போயிட்டு வாங்க சார்
போயிட்டு வாங்க சார்

நூல் அறிமுகம்: போயிட்டு வாங்க சார் (Goodbye Mr Chips) – தி. தாஜ்தீன்

 

 

 

Goodbye,Mr.Chips_1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை 1934-இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன்,இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக இருப்பவர் இங்கிலாந்து பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ‘சிப்பிங் என்னும் சிப்ஸ்’.

சிறு சிறு முரண்பாடுகள் சிப்சிடம் இருந்தது. பார்வைக்கு கண்டிப்பானவர், இறக்கமான மனம் உடையவர். அடிப்படையில் ஆங்கில ஆசிரியர் ஆனால் லத்தீன், கிரேக்கம் போன்ற பழைய மொழிகள் கொண்டு பாடம் நடத்துவார். சிப்ஸ் முதலில் வேலை பார்த்தது வெல்பரி என்ற இடத்தில் அங்கே மாணவர்களின் கிண்டல் ,கேலி தாங்காமல் ஓராண்டு பணிபுரிந்து அங்கிருந்து புரூக்பீல்டு என்னும் பள்ளியை தேடி வந்தார். அப்பள்ளி அவருக்கு மிகப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், எலிசபெத் ராணி காலத்தில் நிறுவப்பட்டது. அது ஒரு ஆங்கிலப் பள்ளி, ஆண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளி.

பள்ளியில் புதிதாக ஆசிரியர் சேர்ந்தவுடன் மாணவர்கள் புதிய ஆசிரியரை நோகடிப்பது மாணவர்களின் விருப்பமான விளையாட்டாக எல்லா இடங்களிலும் நிகழும். அதுபோன்று சிப்ஸ் முதன்முதலில் வகுப்பறை நுழைந்ததும் மாணவர்கள் அதிக சத்தத்துடன் ஊளையிடத்தொடங்கின. ஊளையிடும் மாணவர்களை கண்டிப்பதற்காக ஒரு மாணவனை மட்டும் எழுப்பி உன் பெயர் என்ன என்று கேட்டபோது அந்த மாணவன் கோலி என்று கூறினான். அதற்கு சிப்ஸ் உங்க அப்பன் படிக்கும் போது என்னிடம் முதன்முதலாக தண்டனை பெற்றான் அவனைப் போல் நீயும் வகுப்பில் சேட்டை செய்கிறாய் என்று கூறியதால் வகுப்பறையை பெரும் சிரிப்புடன் அமைதி ஆயிற்று.

44 ஆண்டுகள் பணியில் இருந்து மூன்று தலைமுறைகளை சந்தித்து பின்பு குட்பாய் சொல்லி விட்டு ஓய்வு பெற்றார். மாணவர்களின் ஞாபகங்கள் தான் அவருக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். சில மாணவர்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வார். ஆன் ஸ்பாட், அட்வுட்,அவன் மோர் என்று பல பெயர்களில் கூறிக்கொண்டு திருப்தி அடைவார் குறிப்பாக இறந்துபோன மாணவர்களின் நினைப்பு வரும்போதெல்லாம் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழியும். குறிப்பாக ஹாலிங்வுட் என்ற துடிப்பான மாணவன் உயிரோடு இல்லை என்பதை நினைத்து வருந்துவார் எகிப்த் இப்போரில் அவன் இறந்தது அவருக்கு அதிர்ச்சி அளித்தது.

புரூக்பீல்டு பள்ளியில் சேர்ந்த முதல் பத்தாண்டுகள் மூச்சடக்கி முத்து எடுத்தே தீருவேன் என்ற கடின வைராக்கியம் அவரிடம் கிடையாது, இயல்பாக வாழ்க்கை போகட்டும் என நினைத்து வாழ்ந்தவர்.அவருக்கு 50 வயதானபோது சக ஆசிரியர்கள் மரியாதைக்குரியவராக எண்ணினார்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி அப்பள்ளியின் ஆலோசகராகவும் இருந்து வந்தார்.

சிப்ஸ்- இன் இளமை காலத்தை பார்த்தோமானால் ஷிப்பிங் என்ற பெயரை சிப்ஸ் என்று செல்லமாக அழைத்தவர் அவர் காதல் மனைவி காதரி தான். இவர்களின் வயசு வித்தியாசம் மிக அதிகம், ஏறக்குறைய சிப்ஸ் வயதில் பாதி தான் அவர் மனைவி காதிரியின் வயது. சிப்ஸ் செம்மையாக பணி செய்யக்கூடியவர், கடின உழைப்பாளி, ஆசிரியர் பணியை அனுபவித்து செய்பவர்.ஆனால், மாணவர்களின் சிந்தனையை தூண்டி ஆர்வமூட்ட கூடியவராக இல்லை. அப்படிப்பட்ட சிப்ஸ் தன் மனைவி காதரியின் புது ரத்தம் பாய்ந்து, புது அலைகள் அவருக்குள் எழும்ப தொடங்கியது.
காதரின் வந்தபிறகு அவர் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் வந்தடைந்தது.அவர் மாணவர்களின் மனங்களை வெல்ல கூடியவராகவும், சிந்தனையாக பாடம் நடத்த கூடியவராகவும் மாறினார்.

கிழக்கு லண்டன் தான் உழைப்பாளிகளும், ஏழைகளும் வாழ்ந்த பகுதி. லண்டனின் சேரிப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி.அங்கு அதிகமாக ஏழைகள், அனாதைகள் இருந்ததை கண்டு சிப்ஸ் மற்றும் தன் மனைவி காதரி இருவரும் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்தார்கள். அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் காட்டினார்கள். அவர்கள் உதவியால் படித்த ஒரு மாணவன் பல ஆண்டுகளுக்குப் பின்பு சிப்ஸ் அவர்களை சந்திக்கிறான். அப்போது அவரிடம் மேடம் எப்படி இருக்காங்க? சார்.. என்று கேட்டவுடன் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது . அவள் இப்போது உயிரோடு இல்லை என்று கண்கலங்கி பதில் கூறினார்.குறிப்பு விசாரித்த மாணவன் ராணுவ வீரன் ஆவார்.

1898 ஏப்ரல் முதல் தேதி தன் மனைவியையும், குழந்தையையும் பறிகொடுத்த நாள். பிரசவம் போது இரு உயிர்களை பலி வாங்கி விட்டது. காதிரியோடு வாழ்ந்த ஓராண்டு காலம் சிப்ஸ் மறக்க முடியாத காலமாக இருந்தது. வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கிடைத்த காலமாக இருந்தது. அவருடைய எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு நல்ல ஒரு புரிதலோடு வாழ்ந்து வந்தார்கள்.

சிப்ஸ் வாழ்வில், பல ஏமாற்றங்கள் நிகழ்ந்தாலும், எதையும் அவர் பொருட்படுத்துவதில்லை.எடுத்துக்காட்டாக, தான் பணிபுரியும் பள்ளியில் 37 வயதே நிரம்பிய ரால்சன் என்பவரை தலைமையாசிரியராக நிர்வாகம் நியமித்தது. பல ஆண்டுகள் அதே பள்ளியில் 52 வயதை நெருங்கிய சிப்ஸ்- க்கு தலைமையாசிரியர் பொறுப்பு வழங்கவில்லை. ரால்சனுக்கும் சீப்ஸ்க்கும் பிடிக்கவில்லை என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். சிப்ஸ் நடத்தக்கூடிய பாடங்கள் மிகவும் பழமையானவை அப்டேட் ஏதும் கிடையாது என்று ரால்சன் விமர்சித்துக் கொண்டே இருப்பார். ஆனால் சிப்ஸ் மாணவர்களின் நலன் கருதி பள்ளியின் வளர்ச்சிக்காக மட்டும் யோசிப்பார். மற்றவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க மாட்டார்.

1913 சிப்சுக்கு வயது 65 பணி ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்தார் அன்று மாணவர் ஆசிரியர் முன்னிலையில் தன் அனுபவங்களை பகிர்கிறார்.”புரூக்பீல்டு தான் என் வாழ்க்கை 42 ஆண்டுகள் இங்கு கழித்து விட்டேன்”. நான் வேலைக்கு சேர்ந்த போது சைக்கிள் கிடையாது, மின்சார விளக்கு கிடையாது, பள்ளிக்குள் வந்த முதல் சைக்கிள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. பெரும்பாலோனோர் மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டபோது (அசம்பிளி ஹாலை) மருத்துவ வார்டாக மாற்றினோம் என்று தன் அனுபவங்களை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார். பின்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குட் பை சொல்லிவிட்டு ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின்பும் அடிக்கடி தான் பணிபுரிந்த பள்ளியில் மாணவர்களை சந்திப்பதிலும்,பழைய மாணவர்கள் யுத்ததில் இறந்தவர்களுக்கு இறைவழிபாட்டிலும் தவறாமல் கலந்து கொள்வார்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு சாட்டரிஸ் என்ற தலைமையாசிரியர் சிப்சின் ஈடுபாட்டை கண்டு நீங்கள் மறுபடியும் பள்ளிக்கு வந்தால் என்ன ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்கு சில பாடங்களை கற்பித்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டி விரும்பினார். அவர் வேண்டுதலுக்கு ஏற்றவாறு சிப்ஸ் பள்ளிக்கு சென்று லத்தின் மொழி, ரோம் வரலாறு போன்ற பாடங்களை மாணவர்களுக்கு புகட்டினார்.

சில நாள் கழித்து சிப்சுக்கு மூச்சுத்திணறல் காரணமாக அவர் படுக்கையில் கிடந்தார்.இனி ஒரு விடை பெருவிழா வேண்டாம் என்று நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டு அவரின் இரண்டாவது பணி ஓய்வினை தொடர்ந்தார். அப்போது அவருக்கு வயது 70. புரூக்பீல்டு பள்ளிக்கு அருகில் திருமதி விக்க டீன் வீட்டில் வாசல் திறந்தது. பள்ளிக்கு வரும் மாணவர்களை பார்த்துக் கொண்டும் பழைய நினைவுகளை நினைத்துக் கொண்டு காலத்தை கழித்தார்.

வாழ்க்கையில் எவ்வளவோ நடந்து விட்டது ஆனால் இன்னும் ஒரு முறை கூட சிப்ஸ் ஆகாயவிமானம் ஏறவில்லை, தியேட்டருக்கு போய் பேசும் படம் பார்த்தது இல்லை. முதுமை காணாததை இளமை காண்கிறது இதற்கு பெயர் வளர்ச்சி என்கிறார்கள். சிப்ஸ் ஒரு கதாபாத்திரம் போல அல்லாமல்;ஒரு வரலாற்று மனிதராக நிலைக்கிறார்.

புத்தகத்தின் பெயர்: போயிட்டு வாங்க சார் (Goodbye Mr Chips)
ஆசிரியர்: ஜேம்ஸ் ஹில்டன், தமிழில்: ச. மாடசாமி
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்,2013
பக்கங்கள்: 64
விலை: 50

தி. தாஜ்தீன்
முதுகலை ஆசிரியர்
தி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி
ஆவணியாபுரம்.

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *