போர்ச்சுகல் நாட்டுப்புறக் கதை “வல்லவனுக்கு வல்லவன்”
– தமிழில் கே.என்.சுவாமிநாதன்
போர்ச்சுகல் கிராமம் ஒன்றில் கேபிரியல் என்ற மனிதன், மனைவி கரோலினாவுடன் வசித்து வந்தான். அவனுடைய பண்ணையில் பீட்டர் என்ற இளைஞன் பன்றிகளை மேய்த்து வந்தான். அவன் எப்போதும் பன்றியுடன் திரிந்து கொண்டிருப்பதால், கிராம மக்கள் அவனை பீட்டர் பன்றி என்று கூப்பிடுவார்கள். பீட்டரின் ஒரே ஆசை, விரைவில் பணக்காரனாக ஆக வேண்டும் என்பது. அவன் வேலையில் திறமைசாலி என்பதால், கேபிரியல் அவன் வேலை செய்வதை கண் காணிப்பதில்லை.
அந்தப் பண்ணையில் ஏழு பன்றிகள் இருந்தன. நல்ல கொழுத்த பன்றிகள். ஒரு நாள் வீட்டினருகில், பீட்டர் பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, வெளியூரிலிருந்து வந்த வியாபாரி ஒருவன் பன்றிகளைப் பார்த்தான். இவற்றை நகரத்தில் விற்றால், நல்ல இலாபம் கிடைக்கும் என்று நினைத்தான். “இந்தப் பன்றிகளை எனக்கு விற்று விடு. நீ கேட்கும் பணத்தைத் தருகிறேன்” என்றான். பன்றி விற்ற பணத்துடன் கிராமத்தை விட்டு ஓடி விடலாம் என்று முடிவு செய்தான் பீட்டர். வியாபாரியிடம் சொன்னான், “உனக்கு ஆறு பன்றிகள் மட்டுமே விற்க முடியும். அதுவும் ஆறு பன்றிகளின் வாலையும், காதுகளையும் அறுத்து நீ என்னிடம் கொடுக்க வேண்டும்” என்றான். இந்த கோரிக்கை விசித்திரமாக இருந்தாலும், நல்ல விலைக்கு பன்றிகள் கிடைத்ததால், வியாபாரி சம்மதித்து, ஆறு பன்றிகளின் வாலையும், காதுகளையும் அறுத்துக் கொடுத்து விட்டு, அவைகளை ஓட்டிச் சென்றான்.
விட்டுச் சென்ற பன்றியை மணல் குழியில் பாதி உடம்பு வெளியே இருக்குமாறு புதைத்தான் பீட்டர். மற்ற பன்றிகளின் வால் மற்றும் காதுகள் பாதியளவு தெரியுமாறு மணல் குழியில் புதைத்து வைத்தான். பெருத்த சப்தத்துடன் முதலாளியைக் கூப்பிட்டான். “மாஸ்டர், பன்றிகள் மணலில் புதைந்து விட்டன. வெளியே எடுக்க உதவி செய்யுங்கள்” என்று கூப்பிட்டான். உதவிக்கு கேபிரியல் ஓடி வந்தான். இருவருமாக பாதி உடம்பு வெளியே இருந்த பன்றியைக் குழியிலிருந்து வெளியே எடுத்தனர். அடுத்த பன்றியை எடுக்க கேபிரியல் அதன் வாலைத் தொட்ட போது அது கையுடன் வந்து விட்டது.
அதிர்ந்து போன கேபிரியல், “பீட்டர், உடனே வீட்டிற்குச் சென்று, என் மனைவியைக் கேட்டு, இரண்டு மண்வெட்டி வாங்கி வா. மண்வெட்டியால் மணலை அகற்றி பன்றிகளை எடுக்கலாம்” என்றான்.
கேபிரியல் தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் இரண்டு பணப் பைகளில் வைத்திருப்பது பீட்டருக்குத் தெரியும். வீட்டிற்குச் சென்ற பீட்டர், “மாஸ்டர், இரண்டு பணப்பைகளையும் வாங்கி வரச் சொன்னார்” என்று அவர் மனைவியிடம் சொன்னான். அவள் அதை நம்பவில்லை. சந்தேகப்பட்டு கேள்வி கேட்டாள். “உங்களுக்குச் சந்தேகம் என்றால் நீங்களே கேளுங்கள்” என்றான் பீட்டர்.
“இரண்டையுமா கொடுத்து விடச் சொன்னீர்கள்” என்று உரத்த குரலில் கணவனிடம் கேட்டாள் கரோலினா. “தாமதிக்காதே, சீக்கிரம் கொடுத்து அனுப்பு” என்றான் கேபிரியல். இரண்டு பணப்பைகளையும் பீட்டரிடம் கொடுத்தாள் கரோலினா.
பணப்பைகளை வாங்கிக் கொண்ட பீட்டர், எதிர் திசையில், பணக்காரனாக விட்ட மகிழ்ச்சியில் வேகமாகச் சென்றான்.
சிறிது தொலைவு வந்த போது, பண மூட்டையைப் பார்த்த திருடன், பீட்டர் கையிலிருந்த பணப்பை ஒன்றைப் பறித்துக் கொண்டு ஓடினான். பீட்டர் அவனைத் துரத்திக் கொண்டு சென்றான். அந்த திருடன் ஒரு மானைக் கொன்றிருந்தான். அதனுடைய ஈரல் அவன் பையில் இருந்தது. அதனை எடுத்தெறிந்த திருடன், பீட்டரிடம் சொன்னான். “நீ என்னைப் பிடிக்க வேகமாக ஓட வேண்டும். என்னைப் போல நீயும் உன் ஈரலை எடுத்து எறிந்தால் தான் வேகமாக ஓட முடியும்” என்றான்.
பணப்பையை திருடனிடமிருந்து பறித்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் சற்றும் சிந்திக்காமல், கையிலிருந்த கத்தியால் ஈரலை எடுக்க முற்பட்ட பீட்டர், இறந்து போனான்.
இதனிடையில், பீட்டர் தன்னை ஏமாற்றி விட்டுப் பணப் பைகளுடன் ஓடிவிட்டான் என்று புரிந்து கொண்ட கேபிரியல், அவனைத் தேடி வந்து கொண்டிருந்தான். இரத்த வெள்ளத்தில் இறந்திருந்த பீட்டரைப் பார்த்துச் சொன்னான்.
“பீட்டர், உன்னுடைய அறிவுத் திறத்தால் என்னை எமாற்றினாய். ஆனால், உன்னை விட புத்திசாலி உன்னை ஏமாற்றி விட்டான்.”
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
தமிழில் எழுதியவர்:
கே.என்.சுவாமிநாதன்
சென்னை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

