பூவுலகின் கடைசிக் காலம் (Poovulagin Kadaisi Kalam) – நூல் அறிமுகம்
” எச்சரிக்கை
_________________
இந்த உலகம் ஆபத்தான
_____________________________
முறையில் சூடாகிக்
_________________________
கொண்டிருக்கிறது. ”
___________________________
ஐநா சபையின் உலக வானிலை கண்காணிப்புக்குழு 2006ஆம் ஆண்டு கனடா நாட்டில் நிகழ்த்திய சுற்றுச்சூழல் மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனம் அது.
பூவுலகின் நண்பர்கள் என்கிற சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த கேத்ரின் பியர்ஸ் பேசியதுதான் இம்மாநாட்டின் ஹைலைட்.
உலகின் பல பகுதிகளிலும் உள்ள ஆறுகள் ஏரிகள் வறண்டு வருகின்றன. குளிர்காலத்தின் அளவு குறைந்து கோடையின் நீளம் அதிகரித்திருக்கிறது. காட்டுத் தீ எந்நேரமும் பரவிகிறது. கால மாற்றத்தை கண்டு விலங்குகளும் பறவைகளும் குழம்பி அலைகின்றன. ஒரு பக்கம் வெள்ளம் ,மறுபக்கம் வறட்சி என்று இரண்டு முரண்பட்ட நிலைகள். புதிய நோய்கள் வைரஸ்கள் புறப்பட்டு இருப்பதை கண்டு மருத்துவ விஞ்ஞானம் திடுக்கிட்டுப் போயிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மனிதர்களாகிய நாம்தான். இயற்கை வளங்களை பொறுப்பற்ற முறையில் சேதமாக்கி அழிக்கக்கூடிய சுயநலம் தான் இதற்கு காரணம்.
இதற்கு மேலும் நாம் அசட்டையாக இருந்தால் பூமியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று பேசி அதிர வைத்திருக்கிறார் கேத்ரின் அவர்கள்.
பூவுலகின் கடைசி காலம் என்னும் இப்புத்தகத்தை கிருஷ்ணா டாவின்சி மிக கவலையோடு ஆக்கம் செய்திருக்கிறார்.
இருபத்தி நான்கு கட்டுரைகள்.
சின்ன சின்ன கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு எச்சரிக்கையை தருகிறது. அது மனிதகுலத்திற்கு விடப்பட்ட சவால் அல்ல. மனித குலத்தைக் காப்பாற்ற போடும் கூக்குரல் அது.
நைஜீரியா அழகான வளமான நாடு. காடுகள், மலைகள், ஆறுகள், பசுமையான வயல்கள் என்று இயற்கை வளம் கொழிக்கும் நாடு. ஆண்டாண்டு காலமாக நைஜீரிய மக்கள் விவசாயத்தையும் மீன் பிடித்தலையும் முக்கிய தொழிலாக கொண்டு திருப்தியாக வாழ்ந்து வந்தார்கள்.
இயற்கை வளம் கொழித்த அந்த தேசம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா .? பாழான நிலங்களோடு, லட்சக்கணக்கான எளிய கிராம மக்களை அகதிகளாக வெளியேற்றிவிட்டு இன்று உலகத்தையே சூடுபடுத்தி கொண்டிருக்கும் கிராமமாக மாறிவிட்டிருக்கிறது .
பன்னாட்டு கம்பெனிகளின் படையெடுப்பால் குறிப்பாக, ‘ஷெல்’ என்கிற எண்ணெய் கம்பெனியால் பல கூறுகளாக சிதைந்து குற்றுயிரும் குலையுயிருமாக தவித்துக் கொண்டிருக்கிறது நைஜிரியா.
கிருஷ்ணா டாவின்சி மேலும் எழுதுகிறார்.
பூமியிலிருந்து எடுக்கும் எண்ணெயை கொண்டு போவதற்காக குறுக்கும் நெடுக்குமாக வளம் கொழிக்கும் வயல்வெளிகளில் போட்டிருந்த பைப் லைன்கள் விரைவில் துரு பிடித்தன . ஓட்டைகள் விழுந்துவிட்டன . அந்த குழாய்களிலிருந்து அதில் சென்ற குருடாயில் வழிந்து விவசாய நிலங்களில் பரவி மெல்லமெல்ல ஏரி குளம் குட்டைகளிலும் எண்ணெய் கழிவுகள் கலக்க ஆரம்பித்தன . அதனால் நைஜீரியா டெல்டா பகுதியே நரகமாகி போனது.
‘கிளீன் அப்’ என்கிற பெயரில் அதாவது வழிந்த குருடாயிலை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று டெல்டா பகுதிகளில் பரவியிருந்த எண்ணெய் பரவல்களை தீயிட்டு எரித்து போட்டது ஷெல் நிறுவனம்.
விளைவு.? நிரந்தரமான கருப்பு எண்ணெய் படிமங்கள் நிலங்களில் அழுத்தமாக படர்ந்தன. பூமி நிரந்தரமாகவே பட்டுவிட்டது . அதை அந்த மக்கள் எதிர்த்து கேட்டதற்காக அனுபவித்த சித்ரவதைகள் ஒன்றா இரண்டா என கவலைப்படுகிறார் கிருஷ்ணா டாவின்சி.
இந்த நிலையில்தான் நைஜீரிய மக்களின் விடிவெள்ளியாக புறப்பட்டார் எழுத்தாளர் கவிஞர் கென்-சரோ-விவா.
சாத்வீக முறையிலும் அகிம்சை முறையிலும் ஜனநாயக முறையின் படியும் போராடி மக்களை திரட்டி ஷெல் நிறுவனத்திற்காக போராடிய கென் சரோ விவா பல போராட்டங்களுக்குப் பிறகு நைஜீரியா ராணுவத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுகிறார்.
நைஜிரியா பிரேசில் மற்றும் அமேசான் காடுகள் என ஆறு கட்டுரைகளில் இயற்கை சீரழிவுகள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர்
“உலகின் நுரையீரல் “என்று பிரேசில் நாட்டை அழைக்கிறார்கள். உலகத்துக்கு தேவையான ஆக்சிஜன் இங்குதான் பெருமளவில் காடுகள் ‘பம்ப்’ செய்கின்றன.
இங்கேதான் பிரம்மாண்டமான அமேசான் நதி ஓடுகிறது. தன்னுடன் ஏகப்பட்ட கிளை நதிகளை உருவாக்கிக்கொண்டு பொங்கி பாய்கிறது. இதன் வழியே பல கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தோன்றிய அடர்த்தியான மழைக்காடுகளில் மனிதன் அறிந்து கொள்ள முடியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன.
பார்க்கிற இடங்களிலெல்லாம் மரங்களை வெட்டித் தள்ளிவிட்டு நிலங்கள் ஆக்கி அதில் சோயாவை பயிரிடுகிறார்கள் பிரேசில் மக்கள் . சோயா மிகப்பெரிய ஏற்றுமதி வணிகப் பொருளாக மாறி விட்டதுதான் காரணம்.
நிலத்தை உருவாக்குவதற்காக காடுகளை எரித்து கொண்டிருக்கிறார்கள் பிரேசில் மக்கள் . உலகத்தின் நுரையீரலாக கருதப்பட்ட பிரேசில் இன்று மாசு படுத்தும் தேசமாக மாறிவிட்டிருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு கார்பன் மோனாக்ஸைடு அங்குதான் உற்பத்தியாகின்றன என்று விஞ்ஞானிகள் கவலைப்பட தொடங்கிவிட்டனர்.
தமிழ்நாட்டில் பாய்கின்ற ஆறுகள் பற்றியும் கிருஷ்ணா டாவின்ஸி கவலையோடு நோக்குகிறார்.
பவானி ஆற்றை ஏகப்பட்ட தொழிற்சாலைகள் உறிஞ்சி எடுத்தது மட்டுமில்லாமல் மீண்டும் கழிவுநீரை அதிலேயே கலந்து ஏறக்குறைய அந்த நதியை கொன்றுவிட்டார்கள் என்று கிருஷ்ணா டாவின்சி மிக கவலையோடு பதிவு செய்கிறார்
பாலாறு மற்றொரு ரத்த கண்ணீர் வடிக்கும் ஆறு. முன்பு சுத்தமான தண்ணீர் ஓடிய ஆற்று கால்வாய்கள் இருந்தன. இன்று அவையெல்லாம் வெறும் கழிவு நீரை கொண்டு செல்லவே பயன்படுகிறது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மொத்த தோல் தொழிற்சாலைகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை பாலாற்று படுகையில் தான் செயல்படுகின்றன. அவைகள் கழிவுநீரை பாலாற்றில் தான் விடுகின்றன.
தமிழ்நாடு கர்நாடகா இரண்டு மாநிலங்களிலும் இன்னும் 20 வருடங்களில் நதிநீர் பங்கீடு பிரச்சினை காணாமல் போய் இருக்கிற தண்ணீர் மாசுபட்டு விட்டது தான் மிகப்பெரிய பிரச்சனையாக தலையெடுக்கும் என்று சொல்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி.
தமிழக ஆறுகளின் பரிதாப நிலையை நான்கு கட்டுரைகளில் விளக்குகிறார். அனைத்தும் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன.
இயற்கையின் சமன்பாட்டை மீறி தங்களின் சுயநலத்திற்காக இப்படி செயற்கை முறைகளை கையாண்டதால், உலகம் முழுவதும் அதிக உற்பத்தி நிகழ்ந்தாலும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கவில்லை. சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு உணவும் விஷமாகி இயற்கையின் மகத்தான சுழற்சி ஆட்டம் காணுகிறது.
நூலின் இறுதிப்பத்தியில் ஒரு வேண்டுகோளோடு இப்படி முடிக்கிறார் கிருஷ்ணா டாவின்சி.
“கடலளவு ஆபத்துக்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. பூவுலகை காப்பாற்றும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இயற்கையை புறந்தள்ளிவிட்டு இனி எந்த அரசியல் தத்துவமும் அதிகார அமைப்பும் வெற்றி பெற முடியாது என்கிற நிலை வந்துவிட்டது. நாம் சுவாசிக்கும் மூச்சில் மேலும் விஷம் கலக்காமல் இருக்க வேண்டுமானால் எதிர்கால சந்ததியினருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு மரம் நடுவது என்கிற குறைந்தபட்ச சிந்தனையாவது தோன்ற வேண்டும்.
உண்மைதானே.
ஒரு. கவிதை நினைவுக்கு வருகிறது.
என் தாத்தா
ஆற்றில் குளித்தார்.
என் அப்பா
கிணற்றில் குளித்தார்.
நான்
வாட்டர் பாக்கெட்டில்
குளிக்கிறேன்.
என் மகன்
. எதில் குளிப்பான் ?
பக்கத்துக்கு பக்கம் ஏராளமான செய்திகள். எல்லாமே ‘திக். திக்.’ தான்.
நம் சந்ததியினருக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம் ?
நூலின் தகவலால் :
நூலின் பெயர் : பூவுலகின் கடைசிக் காலம்
ஆசிரியர் : கிருஷ்ணா டாவின்சி
வகை: சூழலியல் கட்டுரைகள்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 75/
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/poovulagin-kadaisi-kalam/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

