முத்தழகு கவியரசன் எழுதிய "அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும்" கட்டுரை | சாதியம், ஊடகம், கல்வி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம் - www.bookday.in

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும் – முத்தழகு கவியரசன்

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும்

– முத்தழகு கவியரசன் –

புதிய கோணத்தில் சென்றாலும் பழைய வழித்தடங்களின் தாக்கங்கள் முன்நின்று செல்கின்றன. இந்தியாவின் துடிப்பும், துடிப்பின் விளிம்புநிலை மக்களின் பிரகடனமும் கரைவேட்டிகளின் மத்தியில் கண்ணிழந்தப் பொம்மையாகத்தான் நின்று கொண்டி ருக்கிறது. செய்யவும் – செய்யத்துடிக்கும் கரங்களும் பல்வேறு தளங்களில் நின்று விவாதிட்டாலும், முக்கியத் தளவாடங்களில் அவை செயலிலக்கப்பட்டுவிடுகின்றன. சுதந்தர இந்தியாவில் அரசியல் முன்னெடுப்புகள் ஒரு நோயின் வடிவமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு பார்க்கும் வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை இருபெரும் கட்சிகள்தான் தடங்களை ஆழமாகப் பதித்திருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இருப்பினும் இவ்விரு பெரும் கட்சிகளின் காட்சி வெளிப்பாடுகள் தர்க்கரீதியிலும் சரி, விவாதரீதியிலும் சரி வேறுபட்டு மாறுபாடுகள் இருப்பதாகத் தோன்றவில்லை. இது மத்தியில் ஆளும், ஆண்ட கட்சிகளுக்கும் விதிவிலக்கல்ல. முன்னெடுப்புக்கள் எதனடிப்படையில் எடுக்கப்படுகின்றது – அதனடிப்படையில் எடுக்கப்படும்போது மக்களின் நிலைப்பாடு எவ்வகையில் திணிக்கப்படுகின்றது என்பது குறித்து சாதியம், ஊடகம், கல்வி, பண்பாடு எனப் பலதரப்பட்ட இயங்குநிலைகளில் ஒழுங்குபடுத்தி, ஒருமைப்படுத்தி மதத்தை முன்னெடுத்துக் காவிகளாக மாற்றிக்கொள்ளும் அதிகார ரீதியிலான போக்கினையும் பொதுப்பார்வையின் அடிப்படையில் இக்கட்டுரை ஆராயப்பட்டுள்ளது.

சாதியமும் அரசியலும்

இந்தியச் சமூகம் அடிப்படையில் சாதியப் படிநிலை கொண்ட கட்டமைப்பாகும். இந்திய நிலப்பரப்பில் இவ்வகையான உருவாக்கம், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பே வடிவம் கொண்டதாகும். இது இன்று பல வடிவங்களிலும், பரிணமித்துள்ளது. இருப்பினும் சாதியத்தின் உருவாக்கப் பின்னணியாகச் சுமார் கி.மு.1500-ல் இந்தியப் பகுதிக்குள் ஆரியர் என்ற அன்னிய இனத்தினர் நுழையும்; போது, இந்தியப் பூர்வக்குடிகளைக்காட்டிலும், பின்தங்கிய நிலையில், கால்நடைகளை மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டும், இடம்பெயரக்கூடிய நாடோடிகளாகத்தான் வாழ்ந்தனர். இடைநிலையாகப் பயணிக்கும் பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு உடல்வாக்கையும், போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் விளங்கினர்.

இவர்கள் இங்கு வந்தபின் பல போர்களின் மத்தியில்தான் சிந்துசமவெளி நாகரீகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டது. இதன் பின்னர் நடந்த மோதல்களும், பிற்காலத்தில் இவர்களுடன் இணைந்து வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். மோதல்கள் ஏற்பட்ட காலகட்டத்தில் பலமாற்றங்களினால், ரிக், யஜீர், சாம, அதர்வண போன்ற வேதங்கள் உருவாகின. இவற்றிலிருந்துதான் வருணாசிரமமுறை உருவாகியது. இதுவே சாதிய அமைப்புமுறை தோன்றுவதற்கு காரணமாகும்.

வேதம் ஓதுபவனை ‘பிராமண’னென்றும், யுத்தம் செய்பவனை ‘சத்திரிய’னென்றும்,  வாணிபம் செய்பவனை ‘வைசிக’னென்றும், உடல் உழைப்பால் மேற்கொள்பவனை ‘சூத்திர’னென்றும், இவ்வரிசையடிப்படையில் இழிவான மக்களாக உருவகம் செய்யவே ஐந்தாவதாகப் ‘பஞ்சமர்கள்’எனும் ஒரு பிரிவினை உருவாக்கி சாதியத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இவைகளை வைத்தும், இந்திய வர்க்கச் சுரண்டலுக்கும் இவ்வருணாசிரம முறையே முக்கியக்  காரணமாக அமைந்திருக்கிறது.

இந்தக் கட்டமைப்புகளும் கட்டமைப்பின் வடிவங்களும் ஆழமான நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில்முறை அடிப்படையில் சாதியம் உருவாகின. இம்மாற்றங்கள் இன்றும் அரசியல் தாக்கங்களோடும் பின்னிப்பிணைந்துள்ளன. ஐரோப்பியர்கள் நிவவுடைமைச் சக்திகளுடன் இணைந்துதான் ஆட்சி நடத்தியுள்ளனர்.  விடுதலையடைந்த பிறகு, புதிய புதிய ஆட்சிகள் தொடர்ந்தாலும் ஆதிக்கச் சாதியின் மீதான மூர்க்கத்தனமான நிலைப்பாடுகள் எடுத்ததாகத் தெரியவில்லை.

மேற்போக்கான வார்த்தைகளில் மதிப்புகளைக் கொடுத்தாலும் கீழ்த்தளத்தில் ஆணியிட்டு அடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கட்சிகளின் பிணைப்பும் இதுதான். கேள்விகளை எழுப்பிவிடலாம். ஆனால், அதற்கான பதிலைத் தேடும்போது விடைகளைப் பலரும் தரமறுக்கின்றனர். வழக்குகளும் போடப்படுகின்றன. கருத்தியலாக மாற்றம் பெறத் துடித்தாலும், கோட்பாடாக உருவம்பெற முற்பட்டாலும் இவைகளின் தாக்கங்கள் அரசியல் பின்புலத்தின் இடஓதுக்கீடு சார்ந்த எல்லைக்குள் அடங்கிவிடுகின்றன. சாதியத்தையும், சாதியத்தின் வன்கொடுமைகளையும் கடுமையாகச் சாடும் கட்சிகளும் இவற்றின் துணையின்றி வெல்வதும் கடினம்தான்.

நிர்பந்தமான ஊடக வெளிகள்

ஆரியப் பண்பாட்டை மக்களிடம் கொண்டு செய்வதில் ஊடகங்கள் பெருமளவில் பங்கெடுத்துக் கொள்கின்றன. தற்கால நடைமுறையில் மாற்றத்தின் வழி நெடுகிலும் காணக்கிடைக்கும் நகர்தலுக்கான கலாச்சார ரீதியிலான வெளிப்பாடுகள் ஒரு சமூகத்தின் அடையாளங்களைத் தொழில்முறை செயல்பாட்டு முனைப்பிலும் இன்று காணக் கிடைக்கும் மொழிப்பெயர்ப்பு நாடகங்களாகத் தொலைக்காட்சியில் வலம்வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டலாம். ஆடைகள், உணவு, பழக்கவழக்க முறைகளென வாழ்வியலின் அங்கக்கூறுகளை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குக் கடத்தப்படும் நுகர்தலுக்கான எச்சமாகவும் இவைப் பார்க்கப்படுகின்றது. தர்க்கங்களின் அர்த்தங்களை மக்களினூடாகச் செய்தித் துணுக்குகள் – வெள்ளித்திரை – சின்னத்திரை எனப் பிரித்துக் காட்சிகளின் எல்லைகள், வர்க்கத் தளங்களில் நடுத்தர, கீழ்வர்க்க மனங்களின் போக்கு, அங்கும் இங்கும் என எதையாவது எதிர்பார்த்துச் செல்லும் முனைப்புகள் தொடர்ந்தாலும், அரசியல் தளங்களில் ஊடகங்களின் பங்களிப்பு ஒருபோதும் அதன் எல்லையிலிருந்து மீண்டுசெல்லப்போவதில்லை: போகவும் விடப்போவதில்லை. தமிழகத்தில் நடைபெறும் பலதரப்பட்ட செயல்பாடுகளை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். மீத்தேன் எரிவாயு, நீயூட்ரினோ, ஸ்டெர்லைட், சாதிய வன்கொடுமை, பாலியல் வன்கொடுமையெனப் பல பிரச்சனைகளை எடுத்துக் கொண்டாலும் ஒரு தரப்பு சார்ந்த முறைமையே பேசப்படுகின்றது.

கல்வியும் அடுத்த நிலைப்போக்கும்

பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு தன் மகனோ, மகளோ ஆங்கிலத்தில் சரளமாக உரையாடவும், வெளிநாட்டிற்குச் சென்று வேலைப்பார்க்க வேண்டுமென்கிற ‘பெருமித’நினைப்பும் இருப்பவர்களாகத்தான் மாறிவிட்டார்கள். இல்லை மாறிவிட தூண்டியிருக்கிறார்கள். கடந்தகாலப் பதிவுகளும், நிகழ்கால நடவடிக்கைகளும் இதற்குச் சான்றாக எடுத்துக் கொண்டாலும், அரசியலின் பின்புலமும் ஆதாரங்களாக நிலை பெறுகின்றன. தமிழ் – ஆங்கிலம் என்ற முறைமைகளை மாற்றும் தற்காலச் சில தனியார் பள்ளிகளின் நிலைமைகளில் ஆங்கிலம் – தமிழ் மாற்றப்படும் சூழல்களும் பிற்காலத்தில் எங்கு முடியும் என்ற ஐயமும் ஆலமரமாகத் தோற்றமளிக்கிறது. மதிப்பீட்டு முறைகளும் மனப்பாட செயல்பாடுகளிலும் நிலைபெறும் கல்விமுறை இதன் போக்கில் இந்தியக் கல்வி முறையும் தாய்மொழிக் கல்வி முறையைக் காப்பாற்றத் துடிக்கும் மாநில அரசுகளின் போக்கும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகப் பார்த்தாலும், இவற்றையெல்லாம் முதன்மைப்படுத்திப் பேசுகின்றவர்களின் அரசியல் முன்னெடுப்பின் விபரீதங்களும் உலகமயச் சூழலின் அபரிவிதாகத்தான் நடைபெற்று விடுகின்றது. பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, ஆராய்ச்சி முறை எனப் பிரித்துப் போட்டாலும் இயங்கு தளங்களில் இவை முதன்மையிலிருந்து மாற்றம் பெற்று வரவேண்டிய சூழலும் தற்காலத்தின் தேவையாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளிலிருந்து வெளியேறினாலும் தாம் நினைக்கும் ஒன்றினைத் தொடர்ரீதியாக, வாக்கியங்களாக, கதைகளாக, கட்டுரைகளாக எழுதவோ இயலாதவர்களாகத்தான் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இச்சிக்கல்களை எப்படி அணுகுவது, அதன் தரங்களை எதனடிப்படையில் மேலெழுப்புவது, தரமான கல்வியைக் கொடுக்கும் உத்திகள் என்று பல அடுக்குகளின் கீழ் பயிற்றுவிக்கப்படும் மொழி, எம்மொழியோ அம்மொழியிலேயே மாணவர்களின் செயல்திறன் மேம்படுகின்றது. இந்நிலைப்பாடு குறைந்த எண்ணிக்கையில்தான் காணப்படுகின்றது. ஐரோப்பியர்களின் கல்விமுறையை இன்றும் பின்பற்றினாலும், அரசுகளின் அதிகாரங்கள் அதன் மாற்றத்திற்கு நேர்மறையாகத்தான் செயல்படுத்தி வருகின்றது. தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கும் நிலையில் மாணவர்களின் நோக்கமும், தனித்திறனுடைய மொழிசார்ந்த போக்குகளும்தான் ஒரு சமூகக்கல்வி வளர்ச்சியின் வித்திற்கு அடித்தளமாக அமைகிறது.

பண்பாடும் மறக்கடிக்கப்படும் செயல்பாடுகளும்

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், பழக்கவழக்கம், வாழ்வியல் சடங்கு முறைகள், வழிபாட்டுச் சடங்குமுறைகளெனப் பலவாறு காணப்பட்டாலும் இன்றைய சூழலில் அவைகளை மீட்;டுருவாக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படும் போக்கு காணப்படுகின்றது. ஏனென்றால் மேற்கிந்தியக் கலாச்சாரமும், ஆரியக் கலாச்சாரமும் தொற்றுநோய் போலத் தொற்றிக்கொள்ளும் அவலம் பல ஆண்டுகளுக்கு முன்பே முகத்தைக் காட்டிவிட்டது. அதற்கு முக்கியக் காரணமான ஊடகங்கள், ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் விளம்பரங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். நுகர்தலின் கலாச்சாரம் இன்று பெருகிவிட்டது. இவற்றைப் பேடிப்போகும் மனங்களின் விபரிதங்கள் அப்போது தெரிவதில்லை.

தலைமுறைகளின் பார்வைகளில் விழும்படியான நிகழ்ச்சித் தொகுப்புகள் இங்கே நிரம்பிவழிகிறது. மொழிசார்ந்த, பண்பாடுசார்ந்த நிகழ்வலைகளைக் காண்பதும் அரிது. ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் காட்சிகள் இன்று கேலிக்கூத்துகளாக மாறிவரும் போது, பண்பாட்டுத் தவிப்பின் தொடர்ச்சியாக முடிவு எடுக்கும் வேலையை மனம் பலகோணங்களில் ஸ்தம்பித்து விடுகின்றது. குறிப்பாக ஒன்றை மறைக்கப்படும் நேரத்தில், அவற்றிலிருந்து மாறாகப் புதிய கொள்கையை அரசும், அரசின் வழிநிற்கும் ஊடகங்களும் செய்திருப்பதை நாம் பார்க்கலாம். தமிழர்களின் வாழ்க்கைமுறை புதிய பரிணாமத்திற்கு, புதிய அடையாளங்களோடு நவீனகால வாழ்வியல் முறைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நகர்ப்புற மக்களின் நிலைக்கும், நகர்ப்புறமில்லா மக்களின் நிலைக்கும் அவை வேறுபடும். ஆனால் விட்டுக்கொடுப்பதில்லை.

தேடித் தேடி பண்பாடுசார்ந்த கூறுகளை அறிவதும், அறியப்படுவதும் தற்காலத்தில் முக்கியமானதொரு கருவியாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய சூழலின் கால வோட்டங்களில் முன்னோக்கிப் பயணிப்பதை விட வரலாற்றின் நுண்ணறிவுகளைப் பெறுவதுதான் அவசியமாக எண்ண வைத்திருக்கிறது.

மேற்காணும் கருத்துகளின் அடிப்படையில் இந்திய வர்க்கச் சுரண்டலுக்கு வருணாசிரம முறையே அடிப்படைக் காரணம் என்பதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. இன்றைய அரசாகங்கள், அரசு நிறுவனங்கள் அதிகார வர்க்கத்தினருக்கே ஆதரவாகச் செயல்படும் போக்குக் காணப்படுவதை அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்திய கல்வி அமைப்பு முறையில் மாற்றங்கள் நிகழவில்லை என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது. மொத்தத்தில் இன்றைய ஆளும் அரசுகள் சாதியம், ஊடகம், கல்வி, பண்பாடு போன்ற முக்கியத் தளங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதன் தாக்கங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சாதியக்கலவரங்கள் பல இடங்களில் காணப்பட்டாலும், அவற்றைக் கிள்ளிவிடுவதும் அதனை மறைப்பதற்காக மற்றொன்றைக் கையிலெடுக்கும் ஊடக உத்திகளும் உற்று நோக்க வைத்திருப்பது இக்கட்டுரையின் வழி புலனாகிறது.

துணைநின்ற நூல்கள்:

  • ராமசாமி, அ., 2013, “திசைகளும் வெளிகளும்”, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், வெளியிடு.
  • பி.சம்பத்., 2001: “சாதியத்தின் தோற்றம் வளர்ச்சிப் பிரச்சனைகள்” மதுரை: வைகை வெளியீடு.

📚 எழுதியவர்:

– முத்தழகு கவியரசன்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *