நூலறிமுகம் – "பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் கவிதைத் தொகுப்பு"

 

 

 

இந்நூலில் உள்ள கவிதைகளை எனது முன் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் எடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம். அறிவுப் பகிர்தலை பணத்தோடு தொடர்பு படுத்தும் சட்டங்கள் எதுவும் இந்த நூலை கட்டுப்படுத்தாது என் கவிதைகளை மற்றவர்கள் திருடி விடுவார்கள் என்கிற கவலை எனக்கு இல்லை. மற்றவர்களைத் திருடத் தூண்டும் வரிகளை எழுத வேண்டுமென்பதே எனது குறிக்கோள்.

தனது “பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்” நூல் குறித்து
கவிஞர் இந்திரனின் வரிகள் இவை.

இந்தக் கவிதைத் தொகுதிக்கு முன்னுரைக்கு பதிலாக மேற்காணும் முக்கிய அறிக்கையொன்றை புத்தகத்தின் பின் அட்டையில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கலை இலக்கிய விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் ஓவியர் என பன்முகத்தன்மை கொண்ட நன்கறியப்பட்ட எழுத்தாளரான கவிஞர் இந்திரன் அவர்கள். எப்போதும் இலக்கிய உலகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னத்தி ஏராக நிற்கும் அவரது இந்த முன்னுரையும் வித்தியாசமாகவே வாசகர்களை வெகுவாய் ஈர்த்துவிடுவதில் ஆச்சர்யமில்லை.

எது கவிதை என்பது பல ஆண்டுகளாய் மாறி மாறி பேசப்பட்டுக்கொண்டே வருகிறது. இதுதான் இலக்கியம் இதுதான் கவிதை இதுதான் கலை என ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அடைந்து கிடந்தவைகளை அது இருந்த இடத்தில் இருந்தபடி அப்படியே தொடரவேண்டுமென்று விருப்பம் கொண்டவர்களிடமிருந்து காலச்சூழல்களுக்கேற்ப கவிதையும் கலையும் இலக்கிய வடிவங்களூம் தன்னைத்தானே கட்டவிழ்த்துக் கொண்டு பரந்த மனிதச்சமூத்தின் பொது வெளிகளில் சமீப காலங்களில் சுதந்திரமாய் உலவத்தொடங்கி விட்டது. அப்படி எல்லோருக்குமானதாய் நிறுவப்படும் படைப்புகள் புதிய பரிணாமத்தை இலக்கியத்துக்குள் நிகழ்த்திக்கொண்டே மேலும் மேலும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை. இப்புதிய மாற்றங்கள் படைப்பாளிகளையும் படைப்பு குறித்த பார்வைகளையும் மேலும் கூர்மைப்படுத்தும் என்பது நிச்சயம். கவிஞர் இந்திரன் தனது கவிதைகளின் மூலம் இளைய சமூகத்திற்காக பல முன்னெடுப்புகளை உதாரணங்களை படைப்புகளின் மூலம் இலக்கிய மேசையில் முன்வைத்து சென்று கொண்டிருக்கிறார். குறிப்பாக எதிர் கவிதைகள் எனும் புதிய அறிமுகத்தை வாசகனுக்கு முன்னைக்கிறார். பரிசோதனை முயற்சிகளின் மூலம் வாசக பரப்பில் பல்வேறு ஆச்சர்யங்களை நிகழ்த்துகிறார்.

இந்தத் தொகுப்பிலிருக்கும் கவிதைகளனைத்திலும் ஒரு எளிமை கூடவே நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது. அது கவிதைகளுக்குள் நெருக்கமாய் நம்மை ஒன்றிப்போகச் செய்கிறது. பார்வைக்கு எளிமையை போர்த்துக்கொண்டிருந்தாலும் கவிதையின் நோக்கமும் வெளிப்படுத்தும் விதமும் ஆழங்களை நோக்கி நம்மை இழுத்துச்சென்று ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. தன் கவிதைக்கான பாடுபொருளை இவர் தனது கற்பனையின் ரகசிய அறைகளுக்குள்ளிருந்து எடுத்து வரவில்லை மனிதர்களின் அன்றாட வாழ்வியல் அசைவுகளிலிருந்தும் நடைமுறை எதார்த்தங்களிலிருந்தும் எடுத்து வந்து நம் வாசிப்புக்கு வைக்கிறார். நாள்தோறும் நாம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாய் கடந்து செல்லும் பலதரப்பட்ட விசயங்களின் மீது அமர்ந்து பயணிக்கிறது அவரது கவிதைள். தோல்விகள் ஏக்கங்கள் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் உழைக்கும் மனிதர்களின் பாடுகள் நட்சத்திர விடுதிகள் இயற்கையின் ஆச்சர்யங்கள் அது தரும் ஒத்தடங்கள் காலகாலமாய் தொடர்ந்து வரும் ஏமாற்றுகள் மதம் கடவுள் குறித்த அச்சங்கள் ஆபத்துகள் என அனைத்தையும் நம் அருகில் நிறுத்தி கவிதைகளை பருகத் தருகிறார். ஆரவாரமில்லாத ஆனால் அழுத்தமான நடை கவிதைகளுக்குள் மின்னுவதை காணலாம். கவிதைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் வாசிப்பவருக்குள் கவிதை புரியாத குழப்பத்தையும் சலிப்பையும் தந்துவிடக்கூடாது. இலக்கியத்தின் சமையலறையில் தயாராகும் உணவுகள் எல்லாதரப்பினரும் ருசிக்கும்படியாக பரிமாறப்பட வேண்டும் என்று அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் இளம் படைப்பாளர்களுக்குள் புதிய நம்பிக்கைகளை வேர் பிடிக்கச் செய்யும்.

வெறும் அழகியலுக்குள் நின்றுகொண்டு ஒப்பனைகள் சூடி மயக்கத்தின் குடுவைகளில் முகம் புதைத்து மகிழ்வதல்ல கவிதையின் வேலை. அது பூமியின் அனைத்து மனிதர்களுக்குமானதாய் இருக்க வேண்டும். ஓடும் நதியில் அழுக்குத் துணிகளை வெளுக்கும் பாறைகளுக்கும் அடித்துத் துவைக்கும் தோள்களுக்கும் ஒத்தாசையாக தன்னாலான புதிய தண்ணீரை வற்றாமல் தந்துவிட்டுச் செல்ல வேண்டும்.

இவரது கவிதைகள் வாழ்வின் எல்லாவித எல்லைகளுக்கும் நுழைந்து திரும்புகிறது. நின்று நிதானமாய் ஒவ்வொன்றுடனும் உறவாடுகிறது. கரிய இருளாய் படிந்து கிடக்கும் கண்மூடித்தனங்களின் மீது கேள்விகளை எழுப்புகிறது. சமயத்தில் எது தேவையென்பதையும் அதற்கான தீர்வுகளையும் பூடகமாக பதிவேற்றிவிட்டு அடுத்தடுத்த திசைகளை நோக்கி தன் போக்கில் பயணிக்கத்தொடங்கி விடுகிறது. கவிதைகளுக்குள் உலவும் அழகியல் சார்ந்த பாடுபொருள்களுடன் மட்டுமே முன் வரிசையில் நிறுத்த இவரது கவிதைகள் விரும்புவதில்லை. அழகியலுடன் வலிகளையும் கனவுகளையும் விடியலையும் சம நிலையற்ற சமூகத்தில் மனிதத்தை தாங்கிப்பிடிக்கும் உலகத்தின் கனவுக்குள்ளும் பயணிக்கவே அதிகமாய் விரும்புகிறது.

பூமியை நேசிக்கும் அதே நேரம் பிரபஞ்சத்தின் வெளிகளுக்குள்ளும் வேற்று கிரகத்து மனிதர்களின் கவிதைகளை வாசிக்கவும் அவர்களுடன் கைகுலுக்கவும் இவரது கவிதைகள் விரும்புகிறது. பூமியைத்தாண்டி தமது கரங்கள் வேறொரு நிலத்தின் ஜீவனுடன் உறவை புதுப்பித்து அன்பு செய்யவும் நீள்கிறது. பிரபஞ்ச வெளிகளிலிருந்து சட்டென பூமிக்குத்திரும்பி தொன்மங்கள் படிந்து கிடக்கும் புதை நிலத்தை தோண்டியெடுக்கிறது. நிலம் கிளறும் அவரது கவிதை புதையுண்ட ஒரு நாகரிகத்தின் உண்மை நிலையை அறிய முற்படாமல் தெரிந்திருந்தும் அதுகுறித்து கேள்வியெழுப்பாத மந்தத்தனத்தை எதிர்க்கால தலைமுறைகளிடம் ஒரு மறைமுக கேள்வியாய் அணில் வாலில் தொலைந்த கோடுகள் மூலம் வைக்கிறது. முடிந்த காலத்தின் மீதும் எதிர்காலங்களின் மீதும் பயணம் செய்யும் அவரது கவிதைகள் அதிக அளவில் நேரடியான மனித வாழ்வின் எதார்த்தங்களை வசீகரித்துக்கொண்டு அதனுடன் நம்மையும் சேர்த்து இழுத்துச்செல்கிறது. சகமனிதர்களின் பிரச்சினைகளை அவதானித்து அதன் மீது தனது ஈரம் மிக்க கவிதையின் நிழல் பரப்பி நிற்கிறார் கவிஞர்.

பல்வேறு மனிதர்கள் படும் பாடுகளை அசைபோடுகிறது கவிதைகள். சிற்பக்கடற்கரையில் இருளர் குடி மக்களுடன் கடற்கன்னியம்மனின் ஆடல்களுடன் இரவிலமர்ந்து அவர்களின் விடியாத வாழ்வை பார்க்கிறது. சுங்கச்சாவடியில் காது வலிக்கும் ஹாரன் சத்தங்களுடன் ஊமையாய் நிற்போரின் வரிசையில் நம்மையும் கொண்டுபோய் நிறுத்துகிறது. எல்லோரும் இணக்கமாய் உறங்கும் அதிகாலைகளில் பசித்த வயிறுடன் கழிவுகளை அகற்றும் மனிதர்களுடன் அவரது கவிதை நடந்து செல்கிறது. ஆண் பெண் கணவன் மனைவி நான்கு சுவர்களுக்குள் நிலவும் உடல் உள்ளம் சார்ந்த உளவியலை பேசுகிறது. வெளிப்படுத்தாமல் இயந்திரமாய் உழலும் மனித வாழ்வில் அன்பையும் காதலையும் அள்ளிப்பருகச் சொல்லி மறைமுகமாய் ஆசி தருகிறது. ஃப்ளெமிங்கோ பறவைகளுடன் சேர்ந்து தன் காதலை கொண்டாடுகிறது. தீர்ப்பளித்தவர்கள் சுகமாய் உறங்கிக்கொண்டிருக்க தூக்குதண்டனை நிறைவேற்ற வருபவன் கைகளில் மரணத்தை சந்திப்பவன் மூலம் உலகத்தில் எஞ்சியிருக்க வேண்டியது அன்பு ஒன்றே என அவனது இறுதி உரையை உதடுகளால் மொழி பெயர்க்கிறது. கடவுளையும் மனிதனையும் ஒரே தராசில் ஓவியமாய் நிறுத்தும் சிறுமியின் பார்வையில் ஒன்றாய் சமன் படுத்திப்பார்க்கிறது. தனது அனுபவங்களையும் அறிவையும் சந்தேகிக்கிறது. தன்மீதே தன் சாதனைகள் மீதான முரண்களை முன் வைக்கிறது. தன்னில் இருக்கும் இயல்பான மனிதனுடன் ஒரு சில நேரங்களில் வேறு பட்டு நின்று கவிதைகளை நெய்கிறது..

இவரது பல கவிதைகளை வாசிக்கும்போது வாசிப்பவர்கள் எழுதியவரின் முகத்தையும் முகவரியையும் அதற்குள் பொருத்திப் பார்க்காமல் தங்களை அதற்குள் நிறுத்திப்பார்க்கும்போது கவிதைக்குள் இருக்கும் நேர் எதிர் மறைகள் வாசகரை நெகிழச்செய்து விடும்.

பெருந்தொற்றுக்காலத்தில் மனிதர்கள் எப்படியெல்லாம் சிறைப்பட்டு அழுத்தங்களுடன் அடைபட்டுக்கிடக்க வேண்டியிருக்கிறது என்பதை இத்தொகுதியில் இருக்கும் சில கவிதைகள் பேசுகிறது. முருங்கை பூ உதிரும் மரத்தில் காற்றில் தொங்கும் வாலுடன் சுதந்திரமாய் படுத்திருக்கும் வெருகுப் பூனைக்கிருக்கும் சுதந்திரம் மனிதருக்கில்லாமல் இருப்பதையும் வெளியிலிருந்து அந்நியனைப்போல் வீட்டுக்குள் நுழைந்து முகமூடியை கழட்டியதும் நம்மை நாமே அடையாளம் தெரியாமல் தவிக்கும் மனதின் அயர்ச்சிகளையும் கவிதைகள் பேசுகிறது.

உள்ளூர் மனிதர்களின் வாழ்வியலோடு தம்மையும் பிணைத்துக்கொண்டு செல்லும் இவரது கவிதைகள் உலகில் அடுத்தடுத்த பிரதேசங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறது. பிரான்சின் புராதன தேவாலயம் ஒன்று பற்றி எரிந்த போது இறைவனின் பூர்வ அடையாளம் ஒன்று அழிவது பற்றியே மனிதக் கண்கள் தவித்துக்கொண்டிருக்க கோபுர உச்சியில் கூடு கட்டிய பருந்துகளின் வலியையும் அனல் நுகரும் அவற்றின் பதட்டத்தையும் வான்கோவின் ஓவிய மரம்போல் உயரும் ஆலய நெருப்பை உருவகம் செய்து நெருப்பில் உயிர் கருகும் எலிகள் பூச்சிகளையும் அதை தின்னக்காத்திருக்கும் காகங்களையும் என அவரது பார்வை உயிர்களினருகில் அமர்ந்து தனது பார்வையை செலுத்துகிறது. அப்பார்வையில் இதயத்துக்குள்ளிருந்து ஈரம் சொட்டுகிறது. மனிதன் படைப்பதனைத்தும் நிலையானதல்ல புனிதம் நிறைந்ததுமல்ல அது கடவுளுக்கென எழுப்பிய கோபுரமாயிருந்தாலும் ஒன்றுதான் என்பதை நாசூக்காக அவரது கவிதை சொல்ல விழைகிறது.

கடவுள்கள் குறித்த இவரது கவிதைகள் பல எதிர் கேள்விகளை கடவுளிடமும் மனிதனிடமும் கேட்கிறது. காலகாலமாய் மனிதன் அச்சமும் புனிதமும் போர்த்து தூக்கிச் சுமந்து வந்த கடவுள்களிடமும் அதன் நடவடிக்கைகளின் மீதும் தனது கேள்விகளை வைக்கிறது. இவரது கவிதையில் கடவுளே இறங்கி வந்து நிகழ்காலத்தை அலசுகிறார். கடவுளுக்கும் மனிதனுக்குமாக தொடர்ந்து வந்த உறவின் நீட்சியாய் இன்று வரை கடவுளால் கிடைத்த பலன்கள் என்னவென்று மனிதனுடன் வினாவெழுப்பி உரையாடுகிறார். கடவுள் மனிதன் இருவருக்கான உலகத்தொடர்பில் பலன்களைவிட பாவங்களே கடவுளின் கணக்கில் அதிகமாய் வைக்கப்பட்டிருப்பதால் மனிதனுக்கும் கடவுளுக்குமான அபத்தமான உறவை சுட்டிக்காட்டி மனிதச்சுயநலத்தை கடவுளின் பார்வையிலேயே பகடி செய்கிறது இவரது கடவுள் கவிதைகள்.

நான் என்பது உண்மையில் யார் என சுய விசாரணை செய்யும் ஒரு சில படைப்புகள் நான் என்பது இப்பூமியில் எதுவரை என்று நம்மையும் சேர்ந்தே யோசிக்க வைக்கிறது. என் கவிதையில் சந்திக்கும் கவர்ச்சிகரமான அது நானல்ல என் வார்த்தைகள் வெறும் நிழலே அதில் என்னை தரிசிக்காதீர்கள் என்று கவிதைக்குள் தன்னையே சுய விசாரணை நடத்திக்காட்டுகிறார். நட்சத்திர விடுதிகளை தெருவோர வாழ்வை ரயில் தண்டவாளங்களில் பணி செய்வோரின் ஒடுங்கும் நிழலை ஆண் பெண் கணவன் மனைவி உறவின் உன்னதங்களை நெருக்கத்தை வஞ்சிக்கப்படும் மாந்தர்களை இயற்கை பேரிடரை அத்துமீறும் அறத்தை அடி நெஞ்சில் கூடவே தன்னுடன் பயணித்து வரும் அமைதி பொங்கும் தன்னுடைய கடலை கடற்கரை மரங்களை பூக்களை பூமியிலிருக்கும் என யாவற்றையும் கவிதையின் பாடுபொருளாய் கொண்டுவந்து நிறுத்தும் இவரது படைப்பு மொத்தத்திலும் அடி நாதமாய் இழைந்தோடுவது சுரண்டல்களற்ற உலகமும் கலப்படமில்லாத சக மனிதனை அரவணைத்துக்கொள்ளும் அன்பு என்ற ஒற்றைச்சொல்லும் மட்டுமே.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கும்போதே பலவித பரிமாணங்களை உள்வாங்கி அடுத்தடுத்த நிலைகள் குறித்து சிந்திக்க வைத்துவிடுகிறது. மேலும் கவிதைக்குள்ளிருந்து வாசகனுக்கு மேலும் சில கவிதைகளும் பாடு பொருளும் கவிதைகள் குறித்த ஒரு வித தெளிவும் கிடைத்துவிடும் என்பது நிச்சயம்.

இதிலுள்ள கவிதைகள் பல நமக்குள் நெருக்கமாய் வந்து அமர்ந்து கொண்டாலும் ஒரு சில கவிதைகளை மட்டும் ஒரு வாசகனின் மனோபாவத்துடன் ஆய்வு நிலையில் அணுகிப்பார்க்கலாம் என்று தோன்றுகிறது…

கவிஞர் இந்திரன் கவிதைகள் வாசகனின் பார்வையில்.

நடிப்பவர்களின் பின்னிருக்கும் வாழ்வியல் அரசியலை நுணுக்கமாய் ஒரு கவிதையில் இவர் சொல்கிறார். கனவுத் தொழிற்சாலையின் குட்டிப்பிரதேசமான சென்னை கோடம்பாக்கத்தில் நினைவுக்குப் பரிச்சயமான ஆனால் பழகியிராத சில மனிதர்களை எதேச்சையாக கவிஞர் காய்கறிச் சந்தையில் காண்கிறார். அவர்களில் ஒரு சிலர் காய்கறி வாங்குவதை கடைவீதியில் பார்க்கிறார். சிலர் அரிசி வாங்குகிறார்கள் அவர்களனைவரும் எல்லோரைப் போலவும் தத்தம் தேவைகளை கடையில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அரிசி வாங்கும் முதிய பெண்மணி ஒருவரைப் பார்த்து கவிஞர் அதிர்கிறார்.

பிணமாக நடிப்பவர்கள்
தினந்தோறும் கோடம்பாக்கம் மார்க்கெட்டில்
காய்கறி வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்
முகத்தில் ஈ மொய்த்தபோது கூட
பிணமாக நடித்துப் பேர் வாங்கிய நடிகரை
பிரெஞ்சு மொழி வகுப்பில் சந்தித்தேன்.
என்று சொல்பவர் அடுத்த காட்சியில் அதிர்கிறார்
வாய்க்கரிசி போடும் காட்சியில் நடித்த பாட்டி
அரிசி வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது
ஏனோ துணுக்குற்றேன்.

எனும் போது பிணமாய் படுத்து வாய்க்கரிசியை வாங்கிக்கொண்டு வந்த பணத்தில் வயிற்றுப்பசிக்கு அரிசி வாங்குவதைக் கண்டே அந்த அதிர்வலைகளை உள் வாங்க முடிகிறது. ஆம் அவர்களில் பலரும் காமிரா முன் பிணமாக நடிப்பவர்கள். வாழ்க்கையின் தேவைகளுக்காக மரணத்தின் வாசனையை ஒப்பனைகளால் நுகர்ந்து வயிறு கழுவுபவர்களின் இயலாமைகளையும் ஆற்றாமைகளையும் எளிமையாக பின்னப்பட்ட இக்கவிதை பொட்டிலறைந்து சொல்லிவிட்டு செல்கிறது. சினிமாவில் தோன்றும் மனிதர்கள் வெளி உலகத்தின் பார்வைக்கு வசீகரம் மிக்கவர்களாக தெரிந்தாலும் அவர்களில் பெரும்பான்மையோரின் வாழ்வு இருள் நிரப்பிய பள்ளங்களுக்குள்தான் இன்னமும் உழல்கிறது என்பதை இக்கவிதை உணர்த்திவிடுகிறது. தாங்கள் நடித்த காட்சிகளை ஒருவிதத்தில் நிறைவேறாமல் நின்றுபோன தங்கள் நடிப்பு கனவு துளியேனும் நிறைவேறிய திருப்தியில் தாங்கள் பிணமாய் நடித்த காட்சிகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்து சிலாகித்துக்கொள்கிறார்கள்

தாங்கள் பிணமாக நடித்த காட்சிகளின் புகைப்படங்களை அவர்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து விருப்பக் குறிகளை குவித்துக் கொண்டிருந்தனர். சாவுதான் வாழ்வின் இறுதி லட்சியம் என்றாலும் பிணமாக நடிப்பவர்களுக்குத் தெரியும் அடிக்கடி சாவதைப்போல் நடிப்பது மரணத்தைப் பகடி செய்வது என்று.

கவிதையில் அவர்கள் பிணமாக நடிக்கும்போதெல்லாம் மரணத்தை கேலி செய்கிறார்கள் என்றும் அது அவர்களுக்கே தெரியுமென்றும் கவிதையை முடிக்கிறார் கவிஞர்.

எல்லா மனித வாழ்க்கையும் மரணத்தை நோக்கித்தான் நகர்கிறது என்றபோதிலும் அதற்குள் வலி சுமந்தாவது வாழ்ந்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களை மரணத்தின் பந்தலின் கீழ் பிணமாக படுக்க வைக்கிறது. அநேக சினிமாக்களில் பெயர் தெரியாதவர்களாக உலவும் இவர்கள் ஊர்வலங்களில் போராட்டங்களில் சண்டைக்காட்சிகளில் கல்யாண வீடுகளில் சடங்குப் பந்தலில் கலவரங்களில் கும்பலில் யாரோ ஒருவராய் முகமற்று பெயரற்றவர்களாக காமிரா முன் நிறுத்தப் படுகிறார்கள். ஏதோ லட்சியத்தோடு வந்தவர்கள் துணை நடிகர்களாக தோன்றி துணை நடிகர்களாகவே மறைந்துபோகும் இவர்களின் வாழ்வின் பக்கங்கள் ரணம் மிக்கது என்பதை நேரடியாய் காண்பவர்கள் அறிவர். கனவுப்பிரதேசத்தில் தொலைந்துபோனவர்களின் பெருங்கதையை சிறு கவிதையின் மூலம் மிகத்துல்லியமாய் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். மரணிப்பதற்கு முன்பான நாடகத்தில் அன்றாடங்களை வலியின்றி கடக்க சொற்ப காசுக்காக பிணமாக நடிப்பவர்கள் மரணத்தையே பகடி செய்தாலும் அதையும் தாண்டி ஒரு பிணத்தின் சாயலில் தன்னை ஒப்புக்கொடுத்து நடிப்பதென்பது அவர்களுக்குள் தேங்கிக்கிடக்கும் வாழ்வதற்கான தாகத்தையே வெளிப்படுத்துகிறது. அதனூடே நிறைவேறாமல் புதைந்து போன ஒரு சினிமா கனவையும் பிணமாய் நடிக்கும் அம்முகங்களில் காணமுடிகிறது. இவர்கள் வாழ்வதற்காக இறப்பதற்கு முன்பே சாவை சந்தித்தும் வெளிச்சமில்லாத நட்சத்திரங்களாய்த் தான் தெரிகிறார்கள்.

மற்றொரு கவிதை

“தற்கொலைக்கு முயலும் நட்சத்திரம்”

இப்பூமியின் வாழ்வு எத்தனை அபத்தமானது. என்றோ ஓர் நாளில் ஏதுமற்று முறிந்து விழப்போகும் வாழ்வின் கிளைகளை இறுக்கமாய் பிடித்து தினமும் ஆடிக்கொண்டிருக்கிறோம். ஒரு நட்சத்திரத்தைப்போல் ஜொலிக்கும் அனைத்தும் ஓர் நாளில் ஒளி மங்கி சாம்பல் துகள்களாய் சிதறப்போவதை உணரும் தருணத்தில் உள்ளுக்குள் அழுது ஏமாற்றங்களுடன் வெளிச்சொல்ல முடியாமல் ஒவ்வொருவரும் குமைகிறார்கள். கவிஞரின் கவிதையொன்று பால்வெளியில் இறந்துகொண்டிருக்கும் நட்சத்திரத்தின் ஆயுள் குறித்தும் அதன் இறப்பின் கடைசி நிலை பற்றியும் நம்மிடம் பேசுகிறது. தேய்ந்து சுருங்கும் நட்சத்திரத்தின் வாழ்வினைச்சொல்லும் கவிதை மனித வாழ்க்கையின் நிலையின்மையை மறைமுகமாய் எடுத்துக்கூறுவது போலிருக்கிறது.

பால்வெளித்திரளில்

ஒரு நட்சத்திரம்

பல ஒளி ஆண்டுகள்

மரணப்படுக்கையில் கிடக்கிறது

என்பவர் அது தன்னைத்தானே உண்ணத்தொடங்குவதையும் தனது சுருக்கம் கண்டு அழுவதும் தற்கொலைக்கு முயல்வதாகவும் கூறிச்செல்லும் இக்கவிதை

மரணமடைந்த நட்சத்திரத்தை

நான் இனியும் நட்சத்திரம் என்று

எப்படி பெயர் சொல்லி அழைப்பேன்..?

எனச்சொல்லி கடைசியில் அதற்கொரு பெயரையும் சூட்டுகிறார்.
இறப்பை நோக்கி நகரும் மனிதனை மரணம் நோக்கி நகர்த்துவது எது..?

நட்சத்திரத்தை மரணப்படுக்கையில் கிடத்தியது யார் என்ற கேள்வி எழுப்பும்போதே காலகாலமாய் மனிதன் தனக்குத்தானே கேட்கும் விடையற்ற பல கேள்விகளுடன் இக்கேள்வியும் பொருந்திப்போகிறது..

தன்னுடல் உருக்குலைவதை மனிதன் விரும்பாவிட்டாலும் உடலும் இயக்கமும் தேய்வும் தளர்வும் ஒரு கட்டத்துக்குப்பின் மூளையின் கட்டளையை கேட்பதில்லை என்னதான் மருத்துவத்தால் உடலைத் தூக்கி நிறுத்த முயன்றாறலும் மூப்பில் குறுகி உயிர்ப்பறவை பிரபஞ்ச வெளிகளில் கலந்துவிடுவதைப்போல பால்வீதிகளில் தொலைந்துபோகப் போகும் ஒரு நட்சத்திரம் தன் மரணத்தை நினைத்து அழுவதைப்போலவே மனிதன் தன் நிலையாமை குறித்தும் நெருங்கும் இறப்பை எண்ணியும் இறுதிக் காலத்தில் வெளிச்சொல்லாமல் ஒருவித கிலி கொள்ளத்தொடங்கி விடுகிறான். ஒரு நட்சத்திரத்தின் இறப்புக்குப்பின் அதற்கொரு பெயரை விஞ்ஞானத்தின் பார்வையிலேயே கவிஞர் அதை கருந்துளை என அழக்கிறார். இறந்த நட்சத்திரத்திற்கு கருந்துளை எனபபெயரிட்டாலும் அடக்கம் செய்யப்பட்ட பின் உடல் சிதைந்த மனிதனுக்கு எந்த பெயரும் இன்று வரை வைக்கப்படவில்லை. சரி.. இறந்தவனை எப்பெயர் சொல்லி அழைப்பது என்ற கேள்வி நம் முன் நிற்கிறது.

“இயேசுவின் கண்கள்”

மனிதர்கள் தங்களுக்கான தேவைகளை தத்தம் விருப்பத்திற்குறிய பார்வையிலேயே பார்க்கவும் வசப்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறார்கள். அசல் தோற்றம் ஒன்றாக இருப்பினும் தங்கள் வசதிக்கேற்ப ஒன்றை உருவகம் செய்து மாற்று பிம்பங்களை தங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்கிறார்கள். மூலத்தின் அர்த்தங்களை பொருட்படுத்தாமல் தன் சுய விருப்பம் சார்ந்தே எதையும் கட்டமைத்துக்கொள்ள விரும்புகிறது மனித மனம். கடவுள் தொடங்கி வீசியெறியும் பொருட்கள் வரை அப்படித்தான் அனைவராலும் கற்பிதம் செய்யபப்படுகிறது. இயேசுவின் கண்கள் என்ற ஒரு கவிதையில்

  • இயேசுவே

உந்தன் கண்கள் எந்த நிறமென்று சொல்லி விடுங்கள்

நீலமா பச்சையா பழுப்பா கருப்பா..?

என கேள்வி எழுப்புகிறார்…

  • நாங்களோ கவிஞர்கள்

ஏதேதோ கற்பனை செய்து கொள்கிறோம்..

என நகரும் கவிதையில், இங்கே கற்பனை செய்துகொள்வதாக சொல்லப்படும் கவிஞர்கள் என்ற பதம் கவிஞர்களை மட்டும் குறிக்கவில்லையென்றே தோன்றுகிறது.

உலகம் முழுமையும் ஒவ்வொருவரும் அவரவர் சூழல்களுக்கேற்ப விருப்பத்துக்கேற்ப இயேசுவின் கண்களுக்கு நிறம் கொடுத்துகொள்கிறார்கள்.

ஒருவன் “பாசி படர்ந்த கூழங்கல்லின் பச்சை நிறத்தை இயேசுவின் கண்களாய் ஒப்பிட்டுக்கொள்கிறான் மற்றவன் நீல நிறத்தை விழிகளுக்குப் பூசுகிறான் வேறொருவன் பழுப்பு நிறத்தையும் இன்னுமொருவன் அன்பின் அணையா விளக்குகளாகவும் உருவகம் செய்கிறான். வாழ்க்கையமைப்பு நிலமும் பருவமும் சூழல்களும் சார்ந்து வேறுபடுகிறது. படைப்புகளின் வெளிக்கட்டமைப்புகள் மாறுபடுகிறது. ஆனால் விதவிதமாய் உருவகம் செய்யப்படும் ஒன்றின் உண்மைச்சொரூபம் பலரும் கற்பிதம் செய்யும் வடிவத்தில் இல்லை அது எங்கொங்கோ பயணித்து ஏதோவொன்றின் பொருளைச்சுமந்து நிற்கிறது. அது கற்பனையின் உச்சமாகவும் இருக்கலாம். எனவே உருவாக்கப்பட்ட ஒன்றின் தூய நோக்கத்தை மறைத்துவிட்டு வேறு எதையோ தேடியலைவதை இயேசுவின் கண்களில் அவரவர் காணும் நிறத்தை கேள்வியாய் எழுப்பி இப்படிச் செல்கிறது கவிதையின் கடைசி வரிகள்.

வார்த்தை விளையாட்டுகளில்

எங்களைத் தொலைத்து விடாமல்

காப்பாற்றி அருளுவீராக.

இயேசுவின் கண்களுக்கு அவரவர் விருப்பம் போல் அடையாளம் தர விரும்புகிறார்கள். ஒரு விதத்தில் கடவுளின் பிம்பத்துக்கு மனிதன் காலத்திற்கேற்ப தரும் ஒப்பனை உருவகங்களைப் போலத்தான் மூலத்தை மறந்துவிட்டு தாவும் கருதுகோள்கள். அடிப்படையை மறந்துவிட்டு வெளிப்பூச்சுகளால் தம்மை ஜோடித்துக் கொள்வதிலேயே கவனத்தை குவிப்பதால் வார்த்தை விளையாட்டுகளால் தங்களின் நிஜத்தேவைகளை தொலைத்துவிட்டு வேறொன்றில் உலகம் அமிழ்ந்துகிடப்பதை சொல்வதுபோலிருக்கிறது நிறப்பிரிகை நடத்தப்படும் இயேசுவின் கண்கள் கவிதை.

அணில்

சிந்துவெளி முத்திரையில்

மரத்தண்டில் தலைகீழாய் நின்றபடி

வால் துடிக்கக் கத்திய அணிலை

இன்று

என் தோட்டத்தில் பார்த்துத் திடுக்கிட்டேன்

இன்னமும் அது என் தோட்டத்து மரத்தண்டில்

தலைகீழாய் நின்றபடி

வால்துடிக்கக் காத்திக்கொண்டிருந்தது

என்று துவங்கும் கவிதையில் தன் தோட்டத்தில் ஆதிச்சமூகத்தின் அடையாளமய் வாலசைத்து நின்ற முத்திரையை பார்த்ததும் ஆச்சர்யம் அல்லது மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு நிகழ்வை ஏன் திடுக்கிட்டேன் என்று கவிஞர் குறிப்பிடுகின்றார் என்று நினைப்பதற்குள் அடுத்த வரிகளில்…

அதன் முதுகில்

சிந்துவெளி காலத்தில் இருந்த ஐந்து கோடுகளில்

இரண்டு கோடுகளை இன்று காணோம்

எனும்போது இன்னும் ஆச்சர்யம் மேலோங்குகிறது… எப்படித்தொலைந்திருக்கும் அவ்வரிகள். பரிணாமத்தின் தேய்வா பழங்காலத்து கற்பனையின் முத்திரைக்குறியீடா

என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பது இயல்புதானென்றாலும்

கவிதையின் முடிவில் அஸ்கோ பர்போலாவுக்கு என்று அடைப்புக்குறிக்குள் ஒரு செய்தியை சொல்லிவிட்டுச்செல்கிறார் கவிஞர்.

நைல் நதி நாகரிகம் மஞ்சளாற்று நாகரிகம் யூப்ரட்டீஸ் டைக்ரீஸ் மெசபடோமியா நாகரிகம் போன்ற பழம்பெரும் நாகரிகங்களை தாண்டிய ஒரு நாகரிக வரலாறு புதை வடிவில் பூத்துக்கிடப்பதை அவரது கவிதை அணில் வடிவில் சென்று அகழ்ந்து பார்ப்பதாய் தோன்றுகிறது. வால் தூக்கி பழங்காலத்தை தன் குரலால் எழுப்பி இது உனது அடையாளமென்று உரக்க கத்துகிறது அணில். அதன் குறியீடுகளில் இருக்கும் ஐம்பட்டைகளை நிகழ் காலத்துடன் பொருத்திப் பார்த்து அது வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதைக்கண்டு வெதும்பி மறைமுகக்கோபத்தை வெளிப்படுத்துவது போலிருக்கிறது கவிதை. அந்த ஐந்து கோடுகளின் குறியீடு அரிக்கமேட்டிலும் ஆதிச்சநல்லூரிலும் கீழடிக்குள்ளும் இருக்கிறதா என்பதை மறைமுகமாக ஆய்வு செய்யச்சொல்கிறதோ.?
தமக்குச் சொந்தமான நாகரிகமே இது என்பதை ஆரியர் திராவிடர் தொடர் விவாதப்பொருளாய் ஆக்கப்பட்டு முடிவறிவிக்காத அடைமொழிக்குள் அடைத்து ஒரு பழந்தமிழரின் பரந்து விரிந்த நாகரிகக் காலம் நம் கண்முன்னே சிதைக்கப்படுவதை பார்த்தபின்னும் அதன்பொருட்டு எந்த பிரக்ஞையும் இல்லாமல் வெறுமனே இருப்பதை இறுதிவரிகளில் இப்படி இடித்துக்காட்டுவதாகவே எண்ண முடிகிறது.

முதுகில் தொலைந்துபோன கோடுகள் பற்றிக்

கொஞ்சமும் கவலையின்றி

என்வீட்டு முருங்கை மரத்தில்

பூச்சிதற தாவிக் குதித்து

வளைந்து நிமிரும் கிளையேறி

நுனிப்பூ தின்று மகிழ்கிறது அணில்.

வேற்று நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் புதையுண்டுகிடக்கும் பெருங்காலத்தின் நாகரிக அடையாளம் உன்னுடையதே என்று அறிவித்தபோதும் அது குறித்து எவ்வித சலனமும் கவலையுமின்றி நிகழ்கால சுகங்களுக்குள் உழன்று நுனிப்பூ தின்று மகிழ்வதே நடைமுறை மரபாகிவிட்ட சோகத்தை என்செய்வது. கோடுகள் தொலைந்து தன் வீட்டுத்தோட்டத்தில் தலை கீழாய் வாலாட்டி கத்தும் அணிலின் குரல் ஒரு தொன்மத்தின் குரலென்று அஸ்கோ பர்போலாவுக்கு தெரிந்த ரகசியம் ஏன் உங்களுக்கு புரியவில்லை என்றே அணில் மூலம் கேள்வியெழுப்புகிறார் போலும்.

“ஷேக்ஸ்பியரின் மண்டையோடு”

இப்பூமியில் நம்மைச்சுற்றி எவ்வளவோ குவிந்து கிடக்கையில் ஏதாவது ஒன்றின் மீது மட்டுமே குவிக்கப்படும் கவனத்தை ஒரு கவிதையில் கவிஞர் இப்படி கேள்வியெழுப்புகிறார்.

பெயர் எழுதப்படாத கல்லறைகளுக்குச்

சொந்தக்காரர்கள் பாக்கியவான்கள்

அனாமதேயமாகாவிட்டால்

சாவதின் அர்த்தம்தான் என்ன..?

காணாமல் போனது

ஷேக்ஸ்பியரின் மண்டையோடு மட்டுமல்ல.

எனச் செல்லும் இக்கவிதை..

வாழ்க்கையில் எதுவும் நிலைத்தன்மையற்றது சூழலுக்கேற்ப ஒவ்வொன்றும் மாறிக்கொண்டேயிருக்கும் எனும்போது நிகழ்காலத்தில் உயிரோட்டமாய் நம்மைச் சுற்றியிருக்கும் பலவற்றை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு ஏன் பழைய சிந்தனைகளின் பழைய சித்தாந்தங்களின் மீதே அதீத கவனம் செலுத்தவேண்டும்.

முதன் முதலில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஸ்டார்ச்சை தூக்கிக்கொண்டு அடுத்தடுத்து புதிய பந்தங்களில் ஏற்றி மனிதர்களின் கைகள் மாற்றி எடுத்து ஓடினால்தானே அது சரியான தொடர் ஓட்டமாய் இருக்க முடியும். வாழ்வும் அப்படித்தானே.! பழையவற்றுடன் சேர்ந்து நிகழ்காலத்தின் நிறைகள் யாவையும் அரவணைத்துச் செல்வதுதானே சரியாய் இருக்க முடியும் எனச்சொல்லும் கவிஞர்.

நியாண்டர்தால் மனிதன் கொடுத்த முதல் முத்தம்

இன்றைய மனிதனின் இதழில்

ஒரு முல்லை சிரிப்பது போல் சிரிக்கிறது.
என்கிறார்..

கவிஞரின் இவ்வரிகளில் மொழி வசப்படாத காலத்தில் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உருவமாய் அலைந்த நியாண்டர்தால் மனிதன் கொடுத்த முத்தம் இன்று முல்லைப்பூவாய் சிரித்து பரிணாமம் பெற்றிருக்கிறது எனச்சொல்கிறார். ஆனால் மொழியற்ற அவனது சங்கேத குரல் ஒலிகள்தான் இன்று பல்லாயிரம் மொழியின் பரிணாமமாய் விரிந்து கிடக்கிறது என்பதையும் அதனூடே நாம் உள்வாங்கிக் கொள்ளலாம். தேங்கிக்கிடக்காமல் ஒன்றிலிருந்து ஒன்று வேறொன்றாய் வளச்சியடையவேண்டும். அது இலக்கியத்துக்கும் மிகவும் பொருந்தும் என்றே சொல்ல விழைகிறது கவிதை.

கிளைகள் தேக்கி வைத்திருக்கும் பழைய வசந்தங்களுடன் மேலும் தன் உயரத்தை வளர்த்துக்கொள்ள தன்னுள் புதிய கிளைகளை துளிர்த்து மேலெழுந்து வளர்வதுபோல் பழைய படைப்புகளுடன் சேர்ந்து இலக்கியத்தை அடுத்தடுத்த

மேடைகளுக்கு நகர்த்திச் செல்லாமல் ஒரு இலக்கியவாதியின் காணாமல்போன மண்ணையோட்டையே தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளிடம் இக்கேள்வி முன்வைக்கப்படுவதாகவே படுகிறது.

இடுகாட்டுப் புதைகுழியில்

வெட்டியான்களுக்குக் கிடைக்கின்றன

ஒவ்வொரு மண்டையோடும் சொல்லும் கதைகள்.

ஆம்.. நாம் பார்க்காமல் விட்டுச் செல்லும் ஒவ்வொரு மண்டையோட்டிலும் ஓராயிரம் ஆச்சர்யங்கள் காத்திருக்கலாம். எதையும் கவனத்தில் கொள்ளாமல் எதையும் தோண்டிப்பார்க்காமலே காணாமல் போன பரிச்சயமான ஒரு மண்டையோட்டையே தேடிக்கொண்டிருப்பதையும் அது குறித்த யூகங்களையும் பெருமிதங்களையும் பேசிக்கொண்டிருப்பதையும் வளர்ச்சியற்ற நிலையாய் காண்கிறார். மேற்சொன்ன வரிகள் பழமையைத்தவிர புதிய வடிவங்களை நெருங்க விரும்பாதவர்களின் மீது ஆதங்கம் கொள்வதாகவே படுகிறது.

வாசகனுக்கு ஒரு மன்னிப்பு கடிதம்

ஒரு கவிதை கவிஞன் எழுதும் கோணத்தில் மட்டுமே கவனிக்கப்படுவதில்லை என்பது பலரும் அறிந்ததே. அதேபோல் எல்லா கவிதைக்குள்ளும் நுழைந்து கவிஞனின் சொந்தக் காரணங்களையும் அவனது முகவரியையும் தேடுவது கூடாது. இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே போகும் ஒரு நாடோடியின் கூடாரத்தைப்போல ஒவ்வொரு கவிதையிலும் கவிஞன் வெவ்வேறு காட்சிகளை பதிவேறிச் செல்கிறான். அவன் படைப்புகளில் கூடாரங்களும் காட்சிகளும் மாறினாலும் என்றும் தீராத நேசிப்பிற்குறியதாய் நிற்பது நிலம் மட்டுமே. நிலத்திலிருந்தே அவன் அனைத்தையும் எடுக்கிறான். நிலம் விட்டு நிலம் அகலும்போதும் கூடாரத்தின் கூரைக்குள்ளிருந்தே பலவற்றை அவன் சிந்திக்கிறான். எல்லா நிலத்திலிருந்தும் எழுகிறது அவனது பாடல்கள். எல்லா மரங்களிலும் அமர்ந்து பாடுகிறது அவனது குயில். கவிஞன் தன் கவிதைக்குள் செளந்தர்யங்களை பாடுகிறான் துயரங்களின் கரைகளில் அமர்ந்து அழுகிறான். காதலால் உருகுகிறான் அதையே வெறுக்கிறான் தன்னையே முரணாய் பார்க்கிறான். தன் இயலாமைகளின் தோல்விகளை வெறுக்கிறான். சில நேரம் பொய்களை நேசிக்கிறான் உண்மையைச் சாடுகிறான் தன்னை மனிதனாகவும் பிணமாகவும் பிரச்சினைக்குறியவனாகவும் தேவைப்பட்டால் கடவுளாகவும்கூட காட்டிக்கொள்கிறான்.

தனது முகவரி அறியாதவர்களுக்கும் சில கவிதைகள் மூலம் ஆழ் மன ஏக்கங்களை அறிவிக்கிறான். சில நேரங்களில் அதீத கருத்தியலில் கோமாளியாகவும் பார்க்கப்படுகிறான்.

கவிதைகளில் தீர்வுகள் சில நேரங்களில் நேரடியாக சொல்லப்படுகிறது. பல சமயம் பூடகமாக ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுப்போல கண்டுபிடிக்கும்படி கவிஞனால் விட்டுச்செல்லப்படுகிறது. தன் கவிதைகளில் தன்னைத்தவிர பலவற்றையும் முன் நிறுத்தும் முயற்சியில் மூளையை கவிதைகளுக்கு அர்ப்பணிக்கிறான். இப்படி கவிதைகள் எல்லைகளற்ற கிளைகளை விரித்துச் சென்றாலும் அவற்றில் சில கவிதைப் படைப்புகள் மட்டுமே சிலிர்ப்பையும் தாக்கங்களையும் உருவாக்குகிறது. கற்பனைகளின் மீதமர்ந்த சில ரசனைகள் மனதின் மெல்லிய மனப்பரப்புகளை கிளர்ச்சியெழச் செய்தாலும் பல நேரங்களில் உண்மையைப் பற்றி எழுதும் கவிதைகளே வானம்வரை சொக்கப்பானையாக ஓங்கி எரியத்தொடங்கி விடுகிறது. மற்றதெல்லாம் கார்த்திகை மாதத்தின் மாவளி நெருப்புப்பூவாய் அழகழகாய் அந்தந்த நேரத்தின் மின்மினிப்பூச்சியின் ஒளியாய் மின்னிச் சிதறுகிறது.

ஒரு கவிதையை வாசகன் வாசிக்கும்போது அக்கவிதைக்குள் கவிஞனின் முகத்தை பொருத்திப் பார்க்கலாம்பார்த்தால் கவிதையின் அர்த்தம் சிதையும் வாய்ப்புகளே அதிகமாகிறது. எழுதப்படும் கவிதையிலிருப்பது கவிஞனின் முகமாகவும் முகமூடியாகவும் கருதுவதை அபத்தமானதென புரியவைக்க முயல்கிறார் கவிஞர். வாசகனுக்கும் கவிஞனுக்கும் இருக்கும் நெருக்கத்தின் எல்லைகள் எப்படி இருக்க வேண்டுமென்பதை ஒரு கவிதையில் கவிஞர் விளக்கிவிடுகிறார். நான் எழுதும் கவிதையில் நீ காண்பது நானில்லை எனவே என் கவிதைக்குள் என்னை தரிசிக்காதே கவிதைக்குள் இருக்கும் கவிதையின் கருவை நேரடியாய் சந்தித்துக்கொள் என்கிறார். ஆனால் எழுதுபவன் உள்ளொன்றும் புறமொன்றும் கருத்தியலை மாற்றி மாற்றி வாசகனுக்கு பந்தி வைக்கும் சந்தர்ப்பவாதத்தை அவர் விரும்பவில்லை.

என் கவிதையில் நீ சந்திக்கும்

கவர்ச்சிகரமான அவன்

உண்மையில் நான் இல்லை

என் ரத்தத்தை சிவப்பு மதுவாகவும்

என் மாமிசத்தை அப்பமாகவும்

உனக்கு பரிமாறி வந்திருக்கிறேன் என்பது

என்னவோ உண்மைதான்.

என்பவர் தன் கவிதைக்குள் கற்பிதம் செய்யப்பட்ட புனிதங்கள் அனைத்தும் புனிதங்களல்ல. கவிஞன் ஒரு உண்மையை எழுத எண்ணும்போது அது நாவின் ஏடுகளின் நுனிக்குள் அமர வரும்போது அதில் தன்னையும் தன் எண்ணங்களையும் திணிக்க முயலும்போது அது வேறொன்றாய் நிறம் மாறிவிடுகிறது. எனவே சில படைப்புகளில் கவிதையின் அசலைத்தாண்டி பொய்களின் ஆக்கிரமிப்பு நிலவிவிடுவதாகவும் சொல்கிறார். அப்படி ஏதேனும் கவிதைக்குள் என்னை நிறுவ முயன்றிருந்தால் மன்னித்து விடு வாசகனே என தன் ஒரு சில படைப்புகளில் தன்னை நிறுவ முயன்றிருக்கும் முயற்சிக்கும் தன்னிலை விளக்கம் தந்துவிடுகிறார். கவிதை கவிஞனின் நிலைப்பாட்டைத்தாண்டி உண்மையை நிறுவ முயலவேண்டுமென்பது நிஜம் என்றாலும் பல நேரங்களில் கவிதை கவிஞனின் நிலைப்பாட்டில் நிற்க வேண்டியது காலத்தின் அவசியமாகிவிடுகிறது. ஏனெனில் கவிதைகள் பெரும்பாலும் நியாயத்தின் பக்கம் நிற்பதையே விரும்புகிறது. கசடுகளை தித்திக்கும் பாகென திரித்து கொடுத்தவைகளுக்கெதிரான கலகம் விளையும் காலம் இதுவெனவே கொள்ளலாம்.

உன் முன் சிந்திய வார்த்தைகளை எல்லாம்

என்னால் திரும்பப் பெறமுடியாது என்பதால்

கை பிசைந்தபடி வெறுமனே உன் முன்னால்

இந்த மன்னிப்பை கோரிக்கையாக

வைத்து நிற்கிறேன்.

எழுதும் ஒரு கவிதைக்குள் நைச்சியமாய் தன்னை நுழைப்பதை தவிர்த்து கவிதைக்குள் இருக்க வேண்டிய நேர்மையை மிக நுணுக்கமாக இந்த வரிகள் உணர்த்திச்செல்கிறது.

நடுநிசி மழை

காலங்கள் தோறும் பருவத்திற்கேற்ப மழை அதன் போக்கில் பெய்துகொண்டு தானிருக்கிறது. ஓர் மழை இரவை படுக்கையறையில் கிடக்கும் தம்பதிகளின் வழியே கவிஞர் வேறொரு கோணத்தில் பார்க்கிறார்.

நடுநிசியில்

மூடிய ஜன்னலுக்கு வெளியே பெய்யும் அடர் மழையில்

குளிப்பாட்டப்படும் பிணத்தைப் போல

மெளனித்துக் கிடக்கிறது நகரம்.

இரவு பெய்யும் மழையில் நனையும் நகரத்தை ஒரு பிணத்துக்கு ஒப்பிடுகிறார். அதுவும் இறுதிச்சடங்கில் கழுவப்படும் பிணத்தைப்போல் நகரம் கிடப்பதாய் சொல்லும்போது அம்மழை இரவிலிருந்து நம்மையும் எழுந்து அமரச்செய்கிறது கவிதை. பகலில் பரபரப்பாய் சத்தங்களுடன் மேய்ந்து கொண்டிருக்கும் நகரம் இரவு மழையில் பிணத்தின் மெளனத்தை சூடிக்கொண்டிருப்பதாய் சொல்கிறார். பிணத்தை அடக்கம் செய்துவிட்டு வந்தபின் இருக்கும் ஒரு இறுக்கத்தை அணிந்தபடி மழை இருப்பதாய் இப்படிச் சொல்கிறார்.

காற்றில்லாமல் ஒரே சீராகப் பெய்யும் மழையின் ஒசை

நிசப்தத்தைப் போல இறுகிக் கிடக்கிறது…

என்று சொல்லும் கவிஞர்… அம்மழையானது

 

தெருவிளக்குளின் மீதும்

மாமனிதர்களின் சிலைகளின் மீதும்

சாலையோரோத்தில் நிறுத்தப்பட்டு

உள்ளே தூங்கும் லாரிகளின் மீதும்

மாடியில் கொடிக்கயிறுகளில் காயப் போடப்பட்டு

மறதியாய் எடுக்கப்படாமல் விடப்பட்ட துணிகளின் மீதும்

மழை வலுத்துப் பெய்கிறது.

என்று இரவின் மழையை நகரத்தின் மங்கிய மழை ஒளியில் அதன் காட்சிகளை கண்முன் நிறுத்துமவர் இறுதியாய்

கவிதையை இப்படி முடிக்கிறார்…

வேர்கள் பின்னிக் கிடக்கும் இரண்டு செடிகளைப் போல

என்னோடு படுக்கையில் இருக்கும் அவள் கேட்கிறாள்

“மழையா பெய்யுது..?”

இப்போதுதான் கவிதையின் கண்ணிகள் உடையத்தொடங்குகிறது. மழை பெய்யும் ஓசையை உணர்ந்தும் உணராத ஒரு லேசான சலசலப்புடன் வீட்டின் படுக்கையறைக்குள்ளேயே வந்து நிற்கிறது. மழையா பெய்யுது என்ற மனைவியின் அக்கேள்வி அந்த நிமிடத்துக்கு முன்பிருந்த காட்சிகளுக்குள் நம்மையும் அழைத்துச்சென்று நிறுத்திவிடுகிறது. மழையா பெய்யுது என்ற இக்கேள்வியை ஏதோ ஒர் இரவில் நாமும் கடந்திருப்போம். அக்கேள்வியையும் சூழலையும் வாசகனின் யூகத்திற்கே விட்டு விடுகிறார். மழையுணராமல் படுக்கையில் கிடக்கும் துணையின் முயக்க நிலையா அது? அரவணைப்பின் சுகமா.. நெடு நாளைக்குப்பின்பான ஆழ்ந்த ஓர் உறக்கமா.. சலனமில்லாத மோனத்தின் உச்சமா. சுகவீனமா. தன்னை மறந்து பாதி உறக்கம் சூழ்ந்த இதமான மன நிலையா இயல்பான தூக்கமா என என்னென்னமோ யூகித்தாலும் வழக்கமாய் பெண்ணுக்கேயுரிய முன்னெச்சரிக்கையுணர்வு அல்லது சுமத்தப்பட்ட கடமை கொடியில் நனையும் துணியின் மீது கவனம் கலைந்து அவள் தூக்கத்தை கெடுத்திருக்கும் என்றும் எண்ண வைக்கிறது… மழையா பெய்யுது? ஆமாம் முன்பே துணியை எடுத்து விட்டேன் என்று அவன் சொல்லியிருந்தால் உறக்கம் அவளை இன்னும் ஆழ்ந்து பயணிக்க வைத்திருக்கக்கூடும். காலையில் எடுக்கலாம் என்பதும் அப்போதைய கேள்விக்கு ஒரு ஆறுதலை படர்த்தலாம். சமயத்தில் ஜன்னல் மூடாத மழை இரவுகூட உறக்கத்தை கெடுத்து விடுவதுண்டு. காயப்போட்ட துணி குறித்து லட்சியம் செய்யாத பட்சத்தில் இதமான மழைச்சூழலின் கதகதப்பின் சுகத்தை அவர்கள் மேலும் துய்க்க முடியும். மாறாக கொடியில் காயும் துணியின் நிமித்தம் அங்கு சுடு சொல் ஒன்று பரிமாறப்பட்டுவிட்டால் அந்த இரவு மழையால் சபிக்கப்பட்டதாய் இருக்கும். சில கவிதைகள் முடித்த வரிகளிலிருந்தே தொடங்குகிறது. அதுபோலொரு கவிதையாய் “மழையா பெய்யுது” என்ற வரிகள் நாம் தரிசித்த ஒரு காட்சியின் மீது நம்மை படர்த்தி விடுகிறது.

“பாறைகள்”

கடல் என்ற பிரம்மாண்டத்தை கடல் எனும் மெளனத்தை கடல் எனும் தாய்மையை ரசிக்காத கவிஞன் இருக்கவே முடியாது. கடலை பெரிதும் நேசிக்கும் கவிஞர் கடற்கறையில் தான் அடிக்கடி அமர்ந்து கடல் ரசிக்கும் பாறைகள் குறித்து பார்க்கும் பார்வை வேறு கோணத்துக்குள் நம்மை திருப்புகிறது. பாறையின் மீதமர்ந்து மெளனமாய் கடலையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர் தன்னைச்சுற்றி பதுமைகள் போல் அமர்ந்திருக்கும் பாறைகளை மனித நடைமுறைகளுடன் இணைத்துப்பார்க்கிறார்.

பாண்டிச்சேரி கடலோரப் பாறைகள்

எனக்கு கற்றுக் கொடுப்பதெல்லாம்

சும்மா இருக்கும் கலை.

சும்மா இருப்பது சோம்பியிருப்பதன் குறியீடல்லவா அது எப்படி கலையாகும் என யோசித்துப் பார்க்கையில் கலை என்பதின் பங்களிப்பு ஒன்றை படைப்பதில் மட்டுமல்ல. கவனம் சிதறாமல் ஏதோ ஒன்றிடம் ஒன்றி நிற்கும் பார்வையிலும் அது குறித்த எண்ணங்களிலும் அசைவற்ற உயிர்ப்பிலும் கலையின் எல்லைகள் விரிகிறது. மெளனித்திருப்பதில்கூட கலையின் நுட்பம் ஆழமாய் வேரூன்றியிருப்பதை மறைமுகமாக உணர்த்துகிறார். கடற்கரையில் கிடக்கும் பாறைகள் தனக்கு பாடம் எடுப்பதாய் கருதுமவர் மனிதர்கள்போல் எதற்கும் படபடப்புடன் பரபரப்புடன் தங்களை ஆட்படுத்திக்கொள்வது போல் அல்லாமல் பாறைகள் தன் மீதமர்ந்து செல்லும் காகங்களை வரவேற்பதுமில்லை வழியனுப்புவதுமில்லை. இயல்பாய் அமர்ந்து செல்லும் அவைகளை பெரிதாய் பொருட்படுத்தாமல் பாறைகள் பேரமைதியுடன் நிற்கும் காட்சியை காணும்போது அப்பாறைகளை பெரிதும் நேசிப்பதாய் சொல்கிறார். ஒவ்வொரு பாறையையும் ஒரு சிற்பம்போல் தெரிவதாய் சொல்லும் கவிஞனின் கண்கள் பாறைகள் சூழ்ந்த அந்த கடலோரத்தை ஒரு சிற்பக் கூடமாகவே எண்ணுகிறது.

ஒவ்வொரு பாறையும் ஓர் அபூர்வச் சிற்பம்

கடலோரமே கருத்த பாறைகளின் சிற்பக் கூடம்.

ஒவ்வொரு நாளையும்
தனித் தனி ஓவியமாய்த் தீட்டுகின்றன பாறைகள்

எனும் வரிகளில் பாறைகள் தன் மீது படிந்திருந்த நேற்றின் காட்சிகளை தக்கவைத்துக்கொள்ள எந்த பிரயத்தனமும் கொள்வதில்லை. அந்தந்த நாளுக்கேற்ப அவைகள் தன்னை ஒரு புதிய ஓவியமாய் தீட்டிக்கொள்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் தான் பழையதின் நினைவுகளிலேயே நிகழ்காலத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறோம். மனிதர்களே பாறைகளைப் பாருங்கள் அவைகளைப்போல் பதட்டமில்லாமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்பதாய் தோன்றுகிறது.

கடந்த காலங்களை சுமந்து திரிவதில்லை பாறைகள் என்று சொல்லும் அவரது வரிகள்

கடந்த காலத்தின் நிழல் விழாத

நிகழ்காலத்தைச் சுவாசித்தபடி

தொடரும் அவற்றின் தியானத்தை

நான் கலைக்க விரும்புவதில்லை என்கிறார்

பேச்சற்று நிற்கும் பாறைகளை தியானத்தின் நிலைக்கு ஒப்பிடுகிறார். அவற்றின் அமைதியை கலைக்க விரும்பவில்லையென்றும் கூறுகிறார். ஒரு பாறை தனது தன்மையிலிருந்து தாமாக விலகி வேறொன்றின் வடிவுக்கு மாற விரும்புவதில்லை. பாறைகளைக் கடைந்து மனிதனால் வடித்தெடுக்கப்படும் ஒரு சிற்பம் அதன் பின் பாறையாய் பார்க்கப்படுவதில்லை. மனிதப் படைப்பின் இறந்த காலத்தின் சாட்சியாய் மாறி தொடர்ந்து ஒரு காலத்தின் குறியீடாய் அது பவனி வருகிறது. எப்போதும் நிகழ் காலத்துடன் மட்டுமே ஒன்றிக்கிடக்கும் பாறைகளை தரிசிப்பதால்தான் கடந்த காலத்தின் நிழல் விழாத நிகழ் காலத்தைச் சுவாசித்தபடி எந்த மாற்றமுமில்லாமல் தியான நிலையில் இருக்கும் பாறைகளை தொந்தரவு செய்ய விரும்பவில்லையென்று கூறுகிறாரோ…

மேலும் அக்கவிதையில்

இன்னும் எத்தனை நாள்

இந்தக் கடலோரத்தில் இருப்போம்?

என்ற கேள்வி… நிலையாமையின் தத்துவத்தை எடுத்துச் சொன்னாலும்… இருக்கும்வரை இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற பார்வையையும் நமக்குள் விதைக்கிறது.

கலப்படமில்லா தூய இருத்தலின்

சாட்சியாப் பாறைகள்.

இருப்பதாய் கூறுபவர் எவ்வித கீழ் மேல் விகிதங்களுக்கும் கட்டுப்படாமல் தம்மைத்தாமே வசியம் செய்து ஞானிகளைப்போல் வாழும் பாறைகளை அவர் நேசிப்பது பாறைகளின் மீது நமக்கொரு பிரியமும் வாழ்வின் மீதொரு தெளிவும் பிறக்கத்தொடங்குகிறது.

“இரண்டாவது இதயம்”

நான்கு அறைகள் கொண்ட தனது இதயத்தில் ஓர் அறையில் இறந்துபோன முதல் காதலின் சடலத்தை கிடத்தியிருப்பதாய் சொல்கிறார். உடனே நாமும் இவரைப்போலவே இதயத்தில் இடம் வலமாய் இருக்கும் நான்கு அறைகளில் ஒன்றில் இன்னும் அடக்கம் செய்யாமல் வைத்திருக்கும் நம் முதல் காதலின் சடலத்தையும் ஒரு நொடி ரகசியமாய் திரும்பிப்பார்த்துக் கொள்கிறோம். பதுக்கி வைத்திருக்கும் அச்சடலத்தை நம்மைப்போலவே யாரும் புதைக்க விரும்பியதில்லை போலும் என்ற ஆச்சர்யத்துடன் இரண்டாவது அறையில் என்ன வைத்திருப்பார் என ஆர்வமாய் எட்டிப்பார்த்தால் அதில் வேட்டை விலங்காய் உலவும் ஆசைகளை அடைத்து வைத்திருப்பதாய் சொல்கிறார். மூன்றாவது அறைக்குள் வெளிச்சொல்லமுடியாமல் சேமித்து வைத்த வலிகளையும் துரோகங்களையும் பெயர் சொல்ல முடியாதவர்கள் இழைத்த அவமானங்களையும் காயத்தையும் சேமித்து வைத்திருப்பதாய் சொல்லும் கவிஞர்…

ஒரு இசைத்தட்டைப் போல் சுழலும்

நான்கவது அறையில்தான் நான் வசிக்கிறேன்…

என்று சொல்லும்போது ஈனஸ்வரத்தில் தன்னிருப்பு குறித்து முனகும் குரலொன்று நம் இதயத்துக்குள்ளும் மெல்ல கேட்கத் தொடங்குகிறது. தன் இதயத்துக்குள் தன்னால் நிர்வகித்துக்கொள்ளக் கூடிய நான்கு அறையிருந்தும் ஒரே அறை மட்டுமே தனக்கென ஒதுக்கப்பட்டிருப்பதை பகிரங்கமாய் ஒத்துக்கொள்கிறார்… ஆனாலும் அதற்குள் எப்படி வாழ்கிறார் என்று பார்த்தால் அங்கும் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது… இருந்தும் அந்த கடைசி அறையில்தான் அவர் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு தனக்கான உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு தனகக்கான ஒரு ரசனைக்குள் வசிக்க முயல்வதாய் சொல்கிறார்.

என்னை நானே மன்னித்து

எனக்கு நானே அன்பு செலுத்தி

எனது காயங்களை எனது நாவாலேயே

நக்கி குணப்படுத்தி

தன் சின்ன வெளிச்சத்தால்

மொத்த இரவையும் வசீகரிக்கும்

மின்மினிப் பூச்சியைப்போல்

கம்பீரமாய் வாழ்கிறேன்.

இதயத்தின் மூன்று அறைகளிலும் எதனெதற்கோ விட்டுக்கொடுத்து மூச்சுத்திணறும் வாழ்வில் நான்காவது அறையிலாவது போலித்தனமில்லாத ஒரு ரசனைக்குறிய வாழ்வை நுகர்ந்திட கவிஞனின் இதயம் விரும்புகிறது. சொற்ப சுகமென்றாலும் காரிருளை வசீகரித்துவிடும் மின்மினிப் பூச்சியைப் போல் கம்பீரமாய் வாழ்கிறேன் என்று சொல்வதோடு நேரடி வாழ்வின் மீது படிந்துகிடக்கும் ஒப்பனைகளை உதறி மனிதனின் ஆயுளில் மிஞ்சுவதும் விரும்பிய வாழ்வும் சொற்பமானதே என போட்டுடைக்கிறார். இத்தனையும் சுமந்து ஓட்டைப் படகாய் தடுமாறும் பழுதடைந்து கிடக்கும் இதயத்துக்கு ஒத்தாசையாய் அவர் இன்னொரு இதயத்தை யாசிக்கிறார்…

அந்த இதயம் எதற்கோ எதன் பொருட்டோ கவிஞனுக்கு தேவைப்படுகிறது… இரண்டாவது இதயத்தின் நோக்கமும் விருப்பமும் எதுவாயிருக்கும்? கவிதையின் அடி நாதமாய் ஏதோவொன்று தீராத ஏக்கமாய் கவிஞனின் விருப்பமாய் அதில் தொக்கி நிற்கிறது. வாசிப்பவருக்கும் கூடத்தான் அந்த இரண்டாவது இதயம் அவசியமாய் தேவைப்படுகிறது. அதிலாவது கலப்படமில்லா உன்னதங்களை எட்டிவிடமுடியாதா என்ற ஏக்கமும் கவிஞனுக்கு மேலிடுவதைப்போல் உங்களுக்குள்ளும் ஒரு ஏக்கம் தொடர்ந்து வரலாம்.,

“பைத்தியக்காரர்கள்”

வன்மமும் வக்கிரமும் நிறைந்த கொடூர செயல்கள் புரிந்த ஒரு குற்றவாளியைக்கூட மனிதனாகவே கருதும் உலகம்… மனப்பிறழ்வு கொண்ட மனிதர்களை மட்டுமே ஏனோ சக மனிதர்களின் வரிசையில் மனதளவில் கூட அமர்த்திப் பார்க்க விரும்புவதில்லை. மன நலம் குன்றியவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாய் இருக்கலாம். ஆனால் அவர்கள் பூமியால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களின் உலகத்தில் நுழைந்து பார்க்காமல் அவர்களை தங்களின் பார்வையால் மனிதக் கண்கள் அழுக்காக்கி பார்க்கிறது. …

பைத்தியக்காரர்கள்

நீதிமன்றங்களை மதிப்பதில்லை

எனத்தொடங்கும் கவிதையொன்று வீதிகளில் இப்படி நடந்து செல்கிறது…

 

சட்டங்கள் அவர்களுக்குக்

கால் செருப்புச் சமானம்

 

அவர்களுக்கு கடவுள் கிடையாது

சத்தானும் கிடையாது

 

நிர்வாணத்தை மனசுக்குப் பிடித்த ஆடைபோல

விரும்பி அணிகிறார்கள்

எதையும் பெரிதாய் பொருட்படுத்தாத மனம் பிறழ்ந்தவர்களின் நிலையை அவர்களின் உளவியல் பாங்கை சொல்லிச் செல்லும் வரிகள் அடுத்தடுத்து மெல்ல பாய்ச்சலெடுக்கிறது.

புலவியில் புலத்தலும் கலவியில் களித்தலும்

பித்தர்களின் அகரதியில் இல்லை

என்று நிறுத்தும் வரிகளுக்குப் பின்னால் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாய் தெரிகிறது. தனி மனித வக்கிரம் ஒன்று அவர்களை பின்னியிருப்பதாய் நம்மை உறுத்துகிறது. புலவியில் புலத்தலும் கலவியில் களித்தலும் இல்லாத ஒரு நிறை மனநிலையில் அழுக்குப்போர்த்திய கிழிந்த ஆடைகளுடன் திரிந்துகொண்டிருந்த ஓர் ஜீவனை மேடிட்ட வயிற்றுடன் நிற்கவைத்தவனின் வன்மம் சொல்லப்படாமலே ஒரு சோக காட்சியாய் கவிதைக்குள் முன்வந்து நின்று கொள்கிறது.

தினசரி வாழ்க்கையில் மனம் பிறழ்ந்தவர்களை காணும் சமயங்களில் பெரும்பாலும் நாம் எளிதாய் கடந்து சென்றுவிடுகிறோம். எப்போதாவதுதான் அவர்களை கூர்ந்து கவனிக்கிறோம். அவர்கள் நமக்குத் தெரிந்தவரில்லை எனும் உணர்வு அவர்களை அப்போதே மறக்கச் செய்து விடுகிறது.

யாரையும் தொந்தரவு செய்யாதவர்களை சந்தர்ப்பவாதம் கருதாதவர்களை அனைத்தையும் ஒரே பார்வையில் பார்ப்பவர்களைத்தான் மனிதர்கள் பூமியின் அந்நியப் பிரஜையாய் அச்சமும் அருவருப்புடனும் நோக்குகிறார்கள்.

ஆடையென்பது மனித நாகரீகத்தின் ஒரு வடிவம். காலச்சூழலுக்கேற்ப அதன் வடிவங்கள் மாறுகிறது. மனித ஆடைகளின் இறுதி வடிவம் நாளை நிரந்தரமான நிர்வாணமாக மாறிப்போனாலும் ஆச்சர்யமில்லை. ஆனால் சுயம் அறியாமல் ஆடை நழுவி அந்தரங்கங்களை பொருட்படுத்தாமல் நிர்வாணமாய் நடக்கும் அவர்களை மனிதர்கள் தான் அடித்து இம்சிக்கிறார்கள். அவர்களின் குறிகளின் மீது மனித வக்கிரம் அமர்ந்து கொண்டு அவர்களை குற்றவாளிகளாய் துன்புறுத்துவது தான் மனித நாகரிகத்தின் அருவருப்பான முரண்.

காதலர்கள் இருவரை மனிதர்களற்ற தனித் தீவில் விட்டு விட்டு வாழச்சொல்லும் போது அங்கே அவர்களுக்குள் ஆடையென்பது நாகரீகத்தின் வரிசைக்குள் நிச்சயம் வராது. இங்கே தன்னிலையறியாது மனிதன் இடையில் வகுத்திருக்கும் நாகரிகம் தெரியாது மனம் பிறழ்ந்த நிலையில் ஆடை விலகிக்கிடப்போரை குற்றவாளிகளாய் பார்ப்பதும் குறுகிய புத்தியுடன் அணுகுவதையும் பேசும் கவிதையின் இறுதி வரிகள் நம் கண்களுக்குள் ஆணியறைந்து செல்கிறது.

ஆடை விலகித் தெருவில் கிடந்து

அடிவாங்கும் போதும்

மலை மேல் இருக்கும் ஏரியைப்போல்

மெளனமாய் இருக்கிறார்கள்…

இருந்தாலும் மனசுக்குள்

நம்மைப்பர்றி நினைக்கிறார்கள்

இந்த பைத்தியங்களிடமிருந்து

தப்பிப்பது எப்படி..?

 

மலை மேல் இருக்கும் ஏரியைப் போல்

மெளனமாய் இருக்கிறார்கள்

இந்த வரிகள் மனம் பிறழ்ந்தவரின் மெளனத்துக்குள் அவர்கள் சுமக்கும் வலிகளுக்குள் நம்மையும் அழுத்திப் பிசைகிறது.

“தூர தேசத்து நண்பர்கள்”

வாழ்க்கை கடந்த கால இன்பங்களிலிருந்து மனிதனை பிரித்தெடுத்து விரட்டிக்கொண்டேயிருக்கிறது. வசந்தகாலப் பருவத்தில் அடர்ந்த பூக்கள் உமிழும் வாசனையைப்போன்று சுவை குன்றாமல் எக்காலமும் எல்லோர்க்கும் நினைவில் தேங்கிக்கிடப்பது நண்பர்களுடனான காலங்கள் மட்டுமே. நெருக்கமான சில நட்புகள்கூட கால நகர்த்தலில் மெல்ல தேய்ந்துபோகத் தொடங்கிவிடுகிறது. ஒரே படுக்கையில் உறங்கியது ஒரே தட்டில் உண்டது ஒரே சிகரெட் ஒரே ஆடை ஒரே குவளை மது ஒரே உணவு என ஏதோ ஒன்றை இரண்டாய் பகிர்ந்துகொண்டு எதிர் பார்ப்புகளின்றி விட்டுக்கொடுத்து பயணிப்பது நட்பைத்தவிர வேரெதுவாய் இருந்துவிட முடியும்.

யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியா ரகசியங்களை வலிகளை நண்பர்களின் ஜன்னல் வழியே சுலபமாய் வீசியெறிந்து இளைப்பாறிக்கொள்ள முடியும். அந்தந்த காலத்தில் கூடிக்களித்த சுயநலமில்லா தூய நட்பின் கொண்டாட்டங்கள் பின்னெப்போதும் வேறெங்கும் எப்போதும் கிட்டப்போவதில்லை என அப்போது யாருக்கும் தெரிவதில்லை. ஆழ்மனப்பரப்புகளை கொள்ளையடித்த நட்பின் பரவசங்களும் அதன் உறவும் பிறகு காணக்கிடைக்கப் போவதில்லை என்பதை அன்றைய நாட்களில் நீங்களோ நானோ உணர்வதில்லை. திருமணம் என்ற ஒற்றை உறவு நட்பின் பாத்திரங்களை மெல்ல தன் வளையத்துக்குள்ளிருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேற்றத் தொடங்குகிறது. மனைவி பிள்ளைகள் கூடுதல் பொறுப்புகள் நட்பின் நாட்களை தொடர முடியாமல் நம்மிடமிருந்து நம்மையே அந்நியப்படுத்தவும் அப்புறப்படுத்தவும் முயற்சிக்கிறது. எனினும் பிரிந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்குமென்ற ஏக்கம் மட்டும் மகனின் வருகைக்காக மூச்சை பிடித்து காத்திருக்கு வயோதிக தாயைப்போல் அடி நெஞ்சில் ஏக்கமாய் பலரது உள்ளங்களுக்குள் உறைந்துகிடக்கும்… இப்படியொரு ஆதங்கத்தை ஒரு கவிதையில் வேறு ராகத்தில் வேறு சூழலில் பிரிந்து வந்த தனது தூர தேசத்து நண்பர்களுடனான உறவை பிறகெப்போதும் சந்திக்கவே முடியாதாவெனும் ஆதங்கத்தை அவர்களுடன் களித்த நாட்களை நினைவுக்குள் அடுக்குகிறார்….

தொடர்பறுந்து போன என் தூர தேசத்து

பிரம்மச்சாரி நண்பர்கள்

இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்..?

 

மிருகக்காட்சிசலையின் மயக்கமூட்டப்பட்ட புலி

கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவதுபோல

நினைவுக்கு வந்தன என் பழைய நினைவுகள்

 

குளிரில் குமுறிப் புலம்பும் கடலோரத்து மதுவிடுதியில்

அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்..?

என தூர தேசத்தின் நண்பர்களுடன் கழிந்த நாட்களை அசைபோடும் அதே வேளையில் அவர்கள் இப்போது என்ன சமைத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் கேள்வியெழுப்புகிறார். ஆனால் அதுவல்ல கேள்வி அவர்களின் அந்தச் சூழல்களுக்குள் இப்போது இணைத்துக்கொள்ள முடியா சூழல் தனக்கு தடுப்பணை போட்டிருப்பதின் ஏக்கமாகவே இவ்வரிகள் வெளிப்படுத்துவதாய் தெரிகிறது. எனினும் முதுமையை எட்டிவிட்டபின்னும் கூடவே வரும் முதல் காதலின் மங்கிய முகம்போல என்றாவது நாம் சந்தித்துக்கொள்வோம் என்று ஒரு நம்பிக்கை நண்பர்களின் நினைவுகளை துரத்திக்கொண்டிருக்கிறது.

நாங்கள் ஒரு நாள் சந்தித்துக் கொள்ளப் போகிறோம்

என்கிற நம்பிக்கையில்

அன்பைச் சுமந்து கொண்டிருக்கிறோம்.

என்று சொல்லும் வரிகளினூடே அதில் சுத்தமாய் நம்பிக்கையில்லையென்றும் சொல்கிறார். ஏனெனில் அவர்கள் தொடர்பிலில்லாமல் தூர தேசத்து நண்பர்களாய் இருப்பதாய் ஆதங்கம் கொள்கிறது கவிதை. கவிதையின் அடிப்படை நண்பர்களுடனான அறுந்துபோன தொடர்புகள் ஒரு இணைப்பு பாலமாய் மீண்டும் ஒட்டிக்கொண்டு வந்துவிடாதா என்ற ஏக்கமும் பகிர்தலுக்கான தவிப்பும் அதனுள் தொக்கி நிற்கிறது. கவிதையின் பாடுபொருள் தூர தேசத்து நண்பர்களைப்பற்றி இருந்தாலும் நம் நண்பர்களின் நினைவுகளுடன் நம்மை இணைத்துப்பார்க்க வைப்பதே கவிதையின் வெற்றியாக கருதிக்கொள்ளலாம். நண்பர்களை சந்திக்கவேண்டுமென்ற ஏக்கம் இவருக்கு மட்டுமா… பிரிந்த நட்பின் நாட்கள் அதே சாயலுடன் மீண்டுமொரு வாய்க்க மீண்டும் ஒரு இனிய சந்தர்ப்பம் அமையாதா என நம்மையும்தான் ஏங்கச்செய்கிறது…

“முதலைகளின் காலம்”

முதலைகளின் காலம் எனும் ஒரு கவிதையில் கவிஞர் கங்கைக்குள் வாழும் முதலைகளையும் வீசியெறியப்படும் அல்லது சிக்கிக்கொள்ளும் மனித மாமிசத்தின் ருசியையும் வேட்டையாடும் முதலையின் இரை பிடிக்கும் வித்தைகளையும் ஒரு காட்சிப்படிமமாய் நமக்குள் மேம்போக்காக கடத்திச் செல்லும் அதேவேளை அக்கவிதையில் அவர் மனிதர்களை சுரண்டும் முதலாளித்துவ கார்ப்பரேட் முதலைகளின் சந்தர்ப்பவாதத்தையும் சேர்த்தே தோலுரிப்பது போலிருக்கிறது. கவிஞர் எந்த கோணத்தில் கவிதையை நகர்த்திச்சென்றிருக்கிறார் என்பதைவிட வாசக பரப்பில் இப்படியும் இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது.

தன்னை முன்னேற்றிக்கொள்வதற்கு அவசியமேற்படின் நிலம் நீர் என எல்லா சூழ்களையும் கவ்விக்கொண்டு மனிதர்களின் உழைப்பை ஒட்டு மொத்தமாய் வீழ்த்திச் சுரண்டி பெருக்க தன்னை கொடூரமாய் தகவமைத்துக் கொள்ளும் முதலாளித்துவத்தின் குணத்தை சூசகமாய் சொவது போலிருக்கிறது இக்கவிதை.

புனித கங்கையின் முதலைகளுக்குத் தெரியும்

ஏழைகளின் எலும்புகள் சுவையானவை என்று

சேற்று நிற கங்கையில் முதலைகள்

எல்லாமே சந்தர்ப்பவாதிகள்

என்பவர் ஏழைகளின் எலும்புகளுக்காக முதலைகள் கூடுதல் கரிசனத்துடன் கூடுதல் பசி வேட்கையுடன் காத்திருப்பதை காட்டுகிறார். ஏனெனில் ஏழைகளின் எலும்புகளிலிருந்தே இவர்களுக்கான எலும்புகளுக்கு கால்சியம் தயாரித்துக்கொள்ள முடியுமல்லவா.

பிளந்த வாயின் பற்களை சுத்தம் செய்யும்

பறவைகளை அவை பதம் பார்ப்பதில்லை.

எனும் வரிகள் புரளும் நாவற்ற முதலைகளுக்கு பற்களே மூலதனம். சிக்கிய துணுக்குகள் வெளியேற அடுத்த இறையை சுலபமாய் கவ்வ பற்களுக்குள் சிக்கி இன்னல்தரும் மாமிசம் அகற்றப்பட வேண்டும் அதற்கு அகட்டி வைத்த வாய்க்குள் தைரியமாய் அமர்ந்து கொத்தி உண்ணும் சிறு பறவைகளை இரையாக்கிக்கொள்ள முடியுமென்றாலும் அவை அப்படிச்செய்வதில்லை. மாறாக அவற்றை சுதந்திரமாக கொத்தித்தின்ன அனுமதிக்கிறது. இதைப்போலத்தான் இடைத்தரகர்களை அரசியல்வாதிகளை முதலாளித்துவம் பாதிப்பு தராமல் தனது பாத்திரத்தில் ஆசையுடன் ஏந்திக்கொள்கிறது. ஆனால் ஏழைகளையும் உழைக்கும் எளியவர்களையும் அது அடிமை வம்சத்தின் பிரதிநிதியாகவே எப்போதும் தொடர வேண்டுமென விரும்புகிறது.. கார்ப்பரேட்டுகள் எனப்படும் தங்களுக்கு ஆதாயமாய் காய் நகர்த்தும் அதிகார மையங்களை அரசியல் தரகர்களை வியாபார புரோக்கர்களை கார்ப்பரேட்டுகள் ஆசிர்வதித்து தம்முடன் இணக்கமாய் அரவணைத்து செல்லும் காட்சிகள் அன்றாடங்களின் பொருளாதார அடக்குமுறைகளை நினைவுறுத்துகிறது.

நதியில் வாழ வேண்டுமானல்

முதலைகளிடம் நட்பாய் இருக்க வேண்டும்

எனும் நிலைமை உருவாகி விட்டது

ஏனெனில் இது முதலைகளின் காலம்.

என்று கூறினாலும் முதலைகளிடம் எளியவர்கள் நட்பாய் வாழ்வதென்பது என்றுமே சாத்தியமில்லையென்றே தோன்றுகிறது. முதலைகளுக்கும் முதலாளிகளுக்கும் அடிமையாய் இன்னும் எத்தனை நாளைக்குதான் சலித்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் வாழ்வது என்று கேள்விகள் எழுந்துகொண்டே செல்கிறது…

சுவர்க்கோழி

மனித நாகரிகத்தின் வளர்ச்சியென்ற பெயரில் விஞ்ஞானத்தின் வாசலில் கொட்டப்படும் புதிய நச்சுக்களால் நசுங்கும் சுற்றுச்சூழலை எச்சரிக்கிறது ஒரு கவிதை. மின் விசிறி தட்டி இறக்கையொடிந்து வீழும் ஒரு சுவர்க்கோழியின் குரல்வளை அறுபடும் சுவர்க்கோழியின் வடிவில் இயற்கையின் பேரழிவை பார்க்கிறார். மனிதத் தவறுகளால் மடிவதற்கு ஒப்புக்கொடுக்கப்படும் இப்பூமியின் அழிவை நீயெப்படி நிர்ணயம் செய்வாய் மனிதனே என எழுப்பும் மறைமுகக் கேள்வி இப்பிரபஞ்சத்தின் மீதான் நேசத்தை வாஞ்சையை வெளிப்படுத்துகிறது.

இரவின் மெளனக் கரும்பலகையில்

தன் ஓசிய்யினால் அழித்து அழித்து கவிதை எழுதும்

சுவர்க்கோழி

வெளிச்சத்தில் திணரும் என் அறைக்குள்

எப்படியோ வழி தவறி நுழைந்து விட்டது

அக்கோழி தன் வீட்டு மின் விசிறியில் அடிபட்டு விழுந்து விட்டதாக பதறுபவர்

சாவதற்கு முன் அதன் சிறகின் படபடப்பில்

காடு மெளனித்தது.

அந்நிய நகரமொன்றில்

பாதாள ரயிலுக்குக் காத்திருப்பதுபோல்

அதன் உயிர் பிழைத்தலுக்காய்க் காத்திருந்தேன்

ஒரு சுவர்க்கோழியின் மரணத்தால்

நியூயார்க்கில் மழை பெய்யாமல் போய்விடுமோ

துருவப் பனி வேகமாக கரைய தொடங்குமோ

என்ற அச்சத்தை தெரிவிக்கும் கவிதையில்… எங்கோ நடக்கும் இயற்கையின் மீதான அத்துமீறலால் வேறொங்கோ நிலமும் வளமும் சிதைவதை இப்பிரபஞ்சத்தில் பூமி என்ற உயிர்க்கோள் மூச்சற்றுப்போகுமோ என அஞ்சுகிறது.

புதிர்
புதிர் என்றொரு கவிதை வாழ்வின் கடந்து வந்த காலத்தை திரும்பிப்பார்க்கிறது. கண்ணிமைப்பதற்குள் இத்தனை காலமா கடந்து விட்டது என அதிர்ச்சியுடன் தன்னையே பார்க்கிறது.

இதுவரை அலட்சியமாய் கடந்து வந்த தனது வாழ்க்கையின் தூரத்தை சற்று நிதானமாய் நின்று திரும்பிப் பார்க்கையில் அதுவரை கவனிக்காத ஒன்றை இப்போதுதான் பார்த்தது விட்டதுபோல கவிதையுடன் சேர்ந்து நாமும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கொள்கிறோம்,

சத்தம் காட்டாமல் ஜன்னல் வழியே

ஒரு புகையைப் போல்

எனக்குத் தெரியாமல் எப்படி நுழைந்தது முதுமை…?

என்று தனக்குள் புகுந்துகொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கும் முதுமையை காண்கிறார்.

அருங்காட்சியகத்தின் கனமான கண்ணாடி சீசாக்களில்

என் இளமை ரசாயனத்தில் மிதப்பதை

நான் இன்று வேடிக்கை பார்க்கிறேன்.

நரைத்த தலைக்கு மையிடலாமா என யோசிக்க தொடங்கும் பருவத்தில் இந்த சிந்தனை பலருக்கும் முளைவிடத் தொடங்குகிறது. அட அதற்குள் இவ்வளவு காலம் தொலைந்து விட்டதா என எப்போதாவது நாமும் அதிரத்தான் செய்கிறோம்.

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப உடல் தன்னை வெவ்வேறு வடிவங்களுக்கு ஆட்படுத்திக்கொண்டாலும் சிலரது மனமும் வெளித்தோற்றங்களும் இளமையும் துள்ளலும் ஒப்பனைகளுமாய் ஒரே சீரான பருவத்துடனேயே தன்னை தக்க வைத்துக்கொள்ள விரும்புவதை காண முடிகிறது. ஆனாலும் திடீரென ஓர் நாள் சற்று தளர்ந்து நம்மையே பின்னோக்கிப் பார்க்கையில் முதுமை நம் ஜன்னலுக்குள் தலை நீட்டி நரைத்த தலையுடன் கண்ணாடி முன் சிரித்துக்கொண்டு நிற்பதை பாக்கிறோம். அதை ஜீரணிக்கமுடியாமல் மீண்டும் மீண்டும் இளமைக்குள் நம்மை பொருத்திப்பார்க்கவே விழைகிறது மனம். வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மலைப்பாதையின் சுரங்க குகைப்பாதைக்குள் ஓடி மறைந்துவிடும் ரயிலைப்போல் இளமை நம்மை விட்டு சட்டென நழுவிச்சென்றிருப்பதை தாமதமாய்த்தான் உணர முடிகிறது. நரைக்கத்தொடங்கும் பருவத்திலிருந்து இந்த பதட்டம் மனிதர்களுக்குள் மடை மாறுவதை பரவலாக உணர்ந்துகொள்ளலாம். எனவேதான் தனது கவிதைக்குள் வாழ்க்கையை ஒரு அர்த்தமற்ற நகைச்சுவையைப்போல் பார்த்து சிரிக்கும் கவிஞர்

நிழல் மண்டிய கடலோரத்து தென்னந்தோப்பில்

மணலில் ஓய்வு கொள்ளும் ஓட்டைப்படகில்

இன்று குழந்தைகள் ஒளிந்து விளையாடுகிறார்கள்.
என்று தன்னையே திரும்பிப்பார்க்கிறார்.வயோதிகத்தை நெருங்குபவர்களை முதுமைக்குள் ஒதுங்குபவர்களை காலம் முழுக்க கடல் மீதே வலம் வந்து பேரலைகளில் ஏறியிறங்கி உழைத்து களைத்து ஓய்ந்து கடற்கரையில் வெறும் காட்சிப்பொருளாக நிற்கும் ஒரு ஓட்டைப்படகாக மனிதர்களின் முதுமையை உருவகம் செய்கிறார். அதே நேரம் அந்த ஒதுங்கிய படகுக்குள் புதிய தலைமுறை குழந்தைகள் ஒளிந்து விளையாடுவதை தனது வாழ்வின் தொடர்ச்சியாக காட்சிப்படுத்திப் பார்க்கிறார்.
இறுதியாக…

பெயர் தெரியாத பறவையொன்று

என் மொட்டை மாடியில் வந்தமர்ந்து

துருப்பிடித்த எந்திரம் சுழல்வதுபோல்

கர்ண கடூரமான குரலில் கத்துகிறது தினந்தோறும்

ஏன்..?

எனக்கேள்வியுடன் முடிகிறது கவிதை. காலம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிவிட்டு நிற்கவேண்டியதின் எச்சரிக்கையாக மரணத்தின் பறவை அலாரம் அடிப்பதாகவும் அதற்குள் இப்பூமிக்கு நீயென்ன செய்தாய் பூமிக்கும் மனிதர்களுக்குமாக என்றாவது யோசித்திருக்கிறாயா என ஒரு சுய கேள்வியொன்றை நமக்கும் குவித்து வைத்துச்செல்கிறது கவிதை.

இரண்டு நாள்

முடியாது என்ற சொல்லை அகராதியிலிருந்து அழித்துவிடலாம் என்று நெப்போலியன் சொன்னதாய் ஒரு செய்தியுண்டு. சில இடங்களில் முடியாது என்பதின் அர்த்தம் வார்த்தைகளுக்குள் கொண்டுவர முடியா வலியை வரலாற்றில் இழிவின் உச்சமாய் பதிவு செய்து வைத்திருக்கிறது. நெடுங்காலம் முதுகில் நெருப்பு மூட்டைகளை சுமந்து வந்தவனின் ஆறாத்தழும்புகளை முடியாது என்ற ஒற்றைச்சொல்லால் இறக்கி வைக்க முயல்கிறது சிறு கவிதையொன்று. ஒன்றை செய்ய முடியும் முடியாதென்பதை மூளையின் கட்டளைகள் உடலின் கட்டமைப்பு முயற்சிகளின் உச்சநிலைகளே முடிவு செய்கிறது. ஆனால், கவிதையின் முடிவெட்டமுடியா ஒரு கேள்வி தொடர்கிறது

இன்றைக்கும் சில இடங்களில்

சைக்கிளில் ஏறிப்போக முடியாது

செருப்புப் போட்டு நடக்க முடியாது

எனத்தொடங்கி பல முடியாதுகளை பட்டியலிட்டு முடியாதவைகள் பலவாய் நீள்கிறது..

 

தேனீர் கடையில் உட்கார முடியாது

மாதா கோயிலின் பிரதான வாயிலில் நுழைய முடியாது

கிராமப் பொதுச் சொத்தில் பங்கு கிடையாது

பேருந்து நிழற்குடையில் உட்கார முடியாது

என வரிசைகட்டும் முடியாததுகளில் இறுதியாய்.

செத்தபின் தலை சாய்க்க

பொது மயானத்தில் இடம் கிடையாது

சும்மா இரண்டு நாள்

தீண்டத்தகாதவனாக இருந்து பாருங்கள் புரியும்

தீண்டாமையின் கொடுமை.

வெறும் அழகியலின் வாசலில் நின்று கவிதைகளை படைப்பதைத் தாண்டி அழுகி நாற்றமடிக்கும் சமூகத்தின் புண்களுக்கான மருந்தாய் கவிதைகள் செதுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வெளிப்படுகிறது கவிதை. முடியாததுகளை முறியடித்து முடியும் என்ற முடிவை நோக்கி காலத்தை நகர்த்த வேண்டிய அவசியத்தையும் கவிதைகள் பேச வேண்டும் என்று ஆதங்கம் கொள்கிறது வரிகள்.

படகில் பாதுகாப்பாய் பயணிப்பவன் தண்ணீரில் தத்தளிப்பவனைப் பார்த்து கரை சேரத் திறனற்றவனென்று பரிகசிப்பதை விட்டு விட்டு அவனிடம் ஒரு கனமான கட்டையை கொடுத்துப் பார்த்தால் தெரியும் படகுக்கு முன்னாலேயே அவன் எப்போதோ கரையேறியிருப்பதை.

இப்படிச் சமூகத்தில் சமனற்றுத்தவிக்கும் வாழ்வியல் கூறுகள் மீதிருக்கும் தீராத ஏக்கம் இவரது பல கவிதைகளில் பாடுபொருளாய் இருப்பதும் மனிதனின் மூளை சாதியற்றதாய் மதமற்றதாய் மனிதம் கொண்டதாய் மாற வேண்டுமென்பது இவரது படைப்புகளின் ஆழ்மனத் தேடலாய் தொடர்கிறது. முடியும் முடியாதென்பதை பிறப்பு சார்ந்தல்ல அறிவு சார்ந்ததென சிந்திக்கும்போதுதான் வெளிச்சத்தின் கதிர்கள் அறிவை சுத்தமாக்கும்.

கடவுளின் தற்கொலைக் கடிதம்

கடவுள் குறித்தும் அதன் மீதான மனித உளவியல் கட்டமைப்பு பற்றியும் கவிஞரின் பல கவிதைகள் அழுத்தமாய் பேசுகின்றன. கடவுள் குறித்த அனைத்து கவிதைகளிலும் மனிதனிடமும் கடவுளிடமுமாய் பதில் தேடும் கேள்விகள் ஒரு குறுக்கு விசாரணையை முன் வைத்து நிற்கிறது. சுய நலத்தை தாங்கிப்பிடித்து அறம் வீழ்த்தப்பட்டு பல இடங்களில் துருத்திக்கொண்டு நிற்கும் மனிதனின் சுயநலச் செயல்பாடுகளும் அதற்கு துணையாய் நிற்கும் கடவுளின் எதிர்வினையாற்றாத தன்மையும் இவரது கவிதையின் மறைமுக பேசு பொருளாகின்றது. மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களை சாடி கடவுளின் குரலிலேயே கவிதையொன்றை பதிவு செய்கிறார். மனிதனின் செயலால் பலமுறை கடவுள் தற்கொலைக்கு முயல்வதாகவும் அது மேலும் மேலும் உறுதிசெய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுவதையும் கவிதைக்குள் வெளிப்படுத்துகிறார்.

எனக்குள்ளிருந்து தொடர்ந்து கேட்கும் குரல் ஒன்று

என்னைச் சதா குற்றவாளி கூண்டில் நிறுத்தி

விசாரனை செய்து கொண்டே இருக்கிறது.

நான் தினந்தோறும் மனச்சோர்வில் விழுகிறேன்.

ஒரு தூக்கு தண்டனைக் கைதியைப்போல

என் மரணத்தை எதிர்பார்த்து

தினந்தோறும் காத்திருப்பதின் வலி

உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

யார் யாரைப் படைத்தது கடவுளை மனிதனா மனிதனைக் கடவுளா…? என்ற கேள்வியும் விவாதங்களும் ஒருபுறமிருந்தாலும். உலகத்தின் மனிதத்தன்மையற்ற அனைத்து அத்துமீறல்களும் மனிதனிடமிருந்தே புறப்பட்டு வருவதால் தவறுகள் செய்யும் குற்றவாளியை தண்டிக்க முடியா நிலையில் மனிதக்குற்றங்கள் கடவுளைக் காட்டிலும் பன்மடங்கு வலுப்பெற்று இறுதியாய் கடவுளையே பலவீனப்படுத்தி அவரையே கோமாளியாய் சித்தரிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டதால் தன் இயலாமைகளி எண்ணி கடவுள் தன்னையே இப்பூமியில் இல்லாமல் செய்துகொள்ளும்படி தற்கொலைக்கு தூண்டப்படுகிறார். கடவுள் மதம் சாதி எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு மனிதப் பண்புகளை சீரழிக்கும் சித்தாந்தங்களின் மீது கவிஞரின் கோபம் கடவுளிடமிருந்து வெளிப்படும் கோபமாகவே தெறிக்கிறது. தனது பெயரை உச்சரித்துக்கொண்டு மனிதன் மேற்கொள்ளும் கீழ்மை நடவடிக்கைகளை இகழ்ச்சியுடன் பார்க்கும் கடவுள் அவனை மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் விருப்பமின்றி அவனிடமிருந்து விலகிச்செல்வதே சிறந்ததென முடிவு செய்கிறார்.

நான் இனியும் உயிரோடு இருந்தால்

உன் வாழ்க்கை பாழாகிவிடும்

என் கழுத்தையும் மணிக்கட்டு ரத்த நாளங்களையும்

கத்தியால் வெட்டிக்கொண்டு விட்டேன்

என் ரத்தத்தால் உன்னை நீ சுத்திகரித்துக் கொள்

இனி என் பெயரால் ரத்த ஆறுகள் ஓடாது

இனி என் பெயரால்

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை

தொடமாட்டேன் என்று சொல்லப் போவதில்லை.

இப்போது கடவுள் இல்லாத உலகில்

உன்னால் ஒற்றுமையாக வாழ முடியும்

நான் போகிறேன்

எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை

மனிதனே என்னை மன்னித்து விடு
என்கிறார். மனிதனை நெறிப்படுத்த உருவானது கடவுளும் மதமும் எனும்போது தொடரோட்டமாய் வழி நெடுக ரத்தச் சகதிகளும் ரணங்களும் கடவுளை சாட்சியாய் வைத்து நடத்தப்படுவதை கண்டு வெதும்பும் கடவுள் தன்னையே துன்பங்களின் துருப்புச்சீட்டாய் பயன்படுத்தும் மனிதனிடமிருந்து முழுவதுமாய் அகன்று விடவும். மனிதச்செயலை கண்டித்து அவனுக்கான கொலை ஆயுதமாக இருப்பதைவிட முற்றாய் இல்லாமல் போவதே இப்பூமியில் புதிய நெறிமுறைகளை உருவாக்கலாம் என்று நினைத்து தற்கொலை செய்ய முடிவெடுத்து விடுகிறார். மனித சமூகத்துக்கு கடவுளும் மதமும் பயன்படாமல் அது பூமியின் சாபமாய் அழிவின் குறியீடாய் நின்று கொண்டிருப்பதற்கு பதில் அதற்கு காரணமாய் விளங்கும் கடவுளும் மதமும் இல்லாமலிருப்பதே சரி என்ற கருத்தை மிக அழுத்தமாய் கடவுளின் தற்கொலைக் கடிதம் வலியுறுத்துகிறது.

“முகம்”

என்றொரு கவிதை..
மனிதர்கள் யாரும் வெளிக்காட்ட விரும்பாமல் தன்னுள் தன்னையே ரகசியமாய் ஒளித்துக்கொண்டு பின் மெல்ல தன்னையே கொஞ்சமாய் வெளிப்படுத்திக் கொள்ளும் நிர்பந்தங்களின் உளவியலை சொல்கிறது.

என் முகம் ஒரு சுய சரிதை

வெளியே சிந்தாமல் அடக்கி வைக்கப்பட்ட

கண்ணீரால் அதன் எழுத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன

என் முகம் ஒரு முகமூடி

தயவுசெய்து அதை கழட்டாதீர்கள்

யாருக்கும் தெரியாமல்

இதயத்தில் பாய்ச்சப்பட்ட குத்துவாள்கள்

அதன் கீழே தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இங்கே எதையும் வெளிப்படையாய் சொல்வதற்கில்லை. சொன்னால் சமூகத்தில் நம் அருகிலிருப்போருடன் நாம் விலகி வெகுதூரம் செல்ல வேண்டியதாய் இருக்கும். அதனால் விருப்பங்களையும் துரோகங்களையும் தேவை கருதி புதைத்தும் தோண்டியெடுத்தும் காட்ட வேண்டியிருக்கிறது.

எனக்கேற்பட்ட இந்த இழப்பு உன்னால்தான் நேர்ந்ததென்றும் உன்னால்தான் எனக்கு நல்லதொன்று நடவாமல் போனதென்றும் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளும் விமர்சனமும் எதிரில் நிற்பவர்களுக்கு நம் மீதான எதிர்மறை கருத்துக்களை உருவாக்கும் பட்சத்தில், எக்காலமும் அக்குற்றச்சாட்டும் இழப்பின் வெளிப்பாடுகளும் அவர்களின் வார்த்தைகளும் ஏதோவொரு ரூபத்தில் நம்மை தூங்க விடாமல் துரத்திக்கொண்டே வரும் என்பதை அறிந்துகொண்டு சூழல்கள் கருதி வாழ்வதே புத்திசாலித்தனமென்று நேர்மையாளர்களையும் எண்ண வைத்துவிடுகிறது. எனினும் எல்லோராலும் சந்தர்ப்பவாதங்களின் அடிமைகளாய் வாழ் முடிவதில்லையென்பதே எதார்த்தமாகிறது.

என் முகம் ஒரு புதையுண்ட நகரம்

தோல்விகளின் ரத்தக்கறை படிந்த பகடைக் காய்களை

நீங்கள் அங்கே கண்டெடுக்க நேரலாம்.

என்பவர்… மூழ்கிப்போன காலத்தின் படிமங்களை தோண்டியெடுத்துப் பார்க்கும்போதுகூட அங்கேயும் துரோகங்களே உயிர்ப்புடன் தலையசைத்துக்கொண்டிருப்பதாய் கூறுகிறார். ஆம் ரத்தக்கறை படிந்த பகடைகள் முடிந்து போனதாய் சொல்லப்படும் புராண இதிகாச வரலாற்று காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் மாறாத சாட்சியாய் துரோகங்களே மனித சமூகத்தின் அழிக்க முடியாத அடையாளமாய் நிற்பதையும் அந்த துரோகத்தின் பகடைகளை ஏந்திக்கொண்டு வரலாறு தொடர்ந்து வந்துகொண்டிருப்பதையும் வாழ்க்கையின் வழி நெடுக காணலாம்..

மேலும் நாம் நம் மீது குத்தப்பட்ட வாட்களை மட்டுமே நாம் பதுக்கி வைத்திருக்கவில்லை சமயத்தில் நாம் பிறர் மேல் ரகசியமாய் குத்திய வாட்களையும் யாரும் அறியாதபடி நாமே நம் அங்கிகளுக்குள் மறைத்து வைத்திருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாதுதான்.

கடலோரச் சிலை

சிலைகள் பெரும்பாலும் கடந்த காலத்தின் வரலாற்றை சொல்லும் குறியீடுகளாகவே நின்று கொண்டிருக்கிறது. அது கடற்கரைகளில் வீதிகளில் பூங்காக்களில் நகரத்தின் மையப்பகுதியில் ஒரு அடையாளக் குயியீடாய் நிறுத்தப்பட்டிருக்கிறது. நிறுத்தப்பட்டிருக்கும் அச்சிலைகளின் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். பொதுவாக மனிதர்களை செழுமைப்படுத்தி அழைத்துச் சென்றவர்களின் நினைவாகவே உலகெங்கும் சிலைகள் அமைக்கப் பட்டிருக்கிறது. விதிவிலக்காய் வேறு சில சிலைகள் எங்கேனும் காணப்படலாம். மற்றும் வெறும் கலைகளின் வெளிப்பாடாகவும் சில சிலைகள் நிறுவப்பட்டிருக்கலாம். கால மாற்றங்களும் சூழலும் இடங்களுக்குமேற்ப சிலைகள் மாறுபட்டு நிற்கின்றன. தலைவர்களின் நினைவுகளைத் தாங்கிய சிலைகள் கலைச்சிற்பமாய் வடிவமைக்கப்பட்ட பொதுவான அழகுச் சிற்பங்கள் நினைவுச்சின்னங்களாய் நிறுவப்பட்ட ஸ்தூபிகள் என பலவகைப்பட்டதாய் சிலையோ அதுபோன்ற வேறொன்றோ நினைவூட்டலின் பின்னணியில் நிறுவப்பட்டிருந்தாலும். கடலோரத்தில் காணப்படும் சிலைகளை கவிஞர் வேறு விதமாய் பார்க்கிறார். அவர் காணும் சிலைகள் பெரும்பாலும் வாழ்ந்து முடித்த ஆளுமைகளின் சிலைகளாகவே காணப்பட்டாலும். உதாரணப்புருஷர்களின் நினைவாய் எழுப்பப்பட்ட ஒரு பிம்பமாய் அச்சிலைகள் இருந்தாலும் அதன் மீதான பார்வையும் விமர்சனங்களும் மனிதர்களுக்குள் வேறுபட்டாலும்
விருப்பு வெறுப்பில்லாமல் அச்சிலைகளை தன் கவிதைக்குள் கொண்டுவந்து இவர் பார்க்கும் பார்வை வேறுவிதமாகவே தோன்றுகிறது.

கடற்கரையில் கைகளை உயர்த்தி நிற்கும் ஒரு சிலையை பார்க்கிறார்.

கடலோரத்தில்

சந்தேகம் கேட்கும் மாணவன் போல் கை உயர்த்தி

ஒரு ஊமைச் சிலையாக நிற்க

எனக்குச் சம்மதம் இல்லை.

ஆம்.. கை உயர்த்தி சந்தேகம் கேட்கும் மாணவனின் தோற்றத்தில் இருக்கும் ஒரு சிலையைப்போல் இருக்க தனக்கு விருப்பமில்லை என்றும் கூறுகிறார் அது தனக்கு உடன்பாடில்லையென்று சொல்ல விரும்பும் அவர் அடுத்த வரிகளில்

முகவரி தேடி அலைபவர்களுக்கு

வழி சொல்லப் பயன்படும்

கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்ட

உலோகச்சிலையாக என்னால் நிற்க முடியாது என்கிறார்

பின் எப்படியிருக்க விருப்பமாம் என நம்முள் கேள்வியெழும் போது அடுத்த வரிகளில் தன் விருப்பத்தை ஒருவித ஈர நிழலை நம்மீது பரப்பி இப்படிச் சொல்கிறார்.

தன் கீழ் நின்று காதல் மொழி பேசுபவர்களின் மீது

மலர் தூவி ஆசீர்வதிக்கும்

பெயர் தெரியாத ஒரு கடலோர மரமாக

வாழ்வதே சுகம்.

என்று தனது விருப்பத்தை பதிவு செய்கிறார். அநாமதேயமாக இருப்பதே இங்கு நிரந்தரமென்பதையும் ஆனால் அந்த அநாமதேதயம் யாருக்கோ பயன்பட வேண்டும் என்பதும் கடைசி வரிகளின் அடி விருப்பமாய் இருக்கிறது. ஒரு கவிஞனின் பார்வையில் இந்த விருப்பமென்பது எவ்வளவு சுகமானதாக இருக்கிறது. பெயர் தெரியாத கடலோரத்து மரமாய் இருப்பதில்தான் எத்தனை சுகம். எதார்த்த வாழ்வில் அனுபவித்த கடலின் அருகாமைச் சுகத்தை பின்பான காலங்களிலும் தொடர நினைக்கும் தனக்கென தனித்த ஒரு அடையாளமில்லாத மிகச்சிறிய இந்த ஆசையே இந்தக் கவிதையின் மீதும் கவிஞனின் மீதும் பிரியம் கொள்ள வைத்துவிடுகிறது.

இக்கவிதை சொல்ல விழைவது சிலைகளின் மீதிருக்கும் ஈர்ப்போ வெறுப்போ அல்ல. ஒரு கைகாட்டி மரத்தைப்போல வருவோர் போவோர்க்கெல்லாம் வெறும் அடையாளம் சொல்வதற்கு மட்டுமே சுருக்கப்பட்டுவிட்ட ஒரு சிலையைப்போல் தான் நிற்பதைவிட தன் மடியிலமர்ந்து கலப்படங்களில்லாத அன்பையும் காதலையும் பகிர்ந்து தூய்மையான காதல் மொழி பேசுபவர்களுக்கு நிழல்தந்து தனது பூக்களால் ஆசிர்வதிக்கும் பெயர் தெரியாத ஒரு கடலோரத்து மரமாக இருக்கவே விரும்புவதில் இருக்கும் ஒரு சுகத்தையும் இணக்கத்தையும் நாமும் கவிதையினூடே உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

கடலையும் கடற்பரப்பின் அன்றாட காட்சிகளையும் ஈரக்காற்றையும் நுகர்ந்துகொண்டு கடலையும் அது சுமந்து நிற்கும் காட்சிகளையும் பார்த்தபடியே அனைத்தையும் ரசித்தபடி ஊர் பேர் தெரியாத ஒரு கடலோரத்து மரமாகவே இருந்துவிட விரும்பும் ஒரு கவிஞனின் மிக மெல்லிய விருப்பத்துடன் நாமும் ஒன்றிவிட முடிகிறது.
இனி கடலோரத்து மரங்களின் கீழமரும் போதெல்லாம் இந்த கவிதையும் நினைவுக்குள் வந்து நிழலாடும்.

கவிஞர் இந்திரன் அவர்களின் கவிதைகள் இத்தொகுதி முழுக்க பல்வேறு தாக்கங்களை வாசிப்பவர்களுக்கு தந்துவிட்டுச் செல்கிறது என்றாலும் ஒரு சில கவிதைகளை மட்டுமே வாசிப்பின் சுவையாய் இங்கே பதிய முடிந்ததற்கு உண்மையில் மகிழ்ச்சியே. 174 பக்கங்கள் கொண்ட இநூலில் இருக்கும் கவிதைகள் அனைத்தையுமே பேசமுடியுமென்றாலும் அனைத்து வரிகளையும் ஆராய விருப்பமிருந்தாலும் அலசப்பட்ட சில கவிதைக்குள் ஒரு சில வரிகளை மட்டுமே உதாரணத்திற்கு எடுத்துத் தர முடிந்திருக்கிறது. இத்தொகுப்பு முழுக்க எல்லோரும் நுகரும்படியான எளிமையான நடை வாசகனை எளிதாய் எட்டிப்பிடித்துவிடும் என்பதில் ஐயமில்லை. அதுவே கவிதைக்குள் வாசிப்பவரை எளிதாய் ஒட்ட வைத்தும் விடுகிறது. எளிமையும் ஆழமும் நிறைந்திருக்கும் இந்தக் கவிதை நதியில் நீங்களும் உங்கள் விருப்பம் போல் நீந்தலாம்.

இலக்கிய படைப்புகளை புதிய எல்லைகள் நோக்கி நகர்த்த விரும்பும் கவிஞர் இந்திரன் அவர்களின் “பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்” நூல் உங்கள் புத்தக அலமாறியில் அவசியம் இடம்பெற வேண்டும். ஏனெனில் அவர் தனது முன்னுரை அறிக்கையில் கூறியிருப்பது போல இத்தொகுதியில் இருக்கும் கவிதைகள் அனைத்தும் உங்களுக்குச் சொந்தமானவை. நீங்கள் சொந்தம் கொண்டாட வேண்டியவை.

தோழமையுடன்
சந்துரு ஆர்.சி
சென்னை.

நூல் : பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்
கவிதைத் தொகுப்பு
“எதிர் கவிதைகளும் பிற கவிதைகளும்”
ஆசிரியர்: கவிஞர் இந்திரன்

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *