நூல் அறிமுகம்: *பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த வரலாறு* – செ. கார்த்திகேயன்நூல்: *பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த வரலாறு*
ஆசிரியர் : யானிஸ் வருஃபாகிஸ், தமிழில் : S.V.ராஜதுரை
வெளியீடு : க்ரியா
விலை ரூ.275/-
பக்கங்கள் : 203.

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தொடங்கி, கிரேக்க,ஆங்கில,ஜெர்மானிய செவ்வியல்(Classic)இலக்கியப் படைப்புகள்,தொன்மங்கள்,அறிவியல்- புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் மகளுக்குப் பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற நூதன முறையில் கிரேக்க நிதித்துறை அமைச்சரும்,பொருளியலாளருமான யானிஸ் வருஃபாகிஸ் எழுதியுள்ள இந்நூல் உறுதியாக *வாசிப்பவர்களின் சிந்தனையை மாற்ற வல்லது* என சொன்னால் , அது மிகையாகாது.

இன்று நம் அனைவருக்குமான மிகப் பெரிய சவால் “பருவநிலை மாற்றம்”. இதைக் கட்டுப்படுத்துவதற்கான அமலாக்க நடவடிக்கைகளின் சுணக்கத்திற்கு நாம் அரசைக் குறைகூறிக் கொண்டிருக்கிறோம். ஸ்திரமற்ற அரசால் செய்ய இயலாதவற்றை, தனியாருக்கு ஒப்படைத்தால் சரியான மேலாண்மையால் மீட்டெடுக்கவோ,தக்க வைக்கவோ முடியும் என்கிற கருத்து நிலையும் எதிர்முனையில் வளர்ந்து கொண்டே இருப்பதற்கு , நாம் அனைவருமே சமகால சாட்சியங்களாக இருக்கின்றோம்.அணைகள்,காடுகள்,ஆற்றல் துறைகள்,கடல்வளங்கள் உள்ளிட்ட பல இயற்கை ஆற்றல்களை நிர்வகிக்கின்ற பொறுப்பை , இன்று பல நாடுகளும் (இந்தியா உட்பட)தனியாருக்கு தாரை வார்த்துக்கொண்டிருக்கின்றன.கறார் அணுகுமுறைகளும்,தொடர்ச்சியான கண்காணிப்பும் தனியார் துறையில் சாத்தியமென்கிற விளக்கமும் அளிக்கப்படுகிறது.

ஆனால்,இது தீர்வை நோக்கி அழைத்துச் செல்லுமா? அல்லது மேலும் சிக்கலுக்கு இட்டுச் செல்லுமா? என்றால் , நூலாசிரியர் சிக்கலை நோக்கித்தான் நகரும் என்பதற்கு ஆணித்தரமான சான்றுகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றார்.

பொருட்களுக்குண்டான பரிவர்த்தனை மதிப்பின் வழியே ” அனைத்தையும் சரக்குத்தன்மையாகக் கருதுவது” என்கிற புவிக்கோளத்திற்கே பாதகமான கருத்தாக்கம் வலுவாக மேலோங்கி வருவதை சுட்டிக் காட்டி, “அனைத்தையும் ஜனநாயகப்படுத்துவதே” உண்மையான தீர்வாக அமையமுடியும் என்கிற சாதகமான அணுகுமுறைகளுக்கான சாத்தியக்கூறுகளையும் வரிசைப்படுத்தி விளக்குகிறார்.சந்தைகள்,ஜனநாயகம் ஆகிய இரண்டிலும் நாம் வாக்களிக்கிறோம். தேர்தல்களில் , எந்தக் கட்சி அல்லது திட்டம் அதிக வாக்குகள் பெறுகிறதோ அதனால் மட்டுமே அரசியலில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதையொத்த ஒன்றுதான் சந்தையிலும் நிகழ்கிறது.நுகர்வோரின் விருப்பங்களை பின்னூட்டமாகப் பெறுவதன் வழியே, தொடர்ந்து அப்பொருட்களுக்கான உற்பத்தியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

அரசியலை குறைந்த பட்ச ஜனநாயகம் நிர்ணயம் செய்தால், சந்தைகளை அதிகபட்ச பங்குகள் நிர்ணயம் செய்கின்றன. நமது ஜனநாயகங்கள் குறைபாடுள்ளவையாகவும் ஊழல் படிந்தவையாகவும் இருந்தாலும் கூட , அவற்றால் தான் இந்தப் புவிக்கோளத்தைப் பாதுகாக்க முடியும்.
பங்குதாரர்களால் அல்ல. ஒவ்வொரு மனிதனும் நுகர்வோராகிறான். சந்தைப் பொருளாதார சமூக அமைப்பு ஒங்வொருவருக்கும் இரண்டே வாய்ப்புகளைத்தான் வழங்குகிறது.

1).எனக்கு ‘X’ வேண்டும்

2).நான் ‘X’யை விரும்ப வேண்டுமா ?

இந்த இரண்டு வாய்ப்புகளுக்குமிடையேயான மோதல்கள்தான் சந்தையையும்,நம்மையும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. அதிருப்தியும் அதேபோல் திருப்தியும் இல்லாமல் அசலான மகிழ்ச்சி என்பது சாத்தியமில்லை.

“திருப்தியால் அடிமைப்பட்டிருப்பதைவிட , அதிருப்தியடைவதற்கான சுதந்திரமே நமக்குத் தேவை” என்கிற விளக்கம் கொஞ்சம் சுருக்கென்று குத்தியது.

“சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கங்கள், பெரும்பான்மை ஏழை மக்களின் இடையூறு இல்லாமல், தங்கள் விருப்பம்போல உபரியை விநியோகிக்கவும் தங்கள் அதிகாரத்தைப் பேணி பாதுகாத்துக்கொள்ளவும் முடிந்தது எப்படி ?

” தங்களின் ஆட்சியாளர்களுக்கு மட்டுமே ஆள்வதற்கான உரிமை உள்ளது என்று பெரும்பான்மையான மக்கள் தங்கள் இதயத்தின் ஆழத்தில் நம்பச் செய்கிற ஒரு கருத்துநிலையை உருவாக்குவதன் மூலம்தான்”. ஆதிக்கம் ஒவ்வொன்றுக்கும் அதை நியாயப்படுத்தும் ஆதிக்கக் கருத்துநிலையொன்று தேவைப்படுகிறது.அந்த ஆதிக்கம் தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும், அதை சந்தேகிக்கிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2019-04-13  by Olaf Kosinsky-0658 (cropped).jpg
Yanis Varoufakis

இது மெசபடோமியா காலத்தில் இருந்து இன்று வரை , இந்தக் கருத்துநிலை பாதுகாப்பாக பேணப்பட்டும் வருகிறது. துவக்க காலத்தில் இதற்கு மதம்,நம்பிக்கை,கடவுளர்கள், மூடநம்பிக்கைகள் துணை போயின. நவீன மறுமலர்ச்சிக் காலத்தில் அறிவியலின் தெய்வீகத்தன்மை நிறைந்த அணுகுமுறைகளும் இதற்குத் துணைநின்றன. நூலாசிரியரின் “பொருளியலாளர்கள் மீதான கோபமும்” குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை பொருளியலாளர்களின் வெளிப்பாடு என்பது ஆருடமொழியாகவே உள்ளன எனக் கவலையும் கொள்கிறார்.

சந்தை சமுதாயங்களின் சிக்கல்கள் குறித்து பொருளியலாளர்கள் முன்னரே அவதானித்து இருக்க முடியும். அதன் சிக்கல்களை வலுவாக பொது சமூகத்திடம் சேர்த்திருக்கவும் முடியும். ஆனாலும் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர். பின்னர் தவறவிட்டமைக்கும்,சிக்கல்களுக்கும் சேர்த்து சமன்படுத்தும் வேலையை “ஒரு புதிய கோட்பாட்டின்” வாயிலாக உருவாக்குவது சிக்கலின் தன்மையை மேலும் வலுவாக்குகிறது . இந்த சமன்படுத்தும் வேலையையும், முன்னுணராத் தன்மையையும் கொண்டே பொருளியலார்களை கடுமையாக சாடவும் செய்கிறார்.

முன்னுரை,முடிவுரை தவிர்த்து 8 அத்தியாயங்களில் உலகின் புற இயக்கத்தின் ஆதாரத்தன்மையான ” பொருளியல்” குறித்து அலசி ஆராய்கிறார். அதே நேரத்தில் அவர் விளக்கும் பாங்கு 8 வது படிக்கும் குழந்தைகளுக்கே எளிதில் விளங்கத்தக்கது.

“ஏற்றத்தாழ்வுகள் எப்படி உருவாகின்றன ?

உணவு உற்பத்தியாளராக மாறிய சமூக அமைப்பில் இருந்து , படிப்படியாக மாற்றம் கண்டு, இறுதியில் சந்தை சமுதாயமாக மாறியிருப்பது வரையிலான வரலாற்றுப் போக்குகள்,

கடன் என்றால் என்ன ? இலாபம் என்றால் என்ன ? இந்த இரண்டுக்குமான நெருங்கிய தொடர்பு எப்படியானது ?

தற்பொழுது அதிகம் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் வங்கித் தொழிலின் மாயபிம்பங்கள்

உழைப்புச் சந்தை, பணச் சந்தை – இவை இரண்டும் எப்படி ஆருடத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன ?

நாம் இயந்திர அடிமைகளா அல்லது இயந்திர எஜமானர்களா ?

அரசின் உத்தரவாதத்தையும்,நம்பிக்கையையும் கடந்த புதிய ஒரு வடிவத்திற்கு “பணம்” பயணப்படுவதன் அபாயங்கள் என்னென்ன ?

புவிக்கோளத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் முட்டாள் வைரஸ்களாக நாம் இருந்தாலும், எஞ்சியுள்ள ஜனநாயகக் காவலர்களாகவும் இருப்பதால் நமக்குக் கிடைக்க உள்ள அனுகூலங்கள் என்னென்ன ?

– என்பனவற்றை 8 அத்தியாயங்களில் மிகத் தெளிவாக, சுருக்கமாக, எளிய விளக்கங்களுடன் விளக்குவது பணம், கடன் அட்டை, கடன், வட்டிகளை சுமந்து கொண்டிருக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வாமையாகவும், ஒப்பற்றதாகவும் ஒருசேரத் தெரிகின்றன.

இந்த வருடத்தின் முதல் புத்தக வாசிப்பு என்றாலும், தரமான நிதானமான வாசிப்பு. அவசியம் இந்நூலை வைத்து அனேக இடங்களில் ஆரோக்கியமான உரையாடலை நடத்தினாலே போதுமானது. பல பரிமாணங்களின் வழியே இந்த உலகின் கடந்த காலமும்,எதிர்காலமும் துல்லியமாக புலப்படும் என்பதற்கு நானும் ஓர் சாட்சி.

மூத்தவர்கள் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், S.V.R அவர்களின மேன்மையான பணியினை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

அவசியம் ஒவ்வொருவர் இல்லத்திலும் வாசிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டிய நூல் !

அறிமுகம்
செ.கா.