“இப்பூவுலகும் பெண்களும்” – நூல் அறிமுகம்
இந்தப் பூவுலகில் புன்னகையோடு வாழ்வதற்கு பெண்களும் ஒரு பலமே என நிரூபிக்கும் வகையில் இப்புத்தகத்தை பூவுலகின் நண்பர்கள் திரட்டி தொகுத்து அமைத்திருக்கின்றனர். வாழ்த்துகள் . இவ்வமைப்பின் ஆரம்பப் புள்ளியென அழைக்கப்படும் அமரர் நெடுஞ்செழியன் துவங்கி வைத்த மிக முக்கிய பணி என்பது அறிவுத் தேடலும் – அறிவுப் பகிர்தலும் என்றிருந்த போதிலும், சூழல் சார்ந்த வெளியீடுகள் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் அறிவு இயக்க வரலாற்றில் தடம் பதிக்கத்தக்கவை.
இயற்கையை வெற்றிக் கொள்வதே அறிவியல் என்று நம்புவர் செய்யும் பல காரியங்கள் இயற்கையை சீரழிக்கின்றன. இந்நிலையில் இயற்கையை புரிந்து கொள்ளவும் , இயற்கையை சிதைக்காத வாழ்வியலை பரப்பவும், இயற்கையை சிதைக்கும் தொழில்நுட்பங்களை விமர்சனம் செய்வதும் நமது காலத்தின் கட்டாயமாகிறது. அதனை தமிழில் கொண்டுவரும் பணியில் பூவுலகின் நண்பர்கள் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது.
தம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் களமாடக்கூடிய பெண்களை முன்னுதாரணமாய் காட்டி, பெண்கள் என்பவர்கள் பூஜை அறையிலும் , புதிது புதிதாக சமையலறையில் உணவு பதார்த்தங்களை செய்வதற்கும் மட்டுமல்ல…
இப்பூலகின் இயக்கத்திற்கும் ஓர் அச்சு என்று கூறுகிறது.
முதல் பெண் ஆளுமையே, முதன் முதலாக நோபல் விருது பெறும் ஆப்பிரிக்க பெண்மணியான வாங்கேரி மாத்தாயின் நோபல் உரையில் ஆரம்பிக்கின்றது. ஆப்பிரிக்காவில் பெண்களே குடும்பத்துக்கு முக்கியமான பொறுப்பாளிகள் . எனவே 1977-ல் நான் பசுமை வழி இயக்கத்தை தொடங்கிய போது அவர்களின் பற்றாக்குறைகளை சமாளிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன் என்கிறார்.
மரத்தை அமைதியின் குறியீடாக பயன்படுத்துவது ஆப்பிரிக்க மரபு. கிகியுவைச் சேர்ந்த முதியவர்கள் கையில் திதி மரத்திலான கைத்தடியை வைத்திருப்பார்களாம். சர்ச்சையில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையே அதை வைத்தால் அவர்கள் சண்டை இடுவதை நிறுத்திவிட்டு சமாதானமாகப் போக வேண்டுமாம் . எவ்வளவு அழகான ஒரு வழிமுறை இது. இன்றளவும் ஆப்பிரிக்காவில் பல சமூகங்களில் இது போன்ற மரபுகள் கடைபிடிக்கப்படுகின்றன என்ற தகவல் வாங்கேரி மாத்தாவின் உரையில் இயற்கையோடு மனிதன் இணைந்து வாழும் சூழ்நிலையால் புரிந்து கொள்ள முடிகிறது.
“Eco – feminism”. இந்தத் தொடரை மேலை நாடுகளில் பயன்படுத்தும் அளவுக்கு இந்தியாவில் காண்பது அரிதாக இருப்பினும், கூடங்குள அணு ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இத்தொடரை நாம் இணைக்கலாம். “எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறப்பதை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்? “, என்ற கேள்வியை பெண்ணியத் தளத்தில் யோசித்து தாய்மை உணர்வோடு பெண்கள் போராட்ட களத்தில் eco feminism ஆக இறங்கியதால் தான் இப்போராட்டம் உச்சம் தொட்டது என்பதை அறியலாம்.
வாழ்வின் பக்கம் நிற்பவரும் மரணத்தின் பக்கம் நிற்பவரும் சமமா…??
என்பன போன்ற போராட்டங்கள் தான் நமக்கு அறிவுக்கண்ணை திறக்க வைக்கின்றன.
நாங்கள் வாழ்ந்த மண்ணில் எங்கள் சந்ததிகள் வாழ வேண்டும் . அதற்கு இந்த போராட்டம் தேவை என்று ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தைகளோடு போராடிய தருணங்களை இடிந்தகரையில் ஏற்பட்ட என்கவுண்டரின் சுவடுகளை வாசிக்கையில் , சாதாரண பொது மக்களின் மீதான அரசு அராஜகத்தின் வரலாற்று அடையாளங்களை துயரமான மனதோடு வாசிக்க நேரிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் நாகரீகம் அடைந்த மனித குல வரலாற்றின் இருண்ட பக்கங்கள் தான் இது போன்ற சம்பவங்கள் எனலாம்.
மனிதர்களால் மட்டுமே சக மனிதர்களை துன்புறுத்தும் இத்தகைய கொடூரமான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடிகிறது என்ற வாசகம் என்னுள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் ‘தேச துரோகம்’ என்ற வார்த்தைக்கு எத்தனை எழுத்துக்கள் கூட இருக்கிறது என்று தெரியாத ஒரு மக்கள் மீது தேசத்துக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டு பட்டியல்கள் நீள்கிறது என்றால் இந்த பூவுலகானது சாதாரண பொது மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகாதோ…!!
சொற்களாலும் பார்வைகளாலும் அத்து மீறிய தொடுகையாலும் இப்பொது மக்கள் மீது வன்முறையில் ஈடுபட உரிமை கொடுப்பது எத்தனை பெரிய வன்மம்.
அங்கு ஒரு கூடங்குளம் அணு உலைக்கு போராட்டம் என்றால் , அடுத்து ஒரு சரஸ்வதி காகித ஆலையை எதிர்த்து தனித்த பெண்ணாக போராடும் மற்றொரு பெண்.
இவர்களையெல்லாம் மீறி இருளில் உள்ளவர்களுக்கு சில விளக்குகளையாவது ஏற்ற வேண்டும் என்று தன் வாழ்க்கையை சேவை மனப்பான்மையாக மாற்றிய “கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்” மற்றொருபுறம் ஒளிர்கிறார். தன் கை குழந்தையை தமிழ்நாட்டில் தொட்டில் கட்டி தொங்கவிடப்படாத மரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கிராமம் கிராமமாக பூமிதான இயக்கத்திற்காக நடை பயணம் மேற்கொண்டு இருக்கிறார் இந்த மாமனிதி. இறால் பண்ணைகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் அபாயத்தை உணர்தலும் அவசியம்.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் “ஜோன் ஆஃப் ஆர்க்” என்ற பட்டம் , “பத்மஸ்ரீ விருது” போன்ற உயரிய பட்டம் என பல்வேறு கௌரவங்களை பெற்றிருந்தாலும், நான் பெரிதாக புரட்சி செய்து விட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது . ஆனால் அடர்ந்து பரவி இருக்கிற இந்த இருளில் நான் சில விளக்குகளையாவது ஏற்றிக் இருக்கிறேன் என்று தன்னடக்கத்தோடு சொல்லும் கிருஷ்ணம்மாவை வியப்பு ஏற்படாமல் வாசித்து விட்டால் வியப்புதான்.
ஆம், உண்மைதான். எங்கோ யாரோ விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தன் சுயத்தை இழந்து அவர்கள் விதைத்த விதையை நாம் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அறுவடை செய்து கொண்டே இருக்கிறோம். எப்பொழுது நாம் (பெண்கள்) விதைக்க ஆரம்பிக்க போகிறோம் என்ற கேள்வியை இவ்வாசிப்பு எனக்குள் விதைத்திருக்கிறது.
நல்ல கருத்துக்களை சொல்லும் இந்த புத்தகத்தில் நான் கண்ட மிகப்பெரிய குறை பல இடங்களில் மெய்ப்பு திருத்தம் சரியாக செய்யப்படவில்லை . அடுத்த பதிப்பில் பூவுலகு நண்பர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
காமப் பொருளாக பார்க்கும் பெண்களை பூவுலகை காக்கும் காப்பாளாராகவும் மாற்றும் விதை எல்லோர் மனதிலும் ஆழப் பதிய வேண்டும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர் | இப்பூவுலகும் பெண்களும் |
| வெளியீடு | பூவுலகின் நண்பர்கள் |
| விலை | ₹.35 |
| பக்கங்கள் | 43 |
| விமர்சனம் | பா. விமலா தேவி |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

