பூவாத்தா சிறுகதை – இரா.கலையரசி
“நல்லா கரைச்சு வச்ச நீச தண்ணீயில கைய விட்டு வெளாவுறா பூவாத்தா.
தொண்டைய நனச்சுகிட்டு அவளுக்கு ஆறுதலா இலையில தடவுன தேனு” கெனக்கா வழுக்கிட்டு போகுது.

கறுப்பு நெறத்த கரைச்சு ஊத்துன மாதிரி கண்ண உருட்டிக்கு நிக்குது அவள உறிச்சு எடுத்த பூனை ஒண்ணு.

வச்சு இருந்த பாலை ஆசையா ஊத்தி அழகு பார்க்கறா பூவாத்தா.
“இந்தாடி பூவு, செங்ககட்டி வேணுமின்ட அந்த கட்டட வேல செய்யிற இடத்துல இருந்து எடுத்தாந்தேன்.”

எதுவும் எலி கிலி பேத்து விட்ருச்சா? அடைக்க. கேட்டியா? நல்லா செவ செவ னு இருந்த செங்ககட்டிய வாங்கிகிட்டா.

பள்ளங்கள் வாயை பொளந்து கதை கேட்டபடி இருக்கு. சின்ன சின்ன ஓட்டைகள் குட்டி பாம்பு வந்து போக வாட்டமா இருக்கு.

அந்த சின்ன குடிசை அழகா இருக்கு. பல நெறத்துல பொருள் வாங்கி வச்சு இருக்கா. செவப்பு, மஞ்சள் ஊதா னு அம்புட்டு அழகா இருக்கு.

“என் மகளுக்கு எல்லாமே
நல்லா தான் எடுக்கும்.” அப்பா பெரியகருப்பன் பேசுனது காதுக்குள்ளயே கேகக்குது.

பூவாத்தா நெனப்பு அவள் அப்பன் காலத்துக்கு செறகு விரிக்க ஆரம்பிச்சிருச்சு.

“ஏப்பா பெரியகருப்பா? மண்ணும் நீயும் ஒண்ணு கெனக்கா இருக்கீகளேப்பா.”
செம்மண்ண எடுத்து மேலுல பூசி விட்டாரு கருத்தக்கண்ணன்.

“செவத்த ஒடம்புக்கும் அதுக்கும் ஒண்ணு சொன்னாப்ல இருந்துச்சு. நம்ம வம்சத்துல இம்புட்டு நெறமா யாரும் இருந்ததில்லபா “பேசிய கருத்தக்கண்ணன நிறுத்துனாரு செம்பட்ட.

“ இல்லபா அவங்க பாட்டன்
பரசு நல்லா செவத்தவரு மிடுக்கா மீசையை முறுக்கி நிப்பாரு பாரு அசந்து போகனும் ஆளுக.
நெறத்துல என்னா மாமா இருக்கு?”

” பொழைக்கிற பொழப்பு தான் பேரு சொல்லனும். நம்ம கையும் காலும் தான் மாமா வேலை செய்யனும். அது தான் அழகு.”

“ஒன்னய கெனக்கா உன் பேச்சும் அழகு தான் போ. மெச்சு போனாரு செம்பட்ட.”

செம்மண்ணு பூசுன. ஒடம்ப சிலிப்பிகிட்டு எழுந்த பெரியகருப்பன் “யானை ஒண்ணு திமிறிகிட்டு வந்தா மாதிரி இருந்துச்சு.!”

“ஊருல இருக்கிற பொண்ணுங்க எல்லாமே எளந்தாரி பெரியகருப்பன் மேல தான் கண்ணு. எடக்கு பேசுற பொண்ணுங்க கண்ணுல சாடையும் பேசுவாங்க.”

ஆருக்கும் ஆப்டது இல்ல இந்த வெலாங்கு மீனு.
மெல்ல உடம்புல இருந்த மண்ண ஒதறி பாயுற சிங்கமா பக்கத்துல கிணத்துல பாய்ஞ்சாரு.

அமைதியா கெடந்த தண்ணீ செவப்பு சாந்த பூசிகிருச்சு.
“நீந்தி பழகுன மீனா” லாவகமா நீந்துராரு. கைய அடிச்சு நீந்த கையோட பின்னி பெனஞ்சு பூங்கொத்தா வந்து சிக்கியது ஒரு பெண் பூவு.

“அமாவாசை இரவ இறுக்கி பிழிஞ்சி சாறு எடுத்த நெறத்துல நனைஞ்ச காளானா ஊறி இருந்த பொண்ண கையில ஏந்தி இருந்த பெரியகருப்பன் தெணறி போனாப்புல”.

இப்புடி ஒரு கருப்பு நெறத்த கண்டதே இல்ல. எக்கி வெலகி போனவள் ,“ “கூறு கெட்ட மனுசா? னு பறி கையில இருந்து பறந்து போன பட்டாம் பூச்சி யா பதறி வெலகுறா கருத்தம்மா”

கருவண்டு ஒண்ணு பதறி ஓடி ஒளிஞ்சா மாதிரி படக்குனு கண்ண சிமிட்டி முறைச்சா.

கருப்பட்டியில ஊருன எறும்பா மொகமெல்லாம் இனிப்பு பரவி திக்குமுக்காடி போயி இருந்தாரு பெரியகருப்பன்.

இம்புட்டு கருப்பா ஓரு புள்ளைய அவரு பார்த்ததே இல்ல. சிலைய பார்த்த மாதிரி கெறங்கி போனாரு.

“ஆளு குளிக்கிறது தெரியாமல் இப்புடியா நடந்துக்கறது? சீறி பாய்ந்த கருநாகமா வெசத்த கக்குறா கருத்தம்மா. மழையில நனைஞ்ச. கோழியா நடுங்க ஆரம்பிச்சுட்டா.

“கிணத்துல முங்கி எந்திரிச்சி பார்த்தா கறுப்பு முத்து கெடைக்குமுன்னு
யாரு கண்டா?”

சிரிச்சுகிட்டு பேசுனவர பார்த்து “இந்தா என்னா கறுப்புங்கற? “ஒன்னய மாதிரி செவத்த. குரங்க நானும் பார்த்தது இல்ல.”

ஒரே தவ்வா தவ்வி ஓடுன புள்ளிமானா மறஞ்சுட்டா. கருத்தழகி.
கண்ண விட்டு அகலாத அந்த முகம் இரவ பகலா மாத்தி புலம்ப விட்டிருச்சு.

கட்டுனா கருப்பழகி தான்னு முடிவுல இருந்தாரு. கையோட பரிசம் போட அவங்க ஆத்தாவ ஆள தெரட்டி கூட்டிக்கு போயிட்டாரு. ராசா மாதிரியே இருந்தாரு மாப்புள்ள.

எந்த மகாராணிக்கு வாய்ச்சு இருக்கோ? கிழவிக கண்ணழகு பார்த்துச்சுக.
“கீழ எறக்கின ஓல வீட்ல தட்டு முட்டு சாமான ஒதுக்கி வச்சு செம செஞ்சு வச்சிருந்தாங்க.”

சரி பொண்ண கூப்டுங்க. பருசத்த போட்ருவோம். உள்ள இருந்து வந்தா கருத்தம்மா.

“கிளி பச்சை நெறத்துல கட்டி இருந்த சேலையில
மல்லிகை பூவ சரம் சரமா
தொங்க விட்டிருந்தா.”

ஆத்தி இது என்னாடி இப்புடி
ஒரு கறுப்பு. அடுப்பு கரி தோத்துரும் போ! கேலி பேசி சிரிக்காத ஆள் இல்ல.

வச்ச கண்ண எடுக்காமல் பார்த்த ஒரே ஆளு பெரியகருப்பன் மட்டும்தான். அஞ்சு பவுனு நகை பரிசமா போட்டாங்க.

முழுக்க முழுக்க. பெரியகருப்பன் சிறுக சிறுக சம்பாதிச்சுது.ஆசையா போட்டு அழகு பார்த்தாரு.

ஊரே மெச்சுற அளவுக்கு கல்யாணம் நடந்தது. இவளுக்கு கிடைச்ச வாழ்க்கை யாருக்கும் வராது. போறாமை பட்டுச்சு ஊருசனம்.

அள்ளி பூசற கருப்பை ஆசையா வர்ணிச்சாரு.
“கரும்பு தட்டயே என் கருப்பட்டி பாகேனு கொஞ்சுவாரு.”

ஒரு தடவ கருத்தம்மா
கேட்டா “நெசமா தானா என்னைய புடிச்சு இருக்கு. “இம்புட்டு ஆசையா இருக்கீங்க. ஒன்னய ரொம்ப புடிச்சதால தான் கட்டிகிட்டேன்.”சாகற வரையும் எள் அன்பு குறையாது புள்ள.”

மதில புடிச்சு தொத்திக்கு இருந்த பல்லி “உங்” கொட்டுது.வாசல விரட்டி வந்த காத்து இவங்க பேசறத கேட்டு அமைதியா போயிருச்சு.

புள்ள உண்டான சேதி கேட்டு மெச்சு போனாரு.வீட்ல ஒரு வேல செய்ய விடல. நெற மாச பொண்டாட்டிய தாங்கி தடுக்குனாரு.

அக்கம் பக்கத்து ஆளுக எல்லாம் புள்ள எந்த நெறத்துல பொறக்குங்கற பேச்சு தான் ஓடிக்கு இருக்கு

வலி வந்து புள்ள பிறக்கிற வரைக்கும் உசுரே இல்ல அவருக்கு. “வதங்கின மிளகாய் செடி ஒரு வாய் தண்ணீர் கேட்டு இருக்கற மாதிரி முகத்த வச்சுக்கு இருந்தாரு.”

“கருகருனு பன்னீர் திராட்சையா மூக்கு முழியுமா பொறந்துட்டா
பூவாத்தா.”

செவத்த பெரியகருப்பன் கருத்த புள்ளைய ஆத்துல போற தண்ணீயா அள்ளி உச்சி முகர்ந்தார்.

உருக்கி எடுத்த கருப்பு வைரமா தகதகனு மின்னுறா பூவாத்தா.புள்ள பெறந்த செத்த நேரத்துல வலிப்பு வந்து துடிச்ச கருத்தம்மா உசுரயும் விட்டுட்டா.

ஊர் பய மக்கள் வாயில விழுந்தே நாசமா போயிருச்சு பொழப்பு. கட்டி தூக்கி அழுது துடிதுடிச்சு போனாரு.

விரிஞ்சு பார்த்த சூரியகாந்தி பூவா இருந்த மகளுக்கு “ பூவாத்தா”னு பேரு வச்சாரு.

அக்கம் பக்கம் எல்லாம் நெறைய பொண்ண கொண்டாந்து நிறுத்துனாங்க. திரும்பி பார்க்கல மனுசன்.

வளர்ந்த கதிரா நிக்கிறா, பூவா வளர்ந்த பூவாத்தா. அன்னைக்கு அப்டி தான் வெளைச்சல சந்தைக்கு கொண்டு போக வண்டிகட்டி கிளம்பினாரு.

“போற வழியில அச்சாணி கழன்டு தரையில இருந்த கூரான கல்லுல. தலை குத்தி ரத்த வெள்ளத்துல சரிஞ்சாரு பெரியகருப்பன்.”

வாழ்க்க அடிக்கிற அடியில
உசுர காவு வாங்கற விதிய நொந்து என்ன பலன்?

“யப்பே யப்பே என்னைய விட்டுட்டு போறியா கடமைய முடிச்சுட்டோமுனு நெனச்சி விட்டுட்டு போறியா”னு கதறுனா மவள்.

மரத்துல இருந்த ஒத்த குருவி அவளுக்காக சேர்ந்து அழுகுது. தீ பிடிச்ச சோளக்காடா பத்தி எரியுது மனசு.

செங்ககட்டி கையில கனத்திருச்சு அவள் மனசு கெனக்கா. செங்ககட்டிய. உடைச்சு தேய்ச்சா செவந்திரலாமுன்னு சொன்னத கேட்டு செஞ்சிக்கு இருக்கா கிறுக்கி.

நாளு நாளா பரமன் மேல ஒரு ஆசை வந்திருக்கு அவளுக்கு. காடு கரையில பார்க்கறத அவளும் பார்க்குறா

இன்னைக்கு நேரா அவன் கிட்ட கேட்டே புடனும்னு நெனச்சா.

விடிகாலை விடிய, சூரியன எழுப்புற வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டா. அப்பன் செத்ததுக்கு அப்புறம் தனியா தெகிரியமா பொழப்ப பார்த்தா பூவாத்தா.

கறுப்பா இருக்கான்டு ஊரே ஏடாசி பேசுது. அதுக்கு தான் என்னென்னமோ செய்யிறா பாவம். காச சேர்த்து வச்சி “கிரீம் “அது இதுனு வாங்கி போடுறா.

பொறந்தது தான் பொறந்தேன் எங்கள் அப்பன் கெனக்கா சிவீன்டு பொறந்திருக்க கூடாது. அடிக்கடி சலிச்சுகிட்டா.

வாசல எட்டி பார்த்துச்சு கறுப்பு பூனை. அழகு எதுனு தெரியாத மனுச மனசு தான் கண்ண வச்சு தான் எடை போடுது.

விடிஞ்ச காலையா பொலபொலனு அவள் மனசும் விடியுது. கிடுகுல இருந்த சீப்ப எடுத்து” அருவியா வளைஞ்சு நெளிஞ்சு” போன முடியை சடையா மாத்திகிட்டா.

“கறுத்த முகத்துல செவத்த பொட்ட இட்டுகிட்டா. குழைஞ்ச சோறா அவள் நடை கொழையுது வழியுது.”

இந்தா வந்துட்டா காட்டுக்கு. மழையில ஒதுங்குன செத்தையா கால் மேல போகாமல் தயங்கியே நிக்குது.

தூரத்துல நின்னுக்கு இருந்தவன கண்ணு அளக்க மெல்ல முன்னேறி போனா.

அங்க நின்னு பேசிக்கு இருந்ததை காது கேட்க அங்கனயே நின்னுட்டா. “என்னாடா அந்தக் கருவண்டு ஒன்னயே சுத்திகிட்டு வருது?

“எல்லாம் தெரியும்டா. இன்னைக்கு என் முன்னாடி இளிச்சுகிட்டு வந்து நிப்பா பாரு “அப்ப அவள் மூக்க ஒடைக்கிறேன் பாரு”னு சொல்லி சிரிச்சான்.

வெட்கம் புடுங்கி தின்னிருச்சு. கண்ணு தேங்கிய குளமா நெஞ்சு வெடிச்சு விம்மல் வருது. அழுதற கூடாது னு
அடக்கிகிட்டா.

பார்த்து சிரிச்சவன திரும்பியும் பார்க்கல. “இந்தா வந்துர்ரேன்”னு வெரசா வீட்ட பார்த்து நடந்தா.

கறுப்பு பூனை அவளுக்காக காத்து இருந்தது. கையில கெடச்ச கல்ல எடுத்து விட்டெரிஞ்சா “மியா..யா.”னு கத்திகிட்டே போயிருச்சு பாவம்.

“யப்பா ஒன்னய மாதிரி மனுசன் இங்க யாரும் இல்ல. இந்த இருட்டு உலகத்துல என்னைய ஒத்தையில விட்டுட்டு போயிட்டியே பா” னு கதறி அழுகுறா பூவாத்தா.

அந்தக் கறுப்பு பூனை மட்டும் எட்டி பார்த்துச்சு. அதுக்கு இவள் சோகம் நல்லா புரிஞ்சிருக்கு குயில் கூட இவள் சோகத்துக்கு எசையா பாட ஆம்பிச்சிருச்சு.

– இரா.கலையரசி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.