இந்திரபாகம் பாக்கியம்!
எழுதாமல் இருக்கும் கவிதைளைப் போலவே படிக்காமல் இருக்கும் கவிதைத் தொகுப்புகளும் சொல்லி வைத்தாற்போல் எதிர்பார்ப்பிற்கு மேல் எகிறியடிக்கின்றன இவ்வளவு நாள் ஏன் படிக்காமல் இருந்தாய் என்று! அப்படி ஒரு புத்தகமாய் இன்று கையில் ‘ பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்’ சகலகலாவல்லவர் நளனாய் கவியமுது சமைத்திருக்கிறார் இலக்கிய வித்தகர் இந்திரன் இங்கு.
‘நான் சிரிக்கிறேன்
அழாமல் இருப்பதற்காக’
என்கிறார் ஒரு கவிதையில். உண்மையில்
நான் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், எழுதாமல் இருப்பதற்காகத் தான். முடித்தபின் என்னை மீறி எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்திரபாகம் நளபாகத்தை தூக்கி சாப்பிட்டுவிடுகிறது.
‘ நான் மலை ஏறியபோது
மலையும் என்னோடு ஏறி வந்திருக்கிறது’ என்கிறார். மலையை இந்தளவு எளிமையாய் காட்சிப்படுத்தல் அரிதினும் அரிது.
கடவுளில் ஆரம்பித்து நத்தை, ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, கருந்துளை,சாத்தான் என தனக்கு பிடித்தமானதை எல்லாம் எவர்க்கும் பிடித்துப்போகும் விதமாய் சமைத்துத் தள்ளுகிறார்.
‘ இந்த பைத்தியங்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது’ என மனித பைத்தியங்கள் பைத்திய மனிதர்களைப் பற்றி நினைப்பதாய் முடிக்கிறார் ஒரு கவிதையில். உண்மையில் இவ்வளவு சுவையான கவிதைகளிடமிருந்து கவிஞர்களும் தப்பிக்க இயலாது. சுவையாய் சமைக்கும் கவிஞர்களிடமிருந்து கவிதைகளும் தப்பிக்க இயலாது என்பதற்கு இந்திரன் அவர்களின் ‘ பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்’ சான்றும் சாட்சியும்.