தமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்..! – பெ. துரைராசு &  லி.வெங்கடாசலம்

 

முன்னுரை:  

COVID -19 பெருந்தொற்றும் அதைத்தொடர்ந்த ஊரடங்கும் இந்தியாவின் சுற்றுச்சூழல்  துறையில்  பல விரும்பத்தக்க, நேர்மறையான மாற்றங்களை விளைவித்துள்ளனமுக்கிய நகரங்களில்  காற்றின் தரம் உயர்தல், அநேகமான நதிகளில் நீரின் தன்மை அதிகரித்தல் மற்றும் நகர்ப்புறங்களில் திடக் கழிவுகளின் உற்பத்தி குறைதல் போன்ற முக்கியமான சிலமாற்றங்கள் இதில் அடங்கும். இவை குறுகிய கால மாற்றங்களேயாயினும், இவற்றில் சில மகத்தானவை. உதாரணமாக, கங்கை நதியின் மாசுபட்ட நீரை குடிநீரின் தரத்திற்கு  உயர்த்தியது ஊரடங்கின் ஒரு உன்னத சாதனையாகும். இது, 1987ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில்  ரூ. 4800 கோடி  செலவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால்   எடுக்கப்பட்ட கங்கையை தூய்மைப்படுத்தும் பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளால்கூட சாதிக்க இயலாத ஒரு சாதனையாகும்  

உலகச்  ‘சுற்றுச்சூழல் செயலாக்க குறியீட்டின்’ படி   பெருந்தொற்றுக்கு முன்னர் இந்தியாவில்  சுற்றுச்சூழலின் தரம் மிக மோசமான நிலையிலேயே  (அதாவது 180 நாடுகளில் இந்தியா 168 வது இடத்தில்இருந்துள்ளது. 2017 ம் ஆண்டில் மட்டும், சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் இந்தியாவில் சுமார் 23.7 லட்சம் பேர் இறந்துள்ளனர். 2013ம் ஆண்டில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் ஏற்பட்ட மொத்தப்    பொருளாதார இழப்பு ரூ.  3.7 லட்சம்  கோடியாகக் கணக்கிடப்பட்டதுஇது, 2009ம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த தேசிய வருவாயில் சுமார் 5.7 சதவீதமாகும். ஆனால், எளிதில் அளவிட  இயலாத  ஏனைய பொருளாதார (உதாரணம், நோய்க்கான  செலவு) மற்றும் பொருளாதாரம் சாராத (உதாரணம், சூழல் சீர்கேட்டால் ஏற்படும் மனம் சார்ந்த பாதிப்பு) இழப்புக்கள் பன்மடங்காகும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் ஏற்படும் இரண்டாம் கட்ட பாதிப்புகள் மக்களுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குப் புலம் பெயர்தல் அவற்றில் ஒன்றுஅவ்வாறான புலம்பெயர்தல் கிராமப்  புறங்களில் போதுமான அளவுக்கு  வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் விவசாயம் பொய்த்துப் போவதனாலேயே ஏற்படுகின்றது. விவசாயம் பொய்ப்பதே நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவது மற்றும் நீர்நிலைகள் அழிவது போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் நேருவதால், பெருவாரியான புலம்பெயர் மக்கள்சுற்றுச்சூழல் அகதிகளாகவே’ கருதப்படுகின்றனர். இதிலிருந்து பெருந்தொற்றின் போது  நிகழ்ந்த பின்னோக்குப் புலம்பெயர்தலுக்கு அடிப்படைக்காரணம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளே என்பதை அறியலாம். நகர்ப்புறங்களிலிருந்து திரும்பிய பெரும்பாலான மக்கள் பெருந்தொற்றுக்குப் பின்னரும் கிராமங்களிலேயே தங்கிவிடக் கூடும் என்பதால், முன்னரே பாதிப்புக்களான சூழலில் அது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, இனி வரும் காலங்களில்தற்சார்புப் பொருளாதாரம்’ என்பது கொரோனாவுக்குப் பிந்தைய ‘புதிய நடைமுறையாக’ இருக்குமாதலால், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே அவ்வாறான பொருளாதாரத்தை பலம் வாய்ந்ததாகவும் மற்றும் நிலைப்படுத்துவதாகவும் அமையும்.

பொதுவாக, பொருளாதார வளர்ச்சியும், சூழல் மேம்பாடும் எதிர் எதிர் திசையில் நகர்வதால், ஊரடங்கின்போது  சூழலில் ஏற்பட்ட நேர்மறை மாற்றங்களை பொருளாதார இழப்பு என்ற பெரும் விலையைக் கொடுத்தே பெற்றோம்! ஆகவே, ஊரடங்கை விலக்கிக்கொள்ளும்போது உற்பத்தி மற்றும் நுகர்வில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள் மீண்டும் சூழல் சீர்கேட்டைத் தோற்றுவிக்கும்!    இச்சீர்கேடு மக்களின் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதால், பெருந்தொற்று அவர்களை எளிதில் ஆட்கொள்ளும். எனவே, சுற்றுச்சூழல் மேம்பாடு என்பது மக்களின் உடல்நலத்தைப்பேணி பெருந்தொற்றிலிருந்து அவர்களை  இப்போது மட்டுமின்றி எப்போதும் காப்பதாகும்; மேலும், கிராமப்புறங்களில் வாய்ப்புக்களை அதிகரித்து, புலம்பெயர்தலை  கணிசமாகக் கட்டுப்படுத்தி, மக்களின் நல்வாழ்வையும்  மேம்படச்செய்யும் தன்மை கொண்டது. ,

தமிழகம் சிறந்த இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளபோதிலும்தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப் புறங்களிலிருந்து வரும் மாசு, திடக்கழிவு, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல், நிலம் பாழ்படுதல், கடல் அரிப்பு, கடல்நீர் உட்புகுதல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிவது  போன்ற மிகச்சீரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.   சுற்றுச்சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு சில இடங்களில் இடங்களில் நிகழ்த்தப்பட்ட கள ஆய்வின்படி, தொழிற்சாலைகளிலிருந்து வரும் மாசுக்களின்  தாக்கத்தினால் அப்பிராந்தியத்தின்  நிலைத்த பொருளாதார வளர்ச்சியே கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பது தெளிவு. சூழல் மாசுபாட்டால் நமது மாநிலம்  முழுவதிலும்  ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தை இதுவரை நாம் அளவீடு செய்யவில்லை என்பதனால், தற்போது நடைமுறைப் படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தின் தன்மை மற்றும்  அளவு கொள்கைகளை    நடைமுறைப்படுத்துவோர்  கவனத்திற்கு வராமலேயே  போய்விடுகிறது. தற்போது மாநிலத்தின் பெருவாரியான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் சூழல் பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகள்திருப்பூர், கரூர் மற்றும் ஈரோட்டில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள்; சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள்; தூத்துக்குடியில் உள்ள தாமிர ஆலை; சேலம்சென்னைக்கிடையே முன்மொழியப்பட்ட 8 வழிச்சாலை; தஞ்சாவூரின் காவேரிப் படுகையில் நிறுவப்படும் எரிவாயுக்  கிணறுகள்; தேனியில் நிறுவப்படும் நியூட்ரினோ திட்டம்; கன்னியாகுமரியில் வர இருக்கும் இனயம் துறைமுகம் போன்றவை இதில் அடங்கும். எனவே, வருங்காலங்களில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது அரசாங்கம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எவ்வாறு தகுந்த நடவடிக்கைகள் மூலம்  செவ்வனே கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். எனவே, மாநில அரசு இந்த பெருந்தொற்றுக் காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சுற்றுச்சூழலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன்மூலம் மாநிலதிலுள்ள மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேச நலனையே மேம்படுத்த இயலும். இதனடிப்படையில், இந்தக் கட்டுரையின் மூலம்  சுற்றுச்சூழலை மேம்படுத்தி நிலைத்த பொருளாதாரத்தை வளப்படுத்த  நாங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகைகளை முன்மொழிகிறோம்.

tamil nadu: Tamil Nadu reports highest ever single day spike in ...

குறுகியகால நடவடிக்கைகள்:

மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனங்களை உள்ளடக்கிய  பகுதிகளில் பெருந்தொற்று காரணமாக போடப்பட்ட தடைகளை குறைந்தது இந்த ஆண்டு இறுதிவரையாவது நீட்டிப்பதன்மூலம் வனம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் புத்துயிர்பெரும் நிகழ்வு மேலும் சில காலம் தொடர ஏதுவாகும். மாநில அரசு 2020 ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய  ஈர நிலங்களுக்கான அறிவிப்பை வெளியிடவேண்டும். இதன்மூலம், மாநிலத்தின் விலைமதிப்பற்ற ஈர நிலங்களைப் பாதுகாக்க தனிக்  கவனம் செலுத்த இயலும். நகர்ப்புறங்களில் பசுமைப்   போர்வையை விரிவாக்குவதனால் காற்று மற்றும் ஒலி  மாசுபடுதலை வெகுவாகக் குறைக்கமுடியம். ஆகவே, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமை மரங்களின் எண்ணிக்கையை  அதிகரிக்கவும் மற்றும் அதைக் கண்காணிக்கவும்  மர அலுவலர்களை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

நீண்டகால நடவடிக்கைகள்:  

பசுமை ஜிடிபி: மொத்த தேசிய வருவாய் (ஜிடிபி) என்பது நாட்டின் பொருளாதார நலனை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். ஆனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாததனால், தற்போது அளவிடப்படும் தேசிய வருவாயானது மாநிலத்தின் பொருளாதார நலனை பரிமளிக்கும் ஒரு குறியீடாகக் கருத முடியாது.  மானுடம் மற்றும் சூழலுக்கிடையே கீழ்கண்ட மூன்று வித தொடர்புகள் உள்ளன:

அ) மனிதர்கள் தங்கள் நுகர்வு மற்றும் உற்பத்தி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் சுற்றுச்சூழலிலிருந்து கிடைக்கும் எண்ணிலடங்காத விலையற்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆ) நுகர்வு மற்றும் உற்பத்தியால் விளைவிக்கப்படும் மாசு போன்ற எதிர்மறை வெளிப்பாடுகள் மேற்சொன்ன சூழல் சேவைகளைக் குலைப்பதனால் ஏற்படும் பொருளாதார இழப்புக்களை மனிதர்கள் சுமக்க நேரிடுகிறது; மேலும் 

இ) எதிர்மறை வெளிப்பாடுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மனிதர்கள் ‘சூழல் பாதுகாப்பு செலவை’ மேற்கொள்ளவேண்டியுள்ளது.

ஒரு பக்கம், எண்ணற்ற சூழல் சேவைகளின் பண மதிப்பை மாநில தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை. எனவே, மாநில ஜிடிபி குறைத்து மதிப்பிடப்படுகிறது. மறு பக்கம், சூழல் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார இழப்புக்களையும்  மற்றும் சூழல் பாதுகாப்பு செலவையும்  மாநில ஜிடிபியில் கழிக்காமல் கணக்கிடுவதில் அது மிகைப்படுத்தப்பட்ட  மதிப்பீடாகிறது. உதாரணமாக, திருப்பூரில் இயங்கும் பின்னலாடை தொழிற்சாலைகள் 2018-19ம் ஆண்டு   சுமார் ரூ. 50,000 கோடி வருவாய் ஈட்டின. இது மாநில ஜிடிபியில் வருவாயாகக் காட்டப்படுகிறது. ஆனால், இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகளினால் ஏற்படும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருளாதார இழப்பு (உதாரணமாக, உடல் நலம் பாதிப்படைவதனாலும், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படுவதானாலும், மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிவதனாலும் ஏற்படும் இழப்புக்கள்) மற்றும் சூழல் பாதுகாப்புச் செலவு (உதாரணமாக, நோய்த் தடுப்பு மருத்துவச் செலவு, மண் வளப் பாதுகாப்புச் செலவு போன்றவை) சரியான முறையில் கணக்கிடப்பட்டு மாநில ஜிடிபி யிலிருந்து கழிக்கப்படுவதில்லை. எனவே, தற்போதைய மாநில ஜிடிபி இயற்கை வளம் சார்ந்த நிலைத்த வளர்ச்சியையோ அல்லது உண்மையான பொருளாதார நலனையோ வெளிப்படுத்தும் சரியான குறியீடாக அமைவதில்லை.  ஆகவே, விலையற்ற சூழல் சேவைகளின் பண மதிப்பையும், சூழல் சார்ந்த பொருளாதார இழப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு செலவு ஆகியவற்றை  முறையாக அவ்வப்போது  கணக்கிட்டு பசுமை ஜிடிபி யைத்  தயாரிக்கும்பட்சத்தில் மாநிலத்தில் முறையான சூழல் கொள்கைகளை வகுப்பதோடு, மாநிலத்தின் நிலைத்த வருவாயை உறுதி செய்து சமூகத்தின் பொருளாதார நலனையும் மேம்படுத்த முடியும்.    

சூழல் கணக்கீட்டு அமைப்பு:  சூழல் கணக்கீட்டு அமைப்பு என்பது பசுமை ஜிடிபியைக் கணக்கிடவும் மற்றும் மாநில வருவாயின் நிலைத்த தன்மையைக் கண்காணிக்கவுமான ஒரு முன் நிபந்தனையாகும். இவ்வமைப்பு நீர்வளம், காட்டுவளம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் ஆகிய இயற்கை வளங்களைக் கணக்கிடவும் மற்றும் பொருளாதாரத்திற்கும் சூழலுக்கும் உள்ள தொடர்பைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது. இவ்வமைப்பை இயற்கை வளங்களின் இருப்பு மற்றும் அதிலிருந்து பெறப்படும் சூழல் சேவைகளின் அளிப்பு   ஆகியவற்றை தொடர்ந்து அளவிடப் பயன்படுத்த வேண்டும். இவ்வமைப்பு இரு பகுதிகளைக் கொண்டது: ஒன்று, வளங்களின் இருப்பு மற்றும் சேவைகளின் அளிப்பைத் திண்மை அலகுகளில் கணக்கிடுவது; மற்றொன்று, அவற்றைப் பண மதிப்பின்மூலம் கணக்கிடுவது. ஒரு ஆற்றுப் படுகையை எடுத்துக்கொண்டால், அதில் கணக்கீடு தொடங்கும் நாளில் கிடைக்கக்கூடிய மொத்த நீரின் இருப்பின் அளவு,  இருப்பில் தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய மழை நீர், பயன்பாட்டுக்குப் பிறகு  திரும்பி வரும் நீர், துணை ஆறுகளிலிருந்து வரும் நீர், மற்ற ஆற்றுப் படுகைகளிலிருந்து கொண்டுவரப்படும் நீர் போன்றவற்றால் ஏற்படும் ‘அதிகரிப்பு’ மற்றும் பயன்பாட்டுக்காக எடுக்கப்படும் நீர், வடி நீர், மற்ற ஆற்றுப் படுகைகளுக்கு எடுத்துச்செல்லப்படும் நீர், ஆவியாதல் போன்றவற்றால் இருப்பில் ஏற்படும் ‘குறைவு’ ஆகியவற்றைக் கணக்கிடுவதன்மூலம் கணக்கீட்டு  ஆண்டின் இறுதியில் கிடைக்கும் நீரின் அளவை அறியலாம். ஆண்டின் தொடக்க இருப்பையும், இறுதி இருப்பையும் சமன் செய்து, நீரின் இருப்பு மிகையாகவோ அல்லது பற்றாக்குறையாகவோ உள்ளதை அறிந்து, நீரின் பகிர்ந்தளிப்பில் தகுந்த மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அதேபோல், விவசாயத்திற்கு எவ்வளவு நீர் செலவாகிறது, பயன்படுத்தப்படும் நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறதா, விவசாயத்தைப் பாதிக்காமல் அதில் பயன்படும் உபரி நீரை வேறு நடவடிக்கைகளுக்குப் பகிர்ந்தளிக்க முடியுமா என்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க திண்மை அலகில் மேற்கொள்ளப்படும் கணக்கீடு சிறந்தது. இருப்பினும், இம்முறை சில பிரச்சினைகளை உள்ளடக்கியது. உதாரணமாக, சூழல் சேவைகளை வேறுபட்ட அலகுகளினால் (நீரை லிட்டரிலும், சுற்றுலாப் பயனை பயணிகள் எண்ணிக்கை அடிப்படையிலும்)  கணக்கிடும்போது அவற்றின் கூட்டு மதிப்பை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல், பல சூழல் சேவைகள் (கலாச்சாரம் போன்றவை) ‘தரம்’ சார்ந்தவை என்பதால் அவற்றை திண்மை அலகில் கணக்கிட இயலாது. எனவே, இயற்கை வளங்களையும் சூழல் சேவைகளையும் ‘பணமதிப்பில் கணக்கிடும் முறை’ சிறந்ததாகக் கருதப்படுகிறது. இயற்கை வளங்களின் இருப்பு அதிகரிக்கும்போதிலும், மாசு போன்ற பிரச்சினைகளால் இருப்பிலிருந்து பெறக்கூடிய சூழல் சேவைகளின் தரம் மோசமடையும். ஆற்றில் நீர் கரைபுரண்டோடும்போதிலும், அது மாசு பட்ட நீராயின் அதை எதற்கும் பயன்படுத்த முடியாதல்லவா? எனவே, திண்மை அலகுக்  கணக்கீட்டு முறையை,  மாசு மற்றும் பல்லுயிர்பெருக்கத்தில் ஏற்படும் தாக்கம் போன்றவற்றிக்கேற்றவாறு மாற்றியமைக்கும் பட்சத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகளை சிறப்பான முறையில் வடிவமைக்க முடியும். அரசாங்கம் இதற்கான முயற்சியை மேற்கொள்வது இன்றியமையாதது.

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள் |Page 3, Chan ...

பல்லுயிர்ப்பெருக்கக் கணக்கீட்டுமுறை:   ஒவ்வொரு இயற்கை வளத்திற்கும் சூழல் கணக்கிட்டு முறையை அறிமுகப்படுத்துவதன்மூலம், அவ்வளத்தின் தரத்திற்கும் அதனால் பல்லுயிர்ப்பெருக்கத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உள்ள முக்கியமான தொடர்பைப் பகுப்பாய்வு செய்ய முடியும். சமீபத்தில், சலீம்அலி மையத்தினால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஈரநிலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அதனால் ஈரநிலம் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்தில் நிகழும் தாக்கங்களுக்கும்   உள்ள நெருங்கிய தொடர்பை அறியமுடியும்.   கீழ்க்கண்ட மூன்று விதமான காரணிகளைப் பயன்படுத்தி, ஈரநிலத்தின் தரக்குறியீட்டை மதிப்பிடுகின்றனர்: அ) ஈரநிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள்; ஆ) ஈரநிலத்திற்கு ஏற்படும் (சூழல் சீர்கேடு போன்ற) அச்சுறுத்தல்கள்; இ) ஈரநிலத்தின் தாவர வளம் மற்றும் விலங்கினத் தொகுப்பினடிப்படையிலான பல்லுயிர்ப் பெருக்கத்தின் மதிப்பு.  இம்மூன்றையும் இணைத்து ஈரநிலங்களின் ஆரோக்கியம் மதிப்பிடப்படுவதால், ஈரநிலங்களை மேம்படுத்துதல் மற்றும் அது சார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுதல் போன்ற முக்கிய முடிவுகளை சரியான தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாகிறது. 

அட்டவணை -1:  முன்னுரிமை பெற்ற  141 ஈரநிலங்களின் ஆரோக்கியக் குறியீடு  

. எண் ஈர நில ஆரோக்கியக் குறியீடு ஈர நிலத்தின் எண்ணிக்கை   நிலைமை தேவையான நடவடிக்கை
1 -0.75 to 0.00 04 மிக நெருக்கடியான மற்றும் சீரியத் தன்மை.   மிக அவசரமான உடனடி நடவடிக்கை  
2 0.001 to 0.500 19 மிக நெருக்கடியான மற்றும் சீரியத் தன்மை.   அவசரமான உடனடி நடவடிக்கை  
3 0.501 to 1.00 21 சீரியத் தன்மை உடனடி நடவடிக்கை  
4 1.001 to 1.500 40 முற்றிய நிலை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கவேண்டிய அச்சுறுத்தல்
5 1.501 to 2.00 25 ஆரம்ப நிலை அச்சுறுத்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
6 Above 2.000 32 நிலையான தன்மை பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல்

ஆதாரம்:SACON, 2019. Criteria for prioritisation and framework for wetland monitoring in the state of Tamil Nadu (Report). Submitted to State Planning Commission, Government of Tamil Nadu.

ஈரநிலங்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து அளவிடுவதன்மூலம் ஈரநிலங்களுக்கும் அதுசார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பை தொடர்ந்து கண்காணித்து அதற்குத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.  

சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு: இயற்கை வளங்களிலிருந்து பெறப்படும் பெருவாரியான சூழல் சேவைகள் அங்காடிகளில் பணப் பரிவர்த்தனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பதால், அவற்றின் பொருளாதார மதிப்பு பொதுமக்களுக்கோ அல்லது கொள்கை வகுப்பவர்களுக்கோ தெரியாமலேயே போய்விடுகிறது. இதனால் கொள்கையளவில் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்பட்டு, சமூக நலனில் பேரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க வகுக்கப்படும்  கொள்கை முடிவுகள் எந்த அளவுக்கு சூழல் சார்ந்த பயன்களை விளைவிக்கின்றன என்கின்ற தகவல் மிக முக்கியமானது. உதாரணமாக, காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும்போது அது மனிதர்களின் உடல் நலத்தில் எந்த அளவு  விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது முக்கியம். எனவே, சூழல் சார்ந்த பயன்களின் பண மதிப்பீடு பசுமை ஜிடிபியைக் கணக்கிடவும் மற்றும் கொள்கைகளின் நன்மை தீமைகளை மதிப்பிடவும் போன்ற பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளுக்கு உதவுகிறது. இருப்பினும், சந்தை மதிப்பு இல்லாத பட்சத்தில் சூழல் சார்ந்த நன்மை தீமைகளின் பண மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்பது கேள்விக்குரிய ஒன்று. கிடைக்கக்கூடிய புள்ளி விவரங்களைக்  கொண்டு, தமிழ்நாட்டின் 141 முன்னுரிமை பெற்ற ஈரநிலங்களின் சூழல் சேவைகளை எவ்வாறு பண மதிப்பீடு செய்தோம் என்பதை இங்கு தந்துள்ளோம்.  ஒரு ஹெக்டர் ஈரநிலம் சராசரியாக எவ்வளவு மதிப்புள்ள சூழல் சேவைகளை அளிக்கும் என்பதை ஓவ்வொரு விதமான ஈர நிலத்திற்கும் ஆராய்ச்சியாளர்கள் முன்னரே பணமதிப்பில் கணக்கிட்டுள்ளனர். இந்த உலகளாவிய சராசரி மதிப்பைக்கொண்டு 141 முன்னுரிமை பெற்ற ஈரநிலங்களை முழுமையாகப் பாதுகாத்தால் கிடைக்கக்கூடிய  உச்ச பயன்களை பணமதிப்பில் கணக்கிட்டோம். அதாவது, 141 ஈரநிலங்களின் மொத்த நிலப்பரப்பை ஒரு ஹெக்டரின் உலகளாவிய சராசரி மதிப்புடன் பெருக்கும்போது கிடைக்கும் பணமதிப்பு ஆண்டுக்கு ரூ. 11, 283.09 கோடிகளாகும். 

அட்டவணை-2: முன்னுரிமை பெற்ற 141 ஈரநிலங்களின் சூழல் சேவைகளின் மதிப்பீடு.

ஈர நிலத்தின் வகை (எண்ணிக்கை) மதிப்பீட்டு முறை சூழல் சேவைகளின் மொத்த  மதிப்பு (ரூ. கோடிகளில்)
கடலோர ஈரநிலங்கள் (5) 66,017 ஹெக்டர் x ₹16,15,922.94 (ஹெக்டருக்கு) 10,336.89
உள்நாட்டு ஈரநிலங்கள் (135) 45,294.14 ஹெக்டர் x ₹2,14,089.26 (ஹெக்டருக்கு) 944.00
நீர்த்தேக்கம் (1) 633 ஹெக்டர் x ₹34,617.62 (ஹெக்டருக்கு) 2.20
மொத்தம் (141) 11, 283.09

ஆதாரம்: கட்டுரை ஆசிரியர்களின் கணக்கீடு.

இருப்பினும், நடைமுறையில் ஈரநிலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்பதால் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய சூழல் சேவைகளின் எண்ணிக்கை மற்றும் தரம் மிகக் குறைவே.  எனவே, 141 ஈரநிலங்களின் சேவைகளின் தற்போதைய பண மதிப்பு ஆண்டுக்கு ரூ. 1,343.32 கோடிகளே. இந்தத்தொகையை, உச்ச பயன்கள் மதிப்பிலிருந்து (ரூ. 11, 283.09 கோடி) கழிக்கும்போது நமக்கு கிடைப்பது ரூ. 9,940 கோடி மதிப்புடைய இழப்பே! இதை வேறு விதத்தில் கூறுவதெனில், 141 முன்னுரிமை பெற்ற ஈரநிலங்களை முழுமையாக பாதுகாக்கத்தவறியதால் நமது மாநிலத்திற்கு ஆண்டிற்கு ரூ. 9,940 கோடி  இழப்பு ஏற்படுகிறது! இச்சிறிய எண்ணிக்கையிலான (141) ஈரநிலங்களைக்க் காப்பதாலேயே இவ்வளவு பெரிய நன்மையை ஈட்டலாமெனில், நம் மாநிலத்திலுள்ள 41000கும் மேற்பட்ட ஈரநிலங்களைக் காப்பதால் வரும் நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திண்ணம். இதோடுகூட, காடுகள், நிலம் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பதினால் ஏற்படும் நன்மைகளைக் கணக்கிடும்பட்சத்தில் அது மாநில ஜிடிபியை பல லட்சம் கோடிகளாக உயரச்செய்யும். இதிலிருந்து நாம் அறியவேண்டியது என்னவெனில், பொருளாதார வளர்ச்சி என்பது தொழில் மற்றும் சேவைத் துறையை ஊக்குவிப்பதோடு மட்டுமன்றி சுற்றுச்சூழல் துறையை செம்மைப்படுத்துவதனாலும் சாத்தியமே! எனவே, சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு முன்னுரிமை பெரும்பட்சத்தில் தமிழகத்தின் இயற்கை வளங்களைப்  பாதுகாக்கவும் நிலைத்த வளர்ச்சியை அடையவுமான கொள்கைகளை வகுப்பதற்கு அது இன்றியமையாததாகத் திகழும்.

சூழல் சேவைகளின் பரிவர்த்தனை  முறை: தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வந்த  குடிமராமத்து என்ற மரபு சமூகத்திற்கு முழுமையான   அதிகாரம் அளித்து நீர்நிலைகளை – குறிப்பாக, பாசன ஏரிகளை – செம்மையாகப் பாதுகாக்க வழிவகுத்தது.  அரசாங்கம் நீர்நிலைகள் பராமரிப்பைத்  தன்னகத்தே எடுத்துக்கொண்டதாலும், விவசாயிகள் எரிப்பாசனத்திலிருந்து நிலத்தடி நீர்பாசனத்திற்கு மாறிவிட்டதனாலும் அச்சீரிய மரபு நாளடைவில் மறைந்து போனது. கடநத சில காலங்களாக தமிழக அரசு குடிமராமத்து முறையை மீண்டும் மீட்டெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பிரச்சினை என்னவெனில், சமூகத்தின் ஈடுபாடின்றி அரசாங்கமே பெருவாரியான நீர் மேலாண்மை நடவடிக்கைகளை குடிமராமத்து என்றபெயரில் மேற்கொள்ளுவதுதான். மக்கள் பங்கேற்பற்ற அவ்வாறான நடவடிக்கை  சமூக நலனை உயர்த்தாது. மாறாக, அரசாங்கத்தின் பரிமாற்றச் செலவுகளை அதிகரித்து, வரி செலுத்தும் பொதுமக்களின் சுமையை அதிகரிக்கச்செய்யும். மக்கள் பங்கேற்பை சரியான ஊக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம் அதிகரிக்கமுடியும்.  இங்கேதான் நீருக்கான ‘பரிவர்தனை முறை’ கைகொடுக்கிறது!

மேற்கண்ட பரிவர்த்தனை முறைப்படி, சூழல் சேவைக்கான பயன்பாட்டு உரிமை சமூகத்திற்கு அளிக்கப்பட்டு அவர்கள் நீர்நிலைகளை பராமரிப்பதோடு அதிலிருந்து பெறப்படும் சேவைகளை மற்றவர்களுக்கு உடன்படிக்கை மூலம் பரிவர்த்தனை செய்ய வழிவகுக்கிறது. உதாரணமாக, சென்னை பெருநகர நீரளிப்பு மற்றும் கழிவுநீர் கழகம் வீராணம் ஏரியிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 150 மில்லியன் லிட்டர் நீரை சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகக் கொண்டுவருகிறது. ஏரியின் நீர் இருப்புக் குறையும்போது, நீரை குடிநீருக்காக எடுப்பது சென்னை மக்களின் நலனை அதிகரித்தாலும் எரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கிறது. இப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம்? ஏரியினால் பயன்பெறும் அனைத்து கிராம மக்களுக்கும் ஏரியை மேலாண்மை செய்யும் உரிமையை முழுமையாக அளித்துவிட்டு, சென்னை நீரளிப்புக் கழகம் அவர்களிடமிருந்து நீரை பேரம்பேசி வாங்குவதன் மூலம் இப்பிரச்சினையை தீர்க்கலாம். ஆய்வுகளின்படி, சென்னை மக்கள் 2017 ம் ஆண்டில் சந்தையில் நீர் வாங்கச் செய்த செலவு மட்டும் சுமார் ரூ. 1250 கோடியாகும். இது எதைக் காட்டுகிறதென்றால், அரசு சிறந்த முறையில் நீர் வழங்கும்பட்சத்தில் சென்னை மக்கள் சந்தை நீருக்குக் கொடுக்கும் பணத்தை அரசுக்கு கொடுக்க விழைவார்கள் என்பதையே காட்டுகிறது.  இதில் ஒரு கணிசமான தொகையை வீராணம் ஏரியைப்  பராமரிக்கும் கிராம மக்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் அனைவருக்கும் பயன் கிடைக்கும். இதில் ஏரியை பராமரிக்கும் அனைத்து கிராம மக்களின் பிரதிநிதிகளையும், மற்றும் அரசாங்கம், பெருநிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் அங்காடியிலுள்ள முக்கிய அம்சங்களை இணைப்பதன்மூலம் சீரிய மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்.  தமிழக அரசு சூழல் சேவைகளின் பரிவர்த்தனை முறையை நீர்வளங்களை  மட்டுமன்றி, காடுகள் மற்றும்  பல்லுயிர்பெருக்கத்தை  மேம்படுத்தவும் செம்மையாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, சூழல் சேவைகளை உற்பத்தி செய்யும் நீண்டகால மரப்பயிர்களைப் பயிரிடுவதற்கும் மேலும், மண்வளத்தையும், நிலத்தடிநீரையும் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பேணும் பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கவும் விவசாயிகளுக்கு அதிகப்படியான ஊக்கத்தொகை வழங்கலாம். 

Water - TCEQ - www.tceq.texas.gov

பரிமாற்றத்தக்க  நீர் உரிமைகள்: நீர் பற்றாக்குறையின்போதும், நீர் உபயோகிப்பாளர்களிடையே மோதல் உருவாகும்போதும் நீரை எவ்வாறு பகிர்ந்தளிப்பதென்பது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ‘பரிமாற்றத்தக்க நீர் உரிமைகள்’ என்ற கருவி இதற்கு தலையாய தீர்வை உறுதிசெய்கிறது. தற்போதய நடைமுறைப்படி, பவானி ஆற்றில் உள்ள பழைய மற்றும் புதிய கால்வாய்ப்  பாசனதாரர்களுக்கிடையே நீர்ப்பகிர்ந்தளிப்பு சம்மந்தமாக தீராத மோதல் தொடர்கிறது. சமீபத்திய சோதனை ஆய்வு முடிவுகளின்படி, பரிமாற்றத்தக்க நீர் உரிமைகள்  அடிப்படையில் தற்போதய மோதல்களுக்குத் தீர்வு காண்பதோடல்லாமல் நீர் பரிவர்த்தனைமூலம் கிடைத்தற்கரிய நீரை மென்மேலும் செம்மையாக  பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது. மேற்கண்ட ஆய்வின்படி, நீர்ப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் பழைய கால்வாய்ப் பாசனதாரர்கள் நீரை சேமித்து அதைப் புதிய கால்வாய்ப் பாசனதாரர்களுக்கு தங்களுடைய விருப்பப்படி விற்கவும், புதிய கால்வாய் பாசனதாரர்கள் அந்த நீருக்கு ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கவும் முன் வருகின்றனர். நீர் பரிவர்த்தனை சுமார் 63 சதவீத விவசாயிகளிடையே சாத்தியமாவதோடுமட்டுமின்றி, நீரை விற்பதன்மூலம் பழைய கால்வாய் விவசாயத்தில் எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை என்பதும் ஆய்வின் மூலம் உறுதியாகிறது. தமிழக அரசு இம்முறையை நடைமுறைப் படுத்தும்பட்சத்தில்,  நீர் உரிமைகளை அனைத்து  விவசாயிகளுக்கும் தற்போதுள்ள பாசன உரிமைகளின் அடிப்படையிலேயே பகிர்ந்தளிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு விவசாயி தற்போது ஒரு போகத்திற்கு 90 பாசனங்களை பயன்படுத்துகிறாரெனில் அவருக்கு 90 நீர் உரிமை  அலகுகளைப்  பகிர்ந்தளிக்க வேண்டும். அவர் 80 பாசனங்களை மட்டுமே பயன்படுத்தி 10 பாசன உரிமை அலகுகளை  மற்றவர்க்கு விற்றுப் பயன்பெற முடியும்.  அடுத்த போகத்திற்கு, மறுபடியும் பழைய பாசன உரிமைகைள் அடிப்படையிலேயே நீர் உரிமைகளைப்  பகிர்ந்தளிக்கலாம். நீர் உரிமைகள் பரிமாற்றம் விவசாயிகளுக்கு ஊக்கம் தந்து நீரை செம்மையாகப்  பயன்படுத்தவும், விற்போர் வாங்குவோர் நலனை ஒருசேர அதிகரித்து அதன்மூலம் சமூக நலனை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. விவசாயத்திற்குள் மற்றுமின்றி, விவசாயத்திற்கும் மற்றும் விவசாயமல்லாத  துறைகளுக்குமிடையேகூட நீர் பகிர்ந்தளிப்பை இம்முறை செம்மைப் படுத்துகிறது. உதாரணமாக, தொழிற்துறையைச்  சார்ந்தவர்கள் விவசாயிகளிடமிருந்து நீர் உரிமைகளை வாங்கும்போது பயன்படுத்தப்படாத பாசன நீர் தொழிற்துறையில் பயன்பட ஏதுவாகிறது. தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் நீர் மொத்த நீர் உயோகித்தில் 19 சதவீதமாகவும், சுமார் 15 சதவீத பாசன நீரை விவசாயத்தில் எந்தவிதப் பாதிப்புமின்றி மற்ற துறைகளுக்கு பகிர்ந்தளிக்க முடியும் என்பதாலும் இந்த  நீர் உரிமைகள் முறை பயன்பாடுகளுக்கிடையேயான நீர் பகிர்ந்தளிப்பில் மிக்க பயனை அளிக்கிறது. தமிழக அரசு இந்த புதுமையான பொருளாதாரக் கருவியை பயன்படுத்தி அரிய நீரை பல்வேறு பயன்களுக்கிடையே  சிறப்பாகப் பகிர்ந்தளிக்க இயலும்.

நதிப்படுகைக் கழகம்: ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத் திட்டம்  சிறந்த நீர் மேலாண்மைக்கு ஆற்று நிலத்தை அடிப்படை அலகாகக்  கொண்டு எடுக்கப்படும் முடிவுகளை முன்நிபந்தனையாகப்  பரிந்துரைக்கிறது.  நதிப்படுகைக் கழகங்களை ஏற்படுத்துவதன்மூலம் நீர்மேலாண்மை மற்றும் பகிர்ந்தளிப்பில் சீரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியும்.  நீர்வளக் கணக்கீடு, சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு, நீர் உரிமைகளின் பரிமாற்றம் மற்றும் அமைப்புவாத ஏற்பாடுகள் போன்ற நீர்மேலாண்மைக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தக் கழகங்கள் செம்மையாக ஒருங்கிணைக்க முடியும். இந்தக் கழகங்கள், நதிநீர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அனைத்து முடிவுகளும் அனைவருக்கும் ஒத்துக்கொள்ளக்கூடியதாக  இருப்பதை உறுதி செய்யவேண்டும். நீர் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் அந்தந்தத் தளம் சம்பத்தப்பட்டதென்பதால், தமிழகத்தில் உள்ள 17 நதிகளுக்கும்  தனித்தனிக் கழகங்களை ஏற்படுத்துவது சாலச்சிறந்தது.

மாசுக்கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் புதுப்பித்தல்: தமிழ்நாட்டில், தொழிற்சாலை மற்றும் நகர்புறங்களிலிருந்து வரும் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், தொடர்ந்து அதிகரித்துவரும் தொழிற்சாலைக்  கழிவுகள் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி அந்தத் தொழிற்சாலைகளுக்கே பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. தற்போதுள்ள ‘கட்டளையும் கட்டுப்பாடும்’ சார்ந்த மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கையே தற்போதய பிரசிகனைகளுக்குத் தலையாய காரணமாகும்.   தற்போதய கொள்கை மாசினைக்  கட்டுப்படுத்துவதற்கான போதுமான ஊக்கத்தை அளிப்பதில்லை. எனவே, தற்போதய கொள்கையிலிருந்து அதிக ஊக்கம் அளிக்கக்கூடிய சந்தை சார்ந்த க் கொள்கைகளுக்கு உடனடியாக மாறவேண்டும். இப்போதைய கொள்கை அனைத்து தொழிற்சாலைகளும்  மாசுவைக் கட்டுப்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளதால் மாசுக் கட்டுப்பாட்டிற்கான செலவில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் மாசு கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதில்லை . இதனால், குறைந்த செலவில் மாசுவைக் கட்டுப்படுத்துபவர் அதிக செலவில் கட்டுப்படுத்த நேருவதால் மாசுக் கட்டுப்பாட்டில் ஊக்கம் குறைந்து பிரச்சினை தொடர்கதையாகிறது.  ஆனால், பரிவர்த்தனை செய்யக்கூடிய மாசு உரிமைகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த செலவில் மாசுவைக் கட்டுப்படுத்துவர் அதிக அளவு மாசுவையும் அதிக செல்வுள்ளவர் குறைந்த  அளவு மாசுவையும் கட்டுப்படுத்தி வரைமுறைக்குட்பட்ட மொத்த மாசுவையும் மிகக் குறைந்த செலவில் மிகுந்த ஊக்கத்தோடு கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. குஜராத் போன்ற மாநிலங்களில் இம்முறை மிகச் சிறப்பாக செயல்படுவதால், இதை நமது மாநிலத்திலும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டை செவ்வனே கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம்.  

சுற்றுச்சூழல் தரவுத்தளத்தை ஏற்படுத்துதல்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, நீர்வள அமைப்பின் பிராந்திய சுற்றுச்சூழல் கூடங்கள், நீர் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு நீரளிப்பு மற்றும் கழிவுநீர் நிறுவனம் போன்ற தமிழகத்தின் பல்வேறு பட்ட அரசு அமைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த தரவுகளைத் தொடர்ந்து திரட்டிவருகின்றன. இருப்பினும், இந்தத் தரவுகள் சுற்றுச்சூழல் கணக்கீடு, சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சமூக வரவு-செலவு மதிப்பீடு போன்ற முக்கியமான நோக்கங்களுக்கு உகந்ததாக இல்லை. மேலும், பல்வேறு அமைப்புகள் ஒரேவிதமான தரவுகளை திரட்டுகின்றன. உதாரணமாக, நீரின் தரம் சார்ந்த தரவுகளைத் திரட்ட  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பட்டு வாரியம், பிராந்திய சுற்றுச்சூழல் கூடங்கள், நீர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் ஈடுபடுவதால் எந்தக்  கூடுதல் பயனும் விளைவதில்லை. வருங்காலங்களில், சூழல் சார்ந்த தரவுகளை திரட்டும் பணியை ஒருங்கிணைத்து அத்தரவுகள் குறிப்பிட்ட கொள்கை முடிவுளுக்கு ஏற்றவாறு   திரட்டப்படவேண்டும். திரட்டப்படும் தரவுகள் அதற்காக ஒதுக்கப்பட்ட     குறிப்பிட்ட அமைப்பினால் மட்டுமே பராமரிக்கப்படவேண்டும்.

திறன் மேம்பாடு: நாம் முன்னரே பார்த்ததுபோல், தமிழகத்தில் பல கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பணிகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் முடங்கியுள்ளன. அவ்வாறான முடக்கம், மாநிலத்தின் வளர்ச்சியை பாதித்து வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டுதலையும் கடுமையாக பாதிக்கும்.   அதுபோலவே, கட்டுப்பாடற்ற  பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழலைக்  கெடுத்து  அதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிப்படையச் செய்யும். தற்போதைய ‘சுற்றுச்சூழலுக்கு எதிரான வளர்ச்சி’ என்ற அணுகுமுறையை விடுத்து, வருங்காலங்களில் ‘சுற்றுச்சூழல் சார்ந்த வளர்ச்சி’ என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் சம்மந்தமான சமூகத்தின் விருப்பங்களை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் சரியான முறையில் கையாள்வதில்லை என்பதன் காரணமாக வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன. பெரும்பாலும், மக்கள் வளர்ச்சிப் பணிகளை எதிர்ப்பது  சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்கள் போதுமான அளவு இல்லை என்பதாலும், அவை உண்மைக்குப் புறம்பாக இருப்பதாலும்தான்.  எனவே, சுற்றுச்சூழல் சார்ந்த திறன் மேம்பாட்டை அனைத்துப் பிரிவு மக்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதியரசர்களுக்கும், அரசு சாரா அமைப்பினருக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், விவசாய சங்கத்தினருக்கும், பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நுகர்வோர் சங்கங்களுக்கும், ஆசிரியர் மற்றும் பஞ்சாயத்து அமைப்பினருக்கும் முறையாக அளிப்பதன்மூலம் வளர்ச்சிக்கு எதிரான சுற்றுச்சூழல் சார்ந்த எதிர்ப்புகளை சரிசெய்ய முடியும். அவ்வாறான முயற்சி வரும் காலங்களில் மேன்மையான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளை வகுக்கவும் நிலைத்த வளர்ச்சியைப் பேணவும் உறுதுணையாக அமையும்.

*இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் கட்டுரை ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே.  

கட்டுரை ஆசிரியர்கள்:

Image may contain: 1 person, suit
பெ. துரைராசு. வனத்துறை அதிகாரி
Image may contain: 1 person, closeup
லி. வெங்கடாசலம், பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.