ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் ‘போர்ப்பறவைகள்:போர் விமானங்கள் ஓர் அறிமுகம் ‘ நூல் குறித்து…
வான் பார்த்து மண்ணில் நடந்த மானுடம் வானில் பறப்பதை ஒரு கனவாக நினைத்திருந்தது. அந்தக் கனவை நனவாக்கிய ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்து மூச்சடக்கி எடுத்த முத்தாக முகிழ்த்தது தான் ‘ஆகாய விமானம்’.
மனிதர்களின் மகிழ்வான வான்பறப்பிற்காக கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆச்சரியப் பறவை, அமெரிக்காவால் வாங்கப்பட்டு உலகப்போரில் உக்கிரமான போர்முனை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.
இன்று வல்லரசுகளின் வலிமையான ஆயுதம் போர்விமானம். அந்த விமானங்களைப் போர்ப்பறவையாகப் பாவித்து ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதியுள்ள ‘போர்ப்பறவைகள்’ தமிழில் ஒரு நல்ல முயற்சி.
பயணிகள் விமானத்திற்கும், போர் விமானத்திற்கும் பலப்பல வித்தியாசங்கள். போர் விமானங்களின் நிறுத்து சூட்சுமங்களை எளிய தமிழில் பள்ளி சிறார்களுக்கும் புரியும் வண்ணம் எழுதியிருப்பது தான் இங்கு சிறப்பு.
வானில் பறக்கும் போது போர் விமானிகளுக்கான சவால்கள், அந்த சவால்களை எளிதாக்க ராணுவ விஞ்ஞானிகள் செய்திருக்கும் சூட்சுமங்களை தரைவிட்டுக் கிளம்பி வானில் பறந்து தரையிறங்கும் வரை எழுதியிருக்கும் முறை வாசகர்களை ஒரு போர்முனை விமானியாகப் பறப்பது போன்றும், தேவைப்பட்டால் எப்படி விபத்திலிருந்து தப்பிக்க பாராசூட்டில் பறந்து தப்பிப்பது என்பது வரை எழுதியிருக்கும் விதம் ஒரு விமானத்தைப் போர்முனையில் ஓட்டிய அனுபவத்தையும் கொடுக்கிறது.
இந்திய விமானங்களின் புகைப்படத் தொகுப்பு ஒரு பொக்கிசம்.
போர்ப்பறவையைப் படித்தவுடன் விமானிகள் மேல் ஒரு நன்மதிப்பு வரும். விமானவியலில் ஓர் ஈர்ப்பு வரும். தமிழில் இது மாதிரி புத்தகங்கள் ஒவ்வொரு துறையிலும் வர வேண்டும் என்ற ஆவல் தோன்றும்.
தலைப்பு: போர்ப்பறவைகள்
ஆசிரியர்: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
வெளியீடு:முரண்களரி/திசையெட்டு
தொடர்புக்கு: thizaiyettu@gmail.com