்குகிறான்.
மாரியப்பன் குருவம்மாளின் மகள் பார்கவி நன்றாக படிக்கிறாள். படித்து டாக்டராக வேண்டும் என்ற இவளது கனவில் மண்ணை அள்ளிப் போட்டான் சாராய வியாபாரி செல்வம். சாராயம் குடித்து விட்டு வந்து வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த பார்கவியை சிதைத்து வாழ்க்கையை பாலாக்கி விட்டான். பண பலத்தாலும் சாதிய அதிகாரத்தாலும் சாராய வியாபாரி செல்வம் இன்றும் திமிரோடு தான் இருக்கிறான். தனது கனவுகளைத் தொலைத்து விட்ட பார்கவி தூய்மைப்பணியாளராக பணிசெய்து கொண்டிருக்கிறாள் என்பதைக் காணும் போது கண்கள் குளமாகின்றன. சாராய வியாபாரி செல்வம் போன்ற அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட பார்கவி போன்ற பெண்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வறுமையின் பிடியில்.
வறுமை எப்போது தான் ஒழியப்போகிறது. இன்னும் சிலருக்கு வாழ்க்கை இருண்டு கொண்டே தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
*அருவா மொழி* எனும் கதையில் சுடலைமாடன் கோவிலில் கிடா வெட்டுபவராகவும் கரிசல் காட்டு காவல்காரனாகவும் தன்னை உயர்ந்த சாதி யாகவும் மற்றவர்களை தாழ்ந்த சாதியாகவும். கீழ்சாதிக்காரர்கள் தனக்கு அடிமை வேலை செய்ய வேண்டும் என்ற கர்வம் கொண்ட வேல்சாமி. கீழத்தெரு முத்தம்மா -ஒத்தி தம்பதியை கொடுமைப்படுத்துகிறான். முத்தம்மாவை எப்படியாவது அடையத் துடிக்கும் வேலுச்சாமி அறுவாவோடு வந்து மிரட்டுகிறான்.
கதவை உடைத்து ஒத்தியை அடித்து வெளுக்கிறான். காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள் ஒத்தியும் முத்தம்மாவும்.
அடுப்பங்கரையில் கிடந்த வெறகு வெட்டும் அருவாவை எடுத்து வீசியதில் வேலுச்சாமியின் கழுத்தில் இறங்கி செத்து விடுகிறான் வேலுச்சாமி.
சாதி பெருமை பேசும் வேலுச்சாமிக்கு கீழத்தெரு முத்தம்மா மட்டும் வேண்டுமா என்பது கேள்வியாக கேட்கத் தோன்றுகின்றன. உண்மையான வீரன் ஒத்தி மட்டுமே . விறகு வெட்டி அருவாக்களை பதமாக்கி வைத்திருக்கும் ஒத்தியின் அருவாவிடம் தோற்றுவிட்டது தினந்தினம் கூர் தீட்டிப் பதமாக்கப்பட்ட வேலுச்சாயின் அருவா.
அருவாக்கள் பேசும் மொழியினை சேர்த்து “அருவா மொழி”என்று தலைப்பு வைத்திருக்கும் ஆசிரியர் முருகன் கதை சொல்வதில் முதிர்ந்திருக்கிறார்.
*அழுக்கு*என்ற கதை சமூகத்தின் அரசியலையும் அதில் படிந்திருக்கும் அழுக்கினையும் உரக்கச் சொல்கிறது.
ஏழாம் வகுப்பில் தொடர்ந்து பெயிலாகிக் கொண்டினுக்கும் மாடக்குட்டி. தனது அப்பா சன்னாசியிடம் அடி வாங்கியே உடல் முழுவதும் கண்டிப்போன மாடக்குட்டி. படிக்கத் தொடங்கி மற்ற நான்கு பாடத்தில் தேர்ச்சி பெற்று. சமூக அறிவியல் பாடத்தில் முப்பத்தி நான்கு மதிப்பெண் பெறுகிறான்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தும் விடையளிக்காமல்.இதற்கு விடையளித்தால் முப்பத்தைந்து வாங்கி எட்டாம் வகுப்பு போகலாம்.
ஆசிரியர் போட வந்த ஒரு மதிப்பெண்ணையும் வேண்டாம் என்று உதறிவிட்டுச் செல்லும் மாடக்குட்டியும் அவரது அப்பா சன்னாசியும் மனநல மருத்துவத்தில் அடைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.
கதை ஆசிரியரை கேள்வி கேட்கத் தோன்றுகிறது.ஏன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையின் பெயர் சொல்ல மறுத்தனர். இவர்கள் எந்தச் சூழலில் சாதியத்திற்குள் கட்டுப்பட்டிருக்கிறார்கள்.
பூத்த கரிசலில் இறுதிக் கதை கறை.மதங்கள் மாறினால் தம்மையும் தம் குடும்பத்தையும் தற்காத்துக் கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் ஏராளமானவர்களைக் காணலாம். ஆனால் சாதியச் சிக்கலால் தற்காத்துக் கொள்ள மதம் மாறிய அய்யாவும் அவரது ஊர்க்குடும்பமார்களையும் கதைகளில் வழியாகப் பதிவு செய்திருக்கிறார் கதையாசிரியர் முருகன் .
தமது காட்டில் விளைந்த கத்தரிக்காய்களை விற்கப் போன அய்யாவு . கடைக்காரரின் மனைவி லெட்சுமியை திருமணம் செய்வதும். சாதியப் பிரச்சனைகளால் மதம் மாறுவதும் பற்றிய கதை. இஸ்லாத்தில் இணைந்த பிறவிப் பட்டி குடும்பமார்களால் துலுக்கப்பட்டியானதைப் பார்க்கமுடிகிறது. அய்யாவு பீர்முகம்மது ஆகவும் லட்சுமி நசரத் பேகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
நெல் விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட துலுக்கப்பட்டி மக்களிடம் நெல் வாங்கச் செல்லும் பாட்சா பாய். இரண்டு நாளுக்கு முன்பு இஸ்லாத்தில் இணைந்து பாண்டியம்மாவாக இருந்து பாத்திமாக மாறியவள் பாட்சா பாயிடம் எங்க நெல்லையும் எடுத்துங்கோங்க பாய் என்கிறாள். சின்னசாதிக்காரி நீயெல்லாம் இஸ்லாத்தில சேர்ந்திருக்க. இதெல்லாம் இரத்தில் ஒட வேண்டும் என்றுசொல்லிக்கொணடு டிவிஎஸ் வேண்டியை எடுத்துக் கிளம்புகிறான். அவன் வண்டிச் சக்கரத்தில் சாக்கடை கறை படிந்திருக்கிறது என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர் முருகன்.
மதங்கள் மாறினாலும் சாதிகள் மாறப்போவதில்லை தமிழ்ச்சமூக்தில் என்று சாதிவெறி பிடித்த பாட்சா பாயின் செயலை கதை வடிவமாக்கி நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் கதாசிரியர்.
முதல் கதையில் வரும் சம்பவத்தில் சாதிக் கோழியை களவாண்டு தின்டுட்டா சாதி கெட்ட முண்ட என்பதனையும்
இறுதிக் கதையில் வரும் இதெல்லாம் இரத்தத்தில ஓடும். நீ சின்ன சாதி பயபுள்ள மதம் மாறி பாய்னு கூப்பிடாத என்பதனையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. சாதிய மதச்சமயக் கட்டமைப்புகள் எப்படி அறங்கேறியுள்ளன என்பதனை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார் எழுத்தாளர் முருகன் இ.ஆ.ப அவர்கள் .
தனது முதல் படைப்பிலே எழுத்து நடையில் தேர்ந்த முதிர்ச்சியான படைப்பாளியாக நூலை மிளிரச்செய்திருக்கிறார் . தாமதமாக இலக்கிய உலகிற்குள் வந்தாலும் மிகச்சரியான நேரத்தில் வந்திருக்கிறார். கரிசல் இலக்கியத்தை தனது எழுத்துக்களால் கூடுதல் வலுச்சேர்த்திருக்கிறார்.பூத்த கரிசல் தமிழ் இலக்கிய மரபில் தனிக் கவனம் என்பதில் அகமகிழ்வோடு கூறுகிறேன். வாழ்த்துகள் எழுத்தாளராக அறிமுகமாகியிருக்கும் சி.முருகன் இ.ஆ.ப. அவர்களுக்கு.
நூல் அறிமுகம் எழுதியவர் :
– எழுத்தாளர் அய்யனார் ஈடாடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


“POOTHA KARISAL”…….18 patti makkalin ethartha valkaiyinai koorum unnatha padaippaka irukkum enbathil santhegamillai….Aasiriyar West Bengal il..IAS athikariyaka irunthalum…thaan pirantha mannin nesam maarathu…..padaitha ‘POOTHA KARISAL’ sirukadhaikal nammai negilchi paduththum….vaazhthukaludan anandam