
ஆப்பிரிக்கா, வட , தென் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களுக்கும் யுரேசியாவிற்கும் இடையே நிலவிய வேறுபாடுகள் , ஒரு நாட்டின் சமூகங்களுக்கு உள்ளேயே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்துமான வரலாற்றுப் பின்புலம் மூலம் துவக்க கால காலனியாதிக்க முதலாளித்துவ வளர்ச்சி விளக்கப்படுகிறது.
சந்தைத் சமுதாயத்தின் பிறப்பு குறித்த அத்தியாயத்தில் ஒரு பொருளுக்கு இருக்கும் இருவகை மதிப்புகள் குறித்து குறிப்பிடுகிறார். வழக்கமாக நாம் அறிந்தது உபயோக மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு ஆகியவை தான். ஆனால் இதில் அனுபவமதிப்பு( experiential value)என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.உதாரணமாக ஒருவர் ஒரு கதை சொல்வதாகவோ, பாடுவதாகவோ வைத்துக்கொள்வோம் .அதில் பிறருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது அனுபவ மதிப்பு . அவற்றுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுவே பரிவர்த்தனை மதிப்பாகிவிடுகிறது. எனவே ஒரு திரைப்படத்தை அல்லது நாடகத்தை பணம் கொடுத்துப் பார்த்தால் அதில் கிடைக்கும் அனுபவ மதிப்போடு பரிவர்த்தனை மதிப்பும் உள்ளடங்கியிருக்கிறது. இந்த உபயோக மதிப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் தனியாக அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டு விளக்கியிருப்பது நல்ல அம்சம்.
கடனுக்கும் ,லாபத்திற்கும் திருமணம் என்கிற அத்தியாயம் கடன் என்பது எவ்வாறு தோன்றியது என்பதன் மூலத்தையும், அதற்கும் லாபத்திற்குமான உறவையும் எடுத்துச் சொல்கிறது . மார்லோ என்கிற நாடக ஆசிரியர் ஃபவுஸ்டஸ் என்கிற மந்திரவாதியின் பாத்திரத்தை மையமாக வைத்து “டாக்டர் ஃபவுஸ்டசின் வாழ்க்கையும் மரணமும் பற்றிய அவல வரலாறு”என்கிற நாடகத்தை 16ம் நூற்றாண்டில் எழுதினார். சாத்தான் தனது பிரதிநிதிமூலம் பல வரங்களைத் தருவதாகவும், ஆனால் 24 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தனது ஆன்மாவைத் தந்து விட வேண்டும் என்ற வாக்குறுதியை ஒத்துக் கொள்கிறான்.24 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்த வாக்குறுதியை மீற நினைக்கும் ஃபவுஸ்டசின் ஆன்மா சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடுகிறது. இந்தக் கதை அடிக்குறிப்பு மூலம் மொழிபெயர்ப்பாளரால் சற்று விரிவாக விளக்கப்படுகிறது. அனுபவமதிப்பின் மீது பரிவர்த்தனை மதிப்புகள் மெல்ல மெல்ல வெற்றி கண்டு வந்த இக்கால கட்டத்தில் மார்லோ எழுதிய இந்த நாடகம் தற்செயலானதல்ல என்கிறார் யானிஸ். கடனைத் திருப்பித் தர வேண்டும் என்கிற நல்லொழுக்கத்தைப் போதிக்கிறது .
பிற்காலத்தில் சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு கிறிஸ்துமஸ் பாட்டு என்னும் நாவல் எழுதினார்.அதில் வரும் எபினேசர் குரூப் என்கிற பாத்திரம் மலையளவு வட்டியைச் சேமித்துக் கொண்டு மிகவும் குறைந்த தொகையை மட்டுமே செலவழிக்கும் ஒரு கஞ்சனா க படைக்கப்பட்டிருக்கும்.கதையின் முடிவில் அவனது சாவின் வருகையை கிறிஸ்துமசின் ஆவி அவனுக்குஉணர்த்துகிறது .அவனது சாவை அறிந்த, அவனிடம் கடன் வாங்கிய ஒருஏழைத் தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் .இதை அறியும் எபினேசர் அப்போதுதான் உண்மையை அறிந்து கொள்கிறான். தனது பணப் பெட்டியைத் திறந்து பணத்தைச் செலவழிக்கிறான் அவன். எல்லோருக்கும் பணத்தை அள்ளி வழங்குகிறான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலகட்டத்தில் எழுதப்பட்ட கதேயின் நாடகம் இதற்கு முற்றிலும் நேரெதிரான அறத்தைப் போதிக்கிறது. அசலையும், வட்டியையும் திருப்பித் தருவதை நல்லொழுக்கமாகப் போதிக்கிறது. இதில் பழைய ஃபவுஸ்ட் போலன்றி கடனைத் திருப்பும் புதிய ஃபவுஸ்டைப்’ படைக்கிறார். இதன் மூலம் தனது 24 ஆண்டுகால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கிறான்.இந்த இரண்டு படைப்புகளில் கதேயின் படைப்புதான் புதிய சமுதாயத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறது. ஏனெனில் கடன் வாங்காமல் செலவழிக்காமல் செல்வத்தை சேமித்துவைத்துப் பூட்டி வைத்திருந்தால் சந்தைச் சமுதாயப் பொருளாதாரம் அப்படியே அசையாது நின்றுவிடும்.
மேரி ஷெல்லி எனும் எழுத்தாளர் டாக்டர் விக்டர் ஃபிராங் கென்ஸ்டைன் பற்றிய கதையை எழுதினார். சாவை வெல்லப் புறப்பட்ட ஒரு நல்ல மருத்துவரின் கதை அது. பல்வேறு இடங்களிலிருந்து உறுப்புகளை எடுத்துத் தைத்து ஒரு உடலை உருவாக்குகிறார் டாக்டர் . பிறகு மின்சாரத்தின் மூலம் மந்திர சக்தியைப் பாய்ச்சி அதற்கு உயிர் கொடுக்கிறார். ஆனால் அந்த மனிதன் பயங்கரமூர்க்கத்துடன் பலரைக் கொலை செய்கிறான். தன்னைப் படைத்த ஃபிராங் கென்ஸ்டைனையும் கொலை செய்கிறான். மேரி ஷெல்லியின் இந்த நாவல் சமுதாயத்தின் மீது தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைப் பற்றி ஒரு எழுத்தாளனின் பதற்றத்தை பிரதி லிக்கிறது. இந்த நாவல் மார்க்ஸ் மிகவும் விரும்பிப் படித்த நாவல் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

டெர்மினேட்டர் திரைப்படத்தில் புவிக்கோள்த்தை உடைமையாக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு மனிதர்களை ஒழித்துக் கட்டுகின்றன இயந்திரங்கள். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ‘தி மேட்ரிக்ஸ்’ என்னும் திரைப்படம் மனிதர்களை உயிரோடு வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து தங்களை இயக்கிக் கொள்வதற்கான சக்தியைப் பெறுகின்றன. இந்த அடிமை வாழ்வில் நம்பிக்கையற்றுப் போன மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து விடுவார்கள் என்பதை அறிந்த இயந்திரங்கள் அவர்கள் மூளைக்குள் மெய்நிகர் எதார்த்தம் என்பதை திணிக்கின்றனர். இதன் மூலம் மனிதர்கள் தாங்கள் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்வதாக உணர்கின்றனர் தாங்கள் அடிமைப்பட்டு விட்டதையோ, சுரண்டப்படுதையோ அவர்கள் உணர்வதில்லை. திரைப்படத்தில் கற்பனையாகச் சொல்லப்படும் இந்த எதிர்கால நிகழ்வுகள் நம்மிடையே ஒரு பதற்றத்தை உருவாக்குகிறது. காரணம் அவை நிகழ்காலத்தை ஒருவகையில் நம்மிடம் பேசுவதுதான்.
“புகழ் பெற்ற புரட்சிகரச் சிந்தனையாளர் கால்மார்க்ஸ் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி சாதனங்கள் – இயந்திரங்கள்- ‘தலை சாய்த்து வணங்கவேண்டிய சக்தி’யாகி விட்டதாக ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினார். இந்த நிகழ்முறை பரிபூரண மாற்றப்பட்டுள்ளதை தி மேட்ரிக்ஸ் சித்தரிக்கிறது என்று சொல்லலாம் சந்தைச் சமுதாயம் என்ற பரிணாமத்தை நோக்கி நம்மைத் அளிக்கிறதோ அது போன்ற நிலைமையைத்தான் அந்தத் திரைப்படம் நமக்கு காட்டுகிறது.”
“இருப்பினும் நமக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையிலான பாதுகாப்பு அம்சம் ஒன்று நமது பொருளாதாரத்துக்குள்ளேயே இருப்பதாக மார்க்ஸ் கருதுகிறார். சந்தைச் சமுதாயத்தின் பகுதியாகவே இருப்பதும், உழைப்பு இயந்திர மயமாக்கப்படுவதால் வலுப்பெறுவதுமான போக்குதான் அது. மானுட உழைப்பாளர்களிடமிருந்து உற்பத்தி நிகழ்முறை முழுவதையும் இயந்திரங்கள் எடுத்துக் கொள்வதற்கு முன்பே ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் போக்குதான் அது. அந்தப் போக்கு பொருள் உற்பத்தியிலிருந்து மானுட உழைப்பை அப்புறப் படுத்துவதைத் தடுத்து நிறுத்துகிறது ”
வங்கித் தொழிலின் பில்லி சூனியம், ஆருடச்சக்தியின் கீழுள்ள சந்தைகள், பேய் இயந்திரங்கள், அரசியல் தன்மையற்ற பணம் என்ற அபாயகரமான கற்பனை, முட்டாள் வைரஸ்கள் என்று இத்துடன் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் முதலாளியத்தின் சுருக்கமான வரலாற்றை எடுத்துரைக்கின்றது. முடிவுரையில்சொல்லப்படும் தி மேட்ரிக்ஸ் திரைப்படத்திற்கும் ஹால்பெவாமோ என்னும் அறிவியல் புனைகதைக்கும் இடையிலான ஒப்பீடு படித்து ரசிக்க வேண்டிய பகுதி. இந்த நூலை – மொழியாக்கம் செய்துள்ள எஸ்.வி ராஜதுரை அவர்கள் இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்ய எடுத்துக் கொண்ட அக்கறையும், உழைப்பும் குறிப்பிடத்தக்கது. அவரது அடிக்குறிப்புகள் நூலை மேலும் செழுமையுறச் செய்கிறது. இந்த நெருக்கடி மிகுந்த கால கட்டத்திலும் இந்நூலைமிகச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ள க்ரியா ராமகிருஷ்ணன் பாராட்டுக்குரியவர்.அரசியல், சமூக மாற்றத்திற்கான களச் செயல்பாட்டாளர்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய நூல்.

